LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Friday, August 1, 2025

கேள்விகளுக்கு அப்பால்….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கேள்விகளுக்கு அப்பால்…..

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
குயவர் தன் பாட்டுக்குப் பானை வனைந்து கொண்டிருந்தார்.
பக்கத்தில் போய் அமர்ந்த சகலகலா வித்தக(ராய்த் தம்மை பாவித்துக்கொண்டிருக்கும்) உத்தமர்
படம்பிடிப்பதற்காக பானை வனைபவரின் விரல்களை ஒரு கணம் அப்படியே உறைநிலையில் இருக்கச் செய்யச் சொன்னார்.
பானை வடிவிழந்துவிடும் என்றபடி
தன் வேலையைத் தொடர்ந்தார்
அந்தக் கைவினைஞர்.
'பானையை உருவாக்கும்போது நீங்கள் என்ன நினைப்பீர்கள்' என்று முகம் சுருங்க
புருவங்கள் உயர வினவினார் பேட்டியாளர்.
பானையைத்தான் நினைப்பேன் என்று
வேலையைத் தொடர்ந்தபடியே பதிலளித்தார் குயவர்.
'இந்த வேலையையே செய்கிறோமே என்று எந்த நாளேனும் வருந்தியதுண்டா?'
'எதற்கு வருந்தவேண்டும்? எனக்குப் பிடித்த வேலை யிது?'
'எதனால் பிடிக்கிறது?'
இது என்ன கேள்வி என்பதுபோல் ஒரு கணம் பேட்டியாளரை உற்றுநோக்கிய அந்த மனிதர்
'கண்ணில் கண்டவர்கள், கையில் கிடைத்தவர்களை யெல்லாம்,
கண்ட கண்ட விஷயங்களுக்கெல்லாம்
உங்களுக்கு ஏன் கேள்விகேட்கத் தோன்றுகிறது?'
என்று கேட்க _
திடுக்கிட்டுப்போன பேட்டியாளர்
வாயடைத்துநின்ற கணத்தில்
’என் கைகளுக்கும் களிமண்ணின் குழைவுக்கும் இடையேயான சுழல்பிணைப்பு
உமது கண்கணக்கிலடங்காதது;
பானைக்குள் நான் சமைக்கும் பிரபஞ்சப்
பெருவெளி
எனக்கு மட்டுமானது’
என்று சிறிய புன்சிரிப்போடு சொன்னவரை
அத்தனை அன்போடு
வியந்து பார்த்துக்கொண்டிருந்தது
பெரிய வாயும் சிறிய கழுத்துமாக உருவாகிக்கொண்டிருந்த
மண்பானை.

No comments:

Post a Comment