பிரதியை வாசித்தல்
அவை சில சமயம்
ஒரே புத்தகத்தின் பல பிரதிகளாக இருந்தன
வேறு சில சமயங்களில்
வெவ்வேறு புத்தகங்களின் பிரதிகளாக இருந்தன.
புகைப்படத்தில் புத்தகத்தை
யொரு குழந்தையாக ஏந்திக்கொண்டிருந்தனர் சிலர்
அருங்காதலராக அரவணைத்துக்
கொண்டிருந்தனர் சிலர்
அணுகுண்டைக் கையில் பிடித்துக்கொண்டிருப்பதுபோல்
கலவரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தனர் சிலர்;
அந்தரத்தில் மிதக்கக் கிடைத்த மாயக்கம்பளமாய்
பெருமைபொங்கப் பிடித்துக்கொண்டிருந்தார்கள் சிலர்.
இன்னும் சிலருக்கு புத்தகங்களும் புகைப்படங்களும்
சுயவிளம்பரப் பதாகைகள்
எப்பொழுதும்போல்
எல்லாவற்றையும்போல்
இருபத்தியெட்டு புத்தகங்கள் வாங்கினேன் என்றவர் முகம் இருள
இருநூற்றியெட்டு வாங்கினேன் என்றார் ஒருவர்.
இல்லாத காசு கிடைக்கும் நாளில் இந்தப் புத்தகங்களைக் கட்டாயம் வாங்குவேன் என்று எண்ணிக்கொண்டான் வாசிப்பில் மிகுந்த ஆசையுள்ள ஏழைப் பள்ளிமாணவரொருவன்.
புத்தகம் ஆண்களுக்காக உருவாக்கப்படுபவை
என்று எங்கோ ஓர் அரங்கில்
யாரோ முழங்கிக்கொண்டிருந்தார்கள்.
மங்கிய தெருவிளக்கின் ஒளியில் இரவு உணவுக்கென எதிரேயிருந்த டீக்கடையில் பஜ்ஜி வாங்கிச் சாப்பிட்ட பின் அதைக் கட்டித்தந்த செய்தித்தாள் கிழிசலை அத்தனை ஆர்வமாக எழுத்துக்கூட்டிப் படித்துக்கொண்டிருந்தார்
நாளெல்லாம் அந்த அழுக்கு பிளாஸ்டிக் நாற்காலியில் ஒடுங்கி உட்கார்ந்துகொண்டிருக்கும்
அடுக்குமாடிக் குடியிருப்பின் செக்யூரிட்டி.
அப்பாவைக் கிள்ளிக்கிள்ளிவிட்டவாறே அழுதுகொண்டிருந்த அந்த சன்னதேகச் சின்னப்பையனுக்கு
அங்கிருந்த அத்தனை புத்தகங்களும் கிடார் பொம்மையாகவே தெரிந்தன.
முகங்கள் மறைய அடையாளங்காணலாகாக் கைகள் உயர்த்திப் பிடிக்கும் புத்தகங்களிலிருந்து
சொற்கள் சிறகடித்துப் பறக்கின்றன
அர்த்தம் துறந்து.
No comments:
Post a Comment