LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, November 8, 2019

வள்ளுவர் வாய்மொழி – 5 ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


வள்ளுவர் வாய்மொழி – 5

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)



(*முன் குறிப்பு)

இன்றிருப்பின் யான் எழுதியிருக்கலாகும்
பின்வரும் அதிகாரத்தை.

பத்திருந்த இடத்தில் பதினொன்று; என்றும்
உத்தரவாதமில்லை யெதுவும்.

ஒன்று பலவாகப் பொருள்படு மொன்றுக்கு
நன்றாமோ ஒன்றுணர்த்தும் தலைப்பு?

பதிலாகலாம் கேள்வியே சிலநேர மென்றபோதும்
அதுவேயாகலாகா தெப்போதும்.
________________________________________________

1

கவிதை யாத்தல் காற்பந்தாட்டமா? உணர்வுகளை
உதைத்துருட்டித் தள்ளுகிறார் சிலர்.


2

கவிதை உன்னிலிருந்து வந்தாலும் உன்னுடையதல்ல என்பார்;
எனதல்லவென்றாலும் என்னிலிருந்தே வந்ததென் பேன்.


3

இக்கவிதை கடலல்ல; வெறும் கடற்கரை யென்றார்’ –
அக்கக்கோ பறவை அதுபாட்டுக்குச் சென்றது.


4

இக்கிணியூண்டு கவிதையையும் படிக்காமலே அதைப்பற்றி
பக்கம்பக்கமா யெழுதுவார் உக்கிரமாய்.


5

பரிசளிப்பார் தகுதியைப் பொறுத்ததே யாகுமாம்
பெறுவார் தகுதியும்.


6

உரிய காலத்தே யவரை அங்கீகரிக்காமல் பயனென்கொல்
அரிய உயிர் பிரியும்போ தளித்தல்.


7

ஹாம்லெட்டும் ஆம்லட்டும் ஒலிக்கும் ஒருபோல வெனில்
நாமறிவோம்() வெவ்வேறென.


 8

அருமையா யொரு கவிதை உருவாகப் பெறு மின்பம்
அறுநூறுகோடிக்குச் சமமாம்!


9

அறுநூறு கோடியல்லகோடிகள்என்பார்
சிறிதும தன் பெறுமதி யறியார்.


10

உறுமீனாகுமாம் கவிதை ஓடுமீ னோட
வருமளவு வாடியிருக்கும் வாசிப்போருக்கு.


11

நிழலின் அருமை வெய்யிலில் புரியும்;
மொழியின் அருமை கவிதையில்.


வள்ளுவர் வாய்மொழி – 4 ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

வள்ளுவர் வாய்மொழி – 4


‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)




1

வனவாசம்போய் தனமீட்டி கனவானாகிப் பின்
தினம் பேச வா கவிதை….


2

கவிதை எழுது; கடைவிரிக்காதே உன் பொய்களை.
புவியறியும் மெய்க்கவிகளை.


3

பேரம்படியாது; என் கவிதை கூறுபோட அல்ல.
தூரமாய்ப் போய்விடுகிறேன் மெல்ல.


4

காறித்துப்பக்கிடைத்த குப்பைத்தொட்டியா கவிதை?
நாறுகிறது பார்.


5

இலட்சியம் பேசி நெற்றிக்கண்ணைத் திறந்து
வலம்வரு முன் அறம் கவிதையில் மட்டும்.



6

கவிதைத்திறம் என்றா லது கிலோ என்ன விலை?
தவிப்பார் திடீர்ப்புகழ் நாடுவார்.


7

எட்டும் ஆறும் பதினான்கோ எண்பத்தியாறோ
சிட்டுக்குருவியிடம் கேட்பார் கவி.


8

கட்டிய கண்களுக்குள் கவிதை விரிக்கும் காட்சி
தட்டுப்படாது சில திறந்தகண்களுக்கு.


9

விட்டம் பார்த்துப் படுத்திருந்தால் வந்திடாதுவெறும் சட்டதிட்டங்களுக்கு அப்பா லானது கவிதை.


10

சிறுபத்திரிகையாயின் என்பெரும்பத்திரிகையாயின் என்?
உறுபுகழ்ப்பசிக்கு எல்லாம் சமமே சமம்.


11

கரணம் தப்பினால் மரணம் என்பர்; கச்சிதமாய்ப்
பொருந்தும் கவிதைக்கும்.









Tuesday, November 5, 2019

வள்ளுவர் வாய்மொழி - 1 ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


வள்ளுவர் வாய்மொழி - 1

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

(*முன் குறிப்பு)

இன்றிருப்பின் யான் எழுதியிருக்கலாகும்
பின்வரும் அதிகாரத்தை.

பத்திருந்த இடத்தில் பதினொன்று; என்றும்
உத்தரவாதமில்லை யெதுவும்.

ஒன்று பலவாகப் பொருள்படு மொன்றுக்கு
நன்றாமோ ஒன்றுணர்த்தும் தலைப்பு?

பதிலாகலாம் கேள்வியே சிலநேர மென்றபோதும்
அதுவேயாகலாகா தெப்போதும்.
__________________________________________
1.
இன்றைய உம் கொடும்பசிக்கு இரையாகினேன்
நன்று நன்று; வேறென்ன வுரைக்க?

2.
நம் சொத்தென் றெம்மைச் சொல்வார்
தம் உம் நம் யார்யார்?

3.
என் உடையைப் பேசப் புகுமுன்
எண்ணுமின் ஆடையற்றோரை.

4.
நீர் எனக்காற்றும் உதவி நாளும்
சோர்வின்றிச் சிலகுறள்கள் படித்தறிதல்.

5.
அறிதலெனல் வெறுமே மனனம் செய்வதல்ல
அறிவிலேற்றி அன்றாடம் பின்பற்றல்.

6
அறிவென்பது யாதெனில் யாரையும்
அறிவிலி யென்னா திருத்தல்.

7.
ஏழே சொற்களில் எழுதினேன ழித்திடாதீர்
கீழேயுள்ள மூன்றை.

8.
காய்சில நன்றாம் கவரலாம் புசிக்கலாம்
பாயெனில் படுப்பதே உசிதமாம்.

9.
வடிவம் மாறலா மெனில் பகடையில்
இடம்பெறும் எண்கள் மாறா.

10.
சக்கரம்போல் வாழ்க்கை யெனில் மேலோர்
வக்கிரமாக மாட்டா ரென்றும்.

11.
என்னுள் கடத்தலே எனக்கான வள்ளுவம்
சொன்ன சொல் எண்ணுவம்.

வள்ளுவர் வாய்மொழி -2 ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


வள்ளுவர் வாய்மொழி -2


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

(*முன் குறிப்பு)


இன்றிருப்பின் யான் எழுதியிருக்கலாகும்
பின்வரும் அதிகாரத்தை.

பத்திருந்த இடத்தில் பதினொன்று; என்றும்
உத்தரவாதமில்லை யெதுவும்.

ஒன்று பலவாகப் பொருள்படு மொன்றுக்கு
நன்றாமோ ஒன்றுணர்த்தும் தலைப்பு?

பதிலாகலாம் கேள்வியே சிலநேர மென்றபோதும்
அதுவேயாகலாகா தெப்போதும்.
__________________________________________




1.
எம் குரலை யாம் கேட்டலின் நன்று
உம் குரலில் எம் குறள் கேட்டல்.

2.
பேச்சுரிமை, படைப்புரிமையென்பார் கை
வீச்சரிவாள் மாற்றுக்கருத்தாளருக்காய்.

3.
ஊர்ப்பழிமுழுக்க ஒரு தலையி லேற்றிய பின்
காரில் வலம்வரலாம் வழுவிலராய்.

4.
ஏசிப்பேசியே காசுசேர்த்துவிட்டார்; கவலையில்லை
வீசுதென்றலுக்கு விலையில்லை.

5.
தன் குழந்தையும் தனதில்லையென் றறியார்
என்னைத் தமதேயாம் என்பார்.

6.
யார் நீங்கள் காற்றை சுவாசிக்க என்றால்
பேர்பேராய் காறித்துப்பாரோ?

7.
வெள்ளையாய் சக மனதைக் கற்பார் படைப்பாளி
உள்நோக்கங் கற்பிப்பார் கயவாளி.

8.
குண மொதுக்கி குற்றம் பெருக்கி
ரணகாயமாக்கி மிதித்தல் பழகு.

9.
அறிவோம் - உலகுண்டு நமக்கு முன்பும் பின்பும்
சிறுதுளிமட்டுமே நாம் மானுடத்தில்.

10.
எம் வரிகள் எம் வாழ்வு _
உம்வரியிருக்கு மும் உயர்வுதாழ்வு.

11.
இப்பொழுதும் இவ்வரிகளில் நீவிர் காண்ப தெலாம்
தப்பெனில் வீணாம் மொழியும்.

வள்ளுவர் வாய்மொழி – 3 ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

வள்ளுவர் வாய்மொழி – 3

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



(*முன் குறிப்பு)

இன்றிருப்பின் யான் எழுதியிருக்கலாகும்
பின்வரும் அதிகாரத்தை.


பத்திருந்த இடத்தில் பதினொன்று; என்றும்
உத்தரவாதமில்லை யெதுவும்.


ஒன்று பலவாகப் பொருள்படு மொன்றுக்கு
நன்றாமோ ஒன்றுணர்த்தும் தலைப்பு?


பதிலாகலாம் கேள்வியே சிலநேர மென்றபோதும்
அதுவேயாகலாகா தெப்போதும்.


__________________________________________


1.
அவரிவருக்குமட்டுமானவை யல்ல எம் சொற்கள்
எவருக்குமானவை காண்.


2.
இப்படிச் சொல்வது அவருக்கு மட்டுமல்ல _
உமக்கும்தான்.


3.
சித்திரம் வரைந்த கையை முறித்துத்தான்
பத்திரப்படுத்த வேண்டுமா? ஏன்?


4.
சத்தமிட்டே பொய்யை மெய்யாக்கச் சித்தமாயின்
சத்திழந்துபோவோம் நாம்.


5.
வீணையை காட்சிப்பொருளாக்கல்போலும்
சிலர்க்கு வள்ளுவம் வாங்கலும்.


6.
கை யொரு பக்கமாய்ச் சாய்ப்பின்
வைத்த எடைக்கல்லால் பயனென்ன பின்?


7.
ஊர்கூட்டித் திட்டித் தீர்த்து உயர்ந்தாரெனப்
பேர்பெற்றார்தான் உத்தமராமோ?


8.
யார்யார்க்கோ பூ காய் கனி தந்த வேர்களை
நீருரிமை பாராட்டல் தகுமோ?


9.
கொள்கலம் நீவிர் குறுகியிருந்தா லெனை
அள்ள நேரமாகும் அதிகம்.


10
அள்ளத்தான் வேண்டுமா? அவசியமில்லை யேதும்;
கள்ளமுரைக்காதிருந்தாலே போதும்.


11.
நல்லதென்ன அல்லதென்ன _ சொல்லென்கிறீர்கள்;
சொல்லித் தெரிவதல்ல உள்ளுணர்வுகள்.

Saturday, October 26, 2019

ஒலியும் ஒளியும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

ஒலியும் ஒளியும்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

(* ‘தனிமொழியின் உரையாடல்’ தொகுப்பிலிருந்து)


காதில் பஞ்சடைத்து
இருந்தவிடம் விட்டு இம்மியும் நகராமல் தெருத்தெருவாய்ப்
போய்க்கொண்டிருக்கிறேன்
பை நிறைய பஞ்சை தோளில் சுமந்தபடி....
பட்டாசுச் சப்தம் பயமுறுத்த
தேம்பியழும் குழந்தைகளுக்கெல்லாம்
நான் தரும் மிக உன்னதமான அன்பளிப்பு
அதுவாகவே யிருக்கும்.
சிறுவயதில் நடுநடுங்கிக் கண்ணீர் விட்டு
நகைப்புக்காளாகி செவிபொத்தி,
புத்தாடையோடு பதுங்கியிருப்பேனாம்
குளியறையில்.
கிண்டல் குட்டு கிள்ளு - எல்லாமே
என் மேல் அக்கறை கொண்டோரின் எதிர்வினைகளாக....
ஒருபோது பாவம் பார்ப்பார்கள்;
ஒருபோது பிடித்திழுத்துவந்து
வெடிக்கப்போகும் பட்டாசின் எதிரில் நிறுத்துவார்கள்.
பின்னேகிக்கொண்டே போனதில்
ஒருமுறை புது கவுன் விளக்கில் பற்றிக்கொண்டுவிட-
சில வெடிகள் தரையைப் பிளந்து
என்னைக் குற்றுயிராக்கிவிடும்.
அவற்றிலிருந்து கிளம்பும் நெருப்பு என்னைத்
தீக்கிரையாக்கிக்கொண்டேயிருக்கும்.
பூக்குத்தியும் ஒருநாள் டமாரென வெடித்து
உருமாறிவிட்டது நான் வெறுக்கும் பட்டாசாய்.
அப்போதெல்லாம் தீபாவளிக்கு முன்னும் பின்னும்
பதினைந்து இருபது நாட்கள்போல்
பாழும் நரகத்துள் வறுபட்டுக்கொண்டிருப்பேன்
கொதிக்கும் எண்ணெயில்.
(இப்போது அப்படியில்லை என்றாலும் -
எல்லா விழாக்களிலுமே வெடிகள் தவிர்க்கமுடியாத
அங்கமாகிவிட்டன......
வெடிகுண்டுகளும் கூட)
வலிதாங்கு சக்திபோல் ஒலிதாங்கு சக்தியும்
எல்லா மனிதர்களுக்கும் ஒருபோல் இருப்பதில்லை…..
இப்போதும் அந்த ஒளி, ஒலி கதிகலங்கச் செய்கிறது.
எனில், இயல்பாய் காதில் பஞ்சடைத்துக்கொள்ள
என்னால் முடிகிறது.
அதில் அவமானமடையத் தேவையில்லை என்ற உண்மை
ஆழப் படிந்துவிட்டது மனதில்.
அன்பிற்குரியோரே, ஆன்றோரே - சான்றோரே
உங்கள் இல்லங்களில் அருகிலுள்ள வீடுகளில்
வெடிச்சப்தம் கேட்டு விதிர்த்து அழும் சிறுமி / சிறுவன் இருந்தால்
கடிந்து கொள்ளாதீர்கள்;
அடிக்காதீர்கள்.
அடடா பயந்தாங்கொள்ளி என்று எள்ளிநகையாடி
அவமானத்தில் அவர்களைக் குன்றிப்போகச் செய்யாதீர்கள்;
குறைமனிதராய் அவர்களை உணரச் செய்யாதீர்கள்.
அவர்களுடைய குட்டிக்காதுகளில் சின்னப் பஞ்சுருண்டையை
செருகிக்கொள்ள அவர்களை அனுமதியுங்கள்;
அருகிருக்கும் முதியவர்களுக்கும் நோயாளிகளுக்கும்கூட
மிக இதமாயிருக்கும்.
இதோ, இந்தக் கவிதைப்பையிலிருந்து வேண்டுமட்டும்
பஞ்சைப் பிய்த்தெடுத்துக்கொள்ளுங்கள்.

பாவமும் பாவமன்னிப்பும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

பாவமும் பாவமன்னிப்பும்

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)
(* ’தனிமொழியின் உரையாடல்’ தொகுப்பிலிருந்து)

குழந்தைகளிடம் என்னவென்று மன்னிப்பு கோருவது?
நாம் கண்கலங்கினால் சட்டைநுனியால்
கண்களைத் துடைத்துவிடக்கூடும்….
கைகூப்பினால் முகம் மலர பதிலுக்குத் தங்கள்
சின்னக்கைகளைச் சேர்த்துக் குவிக்கக் கூடும்.
மண்டியிட்டால் சக குழந்தையாய் நம்மை பாவித்து
வாய்நிறைய சிரிக்கக்கூடும்….
நெடுஞ்சாண்கிடையாகக் காலடியில் விழுந்தால்
தவறி விழுந்துவிட்டோமோ எனப் பதறி
தாங்கிப் பிடிக்கத் தாவிவரக்கூடும்…..
அதுவும் _
அடிபட்ட குழந்தைகளிடம் எப்படி மன்னிப்பு கோருவது _
அவர்களின் வலிகளை வாங்கிக்கொள்ள வழியில்லாது?

உயிர்வலி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

உயிர்வலி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

(* சமர்ப்பணம்: ஆழ்குழாய்கிணறில் விழுந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் குழந்தை சுஜித் வில்சனுக்கு.




அபயம் கேட்பதாய் தலைக்குமேலே உயர்ந்திருக்கின்றன
அந்தக் குட்டிக்கைகள்;

பூமிக்கு வந்த இரண்டு வருடங்களிலேயே
வாழ்வின் அடியாழ அந்தகார இருளைப்
பார்க்க நேர்ந்துவிட்ட
அந்தப் பிஞ்சுமனதை என்ன சொல்லித் தேற்றுவது?
எப்படி மன்னிப்புக் கேட்பது?
அந்தப் பூவடம்பில் இன்னமும் தொக்கிநிற்கும்(?)
வாழ்வுச்சூட்டை எப்படிக் காப்பாற்றுவது?
ஒரு குழந்தையில் தெரியும் பல குழந்தைகளின்
ஒடுங்கிய உடலங்களை
தினந்தினம் எதிர்கொண்டு பதறும்
மனம்
நொறுங்கிச் சிதறும்.