LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Wednesday, October 6, 2021

மழையின் திருக்கரமும் காளியின் தூளியும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 மழையின் திருக்கரமும்

காளியின் தூளியும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
மழையின் சிறகுகளை அறுத்தெறியப் பார்ப்பவனின்
அறியாமையை நினைந்து
மந்தகாசப் புன்னகையொன்றைத் தருமதன்
ஆயிரம் தலைகளில்
ஆறேழைக்கூட கொய்தெறிய முடியாமல்
கொந்தளிக்கின்றவனின் சிரசையும் அதேயளவு
இதமாய் வருடியபடி
நிதம் நிதம் ஆயிரமாயிரங்கால்கள் மிதித்தேகும்
நீதிமன்றப் படிக்கட்டுகளை
அழுக்குபோகக் கழுவிவிட்டபடி
வழுக்கிக்கொண்டுருண்டோடிப் படியிறங்கும் மழை
நுழைந்துகொள்ளும் அந்தப் பெண் மனதில்
அதற்கென்று ஒரு வழுவழு நூல்புடவையாலான
தூளியும்
அதைத் தன் திருக்கரத்தாலாட்டிவிடவொரு
கோபதாபக்காளியும்
ஆயத்தநிலையி லென்றும்.
காயங்களுக்குக் கவிதையால் மருந்துதடவி முடித்து
மழையோடு மழையாகிவிடவும்.
(லீனா மணிமேகலைக்கு)

அழகு _ ‘ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 அழகு

‘ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

சுடர்விடும் கண்களில்லை;
அடர்கூந்தல் அலைபாயவில்லை;
கன்னம் குழியவில்லை;
குரலில் தேன் வழியவில்லை;
குலுங்கிச் சிரிக்கும் அரிய பொழுதுகளில்
சதைப்பிடிப்பற்ற அந்த தேகத்தில் ஆங்காங்கே
எலும்புகள் புடைத்து சுருக்கங்கள் வெளிப்பட்டன.
குறுக்குமறுக்கான வினோத வரிசையிலிருந்த பற்கள்
COLGATE, SENSODYNE DABUR RED பற்பசை விளம்பரங் களுக்கான வெண்மையில்
மின்னவில்லை.
என்ன யிருந்தாலும் அதிபலவீன தருணமொன்றில்
கதிகலங்கிநின்றவனை
கைப்பிடித்தழைத்துச்சென்றொரு ஆலமர நிழலில்
அமரச்செய்தவளின் கனிவு
அழகோ அழகு!
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி
என்றவனின் கண்ணம்மா
என்னமாயிருந்தாளோ – யார் கண்டது?

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்...

 எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்...

 லதா ராமகிருஷ்ணன்

 


//எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும்

அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. //

 

பத்து வார்த்தைகளுக்குள் எத்தனை பெரிய வாழ்வுப் பாடத்தைச் சொல்லி விட்டார் வள்ளுவர்!

 

ஆனால் அவர் குறட்பாக்கள் எழுதியதைத் தன்னுடையசாதனையாக எண்ணியிருந்திருக்க மாட்டார்; பிரகடனம் செய்திருக்க மாட்டார்; அப்படி மற்றவர்கள் செய்வதை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றே தோன்றுகிறது.

 

சாதனை என்ற வார்த்தையைசெய்ய முடியாததைச் செய்தல்என்று பொருள் கொள்ளலாமா?

 

லிப்கோ தமிழ்-தமிழ்-ஆங்கில அகராதியில் காரியம் முடித்தல்accomplishment of a work, இடைவிடாத பயிற்சிsteady practice , என்ற அர்த்தங்களோடு பொய் - Falsehood என்ற அர்த்தமும் தரப்பட்டிருக்கிறது.

 

Winslow தமிழ் _ ஆங்கில அகராதியில் சாதனை என்ற வார்த்தைக்கு கீழ்க்காணும் அர்த்தங்கள் தரப்பட்டுள்ளன. *சாதனை , s. W. p. 916. SA'DHANA. Steady and persevering practice, unwearied application, steady zeal, constancy, persistence in an opinion; steadfast maintenance of doctrines, &c., விடாதமுயற்சி. 2. Perfect imitation of life, appearance of reality–as in dramatic actions, நடித்துக் காட்டுகை. 3. Retaining malice, சலஞ்சாதிக்கை. 4. Dissimulation, misrepresentation, falsehood...

 

ஆக, சாதனை என்ற சொல்லுக்கு காரியம் முடித்தல் என்ற அர்த்தமும் இருக்கிறதுதான். ஆனால், அவ்வப் போது படிக்கக்கிடைக்கும் சில சாதனகளைகின்னஸ் சாதனை உட்படபடித்தால் சாதனை என்ற வார்த்தைக் கான பொருள் குறித்து நிறைய கேள்விகள் மனதில் எழுகின்றன.

 

எடுத்துக்காட்டாக, ஒருவர் இருபதே நிமிடங்களில் இருநூறு முட்டைகளை விழுங்கினால் அது சாதனை எனப்படுகிறது. இது எவ்வளவு தூரம் சரி?

 

ஒரு தனிமனிதனின் அளப்பரிய ஆற்றலை இத்தகைய செயல்கள் அடிக் கோடிட்டுக் காட்டுவதாக சொல்லப்படு வதில் கண்டிப்பாக உண்மையிருக் கிறது. ஆனாலும், அந்த அளப்பரிய ஆற்றல் வெளிப்பட்டதன் விளைவாக என்ன நடக்கிறது? ஏதாவது பயன் விளைந்திருக்கிறதா என்பது தெளிவாக வில்லை.

 

உதவும் கரங்கள் சேவை அமைப்புக்குச் சென்றால் இரண்டு கைகளையும் இழந்த குழந்தைகள் காலால் எழுதுவதும் படம் வரைவதும் வெகு இயல்பாக நடந்து கொண்டிருக்கும்!

 

இத்தகைய மனித முயற்சிகள் மற்றவர்களுக்கு உத்வேக மளிப்பதாய் அமையும். அதே சமயம், எல்லோருக்கும் ஒரேயளவாய் திறனாற்றல்கள் வாய்ப்பதில்லை, அதில் குறைகாண வேண்டியதில்லை என்பது புரியாமல் இத்தகைய சாதனைகளைச் செய்யும் குழந்தைகளையே முன்னுதாரணங்களாகக் காட்டிக்காட்டி மற்றவர்களை மட்டந்தட்டுவதும் நடக்க வழியுண்டு.

 

ஒரு விஷயத்தைச் செய்வதால் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது என்றால் சரி. ஆனால், அதை சாதனை என்று சொல்லலாமா?

 

முன்பு BIG BOSS நிகழ்ச்சியை பயனற்றது, சமூகத்திற்கு எந்த நன்மையும் செய்யாதது என்றெல்லாம் தொடர்ச்சி யாகப் பலர் விமர்சனம் செய்தபோது நிகழ்ச்சியில் இடம் பெறும் நடிகர் கமலஹாஸன் கிரிக்கெட்டால் கிடைக்கும் சமூக நன்மை என்ன என்று எதிர்க்கேள்வி கேட்க எதிர்ப் புக் குரல்கள் சற்றே அடங்கின.

 

கிரிக்கெட்டினால் விளையும் சமூகப்பயன்(?) குறித்தும் சிலர் எழுதினார்கள்.

ஆனால், பிக் பாஸ் பொழுதுபோக்கு நிகழ்ச்சியை யாரும் சாதனை என்று குறிப்பிடுவதில்லை,

 

முன்பெல்லாம் ஒரு திரைப்படம் 100 நாட்கள் ஓடினால் மகத்தான சாதனை என்று சொல்வதும் வழக்கமாயிருந்தது.

 

ஆனால், எத்தனையோடப்பா’, திராபைபடங்கள் 100 நாட்கள் ஓடியதெல் லாம் நமக்குத் தெரியும்.

 

நீங்களெல்லாம் கவிதை எழுதி என்ன சாதித்துக் கிழித் தீர்கள்?’ என்று கேட்பவர்களும் உண்டு.

 

பெரும்பாலும் கவிகள் கவிதை எழுதி எதுவும் சாதனை புரிந்த தாகப் பறையறிவித்துக்கொள்வதில்லை. (ஓரிருவர் அப்படி சிலுப்பிக்கொள்வது உண்டு தான் -  ஆனால், அவர்களை வேறு யாரும் பொருட்படுத்துவதில்லை!).

 

ஆனால், ஒரு நல்ல கவிதையில் ஒரேயொரு நல்ல வரி அல்லது சில வரிகள் அல்லது பல வரிகள் அல்லது கவி தையின் அத்தனை வரிகளுமே சாதனை என்று சொல்லத்தக்க அளவில் பரிபூரண மாக அமைந்துவிடுவதுண்டு.

 

Tuesday, September 14, 2021

அவரவர் அடர்வனம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அவரவர் அடர்வனம்

‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)

FORWARD செய்யப்பட்ட மின்னஞ்சலொன்றின் வரவில்

அனுப்பியவரின் நலம் அறிந்து

நிம்மதி யுறும்

மனம்

தனக்கெனப் பிரத்யேகமாயொரு வரியுமற்ற

அதன் வெறுமையில்

வெந்து தணிந்தவாறிருக்கும்

தினம்...

 

  ***

 

 

Sunday, September 12, 2021

பாரபட்சங்கள் படைப்பாளுமைகள் பரிந்துரைகள் பேரிலக்கியங்கள்...... ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பாரபட்சங்கள் படைப்பாளுமைகள் பரிந்துரைகள் பேரிலக்கியங்கள்......

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

*12 செப்டம்பர் தேதியிட்ட பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளது

குழந்தைக் கிறுக்கல்கள்
தந்தைக்குக் காவியமாக_
ஞானத் தந்தைக்கு
ஆழமற்ற கிணற்றுக்குள்ளிருந்து
உபதேசிக்கக் கிடைத்த
அரிய வாய்ப்பாக _
காயத்ரியின் மழலைப்பேச்சு
மந்திரமாக உச்சரிக்கப்பட்டு
உருவேற்றப்பட்டுக்கொண்டிருக்கும்
சூழல்….
பழகப் பழகப் பழகிவிடக்கூடும்
இதுவே பேரிலக்கியம் என்ற
.புரிதலும்…..
இருந்தாலும்
மழலை மாறும் விழிகளில்
விரியும் வானம்
ஒரு நாள் தெளிவாக்கும்
பரிந்துரையில் பிறப்பதல்ல பேரிலக்கியம்
என்று.
அது தன்னிலிருந்து கிளர்த்தெழுமொரு
காட்டுச்செடி,
மனிதநேயம்பாற்பட்ட மலைப்பிரசங்கங்களுக்கும்
மலைப்பிரசங்கங்களுக்கப்பாலான
மனிதநேயங்களுக்கும் இடையே
மறைந்தோடும் ஜீவநதியென
அம்மணம் மீறிய ஆன்மாவொன்று
அன்போடு சொல்லக்கேட்டு _
முயல் ஆமை முயலாமை ஊடாய்
வழியேகும் படைப்புவெளியில்
வளர்ந்த மகள் நடைபழக
நாலிலே ஒன்றிரண்டு பலித்திட
வழியுண்டு.