LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, January 21, 2025

MODERN TAMIL POETRY - A MINIATURE CANVAS VOL.1 & VOL.2

 வாங்குவீர் இன்றே!


MODERN TAMIL POETRY -
A MINIATURE CANVAS
VOL.1 & VOL.2

(* ஒவ்வொரு தொகுப்பிலும் 150க்கும் மேற்பட்ட சமகாலத் தமிழ்க்கவிஞர்களின் ஆளுக்கு ஒரு கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு இடம்பெற்றுள்ளது. ஃபேஸ் புக் இல் நட்புவட்டத்தில் உள்ள கவிஞர்களுடைய கவிதைகள் அவ்வப்போது மொழிபெயர்க்கப்பட்டு பதிவேற்றப்பட்டுவருகின்றன. அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை ...


MODERN TAMIL POETRY - A MINIATURE CANVAS - VOL.1
150+ சம காலத் தமிழ்க்கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்பு.

மொழிபெயர்ப்பாளர் திருஎஸ்.என்.ஸ்ரீவத்ஸா

MODERN TAMIL POETRY - A MINIATURE CANVAS - VOL.11
150+ சம காலத் தமிழ்க்கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்பு.

மொழிபெயர்ப்பாளர்
லதா ராமகிருஷ்ணன்

பிரதிகள் வாங்க தொடர்புகொள்ளவும்:

திரு.ராஜா
கலைஞன் பதிப்பகம் - தொலைபேசி எண் 97104 22798
GPAY எண்
தொடர்புக்கு ஜிபே எண்:97104 22798
.......................................................................................................................................
நட்பினருக்கு வணக்கம்,

தனியொரு கவிஞரின் கவிதைகளை தொகுப்பாகக் கொண்டுவரு வதற்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்களின் கவிதைகளை (ஆளுக்கு ஒன்று என்ற அளவில்) தொகுப்பதற்கும் பெரிய வேறுபாடு உண்டு.
தனியொரு கவிஞரெனில் அவருக்கு பத்திருபது அன்பளிப்புப் பிரதிகள் கொடுத்தால் போதும். ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்கள் இடம்பெறும் தொகுப்பு என்றால் ஆளுக்கு ஒரு அன்பளிப்புப் பிரதி தந்தால்கூட நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிகளை பதிப்பகம் அன்பளிப்பாகத் தரவேண்டியிருக்கும்.
இந்தக் காரணத்தாலேயே சமகால கவிதைப்போக்குக ளைப் புலப்படுத்தும் தொகுப்புகள் அதிகம் வருவதில்லை எனலாம்.
இத்தகைய தொகுப்புகள் வெளியாவதை ஊக்குவிக்க நாம் செய்யவேண்டியது. இத்தகைய பிரதிகளை வாங்குவது.
சமீபத்தில் கலைஞன் பதிப்பகத்தால் வெளியிடப் பட்டுள்ள MODERN TAMIL POETRY - A MINIATURE CANVAS VOL 1 & VOL.2 இரண்டு தொகுப்புகளில் ஒன்றில் இடம்பெற்றி ருக்கும் கவிஞர்கள் மற்ற தொகுப்பை விலை கொடுத்து வாங்கி இந்த முயற்சியை ஊக்குவிக்கலாம். அல்லது முடிந்தவர்கள் இரண்டு தொகுப்புகளையுமே விலை கொடுத்து வாங்கலாம். யாருக்கேனும் அன்பளிப்பாகத் தரலாம். ஏதேனும் நூலகத்திற்கு அன்பளிப்பாகத் தரலாம்.
இந்த இரண்டு தொகுப்புகளிலுமாக 300க்கும் மேற்பட்ட சமகால தமிழ்க்கவிஞர்களின் கவிதை மொழிபெயர்ப்பு கள் வெளியாகியுள்ளன.
இந்த மூலகவிதைகள் இடம் பெறும் தொகுதியை ஒரே தொகுப்பாக வெளியிட் டால் கவிஞர்களின் விவரக் குறிப்புகளோடு தொகுப்பு 400 பக்கங்களுக்கு மேல் போகும்.
இந்த எண்ணம் ஈடேற நாம் தற்போது வெளியாகியிருக் கும் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்புகளுக்கு ஆதர வளிக்கவேண்டியது அவசியம்.
முடிந்தவர்கள் முன்வரும்படி வேண்டிக்கொள்கிறேன்

வலியின் கையறுநிலை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வலியின் கையறுநிலை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
அரிக்கும் இடத்திலுள்ள கூந்தலை ஒரு கையால் கொத்தாய்ப் பிடித்து
மறுகை விரலால் நெருடி வழுக்கியோடும் பேனைத் தடுத்து நிறுத்தி
மயிரிழைகளோடு சேர்த்து இழுத்து
அதைக் கைக்கட்டைவிரல் நகத்தின்மீது வைத்து
மறுகைக் கட்டைவிரல் நகத்தால் சொடுக்கும் நேரம்
அந்த இக்கிணியூண்டு உடலிலிருந்து உயிர்பிரியும் சப்தம்
துல்லியமாய்க் கேட்கும்.

ஒரு கையறு நிலையில் மனம் அதிரும்;
கடவுளுக்கு சாபமிடும்.
பேன்கள் மண்டிய தலையோடு வாழ முடிந்தால் நன்றாயிருக்குமோ என்று பேதலிக்கும்.

சொடுக்காமல் ஜன்னலுக்கு வெளியே வீசியெறியும் நேரம்
எலும்புமுறிவு ஏற்பட்டுவிடுமோ அதற்கு
என்ற கேள்வி தவறாமல் கலங்கவைக்கும்.

எல்லாநேரமும் இந்தப் பிரக்ஞை விழித்துக்கிடக்கும்
என்று சொல்லமுடியாவிட்டாலும்
‘நல்லா வேணும் பேனுக்கு’ என்று நினைக்க ஒருபோதும்முடிந்ததில்லை;

அந்த நுண்ணுயிர் என் கையால் கொலையாகவே
பிறவியெடுக்கிறது
என்று பெருமைப்பட்டுக்கொள்ள
ஒருபோதும் முடிந்ததில்லை;

அதற்கு வலியிருக்க வழியில்லை என்று
அறுதியிட்டுப் பறைசாற்ற
ஒருபோதும்முடிந்ததில்லை.

பேனைச் சொடுக்குவது எனக்குக் கைவந்த கலை
என்று பெருமைபீற்றிக்கொள்ள
ஒருபோதும் முடிந்ததில்லை.

பேனைப் பிடித்துவிடுவதில்தான்
என் ஆனமானம் அடங்கியிருக்கிறது என்று நம்ப ஒருபோதும்முடிந்ததில்லை.

நான் வளர்க்கிறேன் பேனை,
எனவே நான் அதைக் கொல்ல
உரிமைபெற்றிருக்கிறேன் என்று உரைநிகழ்த்த
ஒருபோதும் முடிந்ததில்லை.

உதிர்ந்துகொண்டேபோகும் தலைமயிரென்றாலும்
அது பெரும் காடு பேனுக்கு. அதன் பிறப்பிடம்; வளருமிடம்.
அங்கிருந்து அதை விரட்டவேண்டிய கட்டாயத்திற்காளாவதில்
எப்படிக் களிப்பெய்த முடியும்?

கண்காணவியலா அந்த நுண்ணுயிரின் கண்களில்
மண்டிய அச்சம் மனதில் பாரமாகுமேயல்லாமல் வீரமாகாது என்று சொன்னால்
விதவிதமான வழிகளில் விரோதியாகிவிடுவேன் - தெரியும்;

கருத்துச்சுதந்திரத்திற்கும் இங்கே வன்முறையார்ந்த
முள்வேலிகள் உண்டு;
கருத்துரிமைக் காவலர்களாகத் தம்மைத்தாம் முன்னிறுத்துவோர் கட்டியெழுப்புவது.

பேனோ மானோ மனிதனோ, சகவுயிர்களிடம் கருணை
வேண்டும் என்று சொன்னால் கவிஞர்களேனும் வழிமொழிவார்கள் என்ற நம்பிக்கை
வெறுங்கனாவாகிப் போவதில்
கலங்கும் மனம்.

நம்பிக்கை பொய்ப்பதும் பகையாவதுமேதான்
நட்பினராவதன் முழுமை போலும்.

இன்றல்ல நேற்றல்ல.... ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 இன்றல்ல நேற்றல்ல....

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
’வனஜா, கிரிஜா – வளைஞ்சா நெளிஞ்சா….”
என்று அந்தக்கால திரைப்படமொன்றில் நாயகன் வாயசைக்க
படுஜாலியாகப் பாடிய ஆண்குரல்
நட்டநடுவீதியில் அந்தப் பெயருடைய பெண்களை (மட்டுமா)
முண்டக்கட்டையாக்கப்பட்டதாய் கூனிக்குறுகவைத்தது.

”கலா கலா கலக்கலா…” என்று கேட்டுக் கேட்டு இன்னொரு குரல்
பகலில் வெளியே போகும் பெண்களையும்
இடைமறித்துக் கையைப் பிடித்து இழுத்து
Eve-torturing செய்துகொண்டேயிருந்தது பலகாலம்.

’நான் ரெடி நீங்க ரெடியா?’ என்று பெண்குரலில் பாடவைக்கப்பட்ட வரி
நடுரோடில்அழைப்புவிடுக்கப்பட்டு அவமானத்தில் பொங்கியெழுந்த பெண்களைப்
போலிகளாகப் பகடிசெய்து சிரித்தது.

‘ஓடக்கார மாரிமுத்து ஓட்டவாயன் மாரிமுத்து’ என விளித்து
ஊருக்குள்ளே வயசுப்பொண்ணுங்க சௌக்யமா
என்று விசேஷமாக விசாரித்த நாயகன்
ஹாசினிப்பெண்கள் பெருமிதப்பட்டுக்கொள்ளும் படத்தில்
தன் நண்பர்களோடு
ஊர்ப்பெண்களையெல்லாம், பிள்ளைத்தாய்ச்சிப் உட்பட,
பேர்பேராய்ப் பரிகசித்துப் பாடிய பாட்டு
பிரபலமோ பிரபலம் –இளவட்டங்களிடையே மட்டுமல்ல.

’கங்கா காவிரி ரம்பா ஊர்வசி அரசி கிளியோபாட்ரா
ஆப்பக்கடை அன்னம்மா
அத்தைமகள் ரத்தினமா, அடுத்தவீட்டு மாக்டலீனா
ரீனா மீனா தேவசேனா… காதரீனா செந்தேனா என்பேனா
ஆ… மானே மச்சகன்னித் தேனே ….. மெல்லக் கடி, பெண் பேனே....’

அட, சினிமாவில் பெண்ணென்றாலே சதைமொந்தை தானே.

பெயர்பெயராய்ச் சொல்லிச்சொல்லிப்
பெண்ணைப் பண்டமாய்த் துண்டாடிக்கொண்டாடும்
பேராண்மையாளர்களுக்கெல்லாம்
மேடைக்குத் தகுந்தபடி மாறுவாள் ஆண்டாள்
தாயாகவும் தாசியாகவும்.

தேவ' 'சேர்ப்பதால் ஆவதென்ன?

வெறும் Euphemistic terms-இல்பெறக்கிடைப்பதா மரியாதை?

உம்ராவ்ஜானின் அழகியவிழிகளில் என்றுமாய் ததும்பியிருந்த
கண்ணீர் சொல்லும் பலகதை.

இல்லை, *Pretty Woman நாயகியிடம் கேட்டால்
பளிச்சென்று சொல்வாள் பதிலை!

(*Julia Roberts நடித்த படம். தெருவில் வாடிக்கையாளர்களுக்காக வலை விரிக்கும் மலிவுப் பாலியல்தொழிலாளியாக இருப்பவள் நல்லவனான செல்வந்தன் நாயகனோடு ஒரு வாரம் இருக்க நேர்ந்ததில், அவளுக்கு சமூகத்தாரிடம் நேரும் அவமானங்கள்; பின், நிரந்தர உறவில் நம்பிக்கை யில்லாதவனான நாயகன் சகல வளங்களோடும் அவளைத் தன்னோடு இருக்கச்சொல்லி அழைக்கும்போது ஏற்க மறுத்து கௌரவமான வாழ்க்கைத்துணையாக்கிக்கொள்ள முடியுமானால் வருகிறேன் என்று சொல்லும் பெண்பாத்திரம்).

ஆளுமை - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஆளுமை

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஆம், நான் ராணிதான்.

தங்கமும் வைரமும் இழைத்த கிரீடத்தை
விட
இந்தச் சிறகுகள் செருகப்பட்ட மணிமகுடம்தான்
விலைமதிப்பற்றது எனக்கு.

நட்சத்திரங்களோடு விளையாடப்போகவேண்டும்.

ஐஸ்க்ரீமும் பொம்மைக்காரும் வாங்கிவரப்போகின்றன
சிங்கமும் புலியும்.

நடுக்கடலில் எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது திமிங்கலம்.

தின்பண்டம் ஏதாவது தரும்.

தத்துப்பித்தென்று பேசுவது குழந்தையின் இயல்பென்கிறீர்கள்;

ஆம் _

வளர்ந்தவர்களுக்கு அழகு
குத்திக்கிழிப்பது.
 reactions:

எளிய வேண்டுகோள் - 'ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 எளிய வேண்டுகோள்

'ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
என் அன்பில் உயிர்க்கும்
குட்டியானை.

நீங்கள் பழமும் தரவேண்டாம்;

பள்ளத்தில் விழச்செய்து
கால்களில் சங்கிலியும் இடவேண்டாம்.

இன்னும் அரைமணிநேரம்
எங்களை விளையாட விடுங்கள் போதும்.

பின் என் குட்டியானை மீண்டும் உங்கள்
கைப்பாவையாகிவிடும்;

நானும்.



இரண்டு மூன்று - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 இரண்டு மூன்று

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

என் தலையாய் எண்ணியிருந்தது
இன்னொரு கண்ணசைவிற்கேற்ப
முன் பின் மேல் கீழ் இட வலமாய்
அசைந்த அசைவில்
அன்று ஆட்டங்கண்டது ஆன்மாவின்
அடித்தளமென்றால்
அது அப்பட்டமான understatement…..
ஆர்வமே உருவாய் பீறிட்டெழுந்த
கேள்விகளுக்கெல்லாம்
இரவல் குரல்வழியே தரப்பட்ட பதில்கள்
முதுகைப் பிடித்துத் தள்ளி விரட்டியதில்
கதியற்று விழுந்த இடத்தின் கூர்கற்களும்
சுட்டெரிக்கும் வெயிலும்,
சாக்கடையும் சிறுநீரும் நரகலுமாய்
பதம் பார்த்தது பெருவலி.
ரணமாற்றும் மூலிகைகள் அடர்ந்த
எஞ்ஜீவ மலையிருக்கும் இதிகாசத்தை
நானேதான் எழுதிக்கொண்டாகவேண்டும்.
சிறுமையும் வெறுமையும் இருளென
மேற்கவியத்
திரும்பிவந்தேன் சவமாய்.
உவமான உவமேயங்களுக்கப்பால்
மனமுணர்ந்த அவமானத்தை
விழுங்கிப் பசியாற்றிப்
படுத்துக்கொண்டேன் பாடையில்.
பின், மெல்ல மெல்ல மீள்பிறவி.
கோடையுண்டுதான் குளிரின் பின்…..
நினைவிறுக்கத் தலைசுற்றும்போதெல்லாம்
தனக்குத்தானே நீர் பருகத் தந்து
நின்று நிதானப்படுத்திக்கொண்டு
நகர்ந்துகொண்டிருக்கிறது மனது.
மற்றுமொன்று என்றாலும் நாள் நாள்தானே….
கற்றது கையளவு.
கல்லாத கடலளவு காலத்தை கைகொண்டு அள்ள
இல்லாது போய்விடலாகாது என் வாழ்வின் மிச்ச மீதி.
திரும்பத்திரும்ப ஏன் வந்துகொண்டிருக்கிறது
தன்மானமிழக்கச் சபிக்கப்பட்ட அந்த
இரண்டு மூன்று தேதி…..