LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, August 1, 2025

இம் என்றால்…. ஏன் என்றால்… ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 இம் என்றால்…. ஏன் என்றால்…

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
நினைத்த நேரத்தில் நிறையவே
நியாயவான்கள் தோன்றுகிறார்கள்…
SELECTIVE AMNESIA சித்தாந்தத்தை
சொட்டுச்சொட்டாகவும்
ஒட்டுமொத்தமாகவும்
உள்வாங்கிக்கொண்டிருப்பவர்கள்.
நினைத்தது நினைத்தபடி
மெய்யைப் பொய்யாக்கியும்
பொய்யை மெய்யாக்கியும்
சில கருத்துருவாக்கங்களைக் கட்டமைத்து
அதை கைபோன போக்கில் சுற்றிலும்
வாரியிறைக்கிறார்கள்.
பாதங்களின் கீழ் அவற்றை மலரிதழ்களாக
உணர்பவர்கள்,
உணரும்படியாக உருவேற்றப்பட்டவர்கள்,
காரியார்த்தமாய் உணர முடிந்தவர்கள்
அள்ளியிறைப்பவர்களின் வள்ளன்மையை
வாயாரப் பாராட்டியபடி மேற்செல்கிறார்கள்.
அடிக்கு அடி முட்களாய் இடற
பாதத்தடி வெந்து ரணமாகியபோதும்
அதுகுறித்து வாய்திறந்தால் ஆகப்போவது
ஒன்றுமில்லை
என்ற அறிதலில் புரிதலில்
மௌனமாய் வலிதாங்கி முன்னேறுகிறார்கள்
கட்டங்கட்டப்பட்ட சில மக்கட்பிரிவினர்.
.
எதிர்த்துப்பேசாவிட்டால் கோழைகள் என்றும்
குற்றவுணர்வில் குறுகுறுப்பவர்கள் என்றும்
மௌனமாகக் குழிபறிப்பவர்கள் என்றும்
அவர்கள் பின்னாலிருந்து ஒலிக்கும்
எகத்தாளக் குரல்கள்.
எதிர்கருத்துரைத்தாலோ
எப்படி எகிறுகிறார்கள் பாருங்கள் என்று
எட்டியுதைத்துச் சிரிக்கும்…..
அச்சு –ஒளி ஊடகங்களிலெல்லாம்
சாலைகள் சீரமைக்கப்பட்டுவிட்டதாய்,
சீரமைக்கப்பட்டுவருவதாய்
திரும்பத்திரும்ப தலைப்புச்செய்திகளாகவும்
முக்கியச் செய்திகளாகவும்
சொல்லப்பட்டுக்கொண்டேயிருப்பது
பட்டி தொட்டிகளிலெல்லாம் எதிரொலித்தவாறு….
நகரின் சாலையோரங்களிலெல்லாம்
பிச்சைக்காரர்கள்
கையேந்திய வாறும்
சுருண்டுபடுத்தவாறும்.
வாக்களிக்கும் வயதுடையோர்
அவர்களில் கணிசமானோர்,
என்றாலும் அவர்களுக்கு வாக்குகள் உண்டா
_ தெரியவில்லை.
அரசுகள் அவர்களுக்காய் ஏதும்
வாக்களிப்பதில்லை.
இதைச் சுட்டிக்காட்டுபவர்களை அது
கட்டம் கட்டி கவனித்துக்கொண்டேயிருக்கிறது.
ஓரிருவர் இருந்தால்,
அவர்களின் குரல் அத்தனை தெளிவாக
மற்றவர்களை எட்டுவதில்லையென்றால்
நிர்வாகம் அதைக் கண்டுகொள்வதில்லை.
முன்பிருந்த பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை
பாதியாகக் குறைந்துவிட்டது என்று
ஒரு புள்ளிவிவரக்கணக்கைத் தயாரித்து
வெளியிட்டு
தன் போக்கில் இயங்கிக்கொண்டிருக்கிறது.
நடக்கும் அநியாய அக்கிரம அராஜக அநீதிகளுக்கெல்லாம்
நாலாயிர நாற்பதாயிர ஆண்டுகளுக்கு
முன்பான
காரணங்களைத் தோண்டியெடுத்து
அவற்றில் கற்பிதங்களை சரிசம விகிதங்களில்
கலந்து
மக்களைக் கடந்த காலத்திலேயே
வாழ்ந்தழிய வைக்கும்
அகழ்வாராய்ச்சிகளுக்கான திட்டங்களும் தொழில்நுட்பங்களும்
தாராளமாக கைவசமுண்டு…….
எதிர்த்துப் பேசாத, பேசவியலாத,
பேச முற்படாத
மக்கட்பிரிவினராகப் பார்த்து
அவர்களே சமூக சீர்கேடுகளுக்குக் காரணம்
என்றொரு சுலபக் கதையாடலை
நேரடியாகவும் மறைமுகமாகவும் நிறுவும்
அதிகாரம் கொண்டது...
அதைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்டு
சேறு வாரித் தூற்றித் தம் சமூகக் கடமை
யாற்றுவோருக்கு
சில பல நாடுகளுக்குச்
சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்
வாய்ப்பை நல்குகிறது.
குரலற்றவர்களின் குரல்கள் என்ற போர்வையில்
குரலற்றவர்களின் குரல்வளைகளை நெரித்துக்கொண்டிருப்பவர்கள்
விழாமேடையேறி நெரிக்கப்பட்ட குரல்வளைகளை
யுயர்த்தி காட்டி
விருது பெறுகிறார்கள்.
பொற்கிழிகள் வழங்கப்படுகின்றன அவர்களுக்கு
– பொதுநிதியிலிருந்து.
செங்கோலோ – கொடுங்கோலோ
– அரசரைக் கேள்வி கேட்பார் யார்?
நெரிக்கப்படும் குரல்வளைகளைப் பார்த்து
பதறிப் பரிதவிப்பவர்கள் பித்தலாட்டக்காரர்களென்று
பட்டம் சூட்டப்படுகிறார்கள்.
கருத்தாக்கக் கழுமேடைகளில்
கண்களைக் கட்டி நிறுத்தியும், கல்லாலடித்தும்
அதிகாரத்தால் கொல்லாமல் கொல்லப்பட்டும்
குரலெழுப்பத் துணியும் அவர்களை
நேரம் பார்த்து கைது செய்யக் காத்திருக்கிறது நிர்வாகம்.
சிறையின் வாசம்
தேர்ந்தெடுத்த சிலருக்கு நறுமணமாகவும்
தேர்ந்தெடுத்த வேறு சிலருக்கு துர்நாற்றமாகவும்
இருக்கும்படியாகப்
பார்த்துக்கொள்ளப்படுகிறது.
வெளியே இருக்கும் அவர்கள்
உள்ளேயிருக்கும் அவர்களுக்காகக்
காறித்துப்பியோ, கண்ணீர் சிந்தியோ
தங்கள் வாழ்வைத் தொடர்கிறார்கள் .
மனசாட்சியுடையோர் மௌனமாக....
’இம் என்றால் சிறைவாசம்; ஏன் என்றால் வனவாசம்’
என்ற விதிவழியின் வட்டச்சுழலினூடாய்
விரைந்தபடி….
விடுதலையெனும் பேரருங்கனவை
இறுகப் பிடித்தபடி…..

No comments:

Post a Comment