LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, November 22, 2022

சொல்லடி சிவசக்தி குக்குறுங்கவிதைக்கதைகள் 21-25 ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 சொல்லடி சிவசக்தி 

குக்குறுங்கவிதைக்கதைகள் 21-25

ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

21. இங்கே – அங்கே
.................................................

"இங்கே பாருங்கள் இத்தனை குப்பை"
அங்கேயும் பாருங்களேன்
"அட, கம்முனு கெட – இங்கே பாருங்கள்
இத்தனை பெரிய தொப்பை"
அங்கேயும் பாருங்களேன்
"அட கம்முனு கெட கம்முனு கெட - இங்கே பாருங்கள்
பிணந்தின்னும் சாத்திரங்கள்"
அங்கேயும் பாருங்களேன்
அட கம்முனு கெட கம்முனு கெட கம்முனு கெட-இங்கே பாருங்கள்
பிசுக்குப்பிடித்த பாத்திரங்கள்
அங்கேயும் பாருங்களேன்
அட கம்முனு கெட கம்முனு கெட கம்முனு கெட கம்முனு கெட…..


22. மேதையும் பேதையும்
..........................................................
//INKY PINKY PONKY
FATHER HAD A DONKEY
DONKEY DIED FATHER CRIED
INKY PINKY PONKY//
”எத்தனை அனர்த்தக் கவிதை யிது
என்ன எழவோ”
இகழ்ச்சியோடு உதடுகள் சுழித்து
பழித்தார் பெருந்திறனாய்வாளர்:
அவையிலிருந்த பெரியவரொருவர்
அன்று சிறுவனாய் அரசபாவனையில் ஊர்வலம் வர
தன் முதுகில் இடம்தந்து
பின்னொருநாள் இறந்துபோன கழுதையை நினைத்துக்கொண்டார்.
கசிந்த கண்ணீரை யாருமறியாமல் துடைத்துக்கொண்டார்.
HAD HAS HAVE என்று சொல்லிப்பார்த்துக்கொண்ட சிறுவன்
அவற்றிற்கான வாக்கியங்களை அமைக்கத் தொடங்கினான்.
பின் NOT சேர்த்தும்.
ஆறடிக்குச் சற்றுக் குறைவான உயரத்திலிருந்த அப்பா
தன் நண்பன் இறந்த நாளன்று அப்படி உடைந்து அழுததை
எண்ணிப்பார்த்தாள் ஒரு சிறுமி.
INKYயும் PINKYயும் PONKYயும்
வட்டமாய் நின்று ஒவ்வொருவரையாய்ச் சுட்டிப்
பாடுவதற்கானது மட்டுமல்ல
என்று புரிவதற்குள் பாதி வாழ்க்கை போய்விடுகிறது.....
என்றாலும் தன்னை மேதையென்றே
இன்னமும் நம்பிக்கொண்டிருக்குமவர்
நிச்சயம் பேதைதானே!

23. அவர் – இவர்
.................................................

அவர் அவராகவே இருக்கலாம்
அல்லது இவராகவே இருக்கலாம்
அவராகவும் இருக்கலாம்

இவராகவும் இருக்கலாம்
அவரை நீங்கள் அவரென்றால்
இல்லை இவரெனலாம்
அவரை நீங்கள் இவரென்றால்
இல்லை அவரெனலாம்
அவர் இவரை எவரெ வராகவும்
அடையாளங்கண்டும் காட்டியும்
கடைவிரிக்க மாட்டாதவர்கள்
அரசியல் கருத்துரைக்கத் துணிந்தாலோ _
அம்போவென்று போய்விடுவார்கள்
என்கிறார் அவரெனுமிவரெனு
மவரெவரேயவர்!


24. ஒளிவட்டம்
............................................



பீடத்தின் மீதேறி நின்றவண்ணம் பிரசங்கம் செய்துமுடித்து
கையோடு கொண்டுவந்திருந்த
ஜெல் பேனாவால்
பட்டிமன்றத் தீர்ப்பளிப்பாய் முடிவொன்றைப் பறையறிவித்த பின் ”இன்னொரு நாள் நான் எதிர்பார்க்கும் பதில்களைத் தரமுடிந்த அளவில் உன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டு
உரையாட வா”, என்று
அதிகார தோரணையில் அழைப்பு விடுத்தவரிடம்
’அடடா, உன் தலைக்குப்பின்னால் சுழலவேண்டிய ஒளிவட்டத்தைக் காணவில்லையே’
என்று சொன்னவாறே
விட்டு விடுதலையாகி வெளிபரவும் களியில்
கிளம்பிச்சென்றது சிட்டுக்குருவி.
வெலவெலத்துப் போனவர் அவசர அவசரமாய்
கத்திரிக்கோலைத் தேடியவாறே
கையில் கிடைத்த அட்டைத்துண்டில்
கோணல்மாணலாய் வட்டம் வரைய ஆரம்பித்தார்.



25. சொல்லடி சிவசக்தி
......................................................
...........................................................
'பெருமானின் பாதி உடலாய்
கருவறைக்குள் உறைந்திருப்பவள்
காலைக்கடன்களைக் கழிக்க என்ன செய்வாள்
பாவம்'
என்று பரிகாசமும் பாவனைக் கரிசனமுமாய்க்
கேட்ட தர்க்கவியலாளரிடம்
புன்னகையோடு பதிலளித்தாள் பராசக்தி:
”பாதியுடலாய் இருக்கமுடிந்தவளுக்கு
மீதியையும் செய்யமுடியாதா என்ன?
உங்கள் வீதிகளெங்கும் வாகான
பொதுக்கழிப்பறையே இல்லை - அதற்கு
ஏதாவது செய்யமுடியுமா பாருங்களேன்”.

*பத்மினி கோபாலன் - ஒரு சிறு அறிமுகம்

......................................................................................................

 *பத்மினி கோபாலன் -

ஒரு சிறு அறிமுகம்




பத்மினி கோபாலன் அவர்கள் கல்விதான் ஒருவருக்கு நிலையான முன்னேற்றத்தை சாத்தியமாக்கும் என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர். 30 வருடங் களுக்கும் மேலாக அவரைத் தெரியும்.
பல வருடங்களுக்கு முன்பு அவருடைய வீட்டின் வெளி வராந்தா வில் எப்போதும் பிள்ளைகள் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப் பதைப் பார்த்திருக்கிறேன்.
அவருடைய முன்முயற்சியில் ஸ்ரீ ராம சரண் கல்வி அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டது. அதன் மூலம் அர்ப்பணிப்பு மிக்க பெண்கள் 50 பேர் போல் வாழ்வின் அடித்தட்டிலிருந்து வந்தவர்கள் அருமை யான மாண்டி சோரி அசிரியைகளாக உருவாகி கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேற்குடிப் பிள்ளைகளுக்கே மாண்டிசோரி கிடைப்பது சாத்திய மாக இருந்த நிலை மாறி இன்று சென்னை மாநகராட்சிப் பள்ளிகள் சிலவற்றில் இந்த அமைப்பின் செயல்பாடுகளுக்கு வழியமைக்கப் பட்டு அதன் மூலம் சமூகத்தின் அடித்தட்டுக் குழந்தை களுக்கு மழலையர் வகுப்புகளில் மாண்டிசோர் கல்வி முறையின் பயன் கிடைத்துவருகிறது.
குழந்தைகள் மதிக்கப்படவேண்டியவர்கள் என்ற மாண்டிசோரி அம்மையாரின் கூற்று பத்மினி கோபாலன் அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. குழந்தைகளை அடித்துத் துன்புறுத்தல், அவமதித் தல் ஆகியவை அவர்க ளுடைய ஆளுமையை வாழ்நாளுக்கும் பாதிக்கக்கூடிய விஷயங்கள் என்பது குறித்த விழிப்புணர்வு சமூகத்தில் பரவலாக்கப்படவேண்டியது மிகவும் அவசியம் என்று திரும்பத்திரும்பக் கூறுவார்.
வாக்குவங்கிகள் அல்ல என்பதால் குழந்தைகளின் ஆரம்பக் கல்வி, ஆளுமை வளர்ப்பு, வகுப்பறைச் சூழல், திறன் வளர்ப்பு, மொழிப்புலமை, போன்ற பல விஷயங் களில் போதுமான கவனம் செலுத்தப்படு வதில்லை. இந்நிலை மாறவேண்டும், எல்லா அரசியல் கட்சிகளுமே அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்குத் தரமான கல்வி யும், குழந்தைப்பிராய வாழ்க்கையும் கிடைப்பதற் காகப் பாடுபடவேண்டும் என்று ஆதங்கத்தோடு சொல்வார்.
மாண்டிசோரி ஆசிரியைகள் குறித்து அவர் தெரிவித் துள்ள சில கருத்துகள் அடுத்த பதிவில் தரப்பட்டுள்ளன.
....................................................................................................................................

// பத்மினி கோபாலன் - விளம்பரத்திலிருந்து விலகியிருக்கும் தன்னார்வல சமூகப்பணியாளர்

 // பத்மினி கோபாலன் - விளம்பரத்திலிருந்து விலகியிருக்கும் தன்னார்வல சமூகப்பணியாளர் கூறுகிறார்.//


மாண்டிசோரி கல்விமுறையில் ஆசிரியர் பயிற்சி பெறு வதற்கான சிறந்த வழி:

பல வருடங்களாக மாண்டிசோரி முறையில் கல்வி போதித்துவரும் ஓர் அறக்கட்டளையை நம்பிக்கையோடு நிறுவி, நடத்திவருபவர்கள் என்ற முறையில் நாங்கள் இந்த முறையில் குழந்தைகள் எத்தனை மனமகிழ் வோடு, அனுபவரீதியாக, வாழ்க்கையோடு தொடர்பு டைய வழிகளில் கல்வி கற்கிறார்கள் என்பதை நேரிடை யாகப் பல காலம் கவனித்துவருவதன் அடிப்படையில் சில கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகி றேன்.
மருத்துவம் போன்ற செயல்முறைக் கல்வித்திட்டங்க ளில் Theory முடித்த பின் internship கொடுக்கப்படுகிறது.

ஆனால், மாண்டிசோரி முறையில் முதலில் internship, அதன் பிறகு Theory என்று இருந்தால் கூடுதலாகப் பலனளிப்பதாய் இருக்கும் என்பதை எங்களால் கண்கூடாகக் காண முடிந்தது.
மாண்டிசோரி கல்விமுறையில் ஆசிரியருக்கும் குழந்தைக்கும் இடையேயான உறவு முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த உறவு மிகவும் மகிழ்ச்சியான தாகவும், ஆழமானதாகவும் இருக்கிறது. அதனால் குழந்தைகள் ஆசிரியர் சொல்வதைக் கேட்கிறார்கள். இத்தகைய உறவு எப்படி ஏற்படுகிறது என்பதை அனுபவத்தின் மூலம் தான் தெரிந்துகொள்ள முடியும்.
மாண்டிசோரி கல்விமுறை குழந்தைகளின் ஆளுமை வளர்ச்சியில் ஏற்படுத்தும் சீரிய தாக்கம் வாழ்நாளுக்குமானது. குழந்தைகளிடம் தன்னம்பிக் கையையும், தன்மதிப்பையும் வளர்க்கும் இந்தக் கல்வி முறையின் பயன்களை நேரிடையாகப் பார்க்கும்போது ஆசிரியர்க ளுக்கும் இந்தக் கல்விமுறையில் ஒரு நம்பிக்கை ஏற்படும். இந்தக் கல்விமுறைக்கான ஆசிரியர் பயிற்சியை விரும்பிக் கற்பார்கள்.
ஆசிரியர் தொழிலில் அதற்கான மனப்போக்குடையவர்களே ஈடுபாட்டுடன் செயலாற்ற முடியும் என்பார்கள். ஆனால் சில காலம் மாண்டிசோரி வகுப்பின் செயல்பாடு களைஅங்கேயேயிருந்து பார்த்தாலே அந்தக் கல்வி முறையின் மகத்துவமும், அதன் வழிமுறைக ளும் மனதில் வேர்பிடித்து விடும்.
நாம் செய்யும் விஷயம், ஈடுபடும் பணி முதலியவை குறித்து நமக்கு முதலில் நம்பிக்கை இருக்க வேண்டும். அப்படியிருந்தால் அந்தப் பணியில் அர்ப்பணிப்பு மன தோடு ஈடுபடும் மனப்பாங்கு நமக்கு வந்துவிடும். இதை நான் எங்கள் ஆசிரியைகளிடம் கண்கூடாகக் கண்டிருக் கிறேன்.
எனவேதான், மாண்டிசோரி கல்விமுறையில் ஆசிரியர் பயிற்சியளிக்கப்படுவோருக்கு முதலில் மாண்டிசோரி வகுப்புகளில் நேரடி அனுபவம் கிடைக்கச் செய்வது முக்கியம் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டி ருக்கிறேன்.

Tuesday, November 8, 2022

INSIGHT - A BILINGUAL BLOGSPOT FOR CONTEMPORARY TAMIL POEMS - OCT.2022


2019insight.blogspot.com

( A Bilingual Blogspot for Contemporary Tamil Poems) 

OCTOBER 2022 ISSUE OF 

 





 

புகைப்படத்தில் உருண்டுகொண்டிருக்கும் கண்ணீர்த்துளி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 புகைப்படத்தில் உருண்டுகொண்டிருக்கும் கண்ணீர்த்துளி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அந்தவொரு புகைப்படத்தில்
உருளக் காத்திருக்குமொரு கண்ணீர்த்துளி
உண்மையில் பெரிய கதறலாகாது போயிருக்கும் சாத்தியங்களே அதிகம்.
அது உண்மையான கண்ணீர்த்துளிதானா
என்பதே சந்தேகம்.....
இரண்டாந்தோலாகிவிட்ட பாவனைகளில்
இதுவும் ஒன்றாயிருக்கலாம்;
அல்லது
இருமியபோது கண்ணில் துளிர்த்திருக்கலாம்;
அல்லது
கவனமாய் முன்கூட்டியே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சாலையோர கொத்துபராத்தாக் கடையில்
காமராக்கள் காணத் தோதாய் நின்றவண்ணம்
சற்றுமுன் சாப்பிட்ட கொத்துபராத்தாவின் காரம் காரணமாயிருக்கலாம்;
அல்லது நடக்கையில் ஏற்பட்ட சன்ன தூசிப்படலத்தின் ஓர் அணுத்துகள் பறந்துவந்து நாசித்துவாரத்தில் புகுந்து கிச்சுகிச்சு மூட்டியிருக்கலாம்;
அல்லது
அவசர அவசரமாய்க் குடித்த தண்ணீரின் ஒரு துளி வாய்க்குள் புகத் தவறியிருக்கலாம்;
அல்லது
சிறிதாய்த் திரளச்செய்து உருளும்போது அதைப் படம் பிடித்துப் பல கால விம்மலாக்கத்
தம்மாலான தொழில் நுட்ப நுணுக்கங்கள் கையாளப்பட்டிருக்கலாம்;
அல்லது
குடிநீர்க்கோப்பையிலிருந்து ஒரு துளியைக்
கன்னத்தில் வாகாய் ஒட்டவைத்துப் படம்பிடித்திருக்கலாம்.
அல்லது….. அல்லது…… அல்லது…… அல்லது……
நல்லது _
உள்ளது உள்ளபடி யெனில்
இருட்டறைகளில் பெருகும் கண்ணீர் புகைப்படத்தில் தெரிவதில்லை.
கருணையின் செயல்வடிவம் பெறாக் கண்ணீர் விரயமாகும் நீர்த்துளிகளன்றி வேறில்லை.
திரும்பிப்பார்க்கும்போது அவருக்கே கூடத் தெரியக்கூடும்
அவருடைய புகைப்படத்தில் அவருடைய கண்களிலிருந்து உருளும் நீர்த்துளி எத்தனை கலப்படமானது என்று;
அன்றாடம் பார்த்துப்பார்த்து அரற்றியழும்
அந்தக் கண்ணீர்த்துளி யுருள்
கன்னத்துக்குரியவர்
‘என்னமாய் நடித்தேன் என்று புன்முறுவலித்திருக்கக்கூடும்….
உதட்டளவாகுமாம் சிலர் சொற்கள்
ஊறுங் கண்ணீரும் அம்மட்டே
சிலரிடத்து....
சின்னத்திரை வெள்ளித்திரையோடு
முடிந்துபோய்விடுவதில்லை
மெகா சீரியல்கள்
என்றுணர்தலே ஏற்புடைத்து.

டாக்டர். கே.எஸ்.சுப்பிரமணியனை நினைவுகூர்வோம்! - நான் கே.எஸ். பேசறேன்.... நூல் இப்போது மின் - நூலாக

டாக்டர். கே.எஸ்.சுப்பிரமணியனை நினைவுகூர்வோம்!

நான் கே.எஸ். பேசறேன்.... நூல் 

இப்போது மின் - நூலாக


 இரண்டு வருடங்களுக்கு முன்பு 24 அக்டோபர் 2020இல் டாக்டட் கே.எஸ்.சுப்பிரமணியன் அமரரானார்.

 தமிழின் குறிப்பிடத்தக்க அ-புனைவு எழுத்தாள ரும் தமிழிலிருந்து ஆங்கிலத்தில் எழுத்தாளர் ஜெயகாந்தனின் எழுத்தாக்கங்கள், சமகால தமிழ்க்கவிதைகள், பாரதியார் கவிதைகளில் பல என நிறைய மொழிபெயர்த்திருக்கிறார்.

 ஆங்கிலத்திலிருந்து தமிழில் டாக்டர் மணி பௌமிக் எழுதிய உலகப்புகழ் பெற்ற படைப்பு CODE NAME GODஐ தமிழில் மொழிபெயர்த்திருக் கிறார்(கவிதா பதிப்பக வெளியீடு)

ஆங்கிலத்தில் கட்டுரைகள் நிறைய எழுதியிருக் கிறார்.

சிறந்த மனிதநேயவாதி. மூன்றாமவர் அறியா மல் அவர் செய்த உதவிகள் நிறைய நிறைய.

 அவருடைய நினைவைப் போற்றும் வகையில் கடந்த வருடம் புதுப்புனல் சார்பில் ‘நான் கே.எஸ்.பேசறேன்’ என்ற தலைப்பிலான நூல் வெளியிடப்பட்டது. டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணி யனின் மொழிபெயர்ப்புகள் சில, தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் எழுதிய கட்டுரைகள் சில, அவரை நினைவுகூர்ந்து அவருடைய மகன், மகள், நண்பர்கள், எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகள் சில இந்த நூலில் இடம்பெற்றுள் ளன.

 ’நான் கே.எஸ். பேசறேன் என்ற இந்த நூல் இப்போது அமேஸான் – கிண்டில் மின் – நூலாக  - தமிழ்க்கட்டுரைகள் தனியாகவும், ஆங்கில எழுத்தாக்கங்கள் தனியாகவும் என இரண்டு தொகுப்புகளாக வெளியாகியுள்ளது.

ஆங்கிலம்தமிழ் இருமொழியிலுமான நூல் என்பதால் தமிழ் அச்சுருக்கள் சரியாகப் பதியவில்லை.

 புதுப்புனல் பதிப்பக நண்பர்கள் அனுமதிப்பார்கள் என்ற நம்பிக்கையோடுஎனக்குத் தெரிந்த அளவில் மின் -நூல்களைச் செய்திருக்கிறேன்.

 Amazon.in இல் Dr.K.S.Subramanian என்று தேடினால் 

கிடைக்கும்.

 





//நான் கே.எஸ்.பேசறேன் என்ற தலைப்பிட்ட நூலில் இடம்பெற்றுள்ள டாக்டர் கே.எஸ்.சுப்பிர மணியனின் கவித்துவ வரிகள் - Poetic lines penned by Dr.K.S.Subramanian// கீழே தரப்பட்டுள்ளன.

 என்னுடைய எளிய தமிழாக்கமும் தரப்பட்டுள் ளது

 

LET'S LIVE THE MOMENT

 Dr.K.S.Subramanian

 “One crowded hour of glorious life is worth an Age without a name.

” Why keep living for eternity?

Why miss the loving lilies for the distant stars?

Hungering for eternity can reduce life to an arid waste.

It can rob the moment of its meaning.

Let’s live the moment,

let eternity take care of itself.

Don’t waste away, analyzing life and its meaning all the time.

Life is far too precious for that.

Damn it, let us Live It.

Let’s lend value to the moment in our grasp.

Tomorrow is far away.

The past is dead.

Even the present is fleeting.

This moment is what we have

and

Let’s Live It!


இது என் தமிழாக்கம்

இந்த நொடியை வாழ்ந்துவிடலாம் வாருங்கள்!

அடர்செறிவான ஒரு மணி நேர வாழ்வு பெயரற்றதொரு யுகத்திற்கு ஈடானது

எதற்காக அழிவற்ற வாழ்வு வாழ்ந்துகொண்டிருக்கவேண்டும்?

தொலைதூர நட்சத்திரங்களுக்காக அன்புடை அல்லிமலர்களை இழக்கவேண்டும்?

அமரத்துவத்திற்காகப் பசியோடலைதல் வாழ்வை அதிவறண்டதாக வீணடித்துவிடும்

அதனால் ஒரு நொடியின் அர்த்தத்தை களவாடிவிட முடியும்

நொடியில் நீடுவாழ்வோம்

நிரந்தரம் தன்னைத்தான் கவனித்துக்கொள்ளட்டும்.

வாழ்வையும் அதன் பொருளையும்

எல்லா நேரமும் அலசிக்கொண்டேயிருப்பதில்

வீணாகிவிடவேண்டாம்.

வாழ்க்கை அற்புதமானது; விரயம்செய்வதற்கானதல்ல

அட, வாழ்ந்துவிடலாம் வாருங்கள்

நம் கைவசமுள்ள நொடியை மதிப்பார்ந்ததாக்குவோம்

நாளை வெகுதொலைவிலிருக்கிறது

கடந்தகாலம் இறந்துவிட்டது.

நிகழ்காலமும்கூட

நில்லாதோடிக்கொண்டேயிருக்கிறது.

நமக்கிருப்பது இந்தவொரு நொடி மட்டுமே

அதை

வாழ்ந்துவிடலாம் வாருங்கள்!