நவீன உலகின் நான்காவது தூண்
குறிப்பிட்ட சில காட்சிகளைத்
திரும்பத்திரும்ப ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்றன
தொலைக்காட்சிச் செய்திகள்.
ஒரு மனிதனை இருமுறை உதைத்த
காவல்துறை அதிகாரியின் கால்
திரும்பத்திரும்ப இருநூறுமுறைக்குமேல்
அதையே செய்துகொண்டிருக்கிறது இன்னமும்.
கோப்புக் காட்சி என்று தெரிவிக்காமல்
வசதியாக மறந்துவிடுவதில்
நாற்பது வருடங்களுக்கு முன்பு நடந்த கலவரம்
இன்று நடந்துகொண்டிருப்பதாய்
கிலிபிடித்தாட்டுகிறது பார்வையாளர்களை.
அதேசமயம்
பாமர மக்கள் வண்ணமயமாய்
விபத்துகளைக் கண்டுகளிக்க முடிகிறது.
வறுமைக்கோட்டின் கீழுள்ள மக்களைக் காட்டி
அடியிலேயே
சரசரக்கும் பட்டுப்புடவை விளம்பரம்
இடம்பெறுகிறது.
குழந்தைகளின் உளச்சிக்கல்களை
ஒருபுறம்
மனோதத்துவ நிபுணர் எடுத்துரைக்க
மறுபக்கம்
சம்பந்தப்பட்ட ‘நியூஸ் சானலுடைய
எண்டர்டெயின்மெண்ட் சானலின்
மெகாத்தொடருக்கான ‘ டீஸரில்’
இரண்டு சிறுவர்கள்
ஒருவரையொருவர் குண்டாந்தடியால்
பின்மண்டையில்
ஓங்கியடித்துக்கொள்கிறார்கள்.
அது சும்மணாங்காட்டி காகிதக் கழி என்று
அரைச்சிரிப்போடு சொல்லும் அந்தத்
தொலைக்காட்சி நிறுவன அதிகாரிகளுக்கு
பார்க்கும் பிள்ளைகளுக்கெல்லாம்
அது தெரியாதே என்ற உண்மை
ஒரு பொருட்டேயில்லை என்றும்.
’துல்லியமான புகைப்படம்
நல்ல கவிதைகள் நாற்பதுக்கு சமம்’
என்று சொன்னால்
’அது சரி அல்லது தவறு’ என்று
அடுத்த பட்டிமன்றம்
அல்லது மக்கள் மன்றம்
நடத்த
அலைவரிசைகளுக்கா பஞ்சம்?
No comments:
Post a Comment