LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, July 7, 2022

வியாபாரம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வியாபாரம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
கமர்கட் வண்டிக்காரர் முதல்
கருப்பு வெல்வெட்டாய் ஜொலிக்கும் இறக்குமதிக் கார்காரர் வரை
தினமும் கடைதிறக்கத் தவறாத சந்தை யிது.
அவரவர் சக்திக்கேற்ப கடைக்கான
அலங்கார விளக்குகளும்
விற்பனைப் பொருட்களும்.
‘அத்தனையும் தரமானவை’ என்ற வாசகம் தவறாமல் இடம்பெற்றிருக்கும்
சின்னதும் பெரியதுமான எழுத்துகளில்.
சமயங்களில் அதே பொருளைத்தரும் வேறு வேறு சொற்களைக்கொண்ட வாசகங்கள் இருக்க வழியுண்டு.
சில கடைக்காரர்கள் முந்தைய இரவு பார்த்த மெகா தொடரின் தாக்கத்தில்
ரகசியமாக தெருமுனை பில்லி சூனிய ஆசாமியிடம் சென்று
குறைந்தபட்சம் 500 ரூபாய் தண்டம் அழுது
தகடு வாங்கிவந்து
தன் கடையிலிருந்து ஐந்தாவதாக இருக்கும் கடையில்
எப்படியாவது கொண்டுபோய்வைத்துவிடுகிறார்கள்.
அவர் அப்படிச் செய்வதை பின்னோடு சென்று பார்ப்பதே
வேலையாக இருப்பவர்கள்
அடுத்த நாளே அதை தவறாமல் அம்பலப்படுத்திவிடுகிறார்கள்.
பொருள் வாங்கக் கடைவாசலில்
கூட்டங்கூடியிருப்பதாய்
நாளுங்காணும் மாயத்தோற்றம் நிஜமாகும் நாட்கள்
நிறைவாழ்வுத்தருணங்கள்.
அவற்றையும் போலச் செய்து போலி செய்து
பலரும் காண வாகான இடத்தில்
‘பச்சக்’ என்று போஸ்டர் ஒட்டி
பெருமைகொண்டு பிரமையிலுழல்வாரும் உண்டு.
மெய்யாகவே தரமான பண்டங்களை விற்கும் கடைகளுக்கு
அவ்வப்போது தாமே தயாரித்த அளவுகோல்களையும்
தரநிர்ணயங்களையும் கொண்டுவந்து
உருட்டி மிரட்டுவதாய் ஒரு பார்வை பார்த்து
ஒரு கூழைக்கும்பிடோ சிறிய பெரிய மாமூலோ
கிடைக்காத கோபத்தில்
சில்லறை வியாபாரம் என்றால் பொறுத்துக்கொள்ளலாம்
ஆனால் இப்படி சில்லறைத்தனமான வியாபாரம் செய்தால்?’
இல்லாத ஆன்மா வேசத்துடன்
அங்கலாய்த்து
அங்கே இங்கே சில மொட்டைக் கடுதாசிகள் அனுப்பி
மேற்படி நல்ல கடைகளை செல்லாக் கடைகளாக மாற்றும்
பிரயத்தனமே தம் மூலதனமாகக் கொண்ட
மொத்த வியாபாரிகளும் கைசுத்தமானவர்களே
அவரவர் செய்யும் கலப்படங்களில்.
அலப்பறைகளுக்கப்பால்
கருமமே கண்ணாய் வியாபாரம் செய்பவர்களுக்கு
செய்யும் தொழிலே தெய்வம்.

No comments:

Post a Comment