LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Sunday, May 30, 2021

இருத்தலியல் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 இருத்தலியல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)




வருடக்கணக்காக அந்தக் காரை ஓட்டிக்கொண்டிருந்தான் அவன்.
மறுபடியும் மறுபடியும் அதை தலைமுதல் கால்வரை துடைத்து மெருகேற்றுவான்.
அதன் கண்ணாடிப் பளபளப்பில் தன் முகம்
அதி கம்பீரமாகத் தெரிவதாகத் தோன்றும் அவனுக்கு.
நகரின் வீதிகளில் வழுக்கிக்கொண்டுசெல்லும்போது
கார் தேராக மாறி அவனை அரியணையில் அமர்த்தும்.
அப்போதெல்லாம் மாதம் மும்மாரி பொழியும்
அவன் திருநாட்டில்
உணவு உடை உறையுள் இல்லாத யாருமே இருக்கமாட்டார்கள்.
அப்படியே போர்வீரர்களும் போருக்கான தேவையும்.
இனிவரக்கூடிய எதிரிகளை வீழ்த்தும் வியூகங்கள் கார்ச்சக்கரங்களில் பொறிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று ஒரு நாள் அவன் கனவில் சித்தர் சுவடி வாசித்தார்.
தூங்குவதற்கு முன் அவன் பார்த்த தொலைக்காட்சி மெகாத்தொடரில்
ஒரு பெண்சித்தர் பாத்திரம் இடம்பெற்றிருந்தது காரணமா, தெரியவில்லை..
முதலாளி ஷாப்பிங் மாலுக்குள் சுற்றிக்கொண்டிருக்க
காரின் பின்னிருக்கையில் அரைவிழிப்போடு குட்டித்தூக்கம் போடுபவன்
இல்லாள் மடியில் கிடப்பதாக நெகிழ்ந்துபோவான்.
காரின் கதவுகளை யாரேனும் அதிரத் திறந்தாலோ அறைந்து மூடினாலோ
யாருமறியாமல் அவர்களுக்கு அவன் அளிக்கும் சாபங்கள்
அவர்களைச் சுற்றிச் சூழ்ந்து என்னென்ன இன்னல்களை ஏற்படுத்தினவோ – யாருக்குத் தெரியும்.
தெரியும் அவனுக்கு காரின் பெட்ரோல் பசி.
ஒருபோதும் காரைப் பட்டினி கிடக்க விடமாட்டான்.
காரின் கலங்கிய கண்களை, கடும்பசியால் வாடிய வதனத்தைக் காணப்பொறாத அவன்
முதலாளி தர மறந்துவிடும் சமயங்களில் தன் கைக்காசை போட்டு அல்லது கடன் வாங்கியாவது காரில் பெட்ரோல் நிரப்பிடுவான். பிறகே பணம் வாங்கிக்கொள்வான்.
காரின் மீது சூரியக்கதிரொளி படரும் நேரத்தையும், சூரியக்கதிரின் நீளத்தையும், அடர்த்தியையும் பார்த்தாலே சரியான நேரம் தெரிந்துவிடும் அவனுக்கு.
அதன் வெளியுறுப்புகளும் மறைவுறுப்புகளும் அவனுக்கு அத்துப்படி.
ஒரு கட்டத்தில் அதைத் தனதாகவே பாவிக்கத் தொடங்கினான்.
முதலாளிக்கு பதவி உயர்வோடு மும்பைக்கு மாற்றலாக,
மூன்றுமாதச் சம்பளத்தொகையோடு வீடுதிரும்பிய வனின் கனவில்
‘என்னை ஏன் உன்னோடு கூட்டிச்செல்லவில்லை?’ என்று திரும்பத்திரும்பக் கேட்டபடி
அவன் காலடியில் கேவிக்கொண்டிருந்தது கார்.




வானம் வசப்படும் தருணங்கள் ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வானம் வசப்படும் தருணங்கள்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

வழக்கம்போல் ஒரு நூல்வெளியீட்டுவிழா
படித்ததில் பாதிக்குமேல் நல்ல கதைகள்.
விமர்சிக்கத் தோதாய் ஏற்கெனவே
தபாலில் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது
பிரதியொன்று.
விழாமேடையில் பேசிமுடித்ததும் கையில் தரப்பட்டது
வழுவழுத்தாளில் பொதியப்பட்டிருந்த இன்னொரு பிரதி.
தரமான கெட்டி அட்டையில்.
விலை நானூறுக்கு மேல்.
விழாமுடிந்து விடைபெற்றுக்கொண்டு வீடுதிரும்ப
கூப்பிடுதூரத்திலிருந்த பேருந்துநிறுத்தத்திற்கு நடக்கலானேன்.
ஆர்வமாய் பேசிக்கொண்டே கூடவந்த வளரிளைஞன்
என் கையிலுள்ள புத்தகத்தை அடிக்கொருதரம் பார்ப்பதைப் பார்த்து
”படித்திருக்கிறீர்களா?” என்று வினவினேன்.
”நண்பனிடம் ஒரு பழைய பிரதியிருக்கிறது. இரவல்
வாங்கிப் படித்தேன்” என்றான்.
”இதை வைத்துக்கொள்ளுங்கள் இன்னொன்று
இருக்கிறது என்னிடம்” எனத்
தந்தேன் வழுவழுத்தாளில் பொதியப்பட்டிருந்த
பிரதியை.
நம்பமுடியாமல் அதைப் பார்த்து அதிசயித்து
நெகிழ்வில் அழுகுரலில் நன்றிபகர்ந்தவனுக்குத் தெரியாது
அவன் தயவால் நான் தாற்காலிக தேவதையாகி யிருப்பது!





காலக்கணக்கு - 1 ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 காலக்கணக்கு - 1

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
அன்று தெருவோர வீட்டில் யாரோ இறந்துபோயிருந்தார்கள்.
அந்த வழியாகப் போனால் நான் செல்லவேண்டிய இடத்தைச்
சீக்கிரமே சென்றடையலாம்.
ஒரு முடிவோடு பாதி தூரம் வரை சென்றவள்
இன்னொரு முடிவோடு பின்னேகி
எதிர்ப்புறமிருந்த சுற்றுவழியில் சென்று சேர்ந்தேன்
அரைமணிநேரம் தாமதமாக _
அலங்கார் ஹோட்டலில் விருந்துண்ண.
இன்று என் துக்கம் தெரியாமலோ
அதைப் பொருட்படுத்தாமலோ
நான்காம் வீட்டில் நிச்சயதார்த்தக் கோலாகலங்கள்.
ஆனாலும் _
காலம் கருணைமிக்கது.
கதறலொலிகள் எல்லாம் ஒருசேரத் திரண்டால்
காதுகளின் கேள்சக்தி மீறிய ஆழம் தேவைப்படுமென்றோ
கண்ணீர்களெல்லாம் ஒன்றிணைந்தால்
ஊழிப்பிரளயமாகிவிடுமென்றோ
பங்குபிரித்துவைத்திருக்கிறது
.

Like
Comment
Share

கண்ணிரண்டும் விற்று…….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கண்ணிரண்டும் விற்று……..

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
அந்த மெகாத்தொடரில் அண்ணி மாமியாருக்குக் காப்பியில் விஷம் கலந்துகொண்டிருந்தாள்.
அனிச்சைச்செயலாய் சேனலை மாற்றிய கை நின்ற அடுத்த சேனலில்
அக்கா தங்கையின் ஜூஸில் எலிமருந்தைக் கலந்துகொண்டிருந்தாள்
அய்யோ என்று அலறாமல் அலறியபடி இன்னொரு சேனலைச் சென்றடைய அங்கே யொரு தோழி இன்னொரு தோழியைப் பின்பக்கமாக நின்று பாதாளத்தில் தள்ளிக்கொண்டிருந்தாள்
அடுத்த நாள் அந்தத் தோழி ஆவியாய் வருவதற்குத் தோதாக.
பதறி பத்து சேனல்கள் தள்ளி திருப்பினால் அங்கே
கதாநாயகி பச்சைக்கிளியாக மாறி பார்ப்பவர்மீதெல்லாம் நெருப்பைக் கக்கிக்கொண்டிருந்தாள்.
பட்டறைகளில் உருவாகும் அத்தனைத் தொடர்களிலும்
பயங்கர சதித்திட்டங்களெல்லாம் தயாராகிக் கொண்டிருந்தன
திருக்கோயில் பிராகாரங்களிலும் மண்டபங்களிலும்.
ஒரு கையால் கன்னத்தில் போட்டுக்கொண்டே இன்னொரு கையால்
பிச்சுவாக் கத்தி, பட்டாக்கத்தி கைத்துப்பாக்கி வெடிகுண்டு என்று விதவிதமாய் ஆயுதங்களைத் தாங்கி யாரையாவது தீர்த்துக்கட்டிக்கொண்டிருந்தார்கள் ஆண்கதாபாத்திரங்களெல்லாம்.
பெண் கதாபாத்திரங்களுக்கு இருக்கவே இருக்கிறது பிரசாதத்தில் பல்லியை விழச்செய்யும் திருப்பணி.
கதாநாயகிகள் தீச்சட்டி ஏந்தி காவடி ஏந்தி அடிப்பிரதட்சணம் செய்து அங்கப்பிரதட்சணம் செய்து வாரத்திற்கு ஏழு நாட்களும் ஏதாவதொரு விரதமிருந்துகொண்டிருக்கிறார்கள்.
விரைவில் உடன்கட்டை ஏறினாலும் வியப்பதற்கு ஏதுமில்லை.
ஆத்திகத்திற்கு ஆத்திகம் நாத்திகத்திற்கு நாத்திகம்
அதோ பாருங்கள்
சாத்திரம் படித்துக்கொண்டே வருகிறது பேய்;
அடுத்த சேனலில் ஊளையிடுகிறது நாய்;
அடுத்ததில் ஓநாயின் திறந்த வாய்
பிறாண்டும் கைக்குக் கிடைத்த பாய்
கிழிந்ததாக,
ரிமோட்டின் செயலின்மையைப் பழித்தபடி
விழிகளுக்குள் வலுக்கட்டாயமாக நுழையும்
பிராண்ட் நியூ மெகாஆஆஆஆஆத்தொடருக்கான ‘டீஸர்’ அழைப்பிதழ்

கவிதையும் சொல்லியும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கவிதையும் சொல்லியும்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

மிகச் சிறந்த கவிதை யது

மிக மிகப் பொருத்தமான சொற்களால்

நிரம்பியிருந்தது.

விழவுக்கும் எழவுக்குமான

குழவிக்கும் கிழவிக்குமான வேறுபாட்டைக்

கைபோனபோக்கில் காற்றில் பறக்கவிடும்

எழுத்தல்ல

அழுத்தமாகச் சொல்லமுடியும்

ஆகச் சிறந்த கவிதைகளில் அதுவுமொன்று.

மனதை நெகிழ்த்தி

மிக இலகுவாக உள்ளுக்குள் ஊடுருவிச்சென்று

அங்கிருக்கும் உயிருக்கும் ஆன்மாவுக்கும்

சார்ஜ்செய்கிறது; ’டாப்-அப்செய்கிறது

அங்கே ஒலித்துக்கொண்டேயிருக்கும் அழைப்புகளுக்குஅலோ அலோஎன்று ஒருகையோசையாய் அலறிக்கொண்டேயிருப்பதைத் தாண்டி

அவற்றைக் காதாரக் கேட்டு பதிலளிக்கச் செய்கிறது.

பாலைவனத்தில் கால்கடுக்க நடந்துகொண்டிருக்கும் நேரம்

திடீரென எதிரே குளிர்பானப் புட்டிகள் வரிசையாக வரிசையாக வண்ணமயமாக வைக்கப்பட்டிருக்கும்

அடுக்கொன்று தென்படுவதாய்…..

உடுக்கையிழந்தவன் கைபோல என்றுகூடச் சொல்லமுடியும்.

எல்லாமிருந்தும்

உருகியுருகி வாசித்துக்கொண்டிருக்கும் நேரமெலாம்

இரண்டறக் கலக்கவொட்டாமல் உறுத்திக்கொண்டே யிருக்கிறது

உண்மையெனப் பொய் பரப்பி யக் கவி

உதிர்த்துக்கொண்டிருக்கும் கொச்சைமொழிக்குப்பைமன

வெறுப்புப்பேச்சு.