LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, January 26, 2026

சரிநிகர்சமானமாய் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சரிநிகர்சமானமாய்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


பீடங்கள் வேண்டியிருக்கிறது பப்பலருக்கு.
பீடங்களில்தான் எத்தனையெத்தனை வகைகள்!
வெளிப்படையான பீடங்கள் தகதகத்தொளிரும்
தங்கத்தால் செய்யப்பட்டிருக்கும்
அதில் ஆரோகணித்திருப்பவரின் அகங்காரமும்
அடங்காப்பிடாரித்தனமும்
அராஜக அட்டூழியங்களும்
அப்பட்டமாய்க் காணக்கிடைக்கும்.
அதைக்கண்டு பிரமித்துப்பார்ப்பதும்
பயப்படுவதும்
ஒதுங்கிப்போவதும்
எளிது.
புல்நுனிப்பீடங்களும் உண்டு
காற்றின் கனிவோடு நம்மைக் கைப்பிடித்து அழைத்துச்செல்லுமவை
வெகு கவனமாய் நம்மை
விருப்பத்தோடு மண்டியிடவைக்கும்.
நம் விடுதலைக்காகக் குரல்கொடுப்பதாய் அவை
நம்மை நம்பச்செய்து
நடக்கமுடியும் தனியாக என்பதையே மறக்கச்செய்து
நீளும் அவர் கையைப் பெருவரமாகப் பற்றிக்கொள்ளச் செய்யும்.
அந்தக் கை இழுத்த இழுப்புக்கெல்லாம் போகச்செய்யும்.
”நீ பரிதாபத்திற்குரியவள் நீ பலியாடாக்கப்பட்டவள்
(நாம் பரிதாபத்திற்குரியவர்கள் நாம் பலிகடாவாக்கப் பட்டவர்கள் )
என்று சொல்லிச்சொல்லியே
நான் கருணைமிக்கவன், நான் உனக்கு சாபவிமோசனம் தருபவன்
(நாங்கள் கருணைமிக்கவர்கள், நாங்கள் உங்களுக்கு சாபவிமோசனம் தருபவர்கள்)
என்று தன் மேலாண்மையை உறுதியாய்
நிறுவிக்கொள்ளும்.
அதுவேயாகுமாம் திட்டவட்டமாய்
சக கவிஞரைப் பாலின அடைமொழிக்குள்ளிட்டுக்
கட்டுடைத்தலும்.

ஆசை – பேராசை – நிராசை - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஆசை – பேராசை – நிராசை

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஆசை யாரை விட்டது?
ஆசைக்கு அளவில்லை.
ஆசையே அலைபோலே நாமெல்லாம்
அதன்மேலே......
அத்தனையும் அவர் அறிந்ததே.
ஆனாலும் –
ஆயிரம் கட்டுரைகளை எழுதிய
அபூர்வ சிந்தாமணியான அவர்
இன்னொருவர் எழுதிக்கொண்டிருந்த
இருபது கதைகளையும்
அதற்கு அவருக்குக் கிடைக்கும்
அமோக வரவேற்பையும் பார்த்து
தானும் எழுதத் தொடங்கினார்.
அதுவும் அவரைவிடப் பெரியாளாகப்
புலப்படவேண்டும் என்ற
ஆறா வெறியோடு
அவரைக் கீழிறக்கவேண்டுமென்ற
குறிப்பான இலக்கோடு.
பானை வனைபவரைப்பார்த்து ஏன் இப்படி
போட்டியிடத் தோன்றவில்லையெனக்
கேட்டபோது
பல்லைக் கடித்துக்கொண்டு
பொறுக்கியெடுத்த
கெட்டவார்த்தைகளைக்
கொட்டித்தீர்த்தார்.
தனது கதைகளை யாரும் கண்டுகொள்ளவே
யில்லையென்பதைப் பார்த்து
ஆத்திரத்தின் உச்சாணிக்கொம்பில்
ஏறிநின்றவரை
வேடிக்கைபார்த்தவாறே
கடந்துசெல்கிறது
இன்று

பாவம் அவர்கள்,,,,,, ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

பாவம் அவர்கள்,,,,,,

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

மூன்றாமவருக்குத் தெரியாத இருவர்

அல்லது முன்னூறு பேருக்கு மேற்பட்டவர்கள்

அறியாத இருபதுபேர்

அல்லது மூவாயிரம் பேருக்குக் குறைவாகவே அறிந்திருக்கும் இருநூனூறுபேர்

மில்லியன்களாகத் தம்மை பாவித்துக்கொண்டு

எல்லாவற்றையும் பற்றிக் கருத்துரைத்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

இலக்கியம்

அரசியல்,

நடனம்,

ஓவியம்,

ராப் இசை,

கர்நாடக இசை

ஊர், உறவு, நாடு,

பிரபஞ்சம், தாராளமயம்

புரட்சி, பட்சி, காட்சி,

விரகம், நரகம், மீட்சி

ஆட்சி சாட்சி

அருமை சிறுமை பெருமை கருமை

என்று அவர்கள் பேசிக்கொண்டேயிருப்பதைக் கண்ட

சிறு பறவையொன்று தாங்கமுடியாமல்

அவர்கள் மீது எச்சமிட்டது

அவர்கள் பறவை எச்சத்தைப் பற்றி

அகல்விரிவாகப் பேச ஆரம்பித்தார்கள்.

ஒலியும் ஒளியும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஒலியும் ஒளியும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


(* ‘தனிமொழியின் உரையாடல்’ தொகுப்பிலி ருந்து)
................................................................................
காதில் பஞ்சடைத்து
இருந்தவிடம் விட்டு இம்மியும் நகராமல் தெருத்தெருவாய்ப்
போய்க்கொண்டிருக்கிறேன்
பை நிறைய பஞ்சை தோளில் சுமந்தபடி....
பட்டாசுச் சப்தம் பயமுறுத்த
தேம்பியழும் குழந்தைகளுக்கெல்லாம்
நான் தரும் மிக உன்னதமான அன்பளிப்பு
அதுவாகவே யிருக்கும்.
சிறுவயதில் நடுநடுங்கிக் கண்ணீர் விட்டு
நகைப்புக்காளாகி செவிபொத்தி,
புத்தாடையோடு பதுங்கியிருப்பேனாம்
குளியறையில்.
கிண்டல் குட்டு கிள்ளு - எல்லாமே
என் மேல் அக்கறை கொண்டோரின் எதிர்வினைகளாக....
ஒருபோது பாவம் பார்ப்பார்கள்;
ஒருபோது பிடித்திழுத்துவந்து
வெடிக்கப்போகும் பட்டாசின் எதிரில் நிறுத்துவார்கள்.
பின்னேகிக்கொண்டே போனதில்
ஒருமுறை புது கவுன் விளக்கில் பற்றிக்கொண்டுவிட-
சில வெடிகள் தரையைப் பிளந்து
என்னைக் குற்றுயிராக்கிவிடும்..
அவற்றிலிருந்து கிளம்பும் நெருப்பு என்னைத்
தீக்கிரையாக்கிக்கொண்டேயிருக்கும்.
பூக்குத்தியும் ஒருநாள் டமாரென வெடித்து
உருமாறிவிட்டது நான் வெறுக்கும் பட்டாசாய்.
அப்போதெல்லாம் தீபாவளிக்கு முன்னும் பின்னும்
பதினைந்து இருபது நாட்கள்போல்
பாழும் நரகத்துள் வறுபட்டுக்கொண்டிருப்பேன்
கொதிக்கும் எண்ணெயில்.
(இப்போது அப்படியில்லை என்றாலும் -
எல்லா விழாக்களிலுமே வெடிகள் தவிர்க்கமுடியாத
அங்கமாகிவிட்டன......
வெடிகுண்டுகளும் கூட)
வலிதாங்கு சக்திபோல் ஒலிதாங்கு சக்தியும்
எல்லா மனிதர்களுக்கும் ஒருபோல் இருப்பதில்லை…..
இப்போதும் அந்த ஒளி, ஒலி கதிகலங்கச் செய்கிறது.
எனில், இயல்பாய் காதில் பஞ்சடைத்துக்கொள்ள
என்னால் முடிகிறது.
அதில் அவமானமடையத் தேவையில்லை என்ற உண்மை
ஆழப் படிந்துவிட்டது மனதில்.
அன்பிற்குரியோரே,
ஆன்றோரே - சான்றோரே
உங்கள் இல்லங்களில், அருகிலுள்ள வீடுகளில்
வெடிச்சப்தம் கேட்டு விதிர்த்து அழும் சிறுமி / சிறுவன் இருந்தால்
கடிந்து கொள்ளாதீர்கள்;
அடிக்காதீர்கள்.
அடடா பயந்தாங்கொள்ளி என்று எள்ளிநகையாடி
அவமானத்தில் அவர்களைக் குன்றிப்போகச் செய்யாதீர்கள்;
குறைமனிதராய் அவர்களை உணரச் செய்யாதீர்கள்.
அவர்களுடைய குட்டிக்காதுகளில் சின்னப் பஞ்சுருண்டையை
செருகிக்கொள்ள அவர்களை அனுமதியுங்கள்;
அருகிருக்கும் முதியவர்களுக்கும் நோயாளிகளுக்கும்கூட
மிக இதமாயிருக்கும்.
இதோ, இந்தக் கவிதைப்பையிலிருந்து வேண்டுமட்டும்
பஞ்சைப் பிய்த்தெடுத்துக்கொள்ளுங்கள்.

இது வேறு தனிமை - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 //2016, அக்டோபர் 7ஆம் நாள் பதிவேற்றப்பட்டது. மீள்பதிவு//

இது வேறு தனிமை
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
சங்கக்கவிதைகளைப் படித்துச் சுவைத்தது
உன் கவிதைக்கு செழுமை சேர்க்கக்கூடும் என்றார் அன்புத்தோழரொருவர்.
கூடாது என்றேன் அவையடக்கமின்றி.
என் கவிதை
நள்ளிரவுக்கும் புலரிக்கும் இடைபட்ட பொழுதிலான
திடீர்விழிப்பில்
எங்கோ கிறீச்சிட்டுக்கொண்டிருக்கும்
கண்ணுக்குப் புலனாகாச் சுவர்க்கோழியின்
வெண்கலக்குரலை உள்வாங்கும் கணத்தின்
தனிமை.
அதற்கு யாரும் துணையாக முடியாது;
வழிகாட்ட முடியாது;
அதை யாரும் அலங்கரிக்க முடியாது;
நலம் பேண முடியாது.
எல்லையற்ற ஒற்றைவழிப் பாதையில்
நான் கூட என்னைப் பாதுகாக்கவியலா
நிராதரவின் வலிமையே
என் கவிதைக்கான ஆற்றுப்படுத்தல்.

இலக்கிய இலக்கணங்கள் - 1 ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 இலக்கிய இலக்கணங்கள் - 1

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
கதை கவிதையெழுதுவதை விட
மொழிபெயர்ப்பாளராவதைவிட
வெகுஎளிதாய்
விமர்சகராகிவிட்டால் போச்சு!
விவஸ்தையோடு எழுதுவதுதான் விமர்சனம்
என்பதெல்லாம் வெட்டிப்பேச்சு.
மொழிபெயர்ப்பாளரை உதைபந்தாக உருட்டியவண்ணம்
இலக்கிய மைதானத்தில் வலம்வந்துகொண்டிருக்கிறார்கள்.
பந்தை உருட்டமுடிந்தவர்களெல்லாம்
பந்தாகிவிட முடியுமா என்ன ?
கேட்டால் கொடும்பாவியெரித்திடுவார்களோ -
ஒரே கலவரமாயிருக்கிறது.
ஏன் அரசியல் கவிதையே எழுதுவதில்லை யென்று கேட்டா ரொருவர்
ஒரே யொருவரைப் பழிப்பதும் பகடி செய்வதும்
ஒரேயொரு குலத்தை மலமெனப் பேசுவதும்
நலங்கெட ஏசுவதும்
ஒரேயொரு மதத்தை விதவிதமாய் மதிப்பழிப்பதும்
வக்கிரமாய் நிந்திப்பதுமே
அரசியல் என்ற புரிதலோடு.
அதிநேயமாய் சக படைப்பாளிகளைப் பேசுவதான
உத்தியைக் கையாண்டு
தன்னை யொரு அதிகாரமையமாய் கட்டமைத்துக்கொள்பவர்
புத்தியோடு அதைக் கண்டுபிடித்துவிடுபவர்களை
மதிகெட்டவர்களென்று முத்திரைக் குத்திவிடுகிறார்!
கொஞ்சம் விட்டால் போதும்
’அ’னா ’ஆ’வன்னா சொல்லிக்கொடுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்;
மிஞ்சி மிஞ்சிப் போனால் நான்கெழுத்தில்
மேதாவியாகிவிடப் பார்க்கிறார்கள் எப்போதும்
இலக்கிய இலக்கணங்கள் - 2
அரட்டையடித்துக்கொண்டிருந்தவர்கள்
குறட்டை விட்டுத் தூங்கியெழுந்தவர்கள்
பரட்டைத்தலையே வாரிமுடிந்த கூந்தலெனக் கொள்பவர்கள்
இரட்டை மூக்குகள் இருப்பதாக பாவனை செய்பவர்கள்
சிரட்டை தான் தேங்காயின் சாராம்சமெனக் கையடித்து
சத்தியம் செய்பவர்கள்
கரகரக் குரலில் அபஸ்வரமாய்ப் பாடி
இசையை வாழவைப்பவர்கள்
கத்திக்கத்தியே தன் கருத்தைச் சத்தானதாக்கும்
வித்தகம் பழகியவர்கள்
மொத்தமாய் குத்தகைக்குக்கு எடுக்கப் பார்த்தும்
இத்தனை காலமும் இனியும் தப்பித்து வாழும்
இலக்கியம்.

Sunday, January 25, 2026

பாரதியார் - பன்முகங்கள், பல்கோணங்கள் - டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன்

 Dr. K. S. சுப்பிரமணியன் பாரதியாரைப் பற்றி எழுதிய கட்டுரைகள்.

இரண்டாம் பதிப்பு புதுப்புனல் வெளியீடாக வந்துள்ளது.

படிக்கவேண்டிய புத்தகம்

கவிதையாதல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கவிதையாதல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
நாடுமல்ல காடுமல்ல நான் கவிதை
யென்றது;
நரி காகம் கதையல்ல நான் கவிதை
யென்றது;
நான்குவரித் துணுக்கல்ல நான் கவிதை
யென்றது;
நீள நீள மறுமொழியல்ல நான் கவிதை
யென்றது;
நிறையக் கேட்டுவிட்ட தத்துவமல்ல நான் கவிதை
யென்றது;
நான்குமறைத் தீர்ப்பல்ல நான் கவிதை
யென்றது;
நான்கு பழமொழிகளின் திரட்டல்ல நான் கவிதை
யென்றது;
நச்சென்ற எதிர்வினையல்ல நான் கவிதை
யென்றது;
நாக்கால் மூக்கைத் தொடுவதல்ல நான் கவிதை
யென்றது;
நாய்வால் நிமிர்த்தலல்ல நான் கவிதை
யென்றது;
நன்றியுணர்வோ நபும்சகமோ அல்ல நான் கவிதை
யென்றது;
நகையின் இருபொருளுணர்த்தலல்ல நான் கவிதை
யென்றது
நல்முத்துமணியணிக்கோலமல்ல நான் கவிதை
யென்றது
நவரத்தின மயிற்பீலியல்ல நான் கவிதை
யென்றது
நட்சத்திரங்களின் எண்ணிக்கையல்ல நான் கவிதை
யென்றது
நிலவின் துண்டங்களல்ல நான் கவிதை
யென்றது
நல்லது நல்லது சொல் சொல் இன்னும் சொல்
என்றதற்கு
’ந’விலேயே வரிகளெல்லாம் தொடங்குவதல்ல கவிதை
யென்றது சொல்லிச் சென்றது.
நாணித் தலைகுனிந்தென் கவிதை (நற்)கதியிழந்து
நின்றது.