LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label உன்னதாற்புதம்! - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்). Show all posts
Showing posts with label உன்னதாற்புதம்! - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்). Show all posts

Tuesday, March 10, 2020

உன்னதாற்புதம்! - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

உன்னதாற்புதம்!
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

(தனிமொழியின் உரையாடல் என்ற தலைப்பிட்ட எனது பனிரெண்டாவது கவிதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இத்தொகுப்பு கிண்டில் மின் நூலாகவும் வெளிவந்துள்ளது.
https://www.amazon.com/-ebook/dp/B07RSCSLXY/ref

உன்னதத்தைக் கண்டதுமே உள்ளுணர்வுக்குத்தெரிந்துவிடும்.
உடனே உதறலெடுக்கத் தொடங்கும் முகமூடி மனிதர்களுக்கு.
உடனே அவசரக்கூட்டம் நடத்தி
‘மகோன்னதம் யாம்’ என்ற விளம்பரப் பதாகைகளை
மேற்கு, கிழக்கு, வடக்கு தெற்கெல்லாம்
நட்டுவைக்கும் ஏகோபித்த தீர்மானத்தை நிறைவேற்றிவிடுகிறார்கள்.
நாற்புறமிருந்து அதன்மீது காறித்துப்பவென்றே
நிதமும் நாலுபேரை வேலைக்கமர்த்திவிட்ட பிறகும்
நிம்மதியின்றி அலைபாய்ந்தவண்ணமிருக்கும் அவர்கள்.
அத்தனை வலிவேதனையிலும் அதெப்படி அழாமலிருக்கிறது இந்த உன்னதம்
என்ற ஆங்காரத்தில்
கூலிப்படையைக்கொண்டு அதை
அடையாளமற்றுச் சிதைக்கப் பார்த்தார்கள்.
தக்க தருணத்தில் நல்லவர்கள் பார்த்துவிட்டதால்
ஒரு பல் உடைந்ததோடு தப்பித்துவிட்டது உன்னதம்.
தோல்வியைத் தாங்கமுடியாதவர்களாய்
ஓட்டைப்ப, ஓட்டைப்பல் அய்யய்யே ஓட்டைப்பல்
என்று உரக்கக்கூவி
‘பல்லிழந்த உன்னதம் பாவம் பரிதாபம்’
என்று எள்ளிநகையாடுபவர்களை
எட்டநின்று பார்த்தவாறு
வருத்தத்தோடு சிரித்துக்கொண்டிருக்கிறது _
எல்லோருக்குள்ளுமிருக்கும் உன்னதம்.