பெரியவர்களுக்கான
குழந்தைக் கதை
கடந்தாகிவிட்டது.
வழியில் எதிர்ப்பட்ட விஷங்கக்கும் பாம்பை
வாய்கிழித்தாகிவிட்டது.
முட்ட வந்த காட்டெருமையின்
கொம்புகளை முறித்தாயிற்று.
புதைகுழிக்குள் கழுத்தளவு காணாமல் போய்
பிழைத்தெழுந்தாகிவிட்டது.
வழுக்குப்பாறை உச்சிமீதிருக்கும்
வீடடைந்து
உள்ளிருந்த இருபது அறைகளையும்
துருவிப் பார்த்ததில்
இல்லாத
இருபத்தோராவது அறைக் கூண்டில்
அகப்பட்டிருந்த
கிளியின் எதிரிலிருந்த கிண்ணத்து
அரிசிமணிகளில்
சரியானதைப் பொறுக்கி யெடுத்து
அதைத் தரையில் தேய்க்கத் தேய்க்க
கிளியுருவி லிருந்த
அரக்கன் தலை சாய்ந்தது.
கூடவே
அவள் தலையும்.
(’காலத்தின் சில ‘தோற்ற’நிலைகள்’ (2005) தொகுப்பிலிருந்து)

No comments:
Post a Comment