LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Monday, November 18, 2019

IMPLICATIONS - ‘rishi’ (Latha Ramakrishnan) குறிப்புணர்த்தல்

IMPLICATIONS

‘rishi’ (Latha Ramakrishnan)

Here and Now are forever
inclusive of
There and then
Where and when
After all
Break and broken
Are but two sides of
The same coin.


குறிப்புணர்த்தல்

இங்கே இப்பொழுது என்றுமே
உள்ளடக்கியிருக்கும்
அங்கே அப்பொழுது;
எங்கே எப்பொழுது….
எண்ண
உடைவதும் உடைந்ததும்
ஒரே நாணயத்தின் இருபக்கங்கள்தானே.

நாய்வால் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

நாய்வால்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


வழக்கம்போல் ஒருநாள் சோறுவைத்தபின்
நாயின் வாலைக் கடன் கேட்டான்.
வியப்போடு அவனைப் பார்த்தவாறே
செஞ்சோற்றுக்கடன் தீர்க்க
பெருகும் ரத்தத்தையும் பொருட்படுத்தாமல் அதைப்
பிய்த்துகொடுத்தது நாய்.
தன் பணிவைத் தெரிவிப்பதாய் _
தனக்கு அவரை யிவரை மிகவும் பிடிக்கும்
என்று தெரிவிப்பதாய் _
அடிமைச்சேவகம் செய்ய தான் தயாராக இருப்பதைத்
தெரிவிப்பதாய் _
சமயங்களில் வாலைப் பிறர் சுருட்டி முறுக்க
வலியோடு அனுமதித்தும்
பலவாறாய் முயன்றுபார்த்த பின் _
வாலைத் திருப்பிக்கொடுத்தவன்
நாயிடம்
‘உன் வாலால் ஒரு லாபமுமில்லை”
என்றான் வெறுப்போடு.
’என் வால் என் உறுப்புகளில் ஒன்று
வர்த்தகப் பண்டம் அல்லவே,
நீயாக அப்படி நினைத்துக்கொண்டால்
அதற்கு நான் என்ன செய்வது.’
என்று வருத்தத்தோடு பதிலளித்தவாறே
அறுந்த வாலை ஒட்டும் மார்க்கம் தேடி
அங்கிருந்து அகன்றது நாய்.

வாழ்நெறி ‘ரிஷி’ (லதா ராமகிருஷணன்)



வாழ்நெறி

‘ரிஷி’ 
(லதா ராமகிருஷணன்)

நான் நீங்கள் அவர்கள் என்ற
மூன்று வார்த்தைகளின்
நானாவித இணைவுகளில்
ஐந்துவிரல்களுக்கிடையே
ஆறேழு மோதல்களை உருவாக்கி
எட்டும் திசையெல்லாம்
’அமைதிப்புறா’ அடைமொழியும்
கிட்டுமென்றால்
ஒன்பது நாட்கள் ஒரு வாரத்திற்கு
என்றாலும்
பத்துதான் முதல் ஒன்று கடைசி
யென்றாலும்
இரண்டை மூன்றென்றாலும்
ஏழை சுழியமென்றாலும்
வேறு என்னென்னவோ
இன்னும் சொன்னாலும்
சரி யென்று சொல்வதே
அறிவுடைமையாக……

பறவைச்சிறகுகள் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

பறவைச்சிறகுகள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


’பாவம் உனக்குப் பேச்சே வரவில்லை’ என்கிறீர்கள்.
’நான் பேசிக்கொண்டுதானிருக்கிறேன்
உங்களுக்குத்தான் புரியவில்லை’ என்கிறேன்.
’பாவம், பேசுமொழியே இல்லையே உனக்கு’
என்று பச்சாதாபப்படுகிறீர்கள்
’எனக்கு மொழியுண்டு; உங்களால் அதைப்
பழகமுடியவில்லை’ என்கிறேன்.
’நாங்கள் எத்தனை முன்னேறிவிட்டோம்!
பாவம் நீ அதே கூட்டைத்தான்
இன்னமும் கட்டிக்கொண்டிருக்கிறாய் _’
என்று அனுதாபப்படுகிறீர்கள்.
’உங்கள் வீடு கட்டலைப்போலவே
என் கூடு கட்டலின்
முன்னேறிய தொழில்நுட்பங்களை
உங்களால் அறியவியலாது’
என்று சுட்டிக்காட்டுகிறேன்.
போனால் போகட்டும் என்று
பரிந்துபேசினால்
பெரிதாய் சிலுப்பிக்கொள்கிறாயே
என்று கோபப்படுகிறீர்கள்.
பரிந்துபேசுவதுபோல் உங்கள் பெருமையை
பீற்றிக்கொண்டேயிருந்தால் எப்படி
என்று சிரித்தபடியே
உங்களிடம் என்றுமே இல்லாத
என் சிறகுகளை விரித்துப்
பறந்துசெல்கிறேன்.

பொறுப்பேற்பு ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

பொறுப்பேற்பு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
நம் மனதி னோரச் சுவரொன்றில்
ஓர் ஆடி தொங்கிக்கொண்டிருந்தால்
நமக்கு அதில் நம்மைக் காண
நேரமிருந்தால்
ஆடியின் எதிரே ஒப்பனைகளற்ற
நம் வதனத்தை
எதிர்கொள்ள நமக்குத் துணிவிருந்தால்
காலப்போக்கிலான அதன் மாற்றங்களை
நாம் பார்க்கப் பழகிவிட்டால்
பின்
நாம் முடிந்தவரை பொய் பேசமாட்டோம்.

குறுக்குவிசாரணை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

குறுக்குவிசாரணை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)




சிதறடிக்காதே யென்று பதறுகிறாயே
சொற்கள் என்ன தங்கக்காசுகளா?

காசுகளைக்கொண்டு நீ பேசிவிடு வாயா?
கொஞ்சங்கூட யோசிக்கவே மாட் டாயா?

ஊரும் பேரும் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

ஊரும் பேரும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

யாருமற்ற வனாந்திரத்தில் பாடிக்கொண்டிருக்கிறாயே
பாவமாயிருக்கிறது உன்னைப் பார்க்க.

ஊருமுழுக்க நீ மட்டுமே என்று 
யார் சொன்னது?
பாவமாயிருக்கிறது எனக்கும், 
உன்னைப் பார்க்க.

கவிதை என்ற பெயரில்…. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

கவிதை என்ற பெயரில்….


‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)




எத்தனை ‘லைக்’குகள் வாங்கினாலென்ன?

எத்தனை விருதுகள் வாங்கினாலென்ன?

விதவிதமான புகைப்படங்களில்

புதுப்புது ஆடையணிமணிகளுடன்

அழகுப்போட்டிகளில் பங்கெடுப்பதே போன்று,

அல்லது ‘ரௌத்ரம்’ பழகுவதாய்

எத்தனைவிதமாய்

‘போஸ்’ கொடுத்தால்தான் என்ன?

இத்தனை வன்மமும்

வெறுப்பும்

விபரீத அகங்காரமும்

வெட்கங்கெட்ட மனச்சாய்வும்

வேண்டும்போதான ‘மறதி’யும்

வசதியாய் சிலவற்றைப் பற்றி

எண்ணமறுக்கும்

வக்கிரமும்
வழிந்தோடும் மனம் வாய்த்தவர்

வரிவரியாய் பல்லாயிரம் எழுதினாலும்

எப்படி கவியாக முடியும்?



'லைக்'குகள் அதிகமாக அதிகமாக

தலைக்கேறிய கர்வத்திற்கு

விலைபோய்க்கொண்டிருக்கும் கவியை

விசனத்தோடு பார்த்துக்கொண்டிருக்கிறது

நவீன தமிழ்க்கவிதை.


பெரியபெரிய வார்த்தைகளை

கைபோன போக்கில்

அடுக்கிக் கோர்த்து

பூச்சாண்டி காட்டலே

கவிதை

யென்ற அவர் புரிதலுக்கு

முதல் பலி அவராக;

அடுத்தது

அவர் வடித்ததாக.




Sunday, November 10, 2019

ரத்தக்காட்டேரிகளின் வரலாற்றுச்சுருக்கம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


ரத்தக்காட்டேரிகளின் வரலாற்றுச்சுருக்கம்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


ரத்தக்காட்டேரிகள் பசியோடு 
உலவிக்கொண்டிருக்கும்.

நிலவும் அமைதியை அவற்றால் 

அங்கீகரிக்கமுடியாது.

அவற்றைப் பொறுத்தவரை 

வெறுப்பும் விரோத முமே வாழ்வியல்பு.

தலைகள் அறுபட்டு விழுந்தால்தான் அவற்றைப்
பொறுக்கியெடுத்து சூனி்யக்காரர்களின் வசியத்திறத்தோடு
அவற்றை ஆட்டியாட்டிக் காட்டி
அக்கம்பக்கத்திலிருப்பவரை 

அச்சத்திலாழ்த்தி
தினமுமான குறையாத தீனிக்கு
வழிசெய்துகொள்ள முடியும்.

ரத்தக்காட்டேரிகள் நாவறள 
உலவிக்கொண்
டிருக்கும்.

நிலவும் அமைதியை ஏற்றுக்கொள்ள 

முடியா மல்
அது பயத்தால் விளைந்தது என்று 

நாளும் சொல்லிச்சொல்லி 
உருவேற்றப்பார்க்கும்.

நயத்தக்க நாகரீகமும் நட்பும் நேசமும்
தன் துட்ட நடமாட்டத்தைக் 

கட்டுப்படுத்திவிடும்
என்று ரத்தக்காட்டேரிகளுக்குத் 

தெரியாதா என்ன?

அறைக்குள் பாதுகாப்பாயமர்ந்தபடி  
சுற்றுவட்டாரத்திலேதேனும் 
சின்னச்சண்டை நடக்குமா என்று சதா கண்களை இடுக்கித் 
துருவிக்கொண்டிருக்கும் அவை.

ஒரு பொறி போதும் கவிதை உருவாக 
என்பது உண்மையோ பொய்யோ
அய்யோ அதுபோதுமே ரத்தக் 

காட்டேரிகளுக்கு _
தறிகெட்டோடி யனைத்தையும் 

உருக்குலைக்க.

யாருடைய கரங்களாவது 
யாருடைய
குரல்வளைகளையாவது
கடித்துக்குதறிக்கொண்டே

யிருக்கவேண்டும்.
வழியும் ரத்தம் நின்றுவிடாதிருக்க 

அதுவே வழி.

பருகும் குருதியே பிரதானம் 
ரத்தக்காட்டேரிகளுக்கு.
கலவரமுண்டாகிக் கைகால்கள் 
பிய்த்தெறியப்படாவிட்டால் 
பின் எப்படி குருதி குடிப்பது?

புத்தியைத் தீட்டிச் சில வித்தைகளைச் 
செய்யும்.சித்தங்கலங்காமல்
அதன் பாட்டில் அமைதியாயிருக்கும் 

ஊரின்ரத்தம் வழியச்செய்யும் வழி பிடிபடாவிடில்
முட்டும் வெறியில்
திட்டமிட்டுப் படுகொலையைச் 

செய்யும்
தன் கூற்றில் கவிதையில் 

கலந்துரையாடலில்.

அண்டசராசரமும் சொந்தமாயி
ருப்பவனிடம்
நான் தருகிறேன் அரைக்காணி 

யென்று அறியாமையால் அறைகூவி அவசரஅவசரமாய்
பொதுவழியைக் கழிப்பறையாக்கிக்

கொள்ளும் ரத்தக்காட்டேரியிடம்
சுத்தம் பற்றி யார் பேசுவது?

மக்களே போல்வர் மாக்க
ளென்பார்...
மக்கள் மத்தியிலிருக்கும் 

இரத்தக்காட்டேரிகள்
மனித உருவில்.

ஹாம்லெட்டும் ஆம்லட்டும்
ஒலிக்கக்கூடுமொருபோலெனில்
இருவேறிரண்டுமென்

றறிதல் வேண்டும்.

ரத்தக்காட்டேரிகளுக்குச் 
கரங்களுண்டோதெரியாது,
சிறகுகள் உண்டோ 
- தெரியாது

எனில் _
கண்டிப்பாக இருக்கும்
மனசாட்சியிருக்கவேண்டிய 

இடத்தில்
மிகப்பெரிய வெற்றிடம்.