LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Wednesday, April 1, 2020

ஒரு கை ஓசை….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

ஒரு கை ஓசை…..


ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


அண்ணாந்து பார்த்து கைதட்டும்போது
அங்கிருக்கும் முகில்திரள்களுக்குள்ளிருந்து
எந்த எதிர்வினையேனும் கிடைக்குமோ
என்ற எண்ணமெழுந்தது.

அன்றொருநாள் படித்த
ஒரு கை ஓசைநினைவுக்கு வந்தது.

உண்மையில் எல்லாமே
ஒரு கை ஓசை தானா?

எண்ண,
இப்படி இருகைகளும்
ஒன்றையொன்று தொட்டுணர்ந்து
எத்தனை காலமாகிவிட்டது!

பெருக்க இடதுகை;
பைதூக்க இடதுகை
எழுத வலதுகை
உணவருந்த வலதுகை….

இரண்டுகைகளுமாக ஒரு புத்தகத்தைப்
பிடித்துக்கொண்டிருந்தாலும்
ஒன்றையொன்று தொட வாய்ப்பில்லை.

சுடச்சுட காஃபிக்கோப்பையை ஏந்தியிருக்கும்
சமயத்திலும்
ஒரு கை கோப்பையின் அடியிலும்
ஒன்று கோப்பையின் பக்கவாட்டிலுமாய்….

கடவுளைத் தொழும்போது இரண்டு உள்ளங்கைகளும்
இணைந்திருக்குமென்றாலும்
அது தொடுவுணர்வைத் தாண்டியதொரு
தருணமாய்….

இரு உள்ளங்கைகளின் விரல்களின்
இணைந்த தட்டலின் அதிர்வுகளில்
இரட்டிப்பு உயிர்ப்புணரும் மனம்
எல்லோரும் கைதட்டிமுடித்துவிட்டுக்
கலைந்துசென்ற பிறகும்
கூட சிறிதுநேரம் அதையே
செய்துகொண்டிருக்கும்…….




கொரோனா அச்சுறுத்தல்:


பிரார்த்தனை - 'ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


பிரார்த்தனை 
'ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

 இதோ இந்கே சில நிமிடங்கள் தொடர்ச்சியாக நான் கைதட்டுவது
இதுவரை நான் பொருட்படுத்தாதிருந்திருக்கக்கூடிய
பாராட்ட மறந்திருக்கக்கூடிய எல்லோருக்குமானதாகட்டும்.
ஒரு கிருமியால் என்னுயிர் பறிபோய்விடுமோ என்ற
பயத்தால் மட்டுமே நான் இதைச் செய்கிறேன்
என்று ஆகிவிடலாகாது.
இந்தக் கைத்தட்டல் நேற்றும் இன்றும் நாளையும்
மக்கள்பணியாற்றும் அனைவருக்குமானதாகட்டும்.
என்னிரு கைகளை யந்திரத்தனமாகச் சேர்த்துக்
கரவொலியெழுப்பாமல்
மனதின் கைகளைக் கொண்டு நான் தட்டுவேனாக.
உலகின் தலைசிறந்த இலக்கியங்களைப் படைத்தவர்களுக்கு
உரித்தாகட்டும் இந்தக் கைத்தட்டல்
நான் வாழுங் காலத்தின் அற்புதத் தமிழ்க்கவிஞர்களுக்கு
அர்ப்பணமாகட்டும் இந்தக் கைத்தட்டல்.
நற்றமிழுக்காகட்டும் இந்தக் கைத்தட்டல்.
நல்ல அரசியல் தலைவர்களுக்குரியதாகட்டும்
இந்தக் கைத்தட்டல்.
புல் பூண்டு காய் கனி பழம் மரம் பூ விலங்கு
பறவை யின்னும் பலப்பபல சக உயிரிகளுக்கென்
அன்பைத் தெரிவிக்கட்டும் இந்தக் கைத்தட்டல்.
வல்லூறின் வளைநகங்களாய் வார்த்தைகளைப்
பிரயோகிக்காமல்
நல்லவிதமாய் மாற்றுக்கருத்துகளைச்
சொல்பவர்களுக்காகட்டும் இந்தக் கைத்தட்டல்.
தன்னால் முடிந்ததைச் செய்து
சகமனிதர்களின் இன்னல் களைய
முன்வருபவர்களுக்காகட்டும் இந்தக் கைத்தட்டல்.
இன்சொற்களையே மொழிபவர்களுக்கு என்றும்
உரித்தாகட்டும் இந்தக் கைத்தட்டல்.
எனக்கும் என் உடலுக்கும்
எனக்கும் நான் வாழும் சமூகத்திற்கும்
எனக்கும் என் அம்மாவுக்கும்
எனக்கும் என் மனதிற்கும்
எனக்கும் என் உள்ளங்கைகளுக்கும்
உடனிருக்கும் விரல்களுக்கும்
உங்களுக்கும் எனக்கும்
எனக்கும் எனக்கும்
இன்னும் கணக்கற்றவைகளின் தொடர்புறவைப்
புரிந்துகொள்ள
வழிகாட்டுவதாகட்டும் இந்தக் கைத்தட்டல்.


கொள்ளைநோயும் கொள்ளைக்காதலும்.... ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


கொள்ளைநோயும் கொள்ளைக்காதலும்
வெள்ளையும்சொள்ளையாயுமாய் மெய்யும் பொய்யும்.......


ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

ஒரு புத்தகத்தை ஒருவர் படித்திருப்பதாகச்
சொல்லும்போதே
அவருடைய குரல் நெகிழ்ந்து கரகரக்கிறது.
இன்னொரு மேம்பட்ட உலகிற்குள்
அவர் குடியேறிவிடுவதைப் பார்க்கமுடிகிறது.
அந்தப் புதினத்தின் இரண்டு கதாபாத்திரங்களின்
பெயர்களை
அவர் குறிப்பிடும் விதம்
பிஞ்சுக் குழந்தையை அதிசயமாய்ப் பார்த்து
அத்தனை பத்திரமாய் ஏந்துவதைப்
போலிருக்கிறது.
கதையில் வரும் காடு குறித்து
அவர் பேசும்போது
அதில் வாழும் சிங்கராஜாவும்
ஊறும் நத்தையுமாகிவிடுகிறார்!
அந்த நதிக்கரையில் பொழியும் மழையை
அப்படி நனைந்து நனைந்து
விவரிக்கிறார்!
அந்தக் கதையை எழுதியவரின் பெயரை
மந்திர உச்சாடனம் செய்வதாய்
உச்சரிக்கிறார்!
இன்னொருவர் அதே படைப்பின் பெயரை
சொல்லும் விதமே
அவருடைய அதி மேலோட்டமான வாசிப்பை
அல்லது அறவே வாசிக்காத அப்பட்டமான உண்மையை
அடிக்கோடிட்டுக் காட்டிவிடுகிறது.
அவர் அந்தக் கதை குறித்து முன்வைக்கும்
சொற்களெல்லாம்
ஒப்பனை செய்யப்பட்ட உணர்ச்சிப்
பெருக்கையும் மீறி
முள்ளங்கிபத்தை முசுக்கொட்டை
முப்பத்தியாறு மொள்ளமாரி யென்பதாய்
மேம்போக்காய் ஒரு தொடர்புமற்று
இறைந்து சிதறுகின்றன
குப்பைக்கூளமாய்.
இதற்கு பதில், என்னைப் படிக்கவில்லை
என்று சொல்லியிருந்தால் போதுமே
அது உனக்கும் கௌரவமாக
எனக்கும் கௌரவமாக
இருந்திருக்குமேஎன்று_
இந்தக் கொள்ளைநோயிலிருந்து
நமக்கு நிவாரணம் கிடைக்க
வழியேயில்லையா
என்ற அங்கலாய்ப்போடு
தனக்குள் சொல்லிக்கொள்வதுபோல்
அதோ, அந்த நூல்....


நனவோடை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


நனவோடை
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

ஒரு நூறு பக்கங்களைக் கொண்ட கவிதைத் தொகுப்பு.
சில கவிதைகள் இரண்டு பக்கங்களுக்கு நீள்வதால்
மொத்தம் அறுபது கவிதைகள் இடம்பெற்றிருக்கக்கூடும்.
அத்தனை கவிதைகளும் ஆகத்தரமானவை
யென்று சொல்லவியலாது.
அரங்கம் பெரிதோ சிறிதோ,
பெரும்பாலும் அதில் நண்பர்களும்
உறவினர்களும்
அன்பே உருவான ஒரு சில
இலக்கிய ஆர்வலர்களுமே
வரிசையாய் அல்லது வட்டமாய்
போடப்பட்டிருக்கும் இருக்கைகளில் அமர்ந்துகொண்டிருப்பார்கள்.
வந்திருப்போரெல்லாம் அந்தப் புத்தகத்தை
வாங்குவார்கள் என்று
உறுதியாகச் சொல்லவியலாது.
வாங்கினாலும் வாசிக்காமல்
அடுத்தவருக்குப் பரிசளித்துவிடும்
வாய்ப்புகள் அதிகம்.
பருவம் வந்த அனைவருமே
காதல்கொள்வதில்லை
என்று பாடிக்கொண்டிருக்கிறார் சந்திரபாபு.
சிறப்பு விருந்தினர்கள் நால்வரின்
இலக்கியப் பரிச்சயம்
பாரதியின்நாலிலே ஒன்றிரண்டு
நன்னுமோவாக _
ஆவதெல்லாம் என்னவாயினும்
அந்த நூல் வெளியீட்டுவிழா
நடக்கும் நேரமெல்லாம் நெகிழ்ந்திருக்கும்
கவி மனம்…..
நிகழ்வின் இறுதியில் எஞ்சியிருக்கும்
இருபது பேரின் சன்ன கரவொலியில்
அவர் கண்களில் நீர்துளிர்க்கவும் செய்யலாம்….
அன்னோரன்ன சிலர் இன்று
மட்டந்தட்டிக்கொண்டிருக்கிறார்கள்
மக்கள்பணியாளர்களைப் பாராட்டிக்
கைத்தட்டியோர்
தட்டுக்கெட்டவரென்று.



EINSTEIN ON EGO


பூமிக்கோளமும் BLOATED EGOக்களும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


பூமிக்கோளமும் 
BLOATED EGOக்களும்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


எத்தனை கொரானாக்கள் வந்தாலுமே
எல்லாம் சுயபுராணங்களுக்காகுமே யென
இடைவிடாமல்
தம்மைக் கடைவிரிப்போருக்கு
பேரிடர்களெல்லாம் தம் நாட்டைப் பழிக்கவும்
சக மனிதர்களைக் கூறுகெட்டவர்களாகப் பகுக்கவும்
மூடர்களெனக் கட்டங்கட்டித் திட்டவும்
மட்டந்தட்டவும்
பெருவாரியான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
அரசை
பயங்கரவாத அரசாகப் புரியவைக்கத்
தயங்காமல் பொய்யுரைக்கவுமே யாக _
பாதுகாப்பாய்
இருக்குமிடத்திலிருந்துகொண்டே இண்டர்நெட்
உதவியுடன்
இரண்டொரு கருத்துரைத்து
பெருங்காரியங்கள் செய்துகொண்டிருப்பதான
பாவனையைக் கைக்கொள்ளவும்
ஆழ்ந்து யோசிப்பதாய் அப்படி அண்ணாந்திருக்கும்
தன்னை
கையிலிருக்கும் அலைபேசியில் இன்னுமின்னுமாய்
படம்பிடித்து UPLOAD செய்தவாறிருக்கும்
அறிவுசாலிகள் அன்றாடம் அப்படி அறைந்து தாக்க _
குறையுயிரோடு போராடிக்கொண்டிருக்கிறது
மா பூமி
தன் இன்னுயிர் காக்க.

இயக்கம் -‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


இயக்கம்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


பேரிடரைப் பேசுவதாயிருந்தாலும் அவர் தவறாமல்
அதே ஒயிலாய் தலைசாய்த்து நிற்கத்
தவறமாட்டார் ஒருபோதும்.
ஒப்பனை எப்போதும்போல் கச்சிதமாயிருக்கும்.
தத்துவமாய் சில பல வாசகங்களை உதிர்த்து
புத்தகங்கள் ஒன்றிரண்டை மேற்கோள் காட்டி _
சத்தம் குறைந்த இகழ்ச்சிச் சிரிப்பொன்றை
முத்தாக உதிர்த்து
முத்தாய்ப்பாய் இந்தியாவை,
இந்திய மக்களை,
இந்திய அரசை
மிகக் கொச்சையாய்ப் பழித்த பின்
சக மனிதர்களுக்கு இதைவிடப் பெரிய
சேவை செய்ய முடியுமா என்ன
என்ற பாவனையோடு
அடுத்த பதிவை நோக்கி நகரும்
அவரையும் நிலைகுலைந்துவிழச் செய்யாமல்
பத்திரமாய்த் தாங்கியபடி
தன்போக்கில் சுழன்றுகொண்டிருக்கும் பூமி.

 2.