LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, March 29, 2025

கணக்கு


கணக்கு 

தமிழ்நாடே சொன்னது என்றார்.

தானே தமிழ்நாடெனக் கொண்டார்.

மகிழ்ச்சியைத் தேடி... 'ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மகிழ்ச்சியைத் தேடி...

'ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

//*என்னுடைய எட்டாவது கவிதைத்தொகுப்பு ’போகிற போக்கில்’. 24 கவிதைகள் கொண்ட சிறுநூல். 2011இல் வெளியாகியது.)
ஆரம்பமும் முடிவும் காணலாகா வாழ்க்கையொன்று
என் கண் முன்.
அன்புமயமான அந்தத் தகப்பனின் கைபிடித்திருக்கும்
பிள்ளையோடு பிள்ளையாய் போகத் தொடங்குகிறேன்.
அவனை விட்டுப் பிரிந்துசென்ற மனைவியாகி
மீண்டும் அவனைத் தேடிவந்து முத்தமிடுகிறேன்.
அந்தக் கண்களில் குத்திநிற்கும் முட்களையெல்லாம்
வலிக்காமல் ஒவ்வொன்றாய் பிடுங்கியெறியும் வழிதான் தெரியவில்லை.
விரையும் வேகத்தில் 'ராணுவ வீரனின் பொம்மை
கைநழுவி
சாலை நடுவில் விழுந்து விபத்துக்குள்ளாக,
பேருந்திலிருந்து ஏங்கித் திரும்பும் சிறுவனின் விழிகளில்
நிறையும் நிராதரவில், குற்றவுணர்வில், உறவைப் பிரிந்த தவிப்பில்
இன்றும் நேற்றும் நாளையும் சிறைச்சாலையாகிவிடுகிறது உலகம்.
மகிழ்ச்சியைத் தேடி மகனை தோள்மீது சுமந்தபடி
நாளெல்லாம் ஓடித் திரிகிறான் க்ரிஸ்.
தினமும் தங்கவும் தூங்கவும் இடமில்லாமல்
அறைதேடி அல்லாடும் வழியெல்லாம் சிலுவைகள்.
அவரவர் உலகங்களை அன்பிணைக்க
இரத்ததானம் அளித்துப் பெறும் பணத்தில்
மகனுக்கு விருந்தளித்து மகிழ்பவன் மீண்டும் ஓடுகிறான்.
வேலை கிடைத்த மகிழ்ச்சியில் மகனை
மார்போடணைத்து
ராஜகுமாரனாக்குகிறான்!
அடுத்தவேளை சோறுக்கே வழியில்லாத நாளிலும்
ஆளரவமற்ற இரயில் நிலையத்தில்
மகனுக்காக
டினோசார் வாழும் காட்டையே
நிர்மாணித்தவனாயிற்றே!
”கோள்கள் எத்தனை?”
“ஏழு”
”இல்லை, ஒன்பது" ”வனராஜா யார்?"
"கொரில்லா”
”இல்லை, சிங்கம்”
தந்தையின் கேள்விகளுக்கு தயங்காமல் பதிலளிக்கும்
மகன்.
(தவறாய் இருந்தால்தான் என்ன!)
எனில், அன்றொரு நாள் மகன் கேட்கும் கேள்வியில்
கதிகலங்கி நிற்கிறான் தந்தை:
”அம்மா என்னால் தான் பிரிந்து போனாளா?”
“இல்லை, அம்மா தன்னால் தான் போனாள்”.
“நீ விரும்பினால் குகைக்கே திரும்பிவிடலாம்" என்று
பரிவோடு கூறுகிறது பிள்ளை.
”வெறுமே கடற்கரைக்குச் சென்றோம்
எல்லாவற்றிலிருந்தும் தொலைவாக;
ஏமாற்றத்திலிருந்து வெகுதொலைவாக
என் வாழ்க்கையின் இந்தப் பகுதி
’இந்தச் சின்னஞ்சிறு பகுதியே மகிழ்ச்சியென்று அழைக்கப்படுகிறது”
என்கிறான் க்ரிஸ்.
”என்ன நடந்தாலும் சரி, நீ செய்தது அற்புதமான
காரியம்
நல்லபடியாக கவனித்துக்கொள் உன்னை”
என்றவரை
வேண்டி விரும்பி வழிமொழிகிறேன் நானும்.
காரணம் புரியாமல் விழிநிரம்பும் கண்ணீர்
க்ரிஸ்ஸுக்காகவும் எனக்காகவும் உங்களுக்காகவும்
கருணை செய்யட்டும் காலம்.
.......................................................................................

அமைதிப்படுகையில் - ஆத்மாநாம்

 அமைதிப்படுகையில்

ஆத்மாநாம்



அற்புத மரங்களின் அணைப்பில்

நான் ஒரு காற்றாடி
வேப்பமரக் கிளைகளின் இடையே
நான் ஒரு சூரியரேகை
பப்பாளிச் செடிகளின் நடுவே
நான் ஒரு இனிமை
சடை சடையாய்த் தொங்கும் கொடிகளில்
நான் ஒரு நட்சத்திரம்

கவிஞர் பிரம்மராஜனின் வலைப்பூ (அல்லது இணையதளம்?)

 கவிஞர் பிரம்மராஜனின் வலைப்பூ (அல்லது இணையதளம்?) www.brammarajan.wordpres.com


 கவிஞர் பிரம்மராஜனின் வலைப்பூ (அல்லது இணையதளம்?) ஒன்றை யதேச்சையாகக் காணக்கிடைத்தது. அவர் மொழிபெயர்த்திருக்கும் உலகக் கவிஞர்கள் பலரைப் படிக்க முடிந்தது.

மொழிபெயர்ப்பாளர்கள் இரண்டு வகை. நானெல்லாம் என் மதிப்புக்குரியவர்கள் (எழுத்தாளர்கள் கோபிகிருஷ் ணன், பிரம்மராஜன், முகமது ஸஃபி போன்றவர்கள்) தேர்ந்தெடுத்துத் தருவதை மொழிபெயர்த்தவள். தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்போது தான் என் தேர்வில் மொழிபெயர்க்கிறேன்.
ஆனால் கவிஞர் பிரம்மராஜன் நிறைய வாசித்து ரசித்து, தேர்வு செய்து மொழிபெயர்ப்பவர். அவர் மூலம் அந்நிய மொழிகளிலான தரமான படைப்பாளிகள் தமிழ் வாசகப் பரப்புக்கு அறிமுகமாகியிருக்கிறார்கள்.
அவருடைய இந்த வலைப்பூவிலும் அவருடைய நிறைய மொழிபெயர்ப்புகளை வாசிக்க முடிகிறது.
அவருடைய கவிதைகள், கவிதை சார்ந்து அவர் எழுதிய கட்டுரைகளும் இடம்பெற்றிருக்கக் கூடும். எனக்குக் கண்டுபிடிக்க இயலவில்லை. இன்னொரு நாள் சாவகாசமாகத் தேடிப் பார்க்க வேண்டும்.
https://brammarajan.wordpress.com/

BRAMMARAJAN'S-WORKS
A unique blog about Tamil poetry and Tamil culture, with translations in English


...................................................................................................................
பித்தமும் பிரம்மமும்
பிரம்மராஜன்

அரைக்கனவு துளிர்ப் பிறை
கயிற்றரவு கங்கையாறு
சர்ப்பக் காற்று சலனிக்காது
மூன்றாம் கண் மூடியே நோக்கும்
பித்தமும் பிதற்றலும்
கவிதையே ருத்ரமூர்த்தி
ஆறாத புண் அது என்றும் நாறும்




விரிவு -‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 விரிவு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
நூலின் ஒரு முனை என் கையில் சுற்றப்பட்டிருக்க
அந்தரத்தில் அலைகிறது காற்றாடி
செங்குத்தாய்க் கீழிறங்குகிறது;
சர்ரென்று மேலெழும்புகிறது
வீசும் மென்காற்றில் அரைவட்டமடிக்கிறது
தென்றலின் வேகம் அதிகரிக்க
தொடுவானை எட்டிவிடும் முனைப்போடு
உயரப் பறக்கத்தொடங்கிய மறுகணம்
அருகிலிருக்கும் அடுக்குமாடிக் கட்டிடமொன்றின் பலகணிக் கம்பிகளில்
சிக்கிக்கொண்டுவிடுகிறது.
எத்தனை கவனமாக எடுத்தும்
காற்றாடியின் ஒரு முனை கிழிந்துதொங்குவதைப் பார்க்கப் பரிதாபமாயிருக்கிறது.
ஆனாலும் தரைதட்டாமல் தன் பறத்தலைத் தொடரும்
காற்றாடியின் பெருமுயற்சி
கையின் களைப்பை விரட்டியடிக்கிறது.
காற்றாடிக்காக வானம் மேலே மேலே போவது போலவும்
கீழே கீழே வருவது போலவும்
கண்மயங்கிய நேரம்
நூலின் ஒரு முனையைப் பிடித்திருக்கும் கை
வாழ்வாக மாற
காற்றாடியாகிறேன் நான்.

நிழல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நிழல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
செப்பிடுவித்தைகள் எத்தனையோ செய்துபார்த்தும்
சாமதானபேததண்டமெல்லாம் சகட்டுமேனிக்குப் பிரயோகித்தும்
திரும்பத்திரும்ப விசுவரூபமெடுத்தவண்ணம்
கடந்த காலத்தின் நிழல்……
படைப்பாளிக்கு அது சிருஷ்டிபரம்.
நனவோடையில் நீச்சலடித்துப் பின்னேகிச் செல்வதிலுள்ள
பரவசம் படியும் அவன் எழுத்து
பூஞ்சிறகுச் சாமரம் வீசிக் களைப்பாற்றும் நிழலாய்.
விழுமியங்கள் வேறானவை – எனவே கண்டிப்பாக என் நிழல்
உன் பிரதிபிம்பமாக வழியில்லை.
தோப்பும் துரவுமாய் வாழ்ந்துவருவதால் மட்டும் உன் ’நிழல்’
ஒப்பாரும் மிக்காருமில்லாததாகிவிடுமா என்ன?
இப்பிறவியில் செல்வமும் புகலிடமும் தந்துவிடுமா என்ன?
இன்று நாம் பார்க்கும் விண்மீன்கள் உண்மையில்
என்றோயிருந்தவைகளின் நிழல்களென்று அறிவாயா?
நியாயவான்களுக்கு அருளாயும் நீசர்களுக்கு இருளாயும்
நிழல் தெரிவது பொருளார்ந்தது;
உனக்குப் புரியாது; புரிந்தாலும் நீ விரும்பாதது.
கல்லெடுத்துவீசிக்கொண்டேயிருந்தாலும் காற்றிற்கில்லை
காயமும் ஊனமும் களங்கமும்…..
நீளக்கிடத்தலே நிழலின் நிற்றல்
கற்க கசடற..
நிற்க –
தட்டுக்கெட்ட நிழலா தமிழ்க் காப்பியங்கள்?
துன்முகி வருடம் 2016?

[பின்குறிப்பு: நிழல் : சாயை – shadow, shade, பிரதிபிம்பம் - image, ஒளி - lustre, அருள் - grace, புகலிடம் - asylum, செல்வம் - prosperity மரக்கொம்பு – branch of a tree, நோய் – disease) – லிப்கோ தமிழகராதி.
இன்னும் நல்ல தமிழகராதியில்
இன்னும் நிறைய அர்த்தங்கள் தரப்பட்டிருக்கும்.
இதில் நீங்கள் எந்த நிழல் என்று தெளிவானதொரு முடிவுக்கு வந்தபின்
வசைபாடுவதற்கா இசைபாடுவதற்கா
அந்தச் சொல்லை எதற்குப் பயன்படுத்தலாம்
என்று முடிவெடுத்தல் மேல்.]

கவிதை

 கவிதை

வற்றாத ஜீவநதியின்
முற்றுப்பெறாத நீர்த்துளி.......
rishi
(latha ramakrishnan)

EINSTEIN ON EGO

 


பூமிக்கோளமும் BLOATED EGOக்களும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பூமிக்கோளமும்

BLOATED EGOக்களும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
எத்தனை கொரானாக்கள் வந்தாலுமே
எல்லாம் சுயபுராணங்களுக்காகுமே யென
இடைவிடாமல்
தம்மைக் கடைவிரிப்போருக்கு
பேரிடர்களெல்லாம் தம் நாட்டைப் பழிக்கவும்
சக மனிதர்களைக் கூறுகெட்டவர்களாகப் பகுக்கவும்
மூடர்களெனக் கட்டங்கட்டித் திட்டவும்
மட்டந்தட்டவும்
பெருவாரியான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
அரசை
பயங்கரவாத அரசாகப் புரியவைக்கத்
தயங்காமல் பொய்யுரைக்கவுமே யாக _
பாதுகாப்பாய்
இருக்குமிடத்திலிருந்துகொண்டே இண்டர்நெட்
உதவியுடன்
இரண்டொரு கருத்துரைத்து
பெருங்காரியங்கள் செய்துகொண்டிருப்பதான
பாவனையைக் கைக்கொள்ளவும்
ஆழ்ந்து யோசிப்பதாய் அப்படி அண்ணாந்திருக்கும்
தன்னை
கையிலிருக்கும் அலைபேசியில் இன்னுமின்னுமாய்
படம்பிடித்து UPLOAD செய்தவாறிருக்கும்
அறிவுசாலிகள் அன்றாடம் அப்படி அறைந்து தாக்க _
குறையுயிரோடு போராடிக்கொண்டிருக்கிறது
மா பூமி
தன் இன்னுயிர் காக்க….

மொழிமனம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மொழிமனம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
மண்புழுவை மகா பாம்பு என்று
கண்ணையுருட்டிச் சொன்ன சிறுவனை
தப்பாகச் சொன்னதற்காயொரு
அப்பு அப்ப எழுந்துகொண்டு்
மகா பாம்பா, மகாப்பாம்பா – எது சரி
என்று ஒருகணம் குழம்பிய
பிறகு
மக்கு மக்கு என்று குட்டப்போன
உறவுக்காரரின் கையைத்
தட்டிவிட்ட தந்தை
ஈன்றபொழுதின் பெரிதுவந்துரைத்தார்
பக்குவமாய்:
’என் பிரிய மகன் அரும்புகிறான்
பெருங்கவியாக!’


சொல்லத்தோன்றும் சில…. _ லதா ராமகிருஷ்ணன்

 சொல்லத்தோன்றும் சில….

_ லதா ராமகிருஷ்ணன்














நான்காவது தூண்(FOURTH PILLAR) என்று ஊடகங்களைச் சொல்வார்கள்.

நிறைய அச்சு ஊடகங்கள்அப்படியிருந்த காலம் உண்டு.
ஆனால், இன்று ஒளி ஒலி ஊடகங்களும் அச்சு ஊடகங்களும் ஒரு பக்க சார்பாய் தகவல்களைத் தருவதும், நேர்காணல்கள் நடத்துவதும், பரபரப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக (பார்ப்பவர்களுக்கு மாரடைப்பு வந்தால் வரட்டும் என்று)கோர விபத்துகள், படுகொலைகள், எந்த நடிகர் எந்த நடிகையோடு வெளிநாடு போயிருக்கிறார் என்று மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் காலம் இது.
கள்ளக்குறிச்சியில் பட்டப்பகலில் நடந்த கலவரம், கொள்ளை குறித்தோ, வேங்கைவயல் விவகாரம் குறித்தோ எதையுமே பேச மாட்டார்கள். அந்த வழக்குகள் இப்போது என்ன நிலையில் இருக்கின்றன என்று தகவல் தர மாட்டார்கள்.
இதில் இபோது தேர்தல் காலம் என்பதால் தமிழ்ச் செய்தி சேனல்களில் அரசியல்வாதிகள், அவர்களுடைய தேர்தல் கால வாக்குறுதிகள் ஆகியவற்றை நகைச் சுவைப் பொருளாக்கி நிகழ்ச்சிகள் நாளுமோ வாரா வாரமோ ஒளிபரப்பப்படுகின்றன.
அரசியல்வாதிகளாவது ஐந்து வருடங்க ளுக்கு ஒருமுறை மக்கள் முன் நிற்கவேண்டியிருக்கிறது.
ஊடகங்களுக்கு அந்தப் பொறுப்பேற்பு பெரிதாக இல்லை. எனவே, அவர்களால் தங்களை தீர்ப்பளிக்கும் பீடாதிபதிக ளாக்கிக்கொண்டுவிட முடிகிறது.
சீரியஸாக பேச வேண்டிய அரசியல் விஷயங்களை, பிரச்சனைகளை அதற்கான இடத்தில் அகல்விரிவாகப் பேசுவதைத் தவிர்த்து அரசியல்வாதிகளை ‘நகைச் சுவைத் துணுக்குகளாக்கி’ தங்களைப் பெரியவர்க ளாக்கிக்கொண்டுவிட முடிகிறது.
அதேபோல் தான் சினிமாக்காரர்களும் படங்களிலெல் லாம் இளைஞர்கள் காதலிக்காத பெண்ணையே பின் தொடர்ந்தவாறிருந்து தமது காதலின் மேன்மையை வெளிப்படுத்துவதாகவும், கல்லூரிகளில் ஆசிரியர் களைக் கிண்டலிப்பதே மாணவர்களுக்கு அழகு என்பதாக நடந்துகொள்வதாகவும், பேருந்தின் மீது ஏறிநின்று பாடியாடுவதாகவும், ஆங்கிலம் பேசுபவர் களைப் பரிகசிப்பதாகவும்(நகைச்சுவை என்ற பெயரில் இவர்கள் செய்யும் BODY SHAMING அனைவரும் அறிந்ததே) திரும்பத்திரும்பக் காட்டி இளைஞர்கள், வளரிளம்பருவத்தினர் மனங்களில் நம் வயதுக்கு இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது என்று எண்ணச்செய்ய, அப்படி அவர்கள் நடந்துகொண்டு காவல்நிலையத்தில் மாட்டிக்கொள்கிறார்கள். கொலை, குத்து நடக்கிறது.
மேற்படி படங்களை எடுப்பவர்களும் அதில் நடிப்பவர் களும் நிறைய காசு கொடுத்து ஆங்கிலம் கற்றுக் கொண்டு அயல்நாடுகளுக்குச் சென்று ஆங்கிலப் படங்களில் நடிக்கவும் செய்கிறார்கள்.
குடி குடியைக் கெடுக்கும் என்பதுபோல இந்த மாதிரி Stalking, Once side love, Ragging போன்ற விஷயங்களைத் திரையில் காட்டும்போதும் ஏதாவது எச்சரிக்கை வாசகத்தை ஓடவிடுவதில்லையே, ஏன்?
சமூகத்தின் நான்காம் தூண் ஊடகங்கள். அவை தங்களு டைய பணியை சரியாகச் செய்துகொண்டிருக்கிறதா என்று முதலில் சுயபரிசீலனை செய்து கொள்ளட்டும். அது குறித்து அகல்விரிவான கலந்துரையாடல்கள், விவாதங் களை நடத்தட்டும்.
அப்படியே தான் திரையுலகினரும்.
அரசியல்வாதிகளை மட்டுமே பகடி செய்து மதிப்பழிப்பது மட்டுமே விமர்சனமாகிவிடாது; சமூகப் பொறுப்புணர்வு, பொறுப்பேற்பு ஆகிவிடாது.