LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, March 13, 2025

மனக்கணக்கு - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மனக்கணக்கு

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
மொழிப்பகட்டல்ல கவிதை,
மொந்தைக்கருத்துகளல்ல ;
புதிர்விளையாட்டல்ல கவிதை,
பொய்புரட்டுகளல்ல;
சொற்தூவலல்ல கவிதை,
சொகுசுக்கார் பயணமல்ல;
தற்காப்புக்கவசமல்ல கவிதை,
தெனாவெட்டுத் திமிரல்ல;
எள்ளல் எகத்தாளமல்ல கவிதை,
ஏகபோக உரிமையல்ல;
கள்ளம் கபடமல்ல கவிதை,
காறித்துப்பலல்ல.
தெய்வமல்ல, தேவகணங்களல்ல கவிதை,
துர்தேவதைத்துக்கிரியுமல்ல;
வள்ளலோ பக்கிரியோ அல்ல கவிதை,
வரிக்கோடுகள் அல்லவேயல்ல;
மிச்சம் மீதியல்ல கவிதை,
அட்சயபாத்திரமல்ல ;
நட்பல்ல பகையல்ல கவிதை,
நல்லாசானுமல்ல;
நினைவின் நினைவல்ல கவிதை,
ஞாபகமறதி யல்ல;
நல்லதல்ல கெட்டதல்ல கவிதை,
நாலும் தெரிந்ததல்ல;
வாலுமல்ல தலையுமல்ல கவிதை,
வெட்டி முண்டமல்ல;
தண்டமோ அண்டமோ அல்ல கவிதை,
உண்ட சோறின் ஏப்பமல்ல.
சீப்பல்ல சிகையல்ல கவிதை;
மோப்பநாயுமல்ல;
இன்னுமுண்டு சொல்லச் சொல்ல
இன்னும் இன்னும் இன் _.
பின் என்னதான் கவிதை?
என்றெனக்குத் தெரியும் நாள்
SO NEAR YET SO FAR......

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்…. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மனிதன் என்பவன் தெய்வமாகலாம்….

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஏழு கடல் ஏழு மலை தாண்டி யொரு குகைக்குள்ளிருந்த
இறக்கைகள் வெட்டப்பட்ட கிளியின் குடலுக்குள் இருந்த ரகசியத்தின் பாதுகாப்பைப் பற்றி
எனக்கென்ன கவலை யென்றிருந்தான்
எத்தனாதி யெத்தனொருவன்_
என்னென்னமோ தகிடுதித்தங்களைத் தொடர்ந்து செய்தபடி.

மனுஷ ரூபத்தில் வந்த தெய்வம் கிளிக்கு
ஒரு லாப்-டாப்பை மட்டும் கொடுக்க_

கூகிள்-சர்ச்சில் தேடி தன் குடலுக்கு பாதிப்பில்லாமல்
கிழித்து ரகசியத்தை வெளியே எடுத்த கிளி _

அதை குகைக்கு அருகாமையில் ஓடிகொண்டிருந்த
நதியின் பளிங்குநீரில் காட்ட_

ஆறு அதன் பிரதிபலிப்பைத் தன்னோடு எடுத்துச்சென்று
மனிதவடிவில் இருந்த தெய்வத்திடம் சேர்ப்பித்தது.

ஆயிரங்கைகளால் அதைப் பிரதியெடுத்து
சுற்றுக்கு விட்ட
மனிதத் திருவருளால்
சிறகு முளைக்கிறது பறவைக்கு!

’MORBID TO THE CORE’ மனிதநேயவாதிகள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ’MORBID TO THE CORE’ மனிதநேயவாதிகள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அவரிவர்கள் மரணத்தை அரசியலாக்குவதாய் எரித்துக்கொட்டும் _
தத்தமது Trumpetகளைத் தாமே ஊதித்தள்ளும்
தன்னிகரில்லா _
’morbid to the core’ மனிதநேயவாதிகள்
சாவைத் துல்லியமாய் அளக்குந் துலாக்கோல்
தம்மிடம் மட்டுமே உள்ளதாய் அறிவித்து
இல்லாமல் போனவர்களின் பிறப்பை உள்குத்தாய்ச்
சொல்லிச் சொல்லி ஏசிப்பேசி
ஒப்பாரிவைப்பதைக் கண்டு
கூசிப்போய் அலைவீச மறந்து அழுகிறது கடல்.
விரிந்த நீர்ப்பரப்பு உடலென்றால்
அதன் காதுகள் எங்கிருக்கிறதென்று தெரியவேண்டும் எனக்கு.
கண்ணீர்விடுவதை உடனடியாக நிறுத்தச் சொல்ல…..
அப்படிச் செய்யவில்லையென்றால் அதன்மீது வீசப்படலாகும்
ஆக்கங்கெட்ட அடைமொழிகள், அழுகிய தக்காளிகள்
அன்னபிறவற்றை
முன்கூட்டியே எண்ணிச்சொல்ல…

தெய்வம் நின்று கொல்லும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 தெய்வம் நின்று கொல்லும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


சாட்சியம் சொல்ல யாரும் முன்வராமலும்
சிலர் பொய்சாட்சி சொன்ன காரணத்தாலும்
ஒரு ‘ஹை – ஃபை’ சீரியல் கொலையாளி நிரபராதியாய்
திரிந்துகொண்டிருக்க…..
தக்க தருணத்திற்காகக்
காத்துக்கொண்டிருந்தது தெய்வம்
கால்கடுக்க நின்றபடி.
கையில் கிடைத்த முக்காலியை இழுத்துப்போட்டு
உட்காரச் சொன்ன என்னைக்
கனிவோடு பார்த்து_
"உன் கால்களும் என் கால்களும் ஒருவகையில்
ஒன்றேயென்றாலும்
இன்னொருவகையில் அப்படியில்லை.,
அவை தருக்களும்கூட!” என்று புன்னகைத்த கடவுள்
இதோ இன்று
வேரடிமண்ணிலிருந்து தோண்டியெடுத்த
balance-sheetஐப் பிரிக்கிறது.
அதனுள்ளிருந்து துருத்திக்கொண்டு நீள்கிறது
ஸைலன்ஸர் பொருத்திய துப்பாக்கிக்குழல் _
குற்றவாளியின் பின்மண்டையையும் நடுமார்பையும்
ஒரே சமயத்தில் குறிபார்த்தவாறு!

அப்பாலுக்கப்பால் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 அப்பாலுக்கப்பால்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
அப்படியா
அப்படியே
அப்படியெனில்
அப்படித்தான்
அப்படி யிப்படி
இப்படி யப்படி
எப்படி யெப்படி
அப்படியா வெனில்
இப்படியாமெனில்
எப்படித்தான் நான்
ஏறிச் செல்வதாம்
எப்படிதான்

காலவைரஸ் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 காலவைரஸ்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

நிமிர்ந்தால் ஸெல்ஃபி
குனிந்தால் ஸெல்ஃபி
நின்றால் ஸெல்ஃபி
நடந்தால் ஸெல்ஃபி
படுத்தால் ஸெல்ஃபி
பால் குடித்தால் ஸெல்ஃபி
பஸ் பிடித்தால் ஸெல்ஃபி
கிஸ் கொடுத்தால் ஸெல்ஃபி
எனப் பாதையெங்கும் நடுகற்களாய் நட்டுவைத்திருந்தாள்
ஸெல்பிகளை.
முளைவிட்டு விசுவரூபமாய் வளர்ச்சிகண்டு
அவளுடைய வாழ்வின் வரைபடத்தில்
நதிகளாய் நாடுகளாய் மலைகளாய் காடுகளாய்
விலங்குகளாய் மனிதர்களாய்
இடி மின்னல் மழை மேகமாய்
கடிகார முட்களாய்
காத்தாடிமாஞ்சாவாய்
நீத்தார்புகழாய்த் துலங்கிக்கொண்டிருந்தது ஸெல்ஃபி.
’சர்வம் ஸெல்ஃபி மயம்’ என்ற சமகால சுலோகத்தை
அல்பகல் உச்சாடனம் செய்தவாறிருந்தாள் அவள்.
உதடுகளும் பற்களும் நாக்கும் உள்நாக்கும் யாவும்
அடைக்கலம் ஸெல்ஃபிக்குள்.
மடாக்குடிகாரருக்கும் மேலாய்
நடுங்கி உதறும் அவள் கைவிரல்கள்
தடாலெனத் தன் கழுத்துத் திரும்புவதை
ஸெல்ஃபியில் அமரத்துவமெய்தவைக்கும் தவிப்பில்.
திடீரென அலைபேசி பழுதடைந்துவிட்டால் என்செய்வது
என்ற பீதியோடு
அலையாய் அலைந்து ஆயிரத்தேழு ரகக் கைபேசிகளை
வாங்கிக்கொண்டுவந்தாள்
தள்ளுபடியற்ற தள்ளுபடி விலையில்.
அள்ள அள்ளக் குறையாததாய்
அவள் நிரப்பிக்கொண்டவற்றின்
பாரம் தாங்காமல் ஒருநாள் அவையாவும் ஒருசேர
வெடித்துச் சிதறியதில்
வெளியே தெறித்துவிழுந்த ஸெல்ஃபிகள்
வலியையும் பொருட்படுத்தாமல்
விடுதலை நாடி விழுந்தடித்துக்கொண்டு ஓடிவிட்டன.
அலங்க மலங்க விழித்தாள் அவள்.
அடியோடு நிலைகுலைந்துபோனவள்
அனத்திக்கொண்டிருக்கிறாள்:
"எல்லோருக்குமே மறைகழண்டுவிட்டது
என்னைத் தவிர".

Wednesday, March 12, 2025

கலைடாஸ்கோப் கவிதைகள் - 2

 கலைடாஸ்கோப் கவிதைகள் - 2

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

1. கவிமூலம்
இவர் சில வார்த்தைகளை உதிர்க்க
அவர் சில வார்த்தைகளை உதிர்க்க
ஒரு வரி உருவானது….. வரிவரியாய்
இருநான்கு பத்திகளைக்கொண்டமைந்த அக்கவிதையில்
இரண்டறக் கலந்திருந்தவர்கள்
இன்று எங்கெங்கோ….
எதிரெதிர்துருவங்களாய்…
இறுகிப்பிணைந்திருக்கும்
சொற்களாலான கவிதை
சப்பரமாய் நின்றபடி.


2. மந்திரமாவது சொல்
நல்ல ரொம்ப நல்ல ரொம்ப ரொம்ப நல்ல
அல்ல அல்லவே யல்ல யல்ல அல்ல
மெல்ல மெல்ல சொல்ல சொல்ல
சொல்லெல்லாம் கல்லாகும் வல்வினையில்
வில்லிலிருந்து விடுபடும் அம்பு
நில்லாது செல்வதும் கொல்வதும்
நியமமாகிய மெய் இல்லாதுபோமோ
புல் கத்தியாகும் வித்தை கல்லாதிருக்கலாமோ
எல்லோருக்கும் துல்லியமாய் காணக்கிடைக்குமோ
El Doradoவை
(*El Dorado ¬_ ஸ்பானிய தொன்மக் கதையில் இடம்பெறும் தங்க மனிதன். காலப்போக்கில் இந்தச் சொல் பல மாற்றங்களைக் கண்டு இன்று தொலைந்துபோன அரியவற்றைக் குறிப்பதான சொல்லாட்சியாக விளங்குகிறது.


4. முகமூடி
அதிவேகத்தில் விரையும் ரயிலின் அருகில் நின்று
ஸெல்ஃபி எடுத்துக்கொண்டால் ஆபத்து.
அன்பே உருவாயொரு களங்கமில்லாக் குழந்தையாய்
என்றேனும் சிரிக்கக் கிடைத்திருந்தால்
அதை மறவாமல் ஸெல்ஃபி எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்.
தேவைப்படும்போதெல்லாம் அதை வெளியிட்டுக்கொள்ளலாம் -
ரத்தவெறிபிடித்த கோரமுகத்தை
உள்ளுக்குத் தள்ளி.








Like
Comment
Send
Share