LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, July 7, 2018

அறச்சீற்ற INSENSITIVITYகள் லதா ராமகிருஷ்ணன்

அறச்சீற்ற INSENSITIVITYகள்
லதா ராமகிருஷ்ணன்
























"அதத்தான் நானும் சொல்ல வர்றேன். செவிடன் காதுல ஊதுனது சங்கு ன்னுன்னாவது கண்ணு தெரிஞ்சவனுக்கு தெரியும். இங்க சுயகுருடர்கள் (கோபமா சொல்லணும்ன்னா.. குருட்டு கபோதி கள்தானே அதிகம்." _  தமிழக அரசு குறித்த விமர்சனமாய் படிக்கக்கிடைத்தகமெண்ட்இது

ஒரு விஷயத்தை தர்மாவேசத்தோடு அறச் சீற்றமாய் எழுதுபவர்கள் பார்வையற்றவர் களை, ஊனமுற்றவர்களை இப்படி உவமை காட்டுவதிலுள்ள insensitivityஐப் பற்றி எண்ணிப் பார்த்து வருத்தப்படாமல் இருக்க முடிய வில்லை.

Sunday, June 24, 2018

அவரவர் நிலா! - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

அவரவர் நிலா!

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

 நிலா என்னைத் தேடிவந்ததுண்டு
அதுவொரு பொற்காலமா? பூங்கனாக்காலமா?
மெழுகென உருகி என் மடியில் விழுந்திருக்குமதை
இழுத்தும் வழித்தும் குழித்தும் அழுத்தியும் 
விரும்பும் வடிவங்களை வார்க்கப் பழகியவாறிருப்பேன்.
அலைபுரளும் உலக உருண்டையாய் விசுவரூபமெடுக்கும்.
அம்மிணிக்கொழுக்கட்டையாய் உருளும் குரல்வளைக்குள்.
இந்த நிலவை நான் பார்த்தால் அது எனக்கென வந்ததுபோலிருந்ததொரு காலம்.
நானே நிலவாகி நின்றதொரு காலம்
கண்ணால் காற்றேணி கட்டி நள்ளிரவில்
நிலவில் வலம் வந்ததொரு காலம்
நிலவிறங்கி நெருங்கிவந்து என் நெஞ்சுருக
தலைவருடித் தந்ததொரு காலம்.
காணாமல் போய்விட்ட நிலவைத் தேடியலைந்து
மறுஇரவில் கண்டடையும் வரை
உயிர் பதைத்துப்போனதொரு காலம்
நாளெல்லாம் இல்லாதுபோனாலும்
நிலவுண்டு நிரந்தரமாய் என்றுணர்ந்துகொண்டதொரு காலம்
கண்டாலென்ன காணாவிட்டால் என்னவென்று
எட்டிநின்றதொரு காலம்
உண்டென்றால் உண்டு, இல்லையென்றால் இல்லை யென்று
விட்டுவிடுதலையாகி நிற்க வாய்த்ததொரு காலம்…..
அன்று வந்ததும் இன்று வந்ததும் அதே நிலாவா?
யார் சொன்னது?
அழைத்துக்கொண்டிருக்கிறோம் ஒருவரையொருவர் நிலவென்று.
அவரவருக்கு அவரவர் நிலா


அரைகுறை ரசவாதம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)


அரைகுறை ரசவாதம்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


ஒரே சமயத்தில் நெகிழ்வான களிமண்ணாகவும்
இறுகிய கருங்கல்லாகவும் 
காலம்….

நெகிழ் களிமண்ணை உள்ளங்கையில் வைத்துக்கொண்டு
என்னால் முடிந்த உருவங்களையெல்லாம்
வனைந்துபார்க்கிறேன்.

நெகிழ்வாயிருந்தாலும் நீ விரும்புமளவு
இளகிவிடுவேனா என்ன என்று குறும்பாய்ச் சிரிக்கிறது காலம்
நான் குருவியாய் செதுக்க முனைந்து 
குருவி முட்டையாய் பிடித்துவைத்திருந்த 
உருண்டையைப் பார்த்து.

கருங்கற்காலமோ சதா பின்மண்டையைக் குறிபார்த்துக்கொண்டேயிருக்கிறது.


மால் 'ரிஷி’ - (லதா ராமகிருஷ்ணன்)


மால்
'ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

 கற்றது கையளவெனினும் கடல்முழுக்கப் பொங்கும் பால்

முற்றிய பித்துநிலையில் மனதில் முளைத்துவிடுகிறது வால்
புற்றுக்குள் பாம்புண்டோ என்றறிய நுழைக்கவோ கால்
சற்றேறக்குறைய நடுமார்பில் தைத்தபடி
அற்றைத்திங்களிலிருந்தொரு வேல்.
காற்றாடிக்கு எதுவரை தேவை நூல்
உற்றுப்பார்க்க ஒரே இருள்தான்போல்
வெற்றுச் சொற்களுக்கு வாய்த்த மௌனம் மேல்.


வழிச்செலவு ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


வழிச்செலவு
ரிஷி
(
லதா ராமகிருஷ்ணன்)
(*24.6.2018 திண்ணை இணைய இதழில் வெளியாகியுள்ளது)

ஓருகாலத்தில் அதியற்புதமான வனாந்திரத்தில்
எனக்கேயெனக்கான நிழலை 
குடைவிரித்துப் பரப்பியிருந்த மரத்தடியில்
இன்று
நிற்க இடமில்லாமல் முண்டியடித்துக்கொண்டு பலர்.
சிலர் கிளைகளைப் பிடித்தாட்டி இலையுதிர்த்துக் களித்தபடி;
சிலர் தருமேனியெங்கும் தத்தமது காதலிகளின்
திருப்பெயர்களைச் செதுக்கியபடி;
சிலர் எக்கியெக்கி குதித்துக் கனிபறித்து ருசித்தபடி;
சிலர் தலவிருட்சமாய் பிரதட்சணம் செய்து
நெடுஞ்சான்கிடையாய் விழுந்து கும்பிட்டபடி.
சிலர் சலசலத்திருக்கும் பறவைகளைப் 
பலகோணங்களில் படமெடுத்தபடி…..
உணவிடுவார்களோ உரமிடுவார்களோ, தெரியவில்லை.
மரத்தின் பச்சையம் மாற்றுக்குறையாமலிருக்கிறதா
அறியேன்.
வனாந்திரம் மரத்தின் விருப்பா? அன்றி 
விபத்தாயமைந்த இருப்பா?
கனாக்கண்டு முடித்தபின் கண்விழித்த கதையாய்
பயணப்பொதி சுமந்துவழியேகும் தருணம் 
விழிநிரம்பும் நீர் வழியும்
மரம் வாழப் பொழிமழையாய்.