கவிஞரும் மொழிபெயர்ப்பாளரும்
லதா ராமகிருஷ்ணன்
இலக்கு வாசகர்களைக் கருத்தில் கொண்டு, மொழிபெயர்க்கப் படும் என்ற அனுமானத்தில் எழுதப்படும் கவிதைகள் உண்டு.
ஆனால், என்னளவில், உண்மையான கவிஞர் ஒரு கவிதையை எழுதும்போது அதை யார் படிப்பார் கள் என்பதைப் பற்றியோ, அது மொழிபெயர்க்கப் படுமா என்பதைப் பற்றியோ எண்ணத் தலைப்படுவதில்லை.
ஏதோ ஒரு அழுத்தத்தை – அது ஆனந்தம் சார்ந்த அழுத்தமாக இருக்கலாம், அல்லது, ஆற்றாமை சார்ந்த அழுத்தமாக இருக்க லாம் – அல்லது ஒரு கணம் காட்டிய காற்றின் விசுவரூபத்தை எழுத்தின் மூலம் கல்லில் வடித்துவைக்க மனம் மேற்கொள் ளும் அசாத்தியமான அழுத்தமாக இருக்கலாம் – எதுவாக இருந்தாலும் இத்தகைய அழுத்தங்களே ஒரு கவிதை உருவாகக் காரணமாகி றது என்று கருதுகிறேன்.
மூல கவிதை இல்லாமல் அதற்கான மொழிபெயர்ப்புக்கு வழியே யில்லை.
ஒரு மொழியில் எழுதும் கவிஞர்கள் ஆங்கிலத் திலோ பிறவேறு மொழிகளிலோ தேர்ச்சி பெற்றிருப் பார்கள் என்று சொல்ல முடியாது; அதற்கான தேவை யும் இல்லை.
ஆனால், அவற்றைப் படிப்பவர்கள் ஆங்கிலமும் அறிந்திருந்தால் இத்தகைய நல்ல கவிதைகள் நம் மொழியில் வருவதை மற்றவர் களும் தெரிந்து கொள்ளவேண்டும், தெரிந்துகொள்ளட்டும் என்ற ஆர்வத்தில் தாம் படிக்கும் கவிதைகள் சிலவற்றை மொழிபெயர்க் கத் தொடங்குகிறார்கள்.
மிகச் சிறந்த கவிதைகள் மொழிபெயர்க்கப் படாமலேயே போக லாம். மொழிபெயர்ப்புக்குள் அடங்க மறுக்கலாம். மொழிபெயர்ப் பாளர்களின் இருமொழி சார் தேர்ச்சியின் வரம்பெல்லைகள், அவர்களுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், அவர்களுக்குத் தரப்படும் பணியாக சில கவிதைகள் மொழிபெயர்க்கப்பட வேண்டி யிருப்பின் சம்பந்தப் பட்ட தேர்வாளர் அல்லது தேர்வுக்குழுவின் மனச்சாய்வுகள் என பல விஷயங்கள் மொழி பெயர்ப்பு சார்ந்து செயல்படுகின்றன.
தமிழே அறியாத அயல்நாடுவாழ் இளந்தலைமுறை யைச் சேர்ந்த வர் ஒருவர் தனது அப்பாவின் மேஜையில் இருந்த எழுத்தாளர் ஜெயகாந்தனுடைய புதினமொன் றின் ஆங்கில மொழிபெயர்ப் பைப் படித்து இத்தகைய அற்புதப் படைப்புகளெல்லாம் தமிழில் உள்ளனவா என்று வியந்ததாக மொழிபெயர்ப்பின் தேவை குறித்து தனது நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பின் முன்னுரையில் கருத்துரைத் திருந்தது நினைவுக்கு வருகிறது.
எத்தனை சிறந்த மொழிபெயர்ப்பென்றாலும் மூல மொழியிலி ருந்து இலக்கு மொழிக்குப் போகும்போது தவிர்க்கமுடியாமல் சில இழப்புகள் நேரும் என்றும் மூல மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு வந்து அதிலிருந்து தமிழுக்கு வரும்போது மேற்குறிப்பிட்ட இழப்புகள் இன்னும் அதிகமாகும் என்றும் கூறப்படுவது முற்றி லும் உண்மையே.
இத்தகைய போதாமைகள், இழப்புகள் தவிர்க்க முடியாதவை என்றாலும் அதற்காக ஒரு பிரதியை அலட்சியமாக, அரைகுறை யாக மொழிபெயர்ப்பது அநியாயம்.
ஒரு பிரதியின் மீதான அடிப்படை மரியாதையோடு, அது மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்ற உண்மை ஆர்வத்தோடு பிரதியை மொழிபெயர்க்கும் மொழி பெயர்ப்பாளர்களும் உண்டு. ஒரு பிரதியை மொழி பெயர்த்துத் தருவதன் மூலம் மூல ஆசிரியருக்கு பெரிய உதவி செய்கிறோம், அதற்கு மூல ஆசிரியர் தனக்குக் கடமைப்பட்டவராக இருக்கவேண்டும் என்ற எண்ணத் தோடு செயல்படும் மொழிபெயர்ப்பாளர்களும் உண்டு.
ஆங்கிலம் தெரிந்த ஒரே காரணத்தால் மூல ஆசிரியரை விட தன்னை உயர்வாக, அதி உயர்வாக பாவித்துக் கொள்ளும் மொழிபெயர்ப்பாளர்கள் என்னளவில் கண்டனத்துக்குரியவர்கள்.
முன்பு, தமிழ்க் கவிஞர் ஒருவரின் கவிதைகளை நான் ஆங்கிலத் தில் மொழிபெயர்த்து அது நூல்வடிவம் பெறும் போக்கில் சம்பந்தப்பட்ட ஆங்கிலப் பதிப்பக ‘எடிட்டர்’ என் மொழிபெயர்ப்பு களை செம்மைப்படுத்துவதாகச் சொன்ன போது, நான் அதை ஏற்க மறுத்தேன். காரணம். அவருக்குத் தமிழே தெரியாது. அப்படி யிருக்கும் போது அவர் எப்படி என்னுடைய மொழிபெயர்ப்புகளை செம்மைப்படுத்த முடியும்?
இப்படி, தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தின் அடிப்படையில் ஒரு மொழிபெயர்ப்பாளரின் ஆங்கிலத்தை மதிப்பழிக்க முயல்வோரும் உண்டு.
சிலர் கவிதை சார்ந்த, மொழிபெயர்ப்பு சார்ந்த உண்மை யான அக்கறையோடு மொழிபெயர்ப்பிலான குறைகளை எடுத்துச் சொன்னால் அதைக் கேட்டுக்கொள்வதில் எந்தத் தயக்கமும் ஒரு மொழிபெயர்ப்பாளருக்கு இருக்க வேண்டியதில்லை.
ஆனால், பிழைகளைச் சுட்டிக்காட்டுவதில் பெரியமனிதத் தோரணை இருந்தால் அதற்கு சம்பந்தப்பட்டவர் தகுதியானவர் தானா என்று சரிபார்க்க வேண்டியது அவசியம்.
ஒரு முறை நுட்பமான கவிஞரொருவரின் கவிதையை மொழி பெயர்த்துப் பதிவேற்றியிருந்தேன். கவிஞரைப் பாராட்டும் விதமாய் ஒருவர் 'கவிஞரின் கவிதைகள் அதி உன்னதமானவை; அவற்றை மொழிபெயர்க்க முயல்வது அபத்தம். They are untranslatable' என்று ‘கமெண்ட்’ செய்திருந்தார். இத்தனை சிறப் பான கவிதையின் மகிமை தமிழறி யாத இலக்கிய ஆர்வலர் களுக்கும் தெரியவேண்டும் என்ற அவாவில்தான் மொழிபெயர்ப்பு முயற்சியை மேற்கொள்வதாகத் தெரிவித்து ’தனது கவிதையை மொழிபெயர்க்க வேண்டாமென்று கவிஞர் சொன்னால் நான் அதற்குக் கட்டுப்படுவேன்’ என்று அவருக்கு மறுமொழி அளித்தி ருந்தேன்.
தொழில்முறை மொழிபெயர்ப்பாளராக சில சமயம் வயிற்றுப் பிழைப்புக்காக சில மொழிபெயர்ப்பு வேலைகளை – அ-புனைவுப் பிரதிகளை மொழி பெயர்க்கும் பணி _ ஒப்புக்கொள்ளும்போது, என்னுடைய மூலப்பிரதியை உங்கள் மொழி பெயர்ப்பில் மேம் படுத்தவும் என்று சில ‘பணம் கொடுக்கும் முதலாளிகள்’ அடிக்கோடிட்டுக் கூறுவதற்கு ‘அது என் வேலையல்ல’ என்று மறுத்ததுண்டு.
உள்ளது உள்ளபடி மொழிபெயர்த்தல் – இதற்கு அர்த்தம் இரு மொழிகளிலும் உள்ள இலக்கண-இலக்கியார்த்த பிரத்யேகத் தன்மைகளைக் கணக்கி லெடுத்துக்கொள்ளாமல் மொழிபெயர்த் தல் என்பதல்ல. இந்தப் பிரத்யேகத் தன்மைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, அதே சமயம் மூல கவிதை மொழியைக் கையாண்டிருக்கும் விதத்தை யும் கணக்கில் எடுத்துக்கொண்டும் மொழி பெயர்ப்பதே. மூலப்பிரதியை மொழிபெயர்க்கும்போது ஒரேயடியாக, தன்னை இணை படைப்பாளியாகக் கருதிக்கொண்டு மொழிபெயர்ப்பாளர் செயல்படுவது எந்தவிதத்திலும் சரியல்ல.
அதுவும், நவீன தமிழ்க்கவிதையைப் பொறுத்தவரை கவிஞர்கள் மொழியை, வார்த்தைகளை மிகுந்த கவனத்தோடு கையாள்கிறார் கள்; வரிசைப்படுத்துகிறார்கள்; பொருள்படுத்துகிறார்கள். பழைய ‘விக்டோ ரியன் ஆங்கில’த்தையே அடிப்படையாகக் கொண்டு இந்தக் கவிதைகளை மொழிபெயர்ப்பது அபத்தமாக இருக்கும் என்பதோடு இந்தக் கவிதைகளுக்கு எந்த வகையிலும் நியாயம் சேர்ப்பதாகாது.
ஆங்கிலத்தில் எழுதப்படும் நவீன கவிதைகளின் மொழியும் விக்டோரியன் காலத்து ஆங்கில மொழியும் ஒன்றல்ல. மேலும், ஒரு மொழியின் இலக்கணத்தை அறிந்துகொள்ள அந்த மொழி யின் கவிதைகளைப் படிக்கவேண்டிய தேவையில்லை.
இலக்கணப்பிழைகளோடு எழுதப்படுவதுதான் கவிதைக்கு அழகு என்பதல்ல என் வாதம். ஆனால், கவிஞருக்கு, நவீன கவிஞருக்கு மொழி குறித்த உள்ளார்ந்த பிரக்ஞை இருக்கவே செய்கிறது.
ஒருமை, பன்மை முதலான குழப்பங்கள் கவிதையில் தெரியாமல் நடைபெற வழியுண்டு. அதேயளவு, பிரக்ஞாபூர்வமாகவே அவை ஒரு கவிதையில் இடம்பெறவும் வழியுண்டு.
ஆங்கில மொழிபெயர்ப்பில் இலக்கண சுத்தமான ஆங்கிலத்தை, ஆங்கில வார்த்தை, வாக்கியக் கட்டமைப்புகளைப் பயன்படுத்து வதுதான் மேலான மொழிபெயர்ப்பு என்ற பார்வையை முன்வைப் பவர்களின் மொழிபெயர்ப்பில் மூல மொழியில் கவிஞர் பிரக்ஞா பூர்வமாக மேற்கொண்ட இந்த இலக்கணம் மீறிய வார்த்தை, வாக்கியக் கட்டமைப்புகள், பயன்பாடுகள் காணாமல் போய்விடும் வாய்ப்புகளே அதிகம்.
உதாரணத்திற்கு ’வருகிறேன் கொண்டு’ என்று கவிஞர் (பிரம்ம ராஜனின் ’பிரயாணத்திலிருந்து ஒரு கடிதம்’ கவிதை) பயன்படுத்தி யிருப்பதில் ’ நான் கொண்ட வைகளை (அனுபவங்கொண்டவை களை, உள்வாங்கிக் கொண்டவைகளை, எடுத்துக்கொண்டுவருகி றேன் – அனுபவங்கொண்டு, உள்வாங்கிக்கொண்டு, வருகிறேன் – எடுத்துக் கொண்டுவருகிறேன் என்ற அர்த்தங்கள் கூடுதல் துலக் கம் பெற வழியுண்டு. இதை இலக்கண சுத்தமாக கொண்டுவருகி றேன் என்ற பொருளில் I WILL BRING என்று மொழிபெயர்ப்பதில் அந்த நுட்பங்கள் காணாமல்போய்விடுகின்றன. இதற்கு மொழி பெயர்ப்பு சற்று சிக்கலாகத்தான் அமையும். I WILL COME BRINGING, COME I WILL, BRINGING சரியல்ல.
ஒரு கவிதையின் முழுவாசிப்பில் வருகிறேன் கொண்டு எதைக் குறிக்கிறது என்று பார்த்து அதற்கேற்ப ஆங்கில வார்த்தைகளைத் தெரிவு செய்து வரிசைப்படுத்த வேண் டும்.
//மஞ்சளால் நிரம்பி வழியும்
காலைநேரத்தின் பாதைகளில்
தூரத்து மெல்லிய மெலோடி இசையொன்றுடன்
தன் வீட்டின் முகடுகளை பற்றி
சிறிதும் அலட்டிக்கொள்ளாத சிலந்திகள்
இரு புறங்களும்
குறுக்குமறுக்காக அலையாததால்
அமைதியாக இருக்கின்றது பாதை//
_ Ahamath M Sharif எழுதியுள்ள கவிதையின் ஆரம்பவரிகள் இவை. கவிஞர் தன் மனதிலோடும் ஒருவகை முன்னுரிமைப் பிரக்ஞைப் படி ஒவ்வொன் றாக வரிசைப்படுத்துகிறார். இந்த முன்னுரிமை சார் வரிசையை ஆங்கில இலக்கணத்தை, மரபான ஆங்கிலக் கவிதையைக் காரணங்காட்டி தனக்குத் தோன்றியவாறு மொழி பெயர்ப்பாளர் மாற்றுவது சரியில்லை என்றே தோன்றுகிறது.
இதற்கென மெனக்கெடுகிறவர்கள்தான் சீரிய மொழிபெயர்ப் பாளர்கள். மெனக்கெடவே மாட்டேன், குத்துமதிப்பாக கவிதை யைப் பொருள் கொண்டு, அந்தப் பொரு ளைக் குத்துமதிப்பாக பிரதிபலிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தி சுத்தமான ஆங்கிலத் தில் மொழிபெயர்த்துத் தருவதே கவிஞருக்கும் இலக்குமொழிக்கும் என் அளப்பரிய கொடை என்பதாக ஒரு மொழிபெயர்ப்பாளர் இயங்குதல் சரியல்ல.
உதாரணமாக மூலமொழியில் பாடபுத்தகம் (TEXT BOOK) என்றி ருப்பது இலக்குமொழியில் TEXT (பிரதி) என்று தரப்படுதல் எப்படி சரியாகும்? இதுவே மேலான மொழிபெயர்ப்பு என்று திரும்பத் திரும்ப சிலரைக் கருத்துரைக்கவைக்கும் உத்தியைக் கையாண்டு சிலர் சாதிக்கப் பார்ப்பதும் நடக்கிறது. என்னளவில் இது சம்பந்தப் பட்ட கவிஞருக்கு இழைக்கப்படும் அநீதி.
ஒரே கவிதையை ஒன்றுக்கு மேற்பட்ட மொழி பெயர்ப்பாளர்கள் மொழிபெயர்க்கும் போது அவர்கள் தெரிவு செய்யும் வார்த்தைகள் வேறுவேறாக இருக்கும் வாய்ப்புகளே அதிகம். ஒரு கவிதையை ஒரு மொழி பெயர்ப்பாளரே இருமுறை மொழி பெயர்க்கும் போதுகூட இதுவே நேரும். அதேசமயம், வேறுவேறு வார்த்தை களைப் பயன்படுத்தியிருந்தாலும் கவிதை யின் பொருள் – நேரிடையானதோ, பூடகமானதோ – அது மொழிபெயர்ப்பாளரின் வாசகப்பிரதியாகவே இருந்தாலும் கூட (அதாவது, கவிஞரிடம் அவருடைய கவிதையின் பொருளைக் கேட்டு மொழிபெயர்க்காத போதும்) ஒரேயடியாக அர்த்தம் மாறிவிடலாகாது.
அதேபோல், மூலமொழியில் பூடகமாக எழுதப் பட்டிருக்கும் கவிதை இலக்குமொழியில், அதாவது ஆங்கிலத்தில் ‘பொழிப் புரை’த்தன்மையோடு மொழி பெயர்க்கப்படலாகாது.
A BOOK OF VERSE என்ற உமர் கய்யாம் கவிதையின் வரியை (ஆங்கிலத்தில் படித்த வரியை) கையில் கம்பன் கவியுண்டு என்று தமிழில் படிக்க நேர்ந்த போது கம்பன் மீதும் மொழிபெயர்ப்பாளர் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை மீதும் மிகுந்த மரியா தையும் அபிமானமும் இருந்தாலும் என் கையில் கம்பன் கவிதைதான் இருக்கவேண்டும் என்று மொழிபெயர்ப்பாளர் எப்படி தீர்மானிக் கலாம் என்று கோபம் வந்தது எனக்கு.
ஒரு கவிஞருக்கு இலக்குமொழி (இங்கே ஆங்கிலம்) தெரியாத தால் அவருடைய பிரதியை எப்படிவேண்டு மானாலும் மொழி பெயர்த்து வைக்கலாம் என்ற மனப்போக்கு ஒரு மொழிபெயர்ப் பாளருக்கு இருக்கலாகாது.
கவிஞர் மொழிபெயர்ப்பாளரை நம்பி தனது கவிதையை மொழி பெயர்க்க அவருக்கு அனுமதி தருகிறார். அந்த நம்பிக்கையை மொழிபெயர்ப்பாளர் காப்பாற்றவேண்டும்.
தனது கவிதை சரியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறதா என்று சரிபார்க்க கவிஞர் ஆங்கிலம் தெரிந்த வேறு சிலரை நாடும்போது அவர்களும் ஆங்கிலம் தெரிந்ததால் தம்மை கவிஞரைக் காட்டி லும் உயர்வானவராக பாவித்து ஆளுக்கொரு கருத்துரைக்க வாய்ப்பிருக்கிறது.
ஆங்கிலம் தெரிந்த ஒரே காரணத்தாலேயே தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்பின் தரத்தைப் பேசத் தகுதியுடைய வர்கள் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.
அதேபோல், ஒரு படைப்பாளியை மொழிபெயர்ப்பதா லேயே அந்தப் படைப்பின் இணை-படைப்பாளியாகவும், படைப்பாளியை விட உயர்ந்தவராகவும் தம்மை பாவித்துக்கொள்ளும் மொழி பெயர்ப்பாளர்களும் இருக்கிறார்கள். இரண்டுமே சரியல்ல.
எனவே, இத்தகைய இக்கட்டுகளுக்கு ஆளாக்காமல் கவிஞரு டைய WRITERLY TEXT(எழுத்தாளர் பிரதிக்கு முடிந்தவரை மொழி நடையிலும் அர்த்தாக்கத் திலும் மொழிபெயர்ப்பாளரின் வாசகப்பிரதி READERLY TEXT) ஒத்திருக்கும்படியாக மொழி பெயர்ப்பு அமைவதே தனது கவிதையை மொழிபெயர்க்க முழுமனதோடு அனுமதியளிக்கும் கவிஞருக்கு மொழிபெயர்ப் பாளர் செய்யக்கூடிய குறைந்தபட்ச நன்றி நவிலல்; பதில்மரி யாதை.
இதன் காரணமாகவே நான் மொழிபெயர்க்கும் கவிஞர்கள் எனக்கு நன்றி தெரிவிக்கும்போது எனக்கு உண்மை யிலேயே மிகவும் தர்மசங்கடமாக இருக்கிறது.
ஏனெனில், அப்பழுக்கற்றதென்று அடித்துச்சொல்ல வியலாத என்னுடைய மொழி பெயர்ப்புக்குத் தங்களு டைய கவிதைகளை அவர்கள் மனமுவந்து தருவதற்காக அவர்களுக்கு நான்தான் நன்றி சொல்லவேண்டும். அதுவே நேர்மையும் நியாயமும்.