LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, July 4, 2024

அன்பு செய்தலின் அனேக பாவனைகள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அன்பு செய்தலின் அனேக பாவனைகள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


இந்தா வாங்கிக்கொள் சுளீரென்றொரு கத்திக்குத்து
அதே கத்தியால் உனக்கொரு நல்ல ஆப்பிள் நறுக்கித் தருவேன்
அத்தனை அன்போடு
மாட்டேனென்று சொல்லாமல் முழுங்கிவிடு.
நறுக்கலுக்கும் வெட்டலுக்கும் வேறுபாடு
உண்டென்றால் உண்டு; இல்லையென்றால் இல்லை
மனசாட்சி மட்டுமா தொல்லை.....
நான் உளறுவதாய்ச் சொன்னாயே _
உள்ளுக்குள் உன்னுடைய முப்பத்தியிரண்டு பற்களைப்
பத்துமடங்காக்கி
ஓங்கிக்குத்துவிட்டு அத்தனையையும் பேத்துப்போட்டபின்
எதிர்பாராத விதமாய் நீ எதிர்ப்பட்டபோது
எத்தனை அருளோடு சிரித்தேன் பார்த்தாயல்லவா?
பேதை நான் உனக்கு
பெத்தப் பேதை நீ யெனக்கு.
காற்றடைத்த பையானாலும்
மெய்யாகவே வலிக்கும் காயங்களை
விழுப்புண்களாகக் கொள்ளும்
மீமெய்யியல் மனிதராய்வாழ்ந்துகாட்டுவதாக
மார்தட்டிக்கொள்.
மிதப்போடு கடந்துசெல்.
வழியில் தென்படும் அயோக்கியசிகாமணிகளுக்கும்
ஆன்ற பெருமக்களுக்கும் அதேயளவான சிரிப்பையும் வரவேற்பையும் நல்கி
அதனாலேயே உன்னை அற்புதமனிதராகக் காண்பிக்கும் முனைப்பில்
உன்னை அழகாகக் காட்டிக்கொள்ளும் அதியார்வத்தின்
அவலட்சணத்தைக் காட்ட உனக்கொரு
ஏற்ற ஆடியை எங்கிருந்து கொண்டுவர இயலுமென்னால், சொல்?
நாதியில்லாத கவிக்கு வீடளிப்பதைக் காட்டிலும்
நாலு ஊரில் நாலு வீடு ஏற்கெனவே இருப்பவர்க்கு
இன்னுமொன்றை அளித்தலே கனிவின் உன்னதநிலை
என்று ஓதிக்கொண்டிருப்பதே அரசநீதியென்றாக _
Selectiveவ்வாக சீறு;
Selectiveவ்வாக மீறு;
Selectiveவ்வாகவே அன்புசெய்தலே சகலரிடமும் அன்புசெய்தல் என்று
கூற முடியுமானால் கூறு.
பாரு பாரு நல்லாப் பாரு
பயாஸ்கோப்பு படத்தைப் பாரு

No comments:

Post a Comment