LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, May 2, 2022

சித் ஸ்ரீராமின் குரல் - தொடுவானை எட்டித்தொட்டு மாயாஜாலம் நிகழ்த்துவது!

 சித் ஸ்ரீராமின் குரல் - 

தொடுவானை எட்டித்தொட்டு 

மாயாஜாலம் நிகழ்த்துவது!

லதா ராமகிருஷ்ணன்

எனக்கு கர்நாடக சங்கீதம் தெரியாது. நல்ல பாடல்களை, ராகங்க ளைக் கேட்டால் ரசிக்க முடியும். எனக்குத் தெரிந்ததெல்லாம் நல்ல சினிமாப் பாடல்கள். எம்.ஜி.ஆ ரின் பாசம் படப் பாடல் ‘உலகம் பிறந்தது எனக்காக, ஓடும் நதிகளும் எனக்காக, சுமைதாங்கி பாடல் - மனிதன் என்பவன் தெய்வமாகலாம், வாரி வாரி வழங்கும்போது வள்ளலாகலாம், கங்கைக் கரைத் தோட்டம், கன்னிப்பெண்கள் கூட்டம், பிதாமகனின் இளங்காற்று வீசுதே, முதல் மரியாதை ராசாவே உன்ன நம்பி, சமீபத்திய நெற்றிக்கண் பாடல் இதுவும் கடந்து போகும்..... இப்படி பல. இவற்றில் சித் ஸ்ரீராமின் சினிமாப் பாடல்களும் அடக்கம்.
சித் ஸ்ரீராம் கர்ணன் படப்பாடலைப்பாடியதற்கு ஃபேஸ்புக் முழுக்க அவரைத் திட்டித்தீர்த்தார்கள். படிக்கக் கஷ்ட மாக இருந்தது. ஏற்கெனவே கர்நாடக இசையின் அடிப்படையில் அமைந்திருந்த அந்தப் பாடலை அவர் ஆலாபனை முதலியவற்றோடு பாடிப் பார்த்திருந்தார். அது ஒரு முயற்சி. மூல பாடகரை, பாடலை மதிப்பழிக்கும் நோக்கம் அவருடைய முயற்சியில் இல்லை என்பதை அவர் அனுபவித்துப் பாடியிருந்ததைப் பார்க்கும்போதும், கேட்கும்போதும் உணர முடிந்தது. அவரைப் பற்றி ஒரு கவிதை எழுதி பதிவேற்றியிருந் தேன்.
பொதுவாக என் கவிதைகளை நான் மொழிபெயர்ப்ப தில்லை. இன்னொரு முறை மூல கவிதையை எழுதுவதுபோல், வலிகூடிய, பரவசமான நினைவின் பின்னணியில் எழுதப்பட்டதெனில் அதை எழுதிய நினைவுகளுக்குள் மீண்டும் காலத்தால் அந்நியமாக்கப் பட்ட நிலையில் , நிராதரவாய் நுழைவதைப்போல், அல்லது அந்நியனாய் நுழைவதுபோல்.... எதன் காரண மாய் எழுதினோம் என்பது மறந்துபோய்விட்டால் அதுவும் ஒருவித வலி தரும். எதற்கு வம்பு?
இன்று மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் சித் ஸ்ரீராமின் கச்சேரி. என் கவிதையை அவருடைய இசைஞானத்திற் குச் செய்யும் எளிய மரியாதையாக அவரிடம் தரவேண்டும் என்று விரும்பினேன். சித் ஸ்ரீராமுக்கு தமிழ் படிக்கத் தெரியுமோ என்ற கேள்வியெழ என் கவிதையை ஆங்கி லத்தில் மொழி பெயர்த்து தமிழ் -ஆங்கிலம் இரண்டை யும் நாணயத்தின் இரண்டு பக்கங்களாய் இருபுறமும் ஏ4 பக்கத்தில் லேமினேட் செய்து என்னோடு எடுத்துக்கொண்டு போனேன்.
அம்மாவும் நானும் போயிருந்தோம். அம்மா - 80+ நான் 60 + வயது. 60+ வயதாகிவிட்டால் மனதிலுள்ள ரசிகை முடங்கிவிட வேண்டுமா என்ன? உடலின் வயதும் மனதின் வயதும் வேறுவேறு தானே!
முழுக்க முழுக்க பக்திப்பாடல்கள்தான் பாடினார். சந்நதம் வந்தது போல் பாடுகிறார். பாட்டினுள் முழுவதுமாக அடைக்கலமாகி விடும் நிலை; சரணாகதி நிலை. அதே சமயம் அடுத்த பாட்டு குறித்த விழிப்போடு இருக்கவேண்டும். சந்நத நிலையும், முழு விழிப்பு நிலையும் இரண்டறக்கலந்த நிலை ஒருவித உச்சமனநிலையென்றே சொல்லலாம். வாத்தியக்காரர்களுக்கு நிறைய நேரம் ஒதுக்கி வாய்ப்பளித்தார். அவர்களை முதல் ரசிக ராகப் பாராட்டினார்.
சினிமாப்பாடலெதுவும் பாடவில்லை. நிறைய இளைய தலை முறையினர் வந்திருந்தார்கள். ஆனால், கூச்சல் கும்மாளம் போடாமல் சித் ஸ்ரீராமின் ஆலாபனை, உச்சஸ்தாயி, இரண்டு மணி நேரம் தளராத பாட்டுத்திற மையை பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். உண்மையில் அத்தனை முனைப்பான பயிற்சியில்லாமல், அதற்கான நேரத்தையும், மனதையும் ஒதுக் காமல் இப்படியெல்லாம் பாட முடியாது.
என் கவிதை அவருடைய சினிமாப்பாடல் இசைநிகழ்ச் சியை யூட்யூபில் பார்த்த அனுபவத்தைப் பேசுகிறது. அதில் மேடை யெங்கும் தாவிக்கொண்டிருந்தார்! இங்கே இடத்தை விட்டு நகர வில்லை. குரல்மட்டும் தொடுவானை எட்டித்தொட்டு எட்டித் தொட்டு மாயா ஜாலம் நிகழ்த்திக்கொண்டிருந்தது!

நிகழ்ச்சி முடிந்தது. சில இளைஞர்கள் அவர் பின்னால் ஓடினார் கள். எனக்குள் இருக்கும் யுவதி ஓடச்சொன்னாலும் பேசாமல் என் கவிதையோடு வீடு திரும்பிவிட்டேன்!

அந்தக் கவிதைகளை இங்கே தந்துள்ளேன்.



மொழிபெயர்ப்பாளரின் முதுகெலும்பு ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 மொழிபெயர்ப்பாளரின் முதுகெலும்பு

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

மொழிபெயர்ப்பாளர்களுக்கான சுயம்வரம்
நடக்கப் போவதாய்
முரசறைந்து அறிவிக்கப்பட்டிருந்தது.
வில்-அம்புப் பயிற்சியில் வித்தகர்களே போல்
சொல்லம்புப் பயிற்சியில் தேர்வு நடத்தப்படு மாயிருக்கலாம்
அரசபரம்பரையினரை மணமுடிப்பதென்றால்
சும்மாவா?
அதுவும் மொழிபெயர்ப்பாளர் சாமான்யரல்லவா!
இருமடங்காக முதுகுவளையப் பழகாத
மொழிபெயர்ப்பாளர்கள்
மொழியெனும் இன்காற்றுக்குத்தான்
மண்டியிடுவேனென்று
மறுத்துரைக்கக்கூடும் _
கழுவேற்றத்தோடு அவர்களை
வழியனுப்பிவைப்பதற்காய்
வெட்டப்படும் குழிகள்.

பெண்நிலைவாத சிறுகதைத்தொகுப்புகள் இரண்டு

 பெண்நிலைவாத சிறுகதைத்தொகுப்புகள் 

இரண்டு




 இரண்டுமிகையுணர்ச்சிப் பிரகடனங்களோ பிலாக்கணங்களோ இல்லாத பெண்நிலைவாத சிறுகதைத்தொகுப்புகள் இரண்டு சமீபத்தில் படிக்கக் கிடைத்தது நிறைவான வாசிப்பனுபவம்.

ஒன்று அமரந்த்தாவுடையது. அவர் அதிகம் மொழி பெயர்ப்பாளராக அறியப்பட்டாலும் ஆழமான சிறுகதை கள், குறுநாவல்களும் எழுதியுள்ளார். அவருடைய சிறுகதைத் தொகுப்பு ‘வலி’. சந்தியா பதிப்பக வெளியீடு,
இன்னொன்று எழுத்தாளர் -சமூக ஆர்வலர் கே.பாரதியின் சொந்தச் சகோதரிகள். இவர் எழுத்தாளர் சூடாமணி குறித்த நூல் எழுதி அது சாகித்ய அகாதெமி மூலம் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் படிக்கக் கிடைத்த இவருடைய ‘ரங்கநாயகி’ என்ற புதினமும் குறிப்பிடத் தக்கது.கவிதா பதிப்பக வெளியீடு. இவருடைய இந்த சிறுகதைத் தொகுப்பு கவிதா பதிப்பக வெளியீடு.

கவித்துவம் ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கவித்துவம்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)






குருவியின் மூக்கும்
புறாவின் கண்ணும் பச்சைக்கிளியின் நிறமும்
மயிலின் தோகை மினியேச்சர் அளவிலும்
கழுகின் கால்வளைநகங்களும்
நாரையின் நீளக்கால்களும்
பொருத்தப்பட்டு
வானவில்லின் வர்ணங்களை
எழுநூறாகப் பெருக்கிக்காட்டும்
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில்
அண்டார்ட்டிக்காவில் உருவாக்கிய
பின்னணியிசையோடு
நின்றுகொண்டிருந்த பறவையின் விஸ்வரூபம் கண்டு
வியந்து பிரமித்து வீதிநிறைத்துப்
பெருகி வந்திறங்கியவர்கள்
தனித்தனியாய் நின்று அந்தப் பறவையோடு
புகைப்படமெடுத்துக்கொண்டார்கள்
செல்ஃபியிலும் அ-செல்ஃபியிலுமாக.
கா-கா-காவிலுள்ள மெய்யுயிர் மனதிற்குப் பிடிபட
அந்தச் சிறுவன் மட்டும் எப்போதும்போல்
அதன்பாட்டுக்கு மரத்தில் உட்கார்ந்து
கரைந்துகொண்டிருந்த காகத்தையே
ஆசையாசையாகப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

AMAZON - KINDLE DIRECT PUBLISHING இல் என் சமீபத்திய நான்கு கவிதைத்தொகுப்புகளை ( கிண்டில் மின் நூல் வடிவில்)

. AMAZON - KINDLE DIRECT PUBLISHING இல் என் சமீபத்திய நான்கு கவிதைத்தொகுப்புகளை

( கிண்டில் மின் நூல் வடிவில்)

1. உள்வெளி

2. எதிர்வினை


3. வரியிடைவரிகள்

4. குறுக்குவழிகளற்ற நெடுந்தொலைவு

ஒரு நடிகையின் விடுதலை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஒரு நடிகையின் விடுதலை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அம்மா அணிந்துகொள்ளச் சொன்ன
குட்டைப்பாவாடை
அறவே பிடிக்கவில்லை அந்தச் சிறுமிக்கு
அடிக்கடி கீழ்ப்பகுதியை
இழுத்துவிட்டுக்கொண்டாள்
அப்படிச் செய்யாதே என்று அம்மா
அடிக்காத குறையாய் கண்களால்
உருட்டி மிரட்டினாள்.
அந்தப் பிரமுகர் சிறுமியை இழுத்து
மடியில் அமர்த்திக்கொண்டு
மார்போடணைத்தது
சிறுமிக்கு அறவே பிடிக்கவில்லை
அழுகையழுகையாய் வந்தது.
அவளுக்குக் கூச்ச சுபாவம் என்று
மகளின் அழுகையை மிகப்பிழையாய்
தெரிந்தே பொருள்பெயர்த்தாள் அம்மா.
அத்தனையோரமாய் மாராப்பை ஒதுக்கிக்
கொள்ளச் சொன்னது
ஆறா அவமானமாய் மனதை அழுத்தியது
அந்த வளரிளம்பெண்ணுக்கு.
அந்த நடிகையைப் பார் என்றார் அம்மா
அவளும்தானே பாவம் என்றாள் மகள்.
”அந்த ஊரில் நடந்ததைக் கேள்விப்பட்டாயல்லவா
அம்மணமாய்க் கிடந்தாள் அந்தப் பெண்”
”அய்யோ எத்தனை அவமானப்பட்டிருப்பாள் அவள்
அய்யோ.... அய்யய்யோ...”
_ ஆற்றமாட்டாமல் அழத்தொடங்கினாள் மகள்.
அவசர அவசரமாய் அந்தக் கேவலைப்
படம்பிடித்துக்கொள்ளும்படி இயக்குனரிடம்
பணிவாய் வாய்மேல் கையைக் குவித்தபடி
ஆலோசனை வழங்கிய அம்மா
பின்னாளில் க்ளைமாக்ஸ்’ காட்சிக்கு உதவும்
என்றதை
அங்கிருந்த அனைவருமே சிலாகித்தார்கள்.
சாராயமல்லவா மனிதர்களை சீர்கெடுக்கிறது
என்று சுட்டிக்காட்டிய அம்மாவிடம்
சீமைச்சரக்குகளை விட்டுவிட்டாயே அம்மா
என்று மகள் வேடிக்கையாகவா சொன்னாள்?
'அத்தனை நெருக்கமாக நடிக்கமாட்டேன்' என்று
அடம்பிடித்த மகளிடம்
'படுக்கையறைக் காட்சியல்லவா, புரிந்துகொள்'
என்றாள் அம்மா.
பழகிய அழுகிய வாடை மனதில் குமட்ட,
ஒரு நாள் உண்மையான காதல் கிட்டும்போது
உடல்நெருக்கம் மரத்துப்போயிருக்குமோ என்ற
வருத்தம் முட்டியது மகள் மனதில்.
மறுபடியும் ஒரு படத்தில் நடிக்கச்சொல்லி
’ஆடைத்தேர்வு பெண்ணின் சுதந்திரம்’ என்ற
வழக்கமான சொற்களோடு அம்மா
ஆரம்பித்தபோது
சும்மாயிருக்கச் சொல்லி சைகை காண்பித்தவள்
“அம்மா, என் ஆடைத்தேர்வு என் சுதந்திரம்
எனப் புரிந்துகொள்ளுமளவு
வளர்ந்துவிட்டேன் நான்’ என்றாள்.
அம்மா வாயடைத்துநின்றாள்.

INSIGHT - DEC 2021 & JAN 2022 - TWO BILINGUAL VOLUMES OF CONTEMPORARY TAMILPOETRY

 INSIGHT - TWO BILINGUAL VOLUMES OF CONTEMPORARY TAMIL POETRY


SALE AT PUDHUPUNAL PUBLICATIONS 



நூலகம் உண்டு; ஆனால் நூல்களைப் படிக்க முடியாது!

லதா ராமகிருஷ்ணன்

/
/ஆரம்பப் பள்ளிகளில் குழந்தைகளுக்கான நூலகம் என்று பெயருக்கு இருந்தாலும் குழந்தைகள் கிழித்துவிடுவார் கள் என்று பீரோவுக்குள்ளேயே பூட்டிவைத்து விடுவது தான்
பெரும்பாலான பள்ளிகளில் நடக்கிறது.//

மொழியாற்றல், ஒரு மொழியை சரிவர எழுதவும் படிக்கவும் தெரியவேண்டியது அவசியமே. இதற்கு மாற்றுக்கருத்தில்லை.
அதே சமயம் மொழி என்பது காலந்தோறும் பல வகையான மாற்றங்களை ஏற்றுவருவது.
ஊடகவியலாளர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும் இந்த விழிப்புணர்வோடு, புரிதலோடு மொழியைக் கையாளவேண் டிய தேவையிருக்கிறது.
பழந்தமிழ்க் கவிதைகளின் மொழிவழக்கிலிருந்து சம காலக் கவிதையின் மொழிவழக்கு பெருமளவு மாறுபட் டிருக்கிறது.
வட்டார வழக்குகளையும் படைப்பாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இலக்கு வாசகர்கள் யார் என்பதும் ஒரு மொழியைக் கையாள்வதில் முக்கிய கவனம் பெறும், பெறவேண்டிய ஒன்று.
சில வருடங்களுக்கு முன்பு AID INDIA, PRATHAM ஆகிய சில தன்னார்வல அமைப்புகள் சேர்ந்து நாடு முழுக்க நடத்திய சுற்றாய்வொன்று நான்காம் வகுப்புக் குழந்தைகளுக்கு இரண்டாம் வகுப்பு தாய்மொழிப் பாடப் புத்தகங்களையே படிக்கத் தெரியாத நிலையை எடுத்துக்காட்டி யது.
ஆரம்பப் பள்ளிகளில் குழந்தைகளுக்கான நூலகம் என்று பெயருக்கு இருந்தாலும் குழந்தைகள் கிழித்துவிடுவார்கள் என்று அலமாரிக்குள்ளேயே பூட்டிவைத்து விடுவது தான் பெரும்பாலான பள்ளிகளில் நடக்கிறது.
தனியார் பள்ளி மாணவர்களின் மொழித்திறனும் இப்படியே.
சிறு பருவத்திலேயே மொழிமீது ஆர்வமும் மொழியாற்றலைப் பெற வழிவகைகளையும் உருவாக்கித் தரவேண் டியது இன்றிய மையாதது.