கவிமூலம்
சொன்ன சொல் சொக்கத் தங்கமெனில்
சொல்லாதது வைரமெனச்
சான்றோர் மொழிய
'இல்லை
அது என்னிடம் இல்லாத
என் செல்ல நாய்க்குட்டி '
என்கிறான் சிறுவன்.
சட்டி அகப்பை நாம்
எதுவும் தெரியாவிட்டாலென்ன –
பரவாயில்லை
எல்லாம் தெரிந்ததாகக் காட்டிக்கொள்வதே
(உன்) அறிவின் எல்லையான பின்….
முன்னுக்கு வந்துவிட்டால் பின்
உண்மையென்ன பொய்யென்ன அறிவில்….
என்னவொன்று
கண்ணுங்கருத்துமாய் என்னதான் நீ
மறைத்தாலும்
புரையோடிய புண்வலியாய்
பொய் கொல்லும் நின்று..
சரிநிகர்சமானம்
எனது நம்பிக்கை உங்களுக்கு நகுதற்குரியது;
நக்கலுக்குரியது.
எனக்கு அறிவிருப்பதையே நீங்கள் அங்கீகரிக்க மறுக்கிறீர்கள்;
எனக்கும் கருத்துச் சுதந்திரம் உண்டு என்பதைக்
கணக்கிலெடுத்துக்கொள்ள ஒப்புவதில்லை
ஒருபோதும்.
ஒரு குழந்தையின் மழலைப்பேச்சையும்
கிறுக்கல்களையும்
அணுகுவது போன்றே
என் மாற்றுக்கருத்துகளை அணுகும் உங்களுக்கு
என்மீது இருப்பது அன்பென்றால்,
சகமனித மரியாதையென்றால்
அத்தகைய அன்பை மதிப்பை
மறுதலிப்பதே யென் சுயாபிமானமாக.
ஆம் இல்லையாம்
அன்பு என்பது
மெய்யுணர்தல்
‘ரிஷி’
விசுவரூபம் இயல்பாயிருக்குமொருவர்க்கும்
விசுவரூப வேடந்தரித்த ஒருவருக்கு
மிடையேயான
ஆறுவித்தியாசங்களைக் கண்டுபிடிக்கச்
சொல்லிக்
கேட்டிருந்த புதிர்ச்சித்திரத்தில்
குறைந்தபட்சமாக அறுநூறு வித்தியாசங்களைக்
கண்டுபிடிக்க முடிந்ததில்
விசுவரூப வேடந்தரித்தவரை
வெகு இயல்பாய்க் கடந்துசெல்லவும்
விசுவரூபமே இயல்பாய்க் கொண்டவரை
வெகு இயல்பாய் விழுந்து வணங்கவும்
முடிகிறது.






No comments:
Post a Comment