இரண்டு மூன்று
இன்னொரு கண்ணசைவிற்கேற்ப
முன் பின் மேல் கீழ் இட வலமாய்
அசைந்த அசைவில்
அன்று ஆட்டங்கண்டது ஆன்மாவின்
அடித்தளமென்றால்
அது அப்பட்டமான understatement…..
ஆர்வமே உருவாய் பீறிட்டெழுந்த
கேள்விகளுக்கெல்லாம்
இரவல் குரல்வழியே தரப்பட்ட பதில்கள்
முதுகைப் பிடித்துத் தள்ளி விரட்டியதில்
கதியற்று விழுந்த இடத்தின் கூர்கற்களும்
சுட்டெரிக்கும் வெயிலும்,
சாக்கடையும் சிறுநீரும் நரகலுமாய்
பதம் பார்த்தது பெருவலி.
ரணமாற்றும் மூலிகைகள் அடர்ந்த
எஞ்ஜீவ மலையிருக்கும் இதிகாசத்தை
நானேதான் எழுதிக்கொண்டாகவேண்டும்.
சிறுமையும் வெறுமையும் இருளென
மேற்கவியத்
திரும்பிவந்தேன் சவமாய்.
உவமான உவமேயங்களுக்கப்பால்
மனமுணர்ந்த அவமானத்தை
விழுங்கிப் பசியாற்றிப்
படுத்துக்கொண்டேன் பாடையில்.
பின், மெல்ல மெல்ல மீள்பிறவி.
கோடையுண்டுதான் குளிரின் பின்…..
நினைவிறுக்கத் தலைசுற்றும்போதெல்லாம்
தனக்குத்தானே நீர் பருகத் தந்து
நின்று நிதானப்படுத்திக்கொண்டு
நகர்ந்துகொண்டிருக்கிறது மனது.
மற்றுமொன்று என்றாலும் நாள் நாள்தானே….
கற்றது கையளவு.
கல்லாத கடலளவு காலத்தை கைகொண்டு அள்ள
இல்லாது போய்விடலாகாது என் வாழ்வின் மிச்ச மீதி.
திரும்பத்திரும்ப ஏன் வந்துகொண்டிருக்கிறது
தன்மானமிழக்கச் சபிக்கப்பட்ட அந்த
இரண்டு மூன்று தேதி…..
No comments:
Post a Comment