LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, June 9, 2022

நிழலரசர்களின் நீதிபரிபாலனம் ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நிழலரசர்களின் நீதிபரிபாலனம்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



அன்றன்றைய காலைக்கடன்கள்
மதியக்கடன்கள்
மாலைக்கடன்களை
முழுவதுமாய் முடித்தவர்கள்
அரைகுறையாய் முடித்தவர்கள்
அன்றைய இரவுக்கடன்களில் ஒன்றான
இணையவழிக் கலந்துரையாடலுக்காய்
அவரவர் வீட்டுத்திண்ணையில்
அமர்ந்துகொண்டனர்.
திண்ணையில்லாத வீடுகளிலிருந்தவர்கள்
சிறிதும் பெரிதுமான மர, மூங்கில்,
ப்ளாஸ்டிக் நாற்காலிகளில்....
சிலர் வீட்டினுள்ளிருந்த தூணோரங்களில்
சிலர் வெளிவாயிலிலிருந்த மரத்தடிகளில்
சிலர் கட்டிலின் தலைமாட்டில்
சிலர் காம்பவுண்டை அடுத்திருந்த
ஓரளவு பெரிய கருங்கற்களில்
அடுத்திருந்த பூங்காக்களின்
சிமெண்டுபெஞ்சுகளில்....
எதிலமர்ந்திருந்தாலுமது
ஆன்றஅரியணையாய்….
செங்கோலைப் பிடித்திருப்பதாய்
கீழே கிடந்த சுள்ளியைக் கையிலெடுத்து
ஆட்டியாட்டிப் பேசிக்கொண்டிருந்தார்கள்
அல்ல, கோலோச்சிக்கொண்டிருந்தார்கள்.
’கையில் கிடைத்தவர்களை சிரத்சேதம்
செய்வதில்தான் எத்தனை சுகம்!’
என்று தனக்குள் சொல்லிக்கொண்டார்
ஒரு சிற்றரசர்
சத்தமாய் சிரித்தவாறே
சலாம் போடாத பறவைகளின் சிறகுகளையும்
அறுத்தெறிய வேண்டும்
என்றார் அண்டை சமஸ்தானத்து மன்னர்.
ஆமாம், ஆனால் பறவைகளைச்
சிறைபிடிப்பது எப்படி
என்று புரியாமல் கேட்டார்
ஒரு குறுநில மன்னர்.
வலையில்லையா வில்லில்லையா
கவண் இல்லையா கல் இல்லையா
கவலையெதற்கு என்றார்
பரிவோடொரு பேரரசர்.
காலத்திற்கேற்றார்ப்போல் நம் உத்திகளை
மாற்றிக்கொண்டாகவேண்டும்
பறவைபோல் வேடம் தரித்து
பறவைகளிடம் நட்புறவாடி
பின் வெட்டிவீழ்த்தல் எளிதல்லவா
என்று புருவமுயர்த்திப் பேசிய
புத்திசாலி ராஜாவிடம்
’பறக்கமுடியாதே’ என்று நியாயமாகக் கேட்ட
சக அரசனை
அருகிலிருந்தவர்கள் அரியணையிலிருந்து
தள்ளிவிட்டு
வெளியே இழுத்துச்செல்லுமாறு
வாயிற்காவலருக்கு
உத்தரவு பிறப்பித்தனர்.
புத்தியால் தப்பிப்பிழைத்தேன் என்று
கத்திக்கொண்டே ஓடிமறைந்தா ரவர்.
அத்தனை நேரமும் பறவைகள்
பறந்துகொண்டேயிருந்தன.
அவற்றை சிறைபிடிக்கமுடியாமல்
இல்லாத நாடுகளின் சக்கரவர்த்திகள்
அழகு காட்டினார்கள்
அசிங்கமான வார்த்தைகளால்
திட்டித் தீர்த்தார்கள்
ஆங்காரமாய் கைகளை யுயர்த்திக்
காற்றில் அறைந்தார்கள்
அவலட்சணமாய் பறவையை
கேலிச்சித்திரம் வரைந்தார்கள்.
ஒரு தூதுமடலையும் எடுத்துச்
செல்லத் தோதாய்
கீழிறங்கிவராத பறவைக்கு
எத்தனை மண்டைகனம் என்று
கீழ்க்குரலில் கறுவினார்கள்.
’பாழ்வெளியில் பறந்தலையும் ஃபாஸிஸ்ட்’
என்ற பட்டத்திற்குரியது பறவையே
எனச் சொன்னவரிடம்
அவைநீக்கம் செய்யப்பட்டுவிடக்கூடிய
அபாயம் விளைவித்த
நடுக்கத்தோடு
விளக்கம் கேட்டார் அடுத்திருந்தவர்.
தன்பாட்டில் சற்றே தாழப்பறந்து
கொண்டிருந்த
ஒரு பறவையின் கீச்சுக்குரல்
அசரீரியாய் முழங்கியதில்
அரியணைகள் அரசிழந்துபோக _
எஞ்சியுள்ள இரவுக்கடன்களைக்
கழிக்க
எல்லோரும் கலைந்துசென்றனர்.

கேட்கமுடியாத, கேட்காமலிருக்கமுடியாத கேள்விகள் சில….

 கேட்கமுடியாத,

கேட்காமலிருக்கமுடியாத
கேள்விகள் சில….



_ லதா ராமகிருஷ்ணன்

நிர்பயா கூட்டுப்பாலியல் வன்முறைக்கு ஆளான நிகழ்வு ஆறாத்துயரம்.

நேற்றோ, இன்றோ நாளையோ ஒரு பெண் இத்தகைய கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு அவருக்கு நீதி கிடைக்க வில்லையானால் அது குறித்துக் கண்டனம் எழுப்பலாமே தவிர, நிர்பயா மேல்சாதியினப் பெண் என்றும்(இது உண்மை யல்ல) அதனால்தான் அவருக்கு நீதி கிடைத்தது என்றும் ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாய்’ திரும்பத்திரும்ப நிர்பயாவுக்கு நேர்ந்த கொடுமை யைப் புறந்தள்ளிப் பேசுவது என்னவிதமான சமூகப் பிரக்ஞை? என்னவிதமான பெண்ணியப் பிரக்ஞை?

ஆபாசமாக எழுதுகிறார் என்று ஓர் எழுத்தாள ரைக் கட்டங்கட்டி ‘ஆள்காட்டிக்’ கொடுப்பதாய் அந்த எழுத்தா ளரின் ஒரு புதினத்தில் இடம் பெறும் பகுதிகளை ‘out of context’இல் நிலைத் தகவலில் பகிர்வதும், அப்படிப் பகிர்வதன் மூலம் ஆபாசமெனக் கட்டங்கட்டிய அதே பகுதிகளைத் தன் நிலைத்தகவலில் தந்து அதைப் பலரும் படிக்கச் செய்வதும் என்னவிதமான சமூகப் பிரக்ஞை? என்னவிதமான பெண்ணியப் பிரக்ஞை?

குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை சாதி பார்த்து கட்டங்கட்டி அடிப்பது என்னவிதமான சமூகப்பிரக்ஞை? என்னவிதமான பெண்ணியப் பிரக்ஞை?

அவரவர் அந்தரங்கம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அவரவர் அந்தரங்கம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


காதல் எப்படி நிகழும்
காதலில் என்ன நிகழுமென்று
காதலிப்பவர்களுக்கும் தெரியும்
காதலைக் காதலிப்பவர்களுக்கும் தெரியும்
இருந்தும்
குறுகுறுவென்று பார்த்தாரா
குறும்புப்பேச்சுகள் பேசினாரா
கட்டியணைத்தாரா
கன்னத்தில் முத்தமிட்டாரா
கட்டுக்கட்டான கடிதங்களில் கலவிசெய்தாரா
என்று கேட்டுக்கொண்டே போன தோழியை
குறுக்கிட்டுத் தடுத்தவள்
”அந்தரங்கம் புனிதமானது” என்றாள்.
காலங்கடந் தொரு நாள்
தன் காதலன்
குறுகுறுவென்று பார்த்ததை
குறும்புப்பேச்சுகள் பேசியதை
கட்டியணைத்தை
கன்னத்தில் முத்தமிட்டதை
கட்டுக்கட்டான கடிதங்களில்
கலவிசெய்ததை
கட்டுரைகளாக
நினைவுக்குறிப்புகளாக
Autofictionகளாக
கிடைத்தவெளிகளிலெல்லாம்
அம்பலமேற்றத் தொடங்கியவளைப் பார்த்து
அப்படியானால் இப்போது என் புனிதம்
கெட்டுப்போய்விட்டதாவென
அப்பிராணியாய்க் கேட்கிறது
அந்தரங்கம்.

மாறுவேடப்போட்டிகளும் மகோன்னத ஞானவொளிகளும் ‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 மாறுவேடப்போட்டிகளும்

மகோன்னத ஞானவொளிகளும்
‘ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

தூதனுப்பவும் மடலனுப்பவும்
புறாக்களைத் தேடவேண்டிய தேவையில்லை.
மன்னர் மட்டும்தான் இரவில் மாறுவேடமணிந்து
நகர்வலம் வரவேண்டுமா என்ன?
சிசிடிவி இருப்பது தெரிந்தும் ஏடிஎம்களில்
கொள்ளைகள் நடந்தவாறே -
இல்லையா?
கிழக்கே போகும் ரயில்கள் திசைமாறக்கூடும் எனவும்
பாஸஞ்ஜர் ரயில்கள் துரித வண்டிகளாகிவிடக்கூடும் எனவும்
ஞானத்தைப் பெற
போதிமரங்களைத் தேடி அலையவேண்டியதில்லை.
பட்டறிவே போதுமானது.
பாதரசமொரு மகோன்னதக் குறியீடு
என்றாலும்
பூனை கண்ணை மூட இருண்டுவிடும் உலகம்போல்
சுலக்ஷணா சுவர்ணலட்சுமியாவதும்
சுத்தமாய் தன் பாலடையாளம் மாற்றிக்கொள்வதும்
பிறந்த தேதி அதுவேயாகவும்
பிறந்த மாதம் வேறாகவும்
தனக்குத்தானே புதிய பிறப்புச்சான்றிதழ் அளித்துக்கொள்வதும் –
அறிவாளிகளும் முட்டாளாகவும்
அறிவாளிகளை முட்டாளாக்கப் பார்க்கவும்
விரிவெளி அமைத்துத் தருவதற்கு
இருக்கவே இருக்கிறது ஃபேஸ்புக்.

Tamil serials are horrible and highly anti-woman.

                Tamil serials are horrible 

and highly anti-woman.


Tamil serials are horrible and highly anti-woman. But these days no voice is raised against these even by feminist groups. 

Serials are more dangerous than cinema, for cinemas at least if only we go to the theatre we can see or even if seeing it at home it will be over in two hours, but serials go on and on and on - this is sheer hell and it impacts the adolescents at home in every possible manner. 

And, they determine the equations between men and women and between various relationships. These serial-makers have no social consciousness or social responsibility at all and they churn out stories highly detrimental to a healthy society. 

They decry women's liberation, they decry equality, they uphold all kinds of age-old unwanted social values. It is high time some serious thought was given about these social maladies called serials, nay, mega serials. 

They are a menace to the growth and development of human race, so to say.

சொல்லலாகாத எனில் சொல்லியாகவேண்டிய சில….. _ லதா ராமகிருஷ்ணன்

 சொல்லலாகாத

எனில்
சொல்லியாகவேண்டிய சில…..

_ லதா ராமகிருஷ்ணன்




ஒருவர் உண்மையாகவே ஒரு படைப்பாளியை – முக்கியமாக அந்நியமொழிப் படைப்பாளியை (நேரடியாக ஸ்பானிய ஜப்பானிய லித்துவேனிய இத்தியாதி மொழிகளிலிருந்தோ அல்லது ஆங்கிலம் மூலமாகவோ) படித்திருக்கிறாரா அல்லது வெறுமே NAME DROPPING(மற்றவர்களிடம் தம்மைப் பெரிதாகக் காட்டிக்கொள்வதற்காக ஒரு படைப்பாளியைப் பற்றி மேம் போக்காகப் பேசுதல்) செய்கிறாரா என்று எப்படிக் கண்டுபிடிப்பது?

வெகு சுலபம்:

1. NAME-DROPPING செய்பவர்கள் உலகத்தரமான ஒரு படைப் பாளியைப் பற்றி இன்னொருவர் பேசியதற்குப் பிறகே அவரைத் தானும் படித்ததாகக் காட்டிக்கொள்வார்கள். அவர்களாக யாரையும் அறிமுகம் செய்யமாட்டார்கள்.
2. தாம் படித்திருப்பதாகச் சொல்லும் படைப்பாளியி னுடையதாக பரவலாகப் புழங்கும் வாசகங்களையே மேற்கோள் காட்டுவார்கள்.
3. சம்பந்தப்பட்ட படைப்பாளியின் புத்தகத்தைக் கையி லேந்தி ‘போஸ்’ கொடுப்பார்களே தவிர அவருடைய எழுத்தைப் பற்றி ஆழமாக எதையும் கூறமாட்டார்கள் (கூறத் தெரியாது). அயல்மொழி படைப்பாளிகள் விஷ யத்தில்தான் இப்படி என்றில்லை. பாரதியார், திருவள்ளு வர் போன்றவர்களின் விஷயத்திலும் இப்படித்தான்.
கற்றது கையளவு; கல்லாதது கடலளவு. முடிந்தவரைக் கற்போம். மற்றவர்களின் அறிவை மதிப்போம். போலி யாக மெத்தப்படித்த அறிவாளியாகக் காட்டிக்கொள்வது மெய் அசட்டுத்தனத்தைக் காட்டிலும் அபாயகரமானது.

நாமெல்லோரும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 

நாமெல்லோரும்


ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

நாமெல்லோரு மிதைப் பேசலாம்

இதைப் பேசலாகாதென இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் நம்மெல்லோரையும்

ஒன்று திரட்டி

மாவுருண்டையாய் உருட்டி

குலோப் ஜாமுன் குடமிளகாய் பஜ்ஜி

கொத்துபரோட்டா பிரியாணி குருமா

சாதா தோசை மசாலா தோசையென

வகைவகையாய் நமக்கே

பரிமாறிக்கொண்டிருக்கப்போகிறார்கள் நாமெல்லோருமானவர்கள்

நம்மைக் கேட்காது நம்மைச் சேர்க்கும்

நாமின்

நெரிசலான ஜன்னலற்ற சிறைக்கொட்டடிகள்

நம்மை நாமாக்குவதுமொரு தண்டனையாய்.

நம்மை நாமாக்கவும் நாமை நம்மாக்கவும்

அழையா விருந்தாளியாய்

அறவுரைகளையும் ஆலோசனைகளையும் அள்ளிவழங்கிக்கொண்டிருப்பவர்கள்

அவற்றின் மூலமே தம்மையொரு

ஆளாய்காணவும் காட்டவும்

ஆலாய்ப் பறப்பதை யறியமாட்டோமா நாம்?

நமது நாமெல்லோரில் நாமெல்லோருமில்லாததுபோலவே

அவரவர் நாமெல்லோரிலும்

நம்மெல்லோருடைய நாமெல்லோரிலும்.

நமக்கான நாமை

அவருக்கான நாமாய் வனையும்

அவருடைய நாமின் நாம்

தலையாட்டிபொம்மைகளாம்

எனச் சொன்ன கணத்தில் நாம்

அந்நியமாகிவிடுவோம்

என்றறிவோம்.

இடமுணர்த்தல் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 இடமுணர்த்தல்

 

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)


ஒவ்வொன்றின் இடமும் அளவும்

ஒவ்வொன்றைக் குறிப்புணர்த்துகிறது

உணவுமேஜையில் அந்தப் பெரிய நாற்காலியின் இடம்

அதில் அமர்பவர் அந்த வீட்டுத்தலைவர்

என்பதை உணர்த்துகிறது.

அந்த மேஜையின் மீதிருந்த தண்ணீர்க்கோப்பைகள்

எல்லாமே கண்ணாடியில் செய்யப்பட்டதாயிருக்க

பிடிவைத்த செம்புக்கோப்பையிருந்த

மேசைப்பக்கமிருந்த கைப்பிடிகொண்ட நாற்காலி

வீட்டிலிருந்த பாட்டிக்கானது.

சுவற்றில் அலைபேசியை வைக்கக்கூடிய

அகலத்திலிருந்த கைப்பிடிக்கு அருகே

வைக்கப்பட்டிருந்த நாற்காலி

சதா கைப்பேசி வைத்திருக்கவேண்டிய ஸாஃப்ட்வேர் நிறுவன

உயர் அதிகாரிப் பிள்ளைக்கானது.

பளபளவென்றிருந்த இருக்கை அதிகம் சம்பாதிக்கும்

மகளுக்கானது

முதுகு சாயுமிடத்தில் நிறம் மங்கியிருந்த நாற்காலி

மூச்சு வாங்க நடந்துவரும் பெருத்த உடலுக்கானது

பெரிய நாற்காலியும் அடுத்திருக்கும் சிறிய நாற்காலியும்

விவாகரத்தான முப்பத்தியிரண்டு வயதுத் தந்தைக்கும்

அவருடைய ஆறு வயதுப் பிள்ளைக்குமானது.

அத்தனையையும் கவனித்தவாறே அங்கு வந்தவள்

உணவுமேசையைச் சுற்றியிருந்த இருக்கைகளில்

இரண்டு மட்டும்

ஒன்றையொன்று தொட்டபடிநெருக்கமாக இருந்ததைக்

கவனித்தும் கவனிக்காத பாவனையில்

விழுங்கத் தயாராய் எடுத்துவந்திருந்த

வைட்டமின் E மாத்திரை Evion 400இன் நெகிழ்வை

உள்ளங்கையில் உணர்ந்தபடி

தனக்கான இருக்கையை நோக்கிச் சென்றாள்.