காலம், கனவு மற்றும்
கிலோமீட்டர்கள்
குவித்துவைத்திருக்கிறது
காலம்.
ஒவ்வொரு நொடிக்கும் ஒரு ஒளியாண்டு.
முந்நூறைம்பது நாட்களை மைல்களாக
நீட்டிப்போட்டால்
மறுமுனை
அண்ட்டார்ட்டிக்காவைத் தாண்டி…
அந்த நிலாவைத் தாண்டி…
இமயமலையின் உச்சிமுனைத் தொலைவு _
இனி இல்லையாகிவிட்ட அந்த
இரண்டுமணிநேரங்கள்….
புலியின் வாலில் தொங்கிக்கொண்டிருக்கும்
அந்த உயிரின் அலைச்சல்
எத்தனைக் கடலாழங்கள்?
விடை கிடைக்காத கேள்விகளின்
பாரங்களை விரித்துப்போட்டால்
உலகத்துப் பாலைகளையெல்லாம் ஒரு சேரத்
தாண்டி நீளும்.
உலர்ந்தும் உருண்டோடிக்கொண்டிருக்கும்
கண்ணீரின் நீள அகலங்கள்
பாதாளவுலகின் பரப்பளவாய்.
உடல்களின் அருகாமைக்கும் உள்ளங்களின்
அருகாமைக்கும் இடையே
சமயங்களில்
வரவாகும் அகழிகளின் ஆழம்
அளக்கமாட்டாது.
கண்ணின் காலமும் நெஞ்சின் காலமும்
வெவ்வேறு தொலைவுகளின் அலைவரிசைகளில்.
கனவின் மார்க்க்த்திற்கு மார்க்கண்டேயப்
புள்ளினங்கள் வரைந்திருக்கும்
விண்ணிலான
அருவத்தடங்களின் நீள
அளவைகள்
நிலாவிலுள்ளன.
நம்மிடமுள்ளதெல்லாம் வெறும் கிலோமீட்டர்கள் மட்டுமே.
(’காலத்தின் சில ‘தோற்ற’நிலைகள்’ (2005) தொகுப்பிலிருந்து)

No comments:
Post a Comment