வள்ளுவர்
வாய்மொழி – 4
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
1
வனவாசம்போய் தனமீட்டி கனவானாகிப் பின்
தினம் பேச வா கவிதை….
2
கவிதை எழுது; கடைவிரிக்காதே உன் பொய்களை .
புவியறியும் மெய்க்கவிகளை.
3
பேரம்படியாது; என் கவிதை கூறுபோட அல்ல.
தூரமாய்ப் போய்விடுகிறேன் மெல்ல.
4
காறித்துப்பக்கிடைத்த குப்பைத்தொட்டியா கவிதை?
நாறுகிறது பார்.
5
இலட்சியம் பேசி நெற்றிக்கண்ணைத் திறந்து
வலம்வரு முன் அறம் கவிதையில் மட்டும்.
6
கவிதைத்திறம் என்றா லது கிலோ என்ன விலை?
தவிப்பார் திடீர்ப்புகழ் நாடுவார்.
7
எட்டும் ஆறும் பதினான்கோ எண்பத்தியாறோ
சிட்டுக்குருவியிடம் கேட்பார் கவி.
8
கட்டிய கண்களுக்குள் கவிதை விரிக்கும் காட்சி
தட்டுப்படாது சில திறந்தகண்களுக்கு.
9
விட்டம் பார்த்துப் படுத்திருந்தால் வந்திடாது; வெறும்
சட்டதிட்டங்களுக்கு அப்பா லானது கவிதை.
10
சிறுபத்திரிகையாயின் என்? பெரும்பத்திரிகையாயின் என்?
உறுபுகழ்ப்பசிக்கு எல்லாம் சமமே சமம்.
11
கரணம் தப்பினால் மரணம் என்பர்; கச்சிதமாய்ப்
பொருந்தும் கவிதைக்கும்.
No comments:
Post a Comment