LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label அவரவர் நிலா! ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts
Showing posts with label அவரவர் நிலா! ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts

Sunday, June 24, 2018

அவரவர் நிலா! - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

அவரவர் நிலா!

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

 நிலா என்னைத் தேடிவந்ததுண்டு
அதுவொரு பொற்காலமா? பூங்கனாக்காலமா?
மெழுகென உருகி என் மடியில் விழுந்திருக்குமதை
இழுத்தும் வழித்தும் குழித்தும் அழுத்தியும் 
விரும்பும் வடிவங்களை வார்க்கப் பழகியவாறிருப்பேன்.
அலைபுரளும் உலக உருண்டையாய் விசுவரூபமெடுக்கும்.
அம்மிணிக்கொழுக்கட்டையாய் உருளும் குரல்வளைக்குள்.
இந்த நிலவை நான் பார்த்தால் அது எனக்கென வந்ததுபோலிருந்ததொரு காலம்.
நானே நிலவாகி நின்றதொரு காலம்
கண்ணால் காற்றேணி கட்டி நள்ளிரவில்
நிலவில் வலம் வந்ததொரு காலம்
நிலவிறங்கி நெருங்கிவந்து என் நெஞ்சுருக
தலைவருடித் தந்ததொரு காலம்.
காணாமல் போய்விட்ட நிலவைத் தேடியலைந்து
மறுஇரவில் கண்டடையும் வரை
உயிர் பதைத்துப்போனதொரு காலம்
நாளெல்லாம் இல்லாதுபோனாலும்
நிலவுண்டு நிரந்தரமாய் என்றுணர்ந்துகொண்டதொரு காலம்
கண்டாலென்ன காணாவிட்டால் என்னவென்று
எட்டிநின்றதொரு காலம்
உண்டென்றால் உண்டு, இல்லையென்றால் இல்லை யென்று
விட்டுவிடுதலையாகி நிற்க வாய்த்ததொரு காலம்…..
அன்று வந்ததும் இன்று வந்ததும் அதே நிலாவா?
யார் சொன்னது?
அழைத்துக்கொண்டிருக்கிறோம் ஒருவரையொருவர் நிலவென்று.
அவரவருக்கு அவரவர் நிலா