LIFE GOES ON.....

LIFE GOES ON.....
Showing posts with label நாய்வால் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts
Showing posts with label நாய்வால் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்). Show all posts

Monday, November 18, 2019

நாய்வால் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

நாய்வால்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


வழக்கம்போல் ஒருநாள் சோறுவைத்தபின்
நாயின் வாலைக் கடன் கேட்டான்.
வியப்போடு அவனைப் பார்த்தவாறே
செஞ்சோற்றுக்கடன் தீர்க்க
பெருகும் ரத்தத்தையும் பொருட்படுத்தாமல் அதைப்
பிய்த்துகொடுத்தது நாய்.
தன் பணிவைத் தெரிவிப்பதாய் _
தனக்கு அவரை யிவரை மிகவும் பிடிக்கும்
என்று தெரிவிப்பதாய் _
அடிமைச்சேவகம் செய்ய தான் தயாராக இருப்பதைத்
தெரிவிப்பதாய் _
சமயங்களில் வாலைப் பிறர் சுருட்டி முறுக்க
வலியோடு அனுமதித்தும்
பலவாறாய் முயன்றுபார்த்த பின் _
வாலைத் திருப்பிக்கொடுத்தவன்
நாயிடம்
‘உன் வாலால் ஒரு லாபமுமில்லை”
என்றான் வெறுப்போடு.
’என் வால் என் உறுப்புகளில் ஒன்று
வர்த்தகப் பண்டம் அல்லவே,
நீயாக அப்படி நினைத்துக்கொண்டால்
அதற்கு நான் என்ன செய்வது.’
என்று வருத்தத்தோடு பதிலளித்தவாறே
அறுந்த வாலை ஒட்டும் மார்க்கம் தேடி
அங்கிருந்து அகன்றது நாய்.