LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, November 2, 2025

கவிஞர் வைதீஸ்வரன் - ஆவணப்படங்கள்

 


https://www.youtube.com/watch?v=EZIRTcgPomM


https://www.youtube.com/watch?v=5ThsZDRFJEs&t=2484s

இறக்கைகளை இனங்காணல் ............................................................................ ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 இறக்கைகளை இனங்காணல்

............................................................................
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
தெரியும், பட்டாம்பூச்சி என்பது உங்களுக்கு ஒரு பொதுப்பெயர்.
எனக்கு அது தனிப்பெயர்.
என் வண்ணங்களை நீங்கள் பொதுவாக்கினாலும்
எனக்கு அவை தனியானவைதான்.
என் ஊதாநிறம் எப்படி இன்னொரு பட்டாம்பூச்சியின் ஊதாநிறமாகும்.
ஒத்திருத்தலும் ஒன்றாதலும் ஒன்றா?
நான் பட்டாம்பூச்சி. பட்டாம்பூச்சிகள் அல்ல.
பட்டாம்பூச்சிகள் என்று அடையாளமழிப்பதில் உள்ள
வஞ்சப்புகழ்ச்சியை நான் அறிவேன்.
‘லதா’ என்பதற்கும் ‘லதாக்கள்’ என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை
நீங்கள் அறியாதவரல்ல.
என் வாசகசாலையும் சர்வகலாசாலையும் உங்களுக்குத் தெரியாதென்பதால்
அவை இல்லையென்றாகிவிடாது.
ஒரு விரிபரப்பைக் கடக்கும் கால்கள் உண்மையில்
அந்த விரிபரப்பின் ஒரு பகுதியையே கடக்கின்றன பெரும்பாலும்.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி என்று சம்பந்தமில்லாமல் ஒரு பழமொழியை உதிர்ப்பதற்கு முன்பு பட்டாம்பூச்சிக்குப் பல்லிருக்கிறதா என்று தெரிந்துகொள்வது நலம்.
பட்டாம்பூச்சியாகிய எனக்கு வண்ணத்துப்பூச்சி என்ற பெயரும் இருக்கிறது என்று எனக்குத் தெரியும்.
ஆனால் ’வண்ணாத்தி’ என்று ஒரு கவி அன்பொழுகப் பாடியபோது
துணிவெளுப்பவளை என்றல்லவா தவறாக எண்ணிவிட்டேன்.
’சலவைத்தொழிலில் எதுவும் இழிவில்லை
என் மொழியறிவுப்போதாமையைத்தான் பழிக்கிறேன்’
என்று சுயவிமர்சனம் செய்யும் பட்டுப்பூச்சியாகிய என்
இறக்கைகள் சன்னமாக இருந்தால்தான் என்ன?
எனக்குப் பறக்கமுடிகிறதே – அதைவிட வேறென்னவேண்டும்?
அவரவர் பட்டாம்பூச்சிகளுக்கு அவரவரிடம் செல்லப்பெயர்களும் உண்டு.
நானாகிய என் பட்டாம்பூச்சியின் செல்லப்பெயர்(கள்)
அநாமிகா ரிஷி.
சொல்லும்போதே சரேலென விரியும் என் சிறகுகள்
அதோ உயரே!

கர்ணனும், ’கமர்கட்’தானமும், கவிதையும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கர்ணனும், ’கமர்கட்’தானமும், கவிதையும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

கர்ணனைத் தங்கள் தோழனாகத்
தோள்தட்டிக் கொள்கிறவர்கள் சிலர்
வலது கை கொடுப்பதை
இடது கை யறியாமல்
தர விரும்புவதேயில்லை.
’கமர்கட்’ தானம் கொடுத்தாலும்
அதைக் கணக்கற்ற காமராக்களின்
ஒளிவெள்ளத்தில் வழங்குகிறார்கள்.
இல்லை, இருபத்திநாலாயிரம் ரூபாய்
கொடுத்து
வாங்கியிருக்கும் ஸ்மார்ட் ஃபோனில்
துல்லியமாய் செல்ஃபியெடுத்துப்
பதிவேற்றிவிடுகிறார்கள்.
குட்டு வெளிப்பட்டதும்
துண்டைக் காணோம்
துணியைக் காணோம் என்று
கொஞ்சமே கொஞ்ச காலம்
அஞ்ஞாதவாசத்திலிருந்தவர்கள்
வாய்த்த சந்தர்ப்பத்தில் வெளிப்போந்து
கவி பாடி
விட்ட இடத்திலிருந்து
தங்கள் தர்பாரைத் தொடங்குகிறார்கள்.
காணிநிலமென்று சில ஏக்கர்
நிலங்களைக்
கைவசம் வைத்திருக்கும்
நவீன ஏழைகள் சிலர்
ஒண்டுக்குடித்தனத்திலிருப்பவர்களைக்
கொடுங்கோலரசர்களாகக் காட்டி
செருப்பாலடிக்கிறார்கள்
திரும்பத்திரும்ப.
பேசும் பாம்புகளாக மெகாத்தொட
ரோட்டிக்கொண்டிருக்கும்
விஜய் தொலைக் காட்சி
‘நாங்கள் மூடநம்பிக்கைகளை ஆதரிக்க
வில்லை, மூடப்பழக்கவழக்கங்களை
ஊக்குவிக்கவில்லை' என்றெல்லாம்
பலவாறாய்
நீண்டு வளைந்துசெல்லும்
வாக்கியப் பாம்புகளை
திரையில் ஒரு முனையிலிருந்து
மறுமுனைக்கு வேகவேகமாய்
ஊர்ந்துசெல்ல வைக்கிறது.
எல்லோரும் உண்மைதான் பேசுவார்கள்,
உண்மையாகத்தான் பேசுவார்கள்
என்று இன்னமும் எண்ணியவாறிருக்கும்
இத்தனை பெரிய மூடநம்பிக்கையிலிருந்து
மீளும் வழியறியாமல்
விக்கித்து நிற்கிறது என் பகுத்தறிவு.

பிறவிப்பயன் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பிறவிப்பயன்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
நான்கே வரிகளில்
அல்லது நாலிலொரு வரியில்
நான்கே வார்த்தைகளில்
அல்லது நாலிலொரு வார்த்தையில்
ஆங்கே யொரு காடு வெந்து தணிய
ஆங்காங்கே பெருமரநிழல்கள் காய் கனிகள்
புள்ளினங்கள் பூச்சி பொட்டுகள்
துளிர்க்க
புதுமழை பொழிய
பூமியெங்கும் நிரம்பிவழியும் பூக்களெங்கும்
பட்டுப்பூச்சிகளுக்கு மட்டுமின்றி கட்டுக்கடங்கா பிச்சிமனங்களுக்குமாய்
கொட்டிக்கிடக்கும் மகரந்தத்தூவல்கள்
எட்டுத்திக்குகளும் பரவும் நறுமணம்
உயிர்விரவி யுள் பரவும்
அவரவருக்காகுமவை
மனதின் அந்தர வெளியில் ரீங்கரிக்கக்
கேட்கும்
தருணங்களில் அரும்பி மலரும்
பிறவிப்பேரின்பம்....
விரி வழியெங்கும் அடர்ந்திருக்கும்
அவரவருக்கான ஆரண்யங்களும்
அஞ்ஞாதவாசங்களும்.All reactions:

காலகாலம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 காலகாலம்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

கண்ணாமூச்சி விளையாடித் தீரவில்லை காலத்திற்கு.
’கதவுக்குப் பின்னே இருக்கிறேன் , கண்டுபிடி’ என்று சொன்ன குட்டிப் பையன்கள்
கனவான்களாகி காணா நிலவெளிகளுக்குப் போய்விட்டார்கள்.
கனவான்களின் தலை நரைத்து தளர்ந்துவிட்டன கைகால்கள்.
சில கதவுகள் உளுத்துப்போய்விட்டன;
சில கதவுகள் வலுவாகவே நின்றிருந்தாலும்
வாழுமிடங்கள் வேறாகிவிட்டன.
வற்றியும் வற்றாமலுமான நனவோடைகளின்
நீள அகல ஆழங்களை யறியும் அளவுகோலையும்
களவாடிச் சென்றுவிடுகிறது காலம்.
மீண்டும் மீண்டும் அது மறைந்துகொள்ள
மரங்களை விதைகளாக்கி நடுவதை மட்டும் நிறுத்துவதேயில்லை.
ஒரு விடியலுக்கும் இன்னொரு விடியலுக்கு மிடையேயான
அந்தகாரத்தில் ஒளிந்துநிற்கும் காலத்தை ஒருவேளை
கண்டுபிடிக்கமுடிந்தாலும்
கைவசப்படுத்த இயலாது என்ற புரிதலில் நெரியும் உயிர்
கலங்கி நிற்பதைப் பார்த்து
மாயக்கோல் ஒன்றைத் தந்து
முன்னே தள்ளிவிட்டுத் தன் வழி சென்றது காலம்.
அந்தக் கோலை வைத்து
முயலை கைக்குட்டையாக்கப் பார்த்தேன் –
முடியவில்லை.
புறாவைப் பூச்சாடியாக்கப் பார்த்தேன் –
முடியவில்லை.
வெறும் பைக்குள் கையை விட்டு
வைரமோதிரங்கள் எடுக்கப் பார்த்தேன் - – முடியவில்லை.
ஆனால்
என்னைக் குழந்தையாக்கி இல்லாத கதவுக்குப் பின் ஒளித்து
கண்ணைப் பொத்திநிற்கும் காலத்தை விளித்து
கண்டுபிடிக்கச் சொல்லும் கண்ணாமூச்சி யாட்டத்தை
எண்ணாயிரம் வண்ணங்களில் ஆடிப்பார்க்க முடிகிறது….!
காலத்தை கலைடாஸ்கோப்பாக்கி
நினைத்த நேரத்தில் நினைத்த கோலத்தைக் காட்டவைக்க முடிந்ததில்
காலவழுவமைதியே காலமாக….

சிறுகதை அன்றொருநாள்….. ‘அநாமிகா’ (லதா ராமகிருஷ்ணன்)

  சிறுகதை

அன்றொருநாள்…..

‘அநாமிகா’

(லதா ராமகிருஷ்ணன்)

https://puthu.thinnai.com/2025/10/12/%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/?fbclid=IwY2xjawN0d9ZleHRuA2FlbQIxMQABHvsjPAzB1pjA-iWnghnMLHoucSytQ5L92EBGjPQH2V1PfwgwwPgU2O-GzNNB_aem_ZoEtASiRlXMCygQ9kh_4Pw


வலியின் நிறம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வலியின் நிறம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


சரேலென்று அத்தனை அகங்காரமாக
சிறிதும் ஒலியெழுப்பாமல் திரும்பிய கார்வண்டியின் சக்கரங்கள்
சிறுவனொருவனை ரத்தக்கிளறியாக்கிவிட்டுச் சென்றதைக்
காணப்பொறாமல் கண்டித்துப்பேசினால்
அதற்குள் அவனுடைய சாதியையும்
கார்க்காரனின் சாதியையும்
எப்படியோ துப்பறிந்து
அன்றொரு நாள் இன்னொரு காரோட்டி இன்னொரு சிறுவனை இப்படிச் சிதைத்தபோது யாரும் ஏதும் பேசாததற்குக் காரணம் அவன் வர்க்கத்தால் ஏழையென்பதும்
சாதியால் அடித்தட்டிலிருப்பதும்தானே
என்று ஏனையோரைக் குற்றவாளிகளாக்கித்
தங்களை உத்தமசீலராக்கிக் கொண்டுவிடுவது
எப்போதுமே எளிதாக இருக்கிறது சிலருக்கு.
இப்போதைய காரோட்டியின் செயலை பிறப்பின் பெயரால் சிலர் நியாயப்படுத்தத் தொடங்குகிறார்கள்.
பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் பெண்களின் அகபுற வலிகளையெல்லாம்
அவரவர் கைவசமிருக்கும் இவையனைய எடைக்கற்களால்
அளந்துபார்த்துக் கடைவிரிக்கும் மொத்த வியாபாரிகளும்
சில்லறை வியாபாரிகளும் உண்டு
உலகமயமாக்கலுக்கு முன்பும் பின்பும்.
நலிந்தழிந்து இதோ
குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடக்கும் ஒரு சிறுவனின்
தலைமாட்டில் நின்றுகொண்டு
காலாதிகால வர்த்தமானங்களைப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
சிறுவன் இறந்துவிட்டால் இன்னும் நிறையப் பேச முடியும்.
ரணவலியின் மீதேறி நின்று வெறுப்புமிழ் பிரசங்கம் செய்தபின்
அங்கிருந்து ஒரே தாவலில் சென்றுவிடுவார்கள்
அவரவர் ‘IVORY TOWER'களுக்கு’

பொய்யிலே புரண்டு பொய்யிலே உழன்று…. லதா ராமகிருஷ்ணன்

 பொய்யிலே புரண்டு பொய்யிலே உழன்று….

லதா ராமகிருஷ்ணன்

ண்ணன் என் காதலன், கண்ணன் என் சேவகன், கண்ணன் என் குழந்தை என்ற ரீதியில் பாம்பை காதல னாக, காதலியாக குழந்தையாக என்று சித்தரிக்கும் தொடர்களைக் காட்டிக்காட்டியே உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும் தொலைக் காட்சி சேனல்கள் –
குழந்தையையும் கிள்ளிவிட்டுத் தொட்டி லையும் ஆட்டிவிடும் கதையாய் – இந்தத் தொடர்க ளைக் காட்டுவதோடு திரையில் பாம்போடு பாம்பாக
’நமது பண்டைய தமிழர்கள் காலம் காலமாக இது போன்ற கற்பனைக் கதைகளை சொல்லி, இதை ஒரு பொழுது போக்காவே மாற்றி உள்ளனர்.அதன் அடிப்ப டையில் பொழுது போக்குக்காக மட்டுமே ஒளிபரப் பப் படுகிறது இந்த தொடர் நாங்கள் நம் நாட்டுப்புறக் கதைசொல்லும் சுவாரசியமான மரபை மீட்டெடுக்கி றோமே தவிர, இந்த மாதிரி முடநம்பிக் கைகளை ஒருபோதும் ஆதரிக்கவில்லை – அவற்றை வன்மை யாகக் கண்டிக்கிறோம்' _ என்ற ரீதியில் நீளநீளமாக வரிகளைத் திரையின் அடிப்பகுதியில் அதிவிரைவுப்பாம்புகளாய் ஓட விட்டுத் தங்கள் பகுத்தறிவை ’துண்டுபோட்டுத் தாண்டாத குறையாக’ நிறுவப் பிரயத்தனப்படுவ தைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.
அதுசரி, ஹமாம் விளம்பரத்தில் இரண்டு பேர் வளரிளம் பருவப் பெண்ணைைக் கேலி செய்வதைப் பார்க்கும் தாய் ஏறத்தாழ அதே வயதிலான தன் சின்ன மகளை ஓட விட்டு,
‘ஓடு துரத்து – எதிர்க்காமலிருந்துவிடாதே – ஹமாம் உன் சருமத்தைக் காக்கும்’ என்று தீவிரப்பார்வை யோடு உளற _
திரையில் அந்தச் சின்ன மகளின் வெற்றுத்தோள்கள் காண்பிக்கப்பட்டு அந்தப் பெண் அவற்றில் ஹமாம் குழைத்துத் தடவிக்கொள்வதும் காண்பிக்கப்படுகி றதே –
எப்பேர்ப்பட்ட பகுத்தறிவு விளம்பரம் இது!
இதைக் காட்டி பணம் பண்ணும் சேனல்கள் பகுத்தறி வைப் பற்றிப் பேசாமலிருப்பதே நல்லது.

Thursday, October 9, 2025

INSIGHT ( a bilingual blogspot for contemporary tamil poetry) AUG-SEP, 2025

 INSIGHT 

( a bilingual blogspot for contemporary tamil poetry) 

AUG-SEP, 2025


2019insight.blogspot.com


சொல்லவேண்டிய சில..... (படைப்பாளியும் அவரது படைப்புகளும்)_ லதா ராமகிருஷ்ணன்

 சொல்லவேண்டிய சில.....

   (படைப்பாளியும் அவரது படைப்புகளும்)

_ லதா ராமகிருஷ்ணன்

படைப்பாளி தன் குடும்பத்திற்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. அவர் மனித குலத்திற்குச் சொந்தமானவர்.

வாழுங்காலத்தே அவர் உரிய அளவாக அறியப்படாதிருக்கலாம். அவருடைய படைப்புகள் வருவாய் ஈட்டித்தராமலிருந்திருக்க லாம். பல படைப்பாளிகளின் எழுத்துகளை அவர்களுடைய குடும்பத்தார் படிப்பதோ பொருட்படுத்துவதோ கிடையாது. பிழைக்கத் தெரியாத வர்கள் என்றோ, உதவாக்கரைகள் என்றோ தான் தரமான படைப்பாளிகளாக இருந்தாலும் தங்கள் படைப்பு களின் மூலம் பொருள் ஈட்டவியலாதவர்களைப் பலரும் நினைக்கிறார்கள். பிரதானமாக, குடும்பத்தார்.

பொருள் பிரதான வாழ்க்கையிதில் பணத்தைத் தாண்டிய, அதற்கும் மேலான ஆனந்தத்தை ஒரு நல்ல கவிதை கொடுக்கும் என்றால் நாடக பாணியில் உளறுவதாக நம்மைப் பார்த்து நமுட்டுச்சிரிப்பு சிரிப்பவர்களும், ‘நட்டு கழண்ட கேஸ்’ என்று முத்திரை குத்துபவர்களுமே அதிகம்.

பல நேரங்களில் உறவுகள் புறக்கணித்த நிலையில் படைப்பாளி களை அவர்கள் மேல் அன்பும் அவர்கள் எழுத்தில் மரியாதையும் வைத்திருக்கும் சக எழுத்தாளர் களும், நட்பினரும் பதிப்பகத் தாரும் வாசகர்களுமே புரந்து காத்து அவர்கள் தொடர்ந்து எழுத ஊக்கமும் உதவியும் அளிக்கிறார்கள்.

ஆனால், மாதா மாதம் லட்ச ரூபாய் சம்பாதித்தும் அதில் ஆயிரம் ரூபாய் கூட படைப்பாளிக்கு அனுப்பிவைக்க மனமில்லாத அவரது சட்டப்படியான குடும்பத்தார், வாரிசுகள், உறவுகள் படைப்பாளி இறந்துவிட்டால் உடனே அவருடைய படைப்புகளுக்கு உரிமை கொண்டாடி வருகின்றனர். அதுவரை படைப்பாளியைப் புரந்து காத்தவர்கள் அந்நியமாக்கப்படுகிறார்கள்; புறந்தள்ளப்படுகிறார் கள்.

பல நேரங்களில் படைப்பாளி இறந்த பின் அவருடைய படைப்பு களிலிருந்து கிடைக்கக்கூடிய பணமொன்றே குறியாக, வாழும் நாளில் அவரை அவமரியாதை செய்த பதிப்பகத்திடமே அவரு டைய படைப்புகளைக் கொடுத்து வெளியிடச் செய்வதும் நடக்கிறது. இது சம்பந்தப்பட்ட படைப்பாளியை அவமரியாதை செய்வது.

இந்த அவலநிலையிலிருந்து தானும் விடுபட்டு வாழும் நாளில் தன்னைக் காத்தவர்களையும் விடுவிக்க படைப்பாளிகள் வாழுங் காலத்திலேயே தங்கள் படைப்புகள் குறித்த உயிலை எழுதி வைத்து விட வேண்டும்.

ஒரு படைப்பாளியின் எழுத்து அவர் சுயமாய் சம்பாதித்த சொத்து. அதை அவர் மதிக்கும், அவரை மதிக்கும், புரந்துகாக்கும் யாருக்கும் தர அவருக்கு உரிமையுண்டு