LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, March 5, 2026

கவிஞர் பழனிவேள்

கவிஞர் பழனிவேள் 

கவிஞர் பழனிவேளின் தொகுப்பு “கஞ்சா” குறித்து…..
12 Feb, 2018 திண்ணை இணைய இதழில் வெளியானது.

லதா ராமகிருஷ்ணன்


தனது தவளை வீடு தொகுப்பின் மூலம் தமிழின் குறிப்பிடத்தக்க கவிஞராக கவனம் பெற்றுள்ள திரு. பழனிவேளின் கஞ்சா என்ற தலைப்பிட்ட மற்றொரு தொகுப்பு ஆலன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. (64 பக்கங்கள், 50 கவிதைகள். விலை ரூ.100 தொடர்புக்கு – palanivelrayan@gmail.com. தொலைபேசி 8973228830.) புத்தகத்தை வெளியிட்டுள்ள திரு.ராஜகோபால் தமிழ்ச் சிறுபத்திரிகைவெளியில் நன்கு பரிச்சயமானவர். இந்தக் கவிதைத்தொகுப்பை நேர்த்தியாக வெளியிட்டுள்ளார்.
கஞ்சா கவிதைத்தொகுப்பு குறித்து தனது அறிமுக உரையில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார் அவர்:
“இயல்பாகவே பழனிவேள் கவிதைகளில், அவரது கவிதைமொழியில், ஆழ்ந்த அமைதியும், செறிவும் விரவியிருக்கும். புலம்பல்கள், வெற்று தர்க்க விசாரங்கள், புதிர் அவிழ்ப்புகள், கழிவிரக்கம் போன்ற கூறுகள் அவரது கவிதைகளில் காணக் கிடைக்காது. வேறெந்த ஒரு படைப்பாளியின் சாயலோ, பாதிப்போ அறவே கிடையாது. ஏறத்தாழ இத்தொக்குப்பிலிருக்கும் ஐம்பது கவிதைகளிலும் ஒரு சரடாக உள்ளோடும் கருப்பொருள் மிகவும் வித்தியாசமானதும், விசித்திரமானதும்கூட. பழனிவேள் இதைக் கையாண்டிருக்கும் விதம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.”
இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் மேற்கண்ட மதிப்பாய்வின் உண்மைத் தன்மைக்கு நிரூபணமாக விளங்குகின்றன.
big pictureஐ பலவிதமாகக் காட்சிப்படுத்துகிறது. வாழ்வோட்டத்திற்குக் குறியீடாக கவிதைகளில் இடம்பெறுகிறது.
கவிதைகளில் மொழிநயமும் கவித்துவமும் வெகு இயல்பாக, பிரயத்தனம் கோராத கவி மனத் தனிமொழியாக, உரையாடலாக இடம்பெற்றிருக்கின்றன. சமகால வாழ்க்கையின் நெருக்கடிகள் பேசப்பட்டிருக்கின்றன. அவற்றை எதிர்க்கும் கலகக்குரல் கஞ்சாவினூடாக ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. எடுத்துக்காட்டாக ஒரு கவிதை:
கடந்த காலமானாலும்
நிகழ் காலமானாலும்
எதிர் காலமானாலும்
எதிரிகளால் சூழப்பட்டது
எதிரிகளால் ஆளப்படுவது
இருக்கட்டுமே
ஒழுக்கம் வேண்டும் என்றே
விளைவிக்கிறது
நேர்மை அதை விநியோகிக்கிறது
வேண்டும் என்று
எளியோர் எப்படி மறுக்க முடியும்
வேண்டாம் என்று
கஞ்சாவைக் குறியீடாக்கி வாழ்க்கை குறித்த தத்துவார்த்தப் பார்வைகள் முன்னிறுத்தப்படுகின்றன. வாழ்வின் நெருக்கடிகளிலிருந்து தப்பிக்கும் ஒரு வழியாக, உபாயமாக கஞ்சா கவிதைகளில் ஊடாடிக்கொண்டிருக்கிறது.
பாழாய்ப் போனது
பட்டப் பெயர்கள்
அடையாளப் பெயர்கள்
சுட்டுப் பெயர்கள்
டோப்பு மால் சரக்கு
கடா மர்ஜிவானா பொட்டலம்
தூள்
கஞ்சாவின் எல்லாப் பெயர்களும்
புகைவெளியில் மாயமாகின்றன.
பழனிவேளின் கவிதைகள் விளக்கவுரையாக இருப்பதில்லை. பீடமேறி போதிப்பதில்லை. தீர்ப்பளிப்பதில்லை. அழுது புலம்புவதில்லை. அலட்டி ஆர்ப்பரிப்பதில்லை. ஒருவித மோனநிலையில், ஒருவித விலகிய பார்வையில் வாழ்க்கையைப் பார்த்தபடி, கனகச்சிதமான சொற்களில் ரத்தினச்சுருக்கமாகக் காட்சிப்படுத்துகின்றன.
அப்படி இருந்தது
அந்தப் பாட்டு
வரிகள் கூட இல்லையது நான்கைந்து வார்த்தைகள்
நீர்த்திவலைகள்
உடல் உப்புத்தொட்டி
கடல் கண்ணீர் புட்டி
இன்று காற்று
நாளையென்பது பொழுது
போ விலகிப்போ
இலைகளைப் போல உன்னால் நெருங்கவோ
இருக்கவோ முடியாது.
வார்த்தைகளுக்கிடையே வாசகர்கள் தேடியெடுத்துக்கொள்ள சொல்லும் பொருளும் பழனிவேளின் கவிதைகளில் நிறையவே உள்ளன. மேம்போக்கான, அசிரத்தையான தொனியில் ஒலிப்பதுபோலிருந்தாலும் இந்தக் கவிதைகள் அடியாழமன தீவிரத்தன்மை கொண்டவை என்பது தெளிவாகவே புலப்படுகிறது.
பெற்ற பேறு ஏதுமற்று
பெரும்போர் நடக்கும் அன்றாடத்தில்
கஞ்சா
கச்சிதமான பதுங்குகுழி
எல்லோரிடமும் கேள்விகள்
கேள்விகள் போலவே பதில்களும்
அவர்கள் எதையும் கோர்ப்பதில்லை
எதனையும் எளிதாக்குவதுமில்லை
பதுங்கு குழியில்
கேள்விகள்
பதில்கள்
தேவையே இல்லை.
கஞ்சா ஒரு குறியீடாகவும், பின்புலமாகவும், தூல அளவிலும், சூக்கும அளவிலும் இந்தக் கவிதைகளை கவித்துவம் குறையாமல் கட்டமைத்து உயிர்த்திருக்கச் செய்வதை வாசித்துத்தான் முழுமையாக அனுபவங்கொள்ள முடியும்.

புதிர்விளையாட்டு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 புதிர்விளையாட்டு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
இன்னார் இன்னாரை ஏசினால்
அது மானங்கெட்ட சாதிவெறி;
இன்னார் இன்னாரைப் நீசமாய்ப் புறம் பேசினால்
நிச்சயமாய் அது சமத்துவம் பேணும் நெறி.
அன்னார் இன்னாரை வசைபாடினால்
அது ஆக்கங்கெட்ட மதவெறி;
இன்னாரை அன்னார் வார்த்தைக்கசையாலடித்தால்
அது மாவீர அறிகுறி;
அதே வார்த்தைகள் – சில கொச்சையாய் பச்சையாய்
சில நாசூக்கு, முற்போக்கு, மனிதநேய, அறிவார்த்த அறச்சீற்ற அன்னபிற முலாம் பூசப்பட்டு.
ஜனவரியை அடுத்து பிப்ரவரி என்று ஒருவர் சொல்லும்போது சரியாவது
அதையே இன்னொருவர் சொன்னால் தவறாவது எப்படி யென்று
கதைக்கச் சொன்னால், ஐயோ உதைக்க வருவார்களே…..
அதையும் இதையும் எதையும்
பார்த்தபடி கேட்டபடி
கதைக்கும் ’கதை’க்கும் உள்ள வித்தியாசத்தை உள்வாங்கியபடி.
ஆறு மனமே ஆறு _
விதை முளைக்கும் நாளை வழிபார்த்தவாறு.

மறந்துவிட்ட உண்மை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மறந்துவிட்ட உண்மை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஒரு இறப்பின் மேல் பெருமதர்ப்பில் ஏறிநின்று
சிறிதும் பெரிதுமாய் போதனைகளைப் பொதிந்து
சொற்பொழிவாற்றிக்கொண்டிருப்பவர்கள்
மறந்துவிட்ட உண்மை
அவரவர் மனதின் மிக ஆழத்திலிருந்து துல்லியமாக எதிரொலித்துக்கொண்டிருக்கிறது:
“பிரசங்கங்களெல்லாம் மலைப்பிரசங்கமுமல்ல
பேசுவோரெல்லாம் ஏசுபிரானுமல்ல.”
தீர்ப்பளிக்காதே நாமெல்லோருமே பாவிகள்தான் என்று
திரும்பத்திரும்ப எத்தனை முறை சொல்லிக்கொண்டேயிருப்பது என்று நாவறளக் கேட்டுக்கொண்டேயிருக்கும் மேரிமைந்தனிடம்
மன்னிப்புக் கோரவும் நேரமில்லாமல்
இன்னமும் ஓங்கிக்குரலெடுத்து நியாயத்தீர்ப்பு வழங்கிக்கொண்டிருக்கும்
அவர்களின் வாதப்பிரதிவாதங்களெல்லாம்
ஆளுக்கொன்றாய் ஒலிக்கும்.
அவர்களுடைய நீதிதேவதையின் கண்களைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கிறது
ஆயிரம் துளைகள் கொண்ட கருப்புப்பட்டை.

மலையின் உயரம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 மலையின் உயரம்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

(*‘அதிகாரத்தின் நுண்பரிமாணங்கள்’ என்ற தலைப்பிட்ட எனது 10வது கவிதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. )

ஒருபோதும் மலைகளாகமுடியாதவர்கள்,
மலைமேல் ஏறக்கூட முடியாதவர்கள்
மலையின் அடிவாரத்தில் நின்று
அண்ணாந்துபார்த்தாலே
மளுக்கென்று கழுத்து சுளுக்கிக்
கொள்கிறவர்கள்
மலையிலிருந்து உருளும் ஒரு கல்லைக் காட்டி
மலை மாபாதகம் செய்துவிட்டதாக
மண்ணை வாரித்தூற்றுகிறார்கள்;
காலமெல்லாம் கையில் கற்களோடு
சுற்றிக்கொண்டிருப்பவர்கள்
பாவனைக் கண்ணீர் பெருக்கிக்
கருணைக்கடலாகிவிடுகிறார்கள்.
கனியிருப்பக் காய் கவரலாமோ என்ற குறட்பாவை
மேற்கோள் காட்டி கையோடு
தனித்துவமான தமது வசைபாடலை
ஒலிக்கச்செய்கிறார்கள் கோரஸ்களோடு.
‘கலி முத்திப் போச்சு’ என்பதாய் கவனமாய்
நவீன தமிழில் கருத்துரைத்து
எலிப்பிள்ளை என்றுரைப்பார் கிளிப்பிள்ளையாய்_
வலிய சிங்கத்தை.
எத்திசையிலும் அலைபாய்ந்திருக்குமவர் கண்கள்
பித்தளையாகக் காட்டி ஒரு ஒப்புநோக்கலில்
தன்னைப் பத்தரைமாற்றுத் தங்கமாகப் பறைசாற்ற
எங்கேனுமிருப்பாரோ இளிச்சவாயர்கள் என்று கண்காணித்தபடி.
ஒருவரிடம் காரியம் ஆகவேண்டியிருந்தால்
அவரை ஆதரிப்பார்;
இன்னொருவரிடம் இன்னொரு காரியம் ஆகவேண்டியிருந்தால்
அவரையும் ஆதரிப்பார்.
பாரபட்சமே நீதிநெறியாக
கையில் எப்போதுமிருக்கும் துலாக்கோல்
தட்டின் அடியில் ஒட்டிய புளியோடு.
எவரைப் பரிச்சயப்படுத்திக்கொண்டால் என்ன ஆதாயம்
என்ற மனக்கணக்கில்,
மருந்துக்கும் புத்தகங்களைத் தொடாமலேயே
சேருமிடம் சென்று வென்று கொன்று மென்று
பாஸ்மார்க், முதல் வகுப்பில் தேர்ச்சி, டிஸ்டிங்ஷன்
தங்கப்பதக்கம் என்று படிதாவிப்படிதாவிச்
செல்பவர்களுக்குத்தான்
குறிப்பாக மலையைக் கண்டால் வெறுப்போ வெறுப்பு.
’தட்டாமாலை தாமரப்பூ சுத்திச்சுத்தி வந்தாராம்’ என்ற
குழந்தைக்குதூகலமாய்
”விளையாட வாயேன்” என்று வெள்ளந்தி பாவனையில்
மலையை அழைப்பார்;
தலையைத் தழைத்தால் முகடு வெட்ட வாகாய்
வெட்டரிவாளை ஒளித்துக்கொண்டு.
இறங்கிவர மறுக்கும் மலையைப்
பெருமுதலாளி என்று பழிப்பார் _
இருபத்தியிரண்டு செல்லப்பிராணிகள் வைத்திருப்பார்.
இன்னும் என்னென்ன ரகங்கள் இங்கே என்றெண்ணி
புன்னகை பூக்கிறது
இயல்பே உயரமான மலை.
உயரேயிருந்து பார்க்க எல்லாம் தெரியும் மலைக்கு.
மலையை மடுவாக்கும் கனவைக்கூட நாம் கண்டுவிட இயலாது.
முன்னே நின்று நீர் உறுமுவதெல்லாம்
முனகல் மட்டுமே மலைக்கு;
முட்டிமோதினாலோ
சேதாரம் உமது் தலைக்கு.

வழக்கு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வழக்கு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
இல்லையென்பதற்கும் பார்த்ததில்லை யென்பதற்கும்
இம்மிக்கும் பலமடங்கு மேலான வித்தியாசம்…….
எனவே இன்னொரு முறை சொல்லச் சொல்லிக் கேட்டேன்.
குருவி என்று எதுவும் கிடையாது என்றார் திரும்பவும்.
இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்.
புத்துசாலிதான்…..
குருவியைப் பார்த்ததில்லை யென்றால் புரிந்துகொள்ளலாம்.
குருவியென்று எதுவுமே இல்லையென்றால்…..
படங்களைக் காட்டினால் ‘க்ராஃபிக்ஸ்’ என்றார்.
ஓவியங்களைக் காட்டினால் வரைந்தவரின் ’கிரியேட்டிவிட்டி’ என்றார்.
குருவிகள் சாகாவரம் பெற்று சிறகடித்துக்கொண்டிருக்கும் கவிதைகளை வாசித்துக்காட்டினால்
’கவியின் மெய் பொய்தானே’ என்று கண்ணடித்தார்.
நானே பார்த்திருக்கிறேன் என்றேன்.
காட்சிப்பிழை என்றார்.
’குருவி யொரு குறியீடு மட்டுமே’ என்றார்.
’தூலமல்ல; சூக்குமமே’ யென்றார்.
’ஆன்மா சூக்குமமா தூலமா’ யென்றேன்
’அப்படியென்றால் குருவி ஆன்மாயென்கிறாயா?
ஆமென்றால் உன் கேள்விக்கு பதில் அதுவே’ என்றார்
அதிமேல்தாவியாய்.
பதிலுக்கு
’குருவியின் குட்டிமூக்கு எத்தனை அழகு!’ என்றேன்.
’தொட்டுப்பார்த்திருக்கிறாயா என்ன? கத்தாதே’ என்றார்.
’கண்ணால் வருடிச் சிலிர்த்திருக்கிறேன்;
என் காமராவில் சிலையாய் வடித்திருக்கிறேன்’ என்றேன்.
’யாருடைய கைக்கூலியாகவோ பொய்சாட்சியம் பகர்கிறாய்’ என்றார்.
’விட்டுவிடுதலையாகி நிற்பாய்’ என்ற பாரதி வரியை மொழியத்தொடங்குவதற்குள்
’வசனம் பேசாதே, நிரூபிக்கும் வழியைப் பார்’ என்றார் வெற்றிப்புன்னகையோடு.
அன்றுமுதல் அலையோ அலையென அலைந்து,
ஏழு கடல் ஏழு மலை எத்தனையோ பாதாளம் வேதாளம் தாண்டி,
ஒரு குகைக்குள்ளிருந்த குருவியைக் கண்டுபிடித்து
இருநூறு இறக்கைகளை யதற்குப் பொருத்தி
ஒரே சமயத்தில் நாலாபக்கங்களிலும் அங்கிங்கெனாதபடி சிறகடித்துப் பறந்துகொண்டேயிருக்க
அதற்குக் கற்றுக்கொடுத்தேன்.....
கச்சிதமாய் எச்சமிட்டுத் தன் இருப்பை
முற்றிலும் உண்மையென நிரூபிக்க
அந்த மனிதரின் உச்சிமண்டையை அடையாளங்காட்டியிருக்கிறேன்.

நான் யார் நான் யார் நீ யார்….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நான் யார் நான் யார் நீ யார்…..

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

நான் நான் நான் நான்…
நாமைப் பற்றிப் பேசினாலும் சரி
நீயைப் பற்றிப் பேசினாலும் சரி
அவளை அவனை அவரை அவர்களை
அதை அவற்றை _
யாரைப் பற்றிப் பேசினாலும் சரி
அந்த நானுடைய பேச்செல்லாம்
நான் நான் நான் தான்….
எனில்
இந்த உலகம் நான்களால் ஆனது
ஒரு நானால் அல்ல
நானாவிதமான நான்களால் ஆனது
ஒரேவிதமான நான்களால் அல்ல.
இதைப் புரிந்துகொள்ளாத ஒரு நான்
பல நான்களாகக் கிளைபிரிந்து
பேசிக்கொண்டேபோகிறது.
அந்தப் பாதைகளில், திசைவழிகளில் முளைக்கும்
புல் பூண்டு செடி கொடி பெருமரம் எல்லாமும்
அந்த ஒரு நானின் பல நான்களில் மட்டுமே
வேர்பிடித்து வேர்பிடித்து.
மெய்யான இயற்கையை, வாழ்வை
தரிசிக்கும் ஆர்வங்கொண்டோர்
அந்தப் பாதைகளில் புகுவதை
கவனமாகத் தவிர்த்து
அப்பால் சென்று
தனது நானின் நான்களுக்கேற்ற
பிறரது நான்களை அடையாளங்காணும்
முனைப்பில்
அடுத்தடுத்து விரிந்திருக்கும் பாதைகளில்
நுழைந்து நடந்தவண்ணமே.
எந்த நானும் எந்த நானுக்கும்
பிரதிநிதியாகிவிட முடியாது
எல்லா நான்களுக்கும் பதிலியாகிவிட
ஏலாது
தன் நான்களைத் தேடப்புகாத ஒரு நான்
அடுத்தவன் நான்களை
அடையாளங்காட்டலாகுமா என்ன
யாரும் நுழையாத அந்த நானின் நான்களின்
ஆளரவமற்ற பாதைகள் கிளைப்பாதைகள்
நீண்டுகொண்டே போகின்றன.....
நாராசமாய் வீறிட்டுக்கொண்டிருக்கிறது
அதன் அனர்த்த மூச்சுக்காற்று...

மௌனம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மௌனம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
மௌனம் சம்மதமல்ல
மந்திரக்கோல்
மாயாஜால மொழி
மனதின் அரூபச் சித்திரம்
மேற்தோலின் உள்ளூறும் காற்றின் ருசி
மகோன்னத நறுமணம்
மரித்தார் உயிர்த்தெழல்
மாகடலின் அடியாழ வெளி
மையிருட்டிலான ஒளி
மாமாங்க ஏக்கம்
மீள் பயணம்
மருகும் இதயத்தின் முனகல்
மனசாட்சியின் குரல்
மிதமிஞ்சிய துக்கம்
மகா அதிர்ச்சி
முறிக்கும் புயலுக்கு முந்தைய அமைதி
வழிமறந்தொழியும் சூன்யவெளி
மொழியிழந்தழியும் எழுத்துக் கலை
மரணமனைய உறைநிலை……..

நமதான ரகசிய உயிர்களும் உயிரிகளும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நமதான ரகசிய உயிர்களும் உயிரிகளும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

உனக்குள்ளிருக்கும் ரகசிய உயிரியை
உனது வரிகளிலெல்லாம் உயர்த்திப்பேசியவாறே
எனக்குள்ளிருப்பதை எள்ளிநகையாடுகிறாய்.
ஒரு சொல் ரகசிய உயிரியாய் எவரொருவருடைய
ரத்தவோட்டத்திலும்
மிதந்துகொண்டிருக்கலாகும் சூட்சுமம் அறிந்திருந்தும்
அறவேயதை மறுதலித்தாகவேண்டிய அவசியமென்ன?
அதோ _
ஒருவர் அருவ இடக்கையால் ரகசிய உயிரியைத்
தான் போகுமிடங்களுக்கெல்லாம் அழைத்துச்
சென்றவண்ணம்…..
இன்னொருவர் தன் இடுப்புவளைவில்
அதைஏந்தியபடியே…….
வேறொருவருக்கு அதன் அருவத்தலையைத்
தடவித் தீரவில்லை….
நீயுங்கூடத்தான் விண்ணுக்கும் மண்ணுக்குமாய்த்
தாவியபடியே;
ஆனான அந்தரத்திலும் சுவடு பதித்தபடியே….
அப்போதெல்லாம் உன்னை வழிநடத்துவது
உன்னுடைய அந்த ரகசிய உயிரிதானே!
நாமொரு உயிரியாக இருப்பதே
நமக்குள்ளிருக்கும் ரகசிய உயிரியால்தானே!
ரகசியம் என்பதோ உயிரி என்பதோ
கெட்ட வார்த்தைகள் அல்லவே!
நமக்குள்ளிருக்கும் நாமறிந்த அறியாத
ரகசியம்
உயிர்த்திருக்கும் காலம் வரை
அதுவுமோர் உயிரிதான்.
நினைத்துப் பார்த்தால்
நாமேகூட ரகசிய உயிரி நமக்கு.
அறிந்தவர்களுக்குள்ளிருக்கும்
ரகசியம்
உயிரி _
ரகசிய உயிரி.

மனிதநேய மாசுகள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 மனிதநேய மாசுகள்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
நான்கு சொந்த வீடுகளும்
நவீன படகுக்காரும்
கொண்ட
கட்சிப்பின்புலம் கொண்ட
அதிசாதாரணக் கவியொருவர்
வறுமை குறித்து பக்கம்பக்கமாக
எழுதித்தள்ளுவதை
வாய்பிளந்து ரசித்துக்கொண்டிருப்பவர்கள்
அவரை விட அதிசிறந்த கவிஞரொருவர்
அரைவேளை கஞ்சிக்கும் வழியில்லாமல்
வீட்டுவாடகை கட்ட வழியின்றி
மூச்சுத்திணறிக்கொண்டிருப்பதைக்
கவிதையாக்கி எழுதுவதை
புலம்பலென்று பகுத்து
கடந்துசெல்கிறார்கள்.

அன்பே உருவாதலு'க்கான அதி எளிய வழி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அன்பே உருவாதலு'க்கான

அதி எளிய வழி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
யார் என்ன எழுதினாலும் அநாயாசமாக ‘லைக்’கிட்டுத் தள்ளிக்கொண்டிருந்த கை ஒருநாள் சுளுக்கிக்கொண்டுவிட்டது.
அமிர்தாஞ்ஜன், டைகர் பாம், பிண்ட தைலம்
எதுவும் உதவிக்கு வரவில்லை.
அந்தக் கைக்குரியவருக்கு
அழுகையழுகையாய் வந்தது.
ஆரேனும் தன்னை அன்பிலாக் காட்டான்,
சகமனிதவிரோதி,
மன்னிக்கத் தெரியாத மிருகம்,
அ- புரட்சியாளர்,
அசிங்கம்பிடித்த விருப்புவெறுப்புவாதி,
அநியாய சார்பாளர்,
அனுதினம் பாரபட்சம் பழகுபவர்
இன்னும் என்னென்னவோ எண்ணிவிடுவார்களே
இவருமவரும்
தெரிந்தவர்களும் தெரியாதவர்களும்
இருப்போரும் இல்லாதாரும்
கல்லாரும் கற்றாரும்
உள்ள விருப்புவெறுப்புக்கேற்ப
உற்றார் உறவினர் நட்பினர் விரோதிகள்
எல்லோரும் ….
என்ற கவலையில்
விறுவிறுவெனத் தலைசுற்றியது அவருக்கு.
மாற்றுக்கருத்திருந்தாலும் மறைத்து ’லைக்’ இட மறவாமலிருப்பதே
மகோன்னத மனிதப் பண்பு!
இடதுகையால் எழுதும் பழக்கத்தைக் கற்றுத்தராத
பள்ளிமீதும் கல்லூரி மீதும்
கடகடவென்று வசையை அள்ளியிறைக்கத்
தொடங்கிய மனதை
பிரயத்தனத்தோடு அடக்கிக்கொண்டார்.
அவருடைய ’லைக்’கிற்கு அப்பாலாகக்கூடாது அவையும்.
இத்தனை கரைபுரண்டோடும் அன்புநிறை
பத்தரைமாற்றுத்தங்க வித்தகரின்
இன்றைய லைக்குகளுக்காகக் காத்துக்கொண்டிருக்காமல்
தன்பாட்டில் இயங்கிக்கொண்டிருக்கிறது
ஃபேஸ்புக்
என்பதே அன்னாரின் இன்னாளுக்கான
ஆகப்பெரும் துக்கமாக……..