நிழல்
சாமதானபேததண்டமெல்லாம் சகட்டுமேனிக்குப் பிரயோகித்தும்
திரும்பத்திரும்ப விசுவரூபமெடுத்தவண்ணம்
கடந்த காலத்தின் நிழல்……
படைப்பாளிக்கு அது சிருஷ்டிபரம்.
நனவோடையில் நீச்சலடித்துப் பின்னேகிச் செல்வதிலுள்ள
பரவசம் படியும் அவன் எழுத்து
பூஞ்சிறகுச் சாமரம் வீசிக் களைப்பாற்றும் நிழலாய்.
விழுமியங்கள் வேறானவை – எனவே கண்டிப்பாக என் நிழல்
உன் பிரதிபிம்பமாக வழியில்லை.
தோப்பும் துரவுமாய் வாழ்ந்துவருவதால் மட்டும் உன் ’நிழல்’
ஒப்பாரும் மிக்காருமில்லாததாகிவிடுமா என்ன?
இப்பிறவியில் செல்வமும் புகலிடமும் தந்துவிடுமா என்ன?
இன்று நாம் பார்க்கும் விண்மீன்கள் உண்மையில்
என்றோயிருந்தவைகளின் நிழல்களென்று அறிவாயா?
நியாயவான்களுக்கு அருளாயும் நீசர்களுக்கு இருளாயும்
நிழல் தெரிவது பொருளார்ந்தது;
உனக்குப் புரியாது; புரிந்தாலும் நீ விரும்பாதது.
கல்லெடுத்துவீசிக்கொண்டேயிருந்தாலும் காற்றிற்கில்லை
காயமும் ஊனமும் களங்கமும்…..
நீளக்கிடத்தலே நிழலின் நிற்றல்
கற்க கசடற..
நிற்க –
தட்டுக்கெட்ட நிழலா தமிழ்க் காப்பியங்கள்?
துன்முகி வருடம் 2016?
[பின்குறிப்பு: நிழல் : சாயை – shadow, shade, பிரதிபிம்பம் - image, ஒளி - lustre, அருள் - grace, புகலிடம் - asylum, செல்வம் - prosperity மரக்கொம்பு – branch of a tree, நோய் – disease) – லிப்கோ தமிழகராதி.
இன்னும் நல்ல தமிழகராதியில்
இன்னும் நிறைய அர்த்தங்கள் தரப்பட்டிருக்கும்.
இதில் நீங்கள் எந்த நிழல் என்று தெளிவானதொரு முடிவுக்கு வந்தபின்
வசைபாடுவதற்கா இசைபாடுவதற்கா
அந்தச் சொல்லை எதற்குப் பயன்படுத்தலாம்
என்று முடிவெடுத்தல் மேல்.]
No comments:
Post a Comment