LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Wednesday, April 1, 2020

கொள்ளைநோயும் கொள்ளைக்காதலும்.... ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


கொள்ளைநோயும் கொள்ளைக்காதலும்
வெள்ளையும்சொள்ளையாயுமாய் மெய்யும் பொய்யும்.......


ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

ஒரு புத்தகத்தை ஒருவர் படித்திருப்பதாகச்
சொல்லும்போதே
அவருடைய குரல் நெகிழ்ந்து கரகரக்கிறது.
இன்னொரு மேம்பட்ட உலகிற்குள்
அவர் குடியேறிவிடுவதைப் பார்க்கமுடிகிறது.
அந்தப் புதினத்தின் இரண்டு கதாபாத்திரங்களின்
பெயர்களை
அவர் குறிப்பிடும் விதம்
பிஞ்சுக் குழந்தையை அதிசயமாய்ப் பார்த்து
அத்தனை பத்திரமாய் ஏந்துவதைப்
போலிருக்கிறது.
கதையில் வரும் காடு குறித்து
அவர் பேசும்போது
அதில் வாழும் சிங்கராஜாவும்
ஊறும் நத்தையுமாகிவிடுகிறார்!
அந்த நதிக்கரையில் பொழியும் மழையை
அப்படி நனைந்து நனைந்து
விவரிக்கிறார்!
அந்தக் கதையை எழுதியவரின் பெயரை
மந்திர உச்சாடனம் செய்வதாய்
உச்சரிக்கிறார்!
இன்னொருவர் அதே படைப்பின் பெயரை
சொல்லும் விதமே
அவருடைய அதி மேலோட்டமான வாசிப்பை
அல்லது அறவே வாசிக்காத அப்பட்டமான உண்மையை
அடிக்கோடிட்டுக் காட்டிவிடுகிறது.
அவர் அந்தக் கதை குறித்து முன்வைக்கும்
சொற்களெல்லாம்
ஒப்பனை செய்யப்பட்ட உணர்ச்சிப்
பெருக்கையும் மீறி
முள்ளங்கிபத்தை முசுக்கொட்டை
முப்பத்தியாறு மொள்ளமாரி யென்பதாய்
மேம்போக்காய் ஒரு தொடர்புமற்று
இறைந்து சிதறுகின்றன
குப்பைக்கூளமாய்.
இதற்கு பதில், என்னைப் படிக்கவில்லை
என்று சொல்லியிருந்தால் போதுமே
அது உனக்கும் கௌரவமாக
எனக்கும் கௌரவமாக
இருந்திருக்குமேஎன்று_
இந்தக் கொள்ளைநோயிலிருந்து
நமக்கு நிவாரணம் கிடைக்க
வழியேயில்லையா
என்ற அங்கலாய்ப்போடு
தனக்குள் சொல்லிக்கொள்வதுபோல்
அதோ, அந்த நூல்....


No comments:

Post a Comment