LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, September 4, 2025

நாமெல்லோரும் - ‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 நாமெல்லோரும்

‘ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
திடீரென சீறிப்பாய்ந்த பெருவெள்ளத்தில் சிக்குண்டு
சிதறித்தெறித்த பாறைகளில் நசுங்கி
உருக்குலைந்துபோன வாழ்வுகளின் அவலங்களை
தொலைக்காட்சிப்பெட்டிகள் திரும்பத்திரும்ப
பல கோணங்களில்
காண்பித்துக்கொண்டேயிருக்க _
அந்தத் தெருவோரக் கடைவாசலில்
கிழிந்த கைலியுடன் ஒதுங்கிநின்று
கண்ணீர் மல்கப் பார்த்துக்கொண்டிருக்கிறார்
காலங்காலமாக வறுமைக்கோட்டின் கீழேயே வாழப்பழகிய _
முகவரியோ வாக்குரிமையோ
வெள்ளை வேட்டியோ அற்ற
முதுமைக்கென, முற்றிய நோய்க்கென
முதலுதவியேதும் கிடைக்க வழியிலாத
பிச்சைக்காரப் பெரியவர் ஒருவர்.
அள்ளித்தர விழைந்தாலும்
கிள்ளித்தரவே வழியிருக்கும் நான்
நிலச்சரிவுகளில் புதையுண்டும்,
தெருவோரத் தொலைக்காட்சிக்கடையோரம்
உருகி நின்று கண்கலங்கியும்,
நிராதரவாய் உணரும் மனதின் பாரந்தாங்கி
நிலைகுலைந்துவிடாதிருக்கவொரு
விலையறு மாயச்சொல்லுக்காய்
அலைந்தபடி...... நாளும் அலைந்தபடி…..

No comments:

Post a Comment