வலியின் கையறுநிலை
மறுகை விரலால் நெருடி வழுக்கியோடும் பேனைத் தடுத்து நிறுத்தி
மயிரிழைகளோடு சேர்த்து இழுத்து
அதைக் கைக்கட்டைவிரல் நகத்தின்மீது வைத்து
மறுகைக் கட்டைவிரல் நகத்தால் சொடுக்கும் நேரம்
அந்த இக்கிணியூண்டு உடலிலிருந்து உயிர்பிரியும் சப்தம்
துல்லியமாய்க் கேட்கும்.
ஒரு கையறு நிலையில் மனம் அதிரும்;
கடவுளுக்கு சாபமிடும்.
பேன்கள் மண்டிய தலையோடு வாழ முடிந்தால் நன்றாயிருக்குமோ என்று பேதலிக்கும்.
சொடுக்காமல் ஜன்னலுக்கு வெளியே வீசியெறியும் நேரம்
எலும்புமுறிவு ஏற்பட்டுவிடுமோ அதற்கு
என்ற கேள்வி தவறாமல் கலங்கவைக்கும்.
எல்லாநேரமும் இந்தப் பிரக்ஞை விழித்துக்கிடக்கும்
என்று சொல்லமுடியாவிட்டாலும்
‘நல்லா வேணும் பேனுக்கு’ என்று நினைக்க ஒருபோதும்முடிந்ததில்லை;
அந்த நுண்ணுயிர் என் கையால் கொலையாகவே
பிறவியெடுக்கிறது
என்று பெருமைப்பட்டுக்கொள்ள
ஒருபோதும் முடிந்ததில்லை;
அதற்கு வலியிருக்க வழியில்லை என்று
அறுதியிட்டுப் பறைசாற்ற
ஒருபோதும்முடிந்ததில்லை.
பேனைச் சொடுக்குவது எனக்குக் கைவந்த கலை
என்று பெருமைபீற்றிக்கொள்ள
ஒருபோதும் முடிந்ததில்லை.
பேனைப் பிடித்துவிடுவதில்தான்
என் ஆனமானம் அடங்கியிருக்கிறது என்று நம்ப ஒருபோதும்முடிந்ததில்லை.
நான் வளர்க்கிறேன் பேனை,
எனவே நான் அதைக் கொல்ல
உரிமைபெற்றிருக்கிறேன் என்று உரைநிகழ்த்த
ஒருபோதும் முடிந்ததில்லை.
உதிர்ந்துகொண்டேபோகும் தலைமயிரென்றாலும்
அது பெரும் காடு பேனுக்கு. அதன் பிறப்பிடம்; வளருமிடம்.
அங்கிருந்து அதை விரட்டவேண்டிய கட்டாயத்திற்காளாவதில்
எப்படிக் களிப்பெய்த முடியும்?
கண்காணவியலா அந்த நுண்ணுயிரின் கண்களில்
மண்டிய அச்சம் மனதில் பாரமாகுமேயல்லாமல் வீரமாகாது என்று சொன்னால்
விதவிதமான வழிகளில் விரோதியாகிவிடுவேன் - தெரியும்;
கருத்துச்சுதந்திரத்திற்கும் இங்கே வன்முறையார்ந்த
முள்வேலிகள் உண்டு;
கருத்துரிமைக் காவலர்களாகத் தம்மைத்தாம் முன்னிறுத்துவோர் கட்டியெழுப்புவது.
பேனோ மானோ மனிதனோ, சகவுயிர்களிடம் கருணை
வேண்டும் என்று சொன்னால் கவிஞர்களேனும் வழிமொழிவார்கள் என்ற நம்பிக்கை
வெறுங்கனாவாகிப் போவதில்
கலங்கும் மனம்.
நம்பிக்கை பொய்ப்பதும் பகையாவதுமேதான்
நட்பினராவதன் முழுமை போலும்.
No comments:
Post a Comment