LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, March 12, 2020

ஒரு மொழிபெயர்ப்பாளரின் வாக்குமூலம் - லதா ராமகிருஷ்ணன்

ஒரு மொழிபெயர்ப்பாளரின் வாக்குமூலம்

லதா ராமகிருஷ்ணன்
அச்சுநூல் புதுப்புனல் பதிப்பகத்தில் விற்பனைக்கு


அமேஸான் கிண்டில் மின் - நூலின் லிங்க் 



"அப்படித்தான், சில நண்பர்கள் மூலம் உலக இலக்கியப் படைப்புகள், போக்குகள் சிலவும் அறிமுகமாயின. அப்படி ஒருவர் மூலம் அறியக் கிடைத்த உலகத்தரமான படைப்பை இன்னொரு வர் மொழிபெயர்க்கச் சொல்லும் போது அதை ஆர்வத்துடன் செய்திருக்கிறேன். ஆனால் அப்படிச் செய்தது முதலில் அந்தப் படைப்பாளியை எனக்கு அறிமுகப்படுத்திய நட்பினருக்கு உவப்பாக இருப்பதில்லை என்பதை (சம்பந்தப்பட்ட படைப்பை, படைப்பாளியைப் பற்றி அவர்களால் எழுதப்படும் கட்டுரைக ளில் என் மொழிபெயர்ப்பைப் பற்றி எந்தக் குறிப்பும் இருக்காது!) போகப் போகப் புரிந்துகொள்ள நேர்ந்திருக்கிறது.


ஒரு படைப்பாளியின் படைப்புவெளியை முழுவதும் வாசித்து அறிந்திருந் தால் மட்டுமே அந்தப் படைப்பாளியின் எழுத்தாக்கங்களைச் செம்மையாக மொழி பெயர்க்க முடியும் என்ற கருத்து சிலரால் முன்வைக்கப்படும்போது, ‘அப்படியெனில் என்னிடம் ஏன் அந்த மொழிபெயர்ப்புப் பணியைத் தந்தார்கள், அந்த உலகத் தரமான படைப்பாளியை முழுவதுமாக நான் வாசித்திருப்பதான பாவனையை நான் கைக்கொள்ள வேண்டும், கைக்கொள்வேன் என்று எதிர்பார்த் தார்களா அல்லது என்னை sort of errand boy(or girl, to be more precise!) என்ற ரீதியில் மட்டுமே பணித்தார்களா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடிய வில்லை.


சிலர் தாங்கள் அறிமுகப்படுத்தும் உலகத் தரம் வாய்ந்த படைப்புகள், படைப்பாளிகள் மேல்  அத் தனை உடைமையுணர்வோடு நடந்துகொள்வ தையும் பார்த்திருக்கிறேன்.


வேறு சிலர் அந்நியமொழியிலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்க் கப்படும் போது மட்டுமே மூலமொழிப் படைப்புக்கு நியாயம் செய்ய முடியும் என்று மேடைக்கு மேடை முழங்கக் கேட்டிருக்கிறேன். ஒரு வகையில் அது உண்மையே என்றாலும் இன்னொரு வகையில் அதுவோர் reductionist theory ஆகச் செயல்படுவதையும் காணமுடிகிறது.


என்னளவில், மொழிபெயர்ப்பின் மூலம் நான் கற்றுக்கொள்கிறேன் என்பதே உண்மை. நான் மதிக்கும் சிலர் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டியதாக ஒரு பிரதியை என்னிடம் தரும்போது அப்படித் தருபவர்மேல் எனக்குள்ள நம்பிக்கை, அபிமானம் காரணமாக அந்தப் பணியை மேற் கொள்வது வழக்கம்.


சில பிரதிகளை மொழிபெயர்க்க மறுத்ததும் உண்டு. பாலியல் பலாத்காரத் திற்கு ஆளாகும் பெண் ஒருத்தி அதில் ஆழ்மனதில் பரவசமடைகிறாள் என்பதாய் விரியும் ஒரு பிரதியை மொழிபெயர்த்துத் தரும்படி என்னிடம் கேட்கப்பட்டபோது அதைப் படிக்காமலேயே மறுத்திருக்கிறேன். ஒரு பெண்ணின் ஒழுக்கத்தைக் கொச்சைப்படுத்துவதாய் அமையும் வசைச் சொல், மாற்றுத்திறனாளியை மதிப்பழிக்கும் வசைச்சொல்லை அப்படியே மூல மொழியிலிருந்து மொழிபெயர்ப்பதை கூடுமானவரை தவிர்த்திருக் கிறேன், அது சரியா, தவறா என்ற கேள்வி மனதில் எழுந்துகொண்டே யிருந்தாலும்.


தொடுவானமல்லவே ஆங்கிலம்! _அமேஸான் - கிண்டில் மின் நூல்!

அமேஸான் - கிண்டில் மின் நூல்! 
தொடுவானமல்லவே ஆங்கிலம்!



ஒருதுறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. ஆங்கிலம் தெரிந்ததாலேயே ஒருவர் சிறந்தவர் என்பதும் கிடையாது.

அதேசமயம், ஆங்கிலம் தெரியாத, புரியாத, பேசவராத காரணத் தால் வேறுதுறைகளில், குறிப்பாக கவிதை யெழுதுவதில், தரம் வாய்ந்தவர்களும் தாழ்வு மனப்பான்மையில் உழலும் தருணங்கள் நேருவதுண்டு.


பள்ளியிறுதி வரை தமிழ்வழிக் கல்வி கற்று கல்லூரியில் ஆங்கிலப்பாடம் எடுத்தபோது விரிவுரையாளர் கேட்கும் கேள்வி களுக்கு தொண்டைக்குழி வரை சரியான விடைகள் முட்டும். ஆனால், கோர்வையாக அவற்றை ஆங்கிலத்தில் சொல்ல வியலாத காரணத்தால் மௌனம் சாதிக்கவேண்டிய நிலை. 


ஆங்கிலத்தில் தடாலடியாகப் பேசும் மாணாக்கர்கள் வெகு ஜோராக எழுந்துநின்று சரளமான ஆங்கிலத்தில் தவறான பதில்களை வெற்றிச்சிரிப்போடு சொல்லுவார்கள்! 

இலக்கணப் பிழையில்லாமல் ஆங்கிலத்தில் விடையெழுதி அதிக மதிப்பெண்கள் பெறமுடியும் என்றாலும் அப்போதெல்லாம் ஆங்கிலத்தில் பேசத் துணிவே வராது.

அதனால்தான் இப்போதெல்லாம் கிரிக்கெட், சினிமா போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு ஆங்கிலத்தில் ‘க்ராஷ்கோர்ஸ்’ என்பதாய் ஒருவழி முறையில் ஆங்கிலம் பேசக் கற்றுத்தரப்படுகிறது. அதாவது, இலக்கணம் கற்பிப்பதிலிருந்து ஆங்கிலம் கற்றுத் தருவது என்ற நிலைமாறி ஒருவர் எந்தத் துறையைச் சார்ந்தவரோ அந்தத் துறை சார்ந்து அவரிடம் என்ன கேள்விகள் பொதுவாகக் கேட்கப்படும், அவற்றிற்கு அவர் என்னவிதமாய் தர்மசங்கடப்படாமல் எளிய ஆங்கிலத்தில் பதிலளிக்கமுடியும், எப்படி தன் எண்ணத்தை வெளிப்படுத்த முடியும் என்பதே கற்றுத்தரப்படுகிறது. 


அப்படியொரு எளிய முயற்சியே இந்த நூல்.

லதா ராமகிருஷ்ணன்

தனிமொழியின் உரையாடல்

தனிமொழியின் உரையாடல்

தனிமொழியின் உரையாடல் என்ற தலைப்பிட்ட எனது பனிரெண்டாவது கவிதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இத்தொகுப்பு கிண்டில் மின் நூலாகவும் வெளிவந்துள்ளது.https://www.amazon.in/ebook/dp/B07RSCSLXY

‘குறுக்குவழிகளற்ற நெடுந்தொலைவு’ - எனது சமீபத்திய கவிதைத்தொகுப்பு - கிண்டில் மின் -நூல் வடிவில்

‘குறுக்குவழிகளற்ற நெடுந்தொலைவு’
https://www.amazon.com/AE81-ebook/dp/B083S1ZRB1/ref
நட்பினருக்கு வணக்கம். 

‘குறுக்குவழிகளற்ற நெடுந்தொலைவு’ என்ற தலைப்பில் எனது சமீபத்திய கவிதைத்தொகுப்பை நிதி நெருக்கடி நேர நெருக்கடி காரணத்தால் அச்சுநூலாக இப்போது கொண்டுவர இயலவில்லை. கிண்டில் மின் நூலாக வெளியிட்டுள்ளேன். https://www.amazon.com/AE81-ebook/dp/B083S1ZRB1/ref


தண்ணீர் விட்டோ வளர்த்தோம்....?

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்....?

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் கலவரத்தைத் தூண்டும் விதமாக படங்களையும் தகவல்களை யும் ஒரு சார்பாகவே தந்துகொண்டிருப்பதுதான்_

’இவர் செய்தால் சரி, அவர் செய்தால் தவறு’ என்ற ஒரே தவறான நேர்ப்பார்வையுடன் எந்தவொரு விஷயத்தையும் அணுகிப் பேசுவதுதான்_


குறைந்தபட்ச கண்ணியம் கூட இல்லாமல் கொச்சையாகப் பேசுவதும் பழிப்பதுதான்_

ஒரு எழுத்தாளருக்கு அழகு,
அதுவே அவருடைய மனிதாபிமானம், முற்போக்குத்தனம் 
என  என முடிவுகட்டிக் கொண்டவர்களாய் 
மற்றவர்களையும் மூளைச் சலவை செய்யக் கங்கணம் கட்டிக்கொண்டு 
தங்கள் முகநூல் டைம்-லைனில் மும்முரமாக இயங்கிக்கொண்டிருக்கும் 
சக படைப்பாளிகள் சிலரின் நியாயவாதி பாவமும் பாசாங்கும்தான் 
நம்மைப் பீடித்துள்ள 
மிகப்பெரிய அச்சுறுத்தலாகத் தோன்றுகிறது.

Tuesday, March 10, 2020

உன்னதாற்புதம்! - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

உன்னதாற்புதம்!
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

(தனிமொழியின் உரையாடல் என்ற தலைப்பிட்ட எனது பனிரெண்டாவது கவிதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இத்தொகுப்பு கிண்டில் மின் நூலாகவும் வெளிவந்துள்ளது.
https://www.amazon.com/-ebook/dp/B07RSCSLXY/ref

உன்னதத்தைக் கண்டதுமே உள்ளுணர்வுக்குத்தெரிந்துவிடும்.
உடனே உதறலெடுக்கத் தொடங்கும் முகமூடி மனிதர்களுக்கு.
உடனே அவசரக்கூட்டம் நடத்தி
‘மகோன்னதம் யாம்’ என்ற விளம்பரப் பதாகைகளை
மேற்கு, கிழக்கு, வடக்கு தெற்கெல்லாம்
நட்டுவைக்கும் ஏகோபித்த தீர்மானத்தை நிறைவேற்றிவிடுகிறார்கள்.
நாற்புறமிருந்து அதன்மீது காறித்துப்பவென்றே
நிதமும் நாலுபேரை வேலைக்கமர்த்திவிட்ட பிறகும்
நிம்மதியின்றி அலைபாய்ந்தவண்ணமிருக்கும் அவர்கள்.
அத்தனை வலிவேதனையிலும் அதெப்படி அழாமலிருக்கிறது இந்த உன்னதம்
என்ற ஆங்காரத்தில்
கூலிப்படையைக்கொண்டு அதை
அடையாளமற்றுச் சிதைக்கப் பார்த்தார்கள்.
தக்க தருணத்தில் நல்லவர்கள் பார்த்துவிட்டதால்
ஒரு பல் உடைந்ததோடு தப்பித்துவிட்டது உன்னதம்.
தோல்வியைத் தாங்கமுடியாதவர்களாய்
ஓட்டைப்ப, ஓட்டைப்பல் அய்யய்யே ஓட்டைப்பல்
என்று உரக்கக்கூவி
‘பல்லிழந்த உன்னதம் பாவம் பரிதாபம்’
என்று எள்ளிநகையாடுபவர்களை
எட்டநின்று பார்த்தவாறு
வருத்தத்தோடு சிரித்துக்கொண்டிருக்கிறது _
எல்லோருக்குள்ளுமிருக்கும் உன்னதம்.


மலையின் உயரம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

மலையின் உயரம்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
(*‘அதிகாரத்தின் நுண்பரிமாணங்கள்’ என்ற தலைப்பிட்ட எனது 10வது கவிதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.  அமேஸான் கிண்டில் மின் -நூலாகவும் வெளியாகியுள்ளது. 
https://www.amazon.com/-ebook/dp/B07R9V9K7P/ref

 ஒருபோதும் மலைகளாக முடியாதவர்கள்,


மலைமேல் ஏறக்கூட முடியாதவர்கள்
மலையின் அடிவாரத்தில் நின்று அண்ணாந்துபார்த்தாலே
மளுக்கென்று கழுத்து சுளுக்கிக்கொள்கிறவர்கள்
மலையிலிருந்து உருளும் ஒரு கல்லைக் காட்டி
மலை மாபாதகம் செய்துவிட்டதாக
மண்ணை வாரித்தூற்றுகிறார்கள்;
காலமெல்லாம் கையில் கற்களோடு
சுற்றிக்கொண்டிருப்பவர்கள்
பாவனைக் கண்ணீர் பெருக்கிக்
கருணைக்கடலாகிவிடுகிறார்கள்.
கனியிருப்பக் காய் கவரலாமோ என்ற குறட்பாவை
மேற்கோள் காட்டி கையோடு
தனித்துவமான தமது வசைபாடலை
ஒலிக்கச்செய்கிறார்கள் கோரஸ்களோடு.
‘கலி முத்திப் போச்சு’ என்பதாய் கவனமாய்
நவீன தமிழில் கருத்துரைத்து
எலிப்பிள்ளை என்றுரைப்பார் கிளிப்பிள்ளையாய்_
வலிய சிங்கத்தை.
எத்திசையிலும் அலைபாய்ந்திருக்குமவர் கண்கள்
பித்தளையாகக் காட்டி ஒரு ஒப்புநோக்கலில்
தன்னைப் பத்தரைமாற்றுத் தங்கமாகப் பறைசாற்ற
எங்கேனுமிருப்பாரோ இளிச்சவாயர்கள் என்று கண்காணித்தபடி.
ஒருவரிடம் காரியம் ஆகவேண்டியிருந்தால்
அவரை ஆதரிப்பார்;
இன்னொருவரிடம் இன்னொரு காரியம் ஆகவேண்டியிருந்தால்
அவரையும் ஆதரிப்பார்.
பாரபட்சமே நீதிநெறியாக
கையில் எப்போதுமிருக்கும் துலாக்கோல்
தட்டின் அடியில் ஒட்டிய புளியோடு.
எவரைப் பரிச்சயப்படுத்திக்கொண்டால் என்ன ஆதாயம்
என்ற மனக்கணக்கில்,
மருந்துக்கும் புத்தகங்களைத் தொடாமலேயே
சேருமிடம் சென்று வென்று கொன்று மென்று
பாஸ்மார்க், முதல் வகுப்பில் தேர்ச்சி, டிஸ்டிங்ஷன்
தங்கப்பதக்கம் என்று படிதாவிப்படிதாவிச்
செல்பவர்களுக்குத்தான்
குறிப்பாக மலையைக் கண்டால் வெறுப்போ வெறுப்பு.
’தட்டாமாலை தாமரப்பூ சுத்திச்சுத்தி வந்தாராம்’ என்ற
குழந்தைக்குதூகலமாய்
”விளையாட வாயேன்” என்று வெள்ளந்தி பாவனையில்
மலையை அழைப்பார்;
தலையைத் தழைத்தால் முகடு வெட்ட வாகாய்
வெட்டரிவாளை ஒளித்துக்கொண்டு.
இறங்கிவர மறுக்கும் மலையைப்
பெருமுதலாளி என்று பழிப்பார் _
இருபத்தியிரண்டு செல்லப்பிராணிகள் வைத்திருப்பார்.
இன்னும் என்னென்ன ரகங்கள் இங்கே என்றெண்ணி
புன்னகை பூக்கிறது
இயல்பே உயரமான மலை.
உயரேயிருந்து பார்க்க எல்லாம் தெரியும் மலைக்கு.
மலையை மடுவாக்கும் கனவைக்கூட நாம் கண்டுவிட இயலாது.
முன்னே நின்று நீர் உறுமுவதெல்லாம்
முனகல் மட்டுமே மலைக்கு;
முட்டிமோதினாலோ
சேதாரம் உமது் தலைக்கு.


கண்ணிருட்டும் பசியும் இன்னுமான நெடுந்தொலைவும் -‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

கண்ணிருட்டும் பசியும்
இன்னுமான நெடுந்தொலைவும்


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
குழந்தைகளின் கைகளில்
பானகம் நிரம்பிய கோப்பை தரப்படுகிறது
ஆளுக்கு ஒன்றாய்.

வெய்யிலில் வந்திருக்கிறார்கள்
குழந்தைகள்.
அவர்களுடைய விழிகள்
சோர்வில் அரைமூடியிருக்கின்றன.
நாவறள தோள் துவள கால் தளர
வரிசையில் காத்திருக்கும்
அந்தக் குட்டி மனிதர்களைச்
சூழ்ந்துகொள்கிறார்கள் பெரியவர்கள்.
’யாரைக் கேட்டுக் கொடுத்தீர்கள் பானகம்?
குறிப்பாக, எங்களை ஏன் கேட்கவில்லை’
யென்று
அத்தனை ஆவேசமாகக் கேட்கும்
‘அங்கிளி’ன் முழி பிதுங்கித்
தெறித்துவிழுந்துவிடுமோ
என்று பயந்துபோகிறார்கள் குழந்தைகள்.
பானம் என்றால் பானகம் தானா –
வேறு எதுவும் இல்லையா
காம்ப்ளான், இளநீர், கொய்யாப்பழ ஜூஸ்
ஏன், வெறும் தண்ணீரே கூடக் கொடுக்கலாமே
என்று ஒருவர்
நீதிமன்றத்தில் குறுக்குவிசாரணை செய்யும்
தோரணையில் கேட்கிறார்.
உண்மையில் எப்பொழுதுமே முன்முடிவோடு
தீர்ப்பெழுதி தண்டனை வழங்கும்
நீதியரசர் அவர்.
பேருந்துப் பயணத்திற்கு வழியில்லாமல்
பிஞ்சுக்கால்களால் அத்தனை தூரம்
அந்தக் குழந்தைகள் நடந்துவருவதைப்
பார்க்காதவர்
யாரேனுமிருக்கமுடியுமா என்ன?
ஆனால், அவர்களை நோக்கி ஆதுரத்தோடு
தண்ணீர்க்குவளையை நீட்டிய கை
அரிதினும் அரிது.
”அதற்காக?
யார் வேண்டுமானாலும்
அவர்களுடைய தாகம் தீர்க்கட்டும்
என்று விட்டுவிடமுடியுமா என்ன?”
”குழந்தைகளின் தாகத்தைத் தீர்ப்பதற்கு
பானகம் நல்லதுதானே,
யார் தந்தால் என்ன?” என்று கேட்டவரின்
வாயிலேயே ‘சப்’ என்று அறைந்தபடி
வேறுவகை விபரீத பானங்களை விற்கும்
அப்பட்ட வியாபாரி யொருவர்
ஆத்திரத்தோடு கூவுகிறார்:
”என்னைக் கேட்டால் நான்
தந்திருக்க மாட்டேனா?”
“நல்ல காரியத்தை யார் வேண்டுமானாலும்
தாமாகவே செய்யலாமே?”
“தாராளமாக. ஆனால்,
அவர்கள் யார் என்பதைத்
தீர்மானிப்பது நானாக இல்லாதவரை
உங்களுக்குத் தொல்லைதான்.”
சொன்னவர் குரலிலிருந்த உறுதி
அசாதாரணமானது என்று
அங்கிருந்த அவருக்கு வேண்டப்பட்டவர்கள்
கரகோஷம் எழுப்புகிறார்கள்.
திடீரென்று ஏதோவொரு வகையில்
வாக்குவங்கிக்கும் வெறுப்பு அரசியலுக்கும்
தொடர்புடையவர்களாகிவிட்ட
உண்மையை அறியாதவர்களாய்
வெள்ளந்தியாய் கோப்பையை ஏந்தி நிற்கும்
அந்த வாடிய முகங்களின்
பின்னணியில்

ஷெனாயின் துணையோடு
சன்னமாய்க் கேட்டுக்கொண்டிருக்கிறது _
’THERE IS MANY A SLIP BETWEEN THE CUP AND THE LIP’

கேள்வி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

கேள்வி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
சில கேள்விகளை
சிலர் கேட்கும்போது மட்டும்

அதைக் கேட்கும் சிலர் மட்டும்
அந்தச் சிலர் மட்டுமே
அந்தக் கேள்விகளைக் கேட்டதாய்
கேட்கமுடிவதாய்
முடிந்த மட்டும் வாய்பிளந்து விழி விரித்து
வியந்துபோகிறார்களே ஏன்
என்ற கேள்வி
யின்று மட்டும்
கடந்துசெல்லப்படலா
மெனில்
இனி வரும் நாளில்
கேட்கப்படலாம்
முணுமுணுப்பாக
அல்லது மிக கணீரென
என்று மட்டும் சொல்லத்தோன்றுகிறது.
அம்மட்டே யாகுமாம் யாவும் என்ப.....

வஞ்சனை சொல்வாரடீ கிளியே…. - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


வஞ்சனை சொல்வாரடீ கிளியே….

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

அவர் செத்துக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.

அவருடைய படுக்கையில் ஈக்கள் மொய்க்கத் தொடங்கிவிட் டன என்கிறார்கள்.

அவருக்குப் பாடை தயார்செய்யவேண்டும் என்கிறார்கள்.

அங்கிருந்தொருவர் வேகவேகமாக
சற்று தொலைவிலிருந்த மரத்தடியை நாடிச் செல்கிறார்
இரங்கற்பா எழுத.

அந்நிய தேசங்கள் சிலவற்றில்
அடிக்கொரு நொடி
அந்த உயிரின் நேரப்போகும் மரணம் குறித்த 
BREAKING NEWS
வெளியாகிக்கொண்டேயிருக்கிறது.

கற்பனைத் தெர்மாமீட்டரை அவர் வாயில் திணித்து
வெறுங்காய்ச்சலை விபரீதமான விஷக்காய்ச்சலாக்கிக் கொண்டிருக்கிறார்கள்
கொரோனாவைரஸை விடக் கொடியவர்கள்.

அவர் சற்றே பலவீனமாயிருக்கிறார்.
ஆதரவாய் அருகிருந்து கவனித்துக்கொண்டால்
எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்பவரை
அசிங்கம்பிடித்தவர் என்று வைதுகொண்டே _

அங்கேயிங்கே யாரும் கவனிக்கிறார்களா
என்று பார்த்தவாறு
பிறந்தது முதல் அவரைப் பேணி வளர்த்த
அன்புக்குரிய அந்தப் பெரியவரின்
குரல்வளையருகே தன் இரு கைகளையும் நகர்த்துகிறார்
நெருங்கிய உறவுக்காரர்.

என்ன தோன்றியதோ, ஓடிவந்து
அந்தக் கரங்களைக் கடிக்கிறது ஒரு குழந்தை.

இன்னொன்று அவருடைய தலையைத் தடவிக்கொடுத்து
அவரைப் பார்த்துச் சிரிக்கிறது.

தூங்கு ஃப்ரெண்ட். நாங்கள் உன்னைப் பார்த்துக் கொள்கிறோம்என்று சேர்ந்திசை பாடும்
செல்லங்களைக் கண்டு
அந்த முகத்தில் களைப்பையும் மீறி
சின்னதாக ஒரு புன்னகை மின்னுகிறது.


புத்துயிர்ப்பு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

புத்துயிர்ப்பு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
மனதின் கனவுகளையெல்லாம்

விழுங்கித் தீர்த்தபின்
என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கும் வயிறு
பசியோடு அழுதுகொண்டிருக்கும் மனதை அமைதிப்படுத்த
ஆறுதலாய்
அதற்கு ஊட்டச்சத்தளிக்கிறது _
புதிதாய்க் கனவு காண.

சொப்பனவாழ்வு - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

சொப்பனவாழ்வு

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


தலைக்குள்ளாகத்
தொட்டுவிடும் தூரத்தில் இருப்பதாய்க்
காணும்
அந்த வானவில்லின்
சிறுதுளியைப் பறித்துச்
சின்ன மயிற்பீலியாய்
வாழ்வுப்புத்தகத்திற்குள் பத்திரப்படுத்தி
வைப்பதே
தர்க்கங்களுக்கப்பாலான
தூலக்கனவாய்.......