LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Wednesday, March 5, 2025

ஊருக்கு இளைத்தவர்களும் உத்தம உபதேசிகளும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஊருக்கு இளைத்தவர்களும்

உத்தம உபதேசிகளும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
மகானுபாவர்கள்.
மரணத்திற்கான காரணங்களை மனப்பாடமாய் அறிந்தவர்கள்.
இன்னாரின் சாவுக்கு இன்னின்ன கேடுகளை
கிலோ கணக்கில் சந்தையில் விற்பதில் கைதேர்ந்தவர்கள்.
மனிதநேயம், சமூக அக்கறை, அறச்சீற்றம்,
என்று எத்தனை கிரீடங்களை கைவசப்படுத்திவிட முடிகிறது!
கொள்ளை லாபம்தான்!
வெள்ளையும் சொள்ளையுமாய் கடையில் அமர்ந்தபடி
வழிபோவோர் வருவோரையெல்லாம் ஆழாக்கில்
அளந்துபார்த்தல்
அப்படியொரு சுவாரசியமான பொழுதுபோக்கு.
ஒரு இறப்பைக்கூட துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தத்
தெரிந்தவர்கள்.
இறந்தவரின் மனைவி, மக்களுக்காக இரு சொட்டு முதலைக்கண்ணீர் வடித்து
திரும்பவும் கரித்துக்கொட்ட ஆரம்பிப்பார்கள்.
இறந்தவனைக் கண்டந்துண்டமாய் வெட்டி
கெட்டித்துப்போய்விடுவதற்கு முன்பாகவே பிணத்தின் குருதியை
ருசித்துப் பருகிக்கொண்டே.
மரணதண்டனை கூடாதென்பார்கள் _
வன்மக்கங்குகளை வாரியிறைத்தவாறே
அன்புசெய்வோம்; அனைவரையும் நேசிப்போம் என்பவர்களைப் பார்த்து
என்ன செய்வதென்று புரியாமல்
அங்கே நின்றுகொண்டிருக்கிறார்கள்
கள்ளமற்ற சின்னப்பிள்ளைகள் –
அன்பைக் கொள்ளைகொள்ளையாய்க் கொடுத்த அப்பன்
அசையாமல் மண்ணில் படுத்திருப்பதை
வெள்ளமென வழியும் கண்ணீரோடு பார்த்தபடி.

No comments:

Post a Comment