LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Wednesday, October 24, 2018

MOUNTS VALLEYS AND MYSELF - POEMS BY S.VAIDHEESWARAN (கவிஞர் வைதீஸ்வரன்)


MOUNTS VALLEYS AND MYSELF

POEMS BY S.VAIDHEESWARAN
(
கவிஞர் வைதீஸ்வரன்)


ஒரு படைப்பாளிக்கு உரிய மரியாதையை அவர் வாழுங் காலத்திலேயே வழங்குவதே முறை. அதுவே அவருடைய எழுத்துகளில் நமக்குக் கிடைத்த நிறைவான வாசிப்பனு பவத்திற்கு நாம்செய்யும் பதில் மரியாதை. இந்த எண்ணமே என்னை கவிஞர் வைதீஸ்வரனின் 70, 80 கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் செய்தது. இதே எண்ணம் கொண்ட, – தன்னளவில் நல்ல மொழி பெயர்ப்பாளராக விளங்குபவரும் www.modernliterature.org,www.tamilliterature. in ஆகிய இரு தரமான இணைய இதழ்களின் நிறுவனர்ஆசிரியருமான நண்பர் ராஜேஷ் சுப்பிரமணியனின் முயற்சியால் இந்த மொழிபெயர்ப்புகளில் 50க்கும் மேல் இடம்பெறும் இந்தத் தொகுப்பு வெளியாகியுள்ளது.

கவிஞர் வைதீஸ்வரன், நண்பர் ராஜேஷ் சுப்பிரமணியன், நூலை வெளியிட்டுள்ள HAWAKAL PUBLISHERS ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றி.

நூலின் முகப்பு அட்டையும் சில விவரங்களும் இங்கே தரப்பட்டுள்ளது

விலை: ரூ 350
96 பக்கங்கள்
சுமார் 60 கவிதைகள் கொண்ட தொகுப்பு இது
தோழமையுடன்
லதா ராமகிருஷ்ணன்


கண்ணோட்டம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


கண்ணோட்டம்
 ரிஷி
(
லதா ராமகிருஷ்ணன்)



தன்னைச் சுற்றி முட்களைப் டரவிட்டபடியேயிருக்கும்
அந்த ஒற்றைச் சொல்
என்னை அந்தக் கவிதைக்குள் சரண்புகவிடாமல்
தடுக்கிறது.
குறியீடாகத்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது
அறிவேன். என்றாலும்
குரூரமாகவே ஒலிக்கிறது.
A rose by any other name would smell as sweet’
போலவே
A thorn by any other name
would prick and pierce’.
அக்கக்கோ பறவையாய்க் கூவிக்கூவி
களைத்துப்போயிருக்கும் மனது
அந்தக் கவிதைக்குள் நுழைந்து
இளைப்பாறவேண்டும் என்று
எத்தனை கெஞ்சினாலும்
இயன்றபாடில்லை.
அப்படியெனில் கவிதை என்பது
அதிலுள்ள ஒற்றைச் சொல் மட்டுமா?
ஆமென்றால் ஆம் இல்லையென்றால்
இல்லையாமா?
எட்டுமா எனக்கொரு வழி
இந்தக் கவிதைக்குள் நுழைய?
பழையன கழிதலும் புதியன புகுதலுமான வாழ்வில்
ஏன் நான் மட்டும் எப்பொழுதும்
எதிர்மறைப் பொருளிலேயே வருகிறேன்
என்று திரும்பத் திரும்பக் கேட்டபடியே
என் கால்களை இறுகப்பற்றிப்
பின்னுக்கிழுத்துக்கொண்டிருக்கிறது
அந்த ஒற்றைச் சொல்.
இல்லாத பதில் அதன் தொலைந்த சாவியாக,
இறுக மூடிக்கொண்டுவிட்ட கவிதையின் முன்
நான் நிராதரவாய் நின்றவாறு


ஏக்கம் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


ஏக்கம்
ரிஷி
(
லதா ராமகிருஷ்ணன்)















சிறுமியின் கொட்டாவி
தூவும் கனவுகளைக்
கவிதையாக்கத்
தாவும் மனதைத்
தடுத்தாட்கொள்ளும் தூக்கம்!

பாரதியாரை முன்னிறுத்தி சில வரிகள்‘ - ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


பாரதியாரை முன்னிறுத்தி சில வரிகள்


ரிஷி
(
லதா ராமகிருஷ்ணன்)


எப்படி ஒற்றை தேகத்தில்
எண்ணற்ற மனங்களைச் சுமந்துகொண்டிருந்தாய் பாரதி!
அப்படி யிங்கே எத்தனை பேர்
என்னைச் சுற்றி இருக்கிறார்கள் தெரியுமா?!
அட்சர லட்சம் பெறும் வரிகளை ஆனந்தமாய் எழுதியபடி;
அண்டசராசர ஒளிவெள்ளத்தை தம் கவிதைகளில் வாரியிறைத்தபடி;
அழும் குரல் ஒவ்வொன்றிலும் இரண்டறக் கலந்தபடி;
அலைந்தழியும் பசிக்குரல்களுக்கு உணவாகலாகா ஆற்றாமையில் நிலைகுலைந்தழிந்தபடி;
அங்கீகாரமா, அவார்டாஅப்படியென்றால்?’ என்று
ஏதும் புரியாமல் கேட்டபடியே அவர் பாட்டில் கவிதையெழுதியபடி;
அன்பைக் கவிதையில் அட்சயப்பாத்திரமாக்கியபடி;
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும்
அவர்களையெல்லாம்
அங்கிருந்தபடியே வாழ்த்துவாய் பாரதி!
அப்படியே என்னையும்.....


நல்லதோர் வீணை செய்தே…. ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


நல்லதோர் வீணை செய்தே….
ரிஷி
(
லதா ராமகிருஷ்ணன்)




நான் செய்யாதவரை எந்த வீணையும் ல்லவீணையில்லை.

எனவே நலங்கெடப் புழுதியில் எறிவது குறித்த கேள்விக்கே இடமில்லை”.
என்று அடித்துச்சொல்லியபடி,
இசையில் அரைகுறை கேள்விஞானமோ
காலேஅரைக்கால் வாய்ப்பாட்டுப் பயிற்சியோ
அல்லது வாத்தியப் பயிற்சியோ
இல்லாத அகங்கார இளவரசியொருத்தி
தனக்குக் கிரீடமும் அரியணையும் கிடைப்பதற்கான
குறுக்குவழியாக மட்டுமே அவள் கொண்டுள்ள மாமன்னரின்
வணக்கத்திற்குரிய அத்தனை வீணைகளையும் ஆங்காரமாய்ப்
போட்டுடைக்கத் தொடங்கியிருப்பதைப் பார்த்து
மேலேயிருந்து கையறுநிலையில் மன்னர் விம்மியழ
விண்மீன்களும் கண்கலங்கின.
வேதனையில் புண்ணாகிக் கொதித்துவீசத் தொடங்கியது காற்று…..
இங்கோ _
மகன் தந்தைக்காற்றும் உதவி யவனுக்குகந்தவர்களை
நிந்திப்பது என்று எழுதாத திருவள்ளுவரை அடுத்து
வறுத்தெடுக்கத் தொடங்குவதே
அவளுடையஅஜெண்டாவென அறிவித்தால் _
அதற்கும் ஆயிரம்லைக்குகளை
அள்ளியிறைக்க பரபரத்துநீள்கின்றன
குறைகுடங்களின் அரைவேக்காட்டுக் கைகள்.


Sunday, September 2, 2018

காட்சி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


காட்சி

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



வீதியெங்கும் கண்ணன் விளையாடிக்கொண்டிருந்தான்.

மரவண்ண ப்ளாஸ்டிக் தொட்டிலில் அமர்ந்தபடி அவனளவு இருந்த ஒரு பானைக்குள் கையைவிட்டு வெண்ணெயை எடுத்துக்கொண்டிருந்தான்.

பொம்மையென்றாலுங்கூட அருகில் சென்று அந்தக் குட்டிவாயைத் திறந்து
அகில உருண்டையைக் காணவேண்டுமாய் எழுந்த ஆவலைக் கட்டுப்படுத்திக்கொண்டேன்.

மயிற்பீலி சூடிக்கொண்டு புல்லாங்குழல் இசைத்துக்கொண்டிருந்தான்.
மௌனமாய் அதிலிருந்து பெருகிய இசையை உள்வாங்கியவாறு நகர்ந்தபோது
எதிர்ப்பட்ட பெண்களெல்லாம் ராதைகளாகத் தென்பட்டார்கள்.

அவர்களிடையே நானும் கோலாட்டமாட
அழுகையா உவகையா என்று பிரித்துணரவியலா
அனர்த்தம் வாழ்வென்ற ஞானம் அரைக்கணம் கைகூடியது.

அங்கே விற்கப்பட்டுக்கொண்டிருந்த மயிற்தோகையை விலைகேட்டேன்.
மயிற்பீலியின் தனித்தனி இழைகள் நிஜமோ நெகிழியாலானதோ….

ஒவ்வொரு தனியிழையும் ஒரு மயிலைக் கூட்டிவந்து
என் சின்னவீட்டின் பின்கட்டிலொரு நந்தவனம் கட்டி யதில் எத்தனையெத்தனையோ
மயில்களை தோகைவிரித்தாடச் செய்யும்போது
தெருவின் இந்த முனையில் ஒற்றைப் பீலியிழை இருபது ரூபாய்க்கும்
அந்த முனையில் பத்துரூபாய்க்கும் விற்கப்படுவதை யறிந்தும்
பேரம் பேச எப்படி மனம் வரும்?

பீலிவிற்கும் பெண்ணொருத்தி தோளில் சுமையோடு
தன் சிறுபிள்ளையைத் தரதரவென்று இழுத்துச்சென்றுகொண்டிருந்தாள்.

அவள் காலில் செருப்பிருந்தது;
பையன் வெறுங்காலில்.

குட்டிக் கிருஷ்ணன் காலை வெயிலின் வெந்தனல் சுட்டுப்பொசுக்குமா?
பொசுக்கத்தான் விடலாமா?

கையிலிருந்த காசில் குத்துமதிப்பான அளவுகளில் இரண்டு ஜோடி செருப்புகள் வாங்கிக்கொண்டு
திரும்பினால் _

கண்ணனைக் காணவில்லை.

எத்தனை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

என்னோடு எடுத்துக்கொண்டுவந்துவிட்ட காலணிகளை
மாட்டிக்கொள்ள
ஊரெங்குமுண்டு நீலவண்ணக்கண்ணன்கள்.

என்னிடமிருப்பதோ நான்கு செருப்புகள் மட்டுமே.