தரவுகள்
காலால் எத்தி உடைத்துப்போட்ட
அரைகுறை உண்மைக்கதையை
அன்றாடம் அத்தனை ஆக்ரோஷத்தோடு சொல்லிக்கொண்டேயிருக்கிறவரை சற்றே பயத்தோடு இடைமறித்து
உடற்குறையுடையவரை இன்னொருவர் நையப்புடைத்த உண்மைக்கதையை
நாம் ஏன் பேசுவதேயில்லை என்று கேட்க
உர்ரென்று முறைத்தவாறே அங்கிருந்து போய்விட்டார்.
ஒரு குறிப்பிட்ட நாளிலிருந்துதான்
நாட்டில் வறுமை ஊஞ்சலாடுகிறது என்று அடித்துச்சொல்பவரிடம்
அதற்கு முன்பிருந்தே இருப்பதைக் காட்டும் ஆதாரத்தை எடுத்துத் தந்தபோது
அத்தனை கடுப்போடு அவர்
காறித்துப்பியதைப் பார்க்க
என்னுள் அதிகரித்த
அச்சம் மீறிய ஆற்றாமையில்
குறுக்கிட்டு எதுவும் கேட்காமல்
அங்கிருந்து போய்விட்டேன்.

No comments:
Post a Comment