LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, March 5, 2026

மலையின் உயரம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 மலையின் உயரம்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

(*‘அதிகாரத்தின் நுண்பரிமாணங்கள்’ என்ற தலைப்பிட்ட எனது 10வது கவிதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. )

ஒருபோதும் மலைகளாகமுடியாதவர்கள்,
மலைமேல் ஏறக்கூட முடியாதவர்கள்
மலையின் அடிவாரத்தில் நின்று
அண்ணாந்துபார்த்தாலே
மளுக்கென்று கழுத்து சுளுக்கிக்
கொள்கிறவர்கள்
மலையிலிருந்து உருளும் ஒரு கல்லைக் காட்டி
மலை மாபாதகம் செய்துவிட்டதாக
மண்ணை வாரித்தூற்றுகிறார்கள்;
காலமெல்லாம் கையில் கற்களோடு
சுற்றிக்கொண்டிருப்பவர்கள்
பாவனைக் கண்ணீர் பெருக்கிக்
கருணைக்கடலாகிவிடுகிறார்கள்.
கனியிருப்பக் காய் கவரலாமோ என்ற குறட்பாவை
மேற்கோள் காட்டி கையோடு
தனித்துவமான தமது வசைபாடலை
ஒலிக்கச்செய்கிறார்கள் கோரஸ்களோடு.
‘கலி முத்திப் போச்சு’ என்பதாய் கவனமாய்
நவீன தமிழில் கருத்துரைத்து
எலிப்பிள்ளை என்றுரைப்பார் கிளிப்பிள்ளையாய்_
வலிய சிங்கத்தை.
எத்திசையிலும் அலைபாய்ந்திருக்குமவர் கண்கள்
பித்தளையாகக் காட்டி ஒரு ஒப்புநோக்கலில்
தன்னைப் பத்தரைமாற்றுத் தங்கமாகப் பறைசாற்ற
எங்கேனுமிருப்பாரோ இளிச்சவாயர்கள் என்று கண்காணித்தபடி.
ஒருவரிடம் காரியம் ஆகவேண்டியிருந்தால்
அவரை ஆதரிப்பார்;
இன்னொருவரிடம் இன்னொரு காரியம் ஆகவேண்டியிருந்தால்
அவரையும் ஆதரிப்பார்.
பாரபட்சமே நீதிநெறியாக
கையில் எப்போதுமிருக்கும் துலாக்கோல்
தட்டின் அடியில் ஒட்டிய புளியோடு.
எவரைப் பரிச்சயப்படுத்திக்கொண்டால் என்ன ஆதாயம்
என்ற மனக்கணக்கில்,
மருந்துக்கும் புத்தகங்களைத் தொடாமலேயே
சேருமிடம் சென்று வென்று கொன்று மென்று
பாஸ்மார்க், முதல் வகுப்பில் தேர்ச்சி, டிஸ்டிங்ஷன்
தங்கப்பதக்கம் என்று படிதாவிப்படிதாவிச்
செல்பவர்களுக்குத்தான்
குறிப்பாக மலையைக் கண்டால் வெறுப்போ வெறுப்பு.
’தட்டாமாலை தாமரப்பூ சுத்திச்சுத்தி வந்தாராம்’ என்ற
குழந்தைக்குதூகலமாய்
”விளையாட வாயேன்” என்று வெள்ளந்தி பாவனையில்
மலையை அழைப்பார்;
தலையைத் தழைத்தால் முகடு வெட்ட வாகாய்
வெட்டரிவாளை ஒளித்துக்கொண்டு.
இறங்கிவர மறுக்கும் மலையைப்
பெருமுதலாளி என்று பழிப்பார் _
இருபத்தியிரண்டு செல்லப்பிராணிகள் வைத்திருப்பார்.
இன்னும் என்னென்ன ரகங்கள் இங்கே என்றெண்ணி
புன்னகை பூக்கிறது
இயல்பே உயரமான மலை.
உயரேயிருந்து பார்க்க எல்லாம் தெரியும் மலைக்கு.
மலையை மடுவாக்கும் கனவைக்கூட நாம் கண்டுவிட இயலாது.
முன்னே நின்று நீர் உறுமுவதெல்லாம்
முனகல் மட்டுமே மலைக்கு;
முட்டிமோதினாலோ
சேதாரம் உமது் தலைக்கு.

வழக்கு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வழக்கு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
இல்லையென்பதற்கும் பார்த்ததில்லை யென்பதற்கும்
இம்மிக்கும் பலமடங்கு மேலான வித்தியாசம்…….
எனவே இன்னொரு முறை சொல்லச் சொல்லிக் கேட்டேன்.
குருவி என்று எதுவும் கிடையாது என்றார் திரும்பவும்.
இன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்.
புத்துசாலிதான்…..
குருவியைப் பார்த்ததில்லை யென்றால் புரிந்துகொள்ளலாம்.
குருவியென்று எதுவுமே இல்லையென்றால்…..
படங்களைக் காட்டினால் ‘க்ராஃபிக்ஸ்’ என்றார்.
ஓவியங்களைக் காட்டினால் வரைந்தவரின் ’கிரியேட்டிவிட்டி’ என்றார்.
குருவிகள் சாகாவரம் பெற்று சிறகடித்துக்கொண்டிருக்கும் கவிதைகளை வாசித்துக்காட்டினால்
’கவியின் மெய் பொய்தானே’ என்று கண்ணடித்தார்.
நானே பார்த்திருக்கிறேன் என்றேன்.
காட்சிப்பிழை என்றார்.
’குருவி யொரு குறியீடு மட்டுமே’ என்றார்.
’தூலமல்ல; சூக்குமமே’ யென்றார்.
’ஆன்மா சூக்குமமா தூலமா’ யென்றேன்
’அப்படியென்றால் குருவி ஆன்மாயென்கிறாயா?
ஆமென்றால் உன் கேள்விக்கு பதில் அதுவே’ என்றார்
அதிமேல்தாவியாய்.
பதிலுக்கு
’குருவியின் குட்டிமூக்கு எத்தனை அழகு!’ என்றேன்.
’தொட்டுப்பார்த்திருக்கிறாயா என்ன? கத்தாதே’ என்றார்.
’கண்ணால் வருடிச் சிலிர்த்திருக்கிறேன்;
என் காமராவில் சிலையாய் வடித்திருக்கிறேன்’ என்றேன்.
’யாருடைய கைக்கூலியாகவோ பொய்சாட்சியம் பகர்கிறாய்’ என்றார்.
’விட்டுவிடுதலையாகி நிற்பாய்’ என்ற பாரதி வரியை மொழியத்தொடங்குவதற்குள்
’வசனம் பேசாதே, நிரூபிக்கும் வழியைப் பார்’ என்றார் வெற்றிப்புன்னகையோடு.
அன்றுமுதல் அலையோ அலையென அலைந்து,
ஏழு கடல் ஏழு மலை எத்தனையோ பாதாளம் வேதாளம் தாண்டி,
ஒரு குகைக்குள்ளிருந்த குருவியைக் கண்டுபிடித்து
இருநூறு இறக்கைகளை யதற்குப் பொருத்தி
ஒரே சமயத்தில் நாலாபக்கங்களிலும் அங்கிங்கெனாதபடி சிறகடித்துப் பறந்துகொண்டேயிருக்க
அதற்குக் கற்றுக்கொடுத்தேன்.....
கச்சிதமாய் எச்சமிட்டுத் தன் இருப்பை
முற்றிலும் உண்மையென நிரூபிக்க
அந்த மனிதரின் உச்சிமண்டையை அடையாளங்காட்டியிருக்கிறேன்.

நான் யார் நான் யார் நீ யார்….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நான் யார் நான் யார் நீ யார்…..

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

நான் நான் நான் நான்…
நாமைப் பற்றிப் பேசினாலும் சரி
நீயைப் பற்றிப் பேசினாலும் சரி
அவளை அவனை அவரை அவர்களை
அதை அவற்றை _
யாரைப் பற்றிப் பேசினாலும் சரி
அந்த நானுடைய பேச்செல்லாம்
நான் நான் நான் தான்….
எனில்
இந்த உலகம் நான்களால் ஆனது
ஒரு நானால் அல்ல
நானாவிதமான நான்களால் ஆனது
ஒரேவிதமான நான்களால் அல்ல.
இதைப் புரிந்துகொள்ளாத ஒரு நான்
பல நான்களாகக் கிளைபிரிந்து
பேசிக்கொண்டேபோகிறது.
அந்தப் பாதைகளில், திசைவழிகளில் முளைக்கும்
புல் பூண்டு செடி கொடி பெருமரம் எல்லாமும்
அந்த ஒரு நானின் பல நான்களில் மட்டுமே
வேர்பிடித்து வேர்பிடித்து.
மெய்யான இயற்கையை, வாழ்வை
தரிசிக்கும் ஆர்வங்கொண்டோர்
அந்தப் பாதைகளில் புகுவதை
கவனமாகத் தவிர்த்து
அப்பால் சென்று
தனது நானின் நான்களுக்கேற்ற
பிறரது நான்களை அடையாளங்காணும்
முனைப்பில்
அடுத்தடுத்து விரிந்திருக்கும் பாதைகளில்
நுழைந்து நடந்தவண்ணமே.
எந்த நானும் எந்த நானுக்கும்
பிரதிநிதியாகிவிட முடியாது
எல்லா நான்களுக்கும் பதிலியாகிவிட
ஏலாது
தன் நான்களைத் தேடப்புகாத ஒரு நான்
அடுத்தவன் நான்களை
அடையாளங்காட்டலாகுமா என்ன
யாரும் நுழையாத அந்த நானின் நான்களின்
ஆளரவமற்ற பாதைகள் கிளைப்பாதைகள்
நீண்டுகொண்டே போகின்றன.....
நாராசமாய் வீறிட்டுக்கொண்டிருக்கிறது
அதன் அனர்த்த மூச்சுக்காற்று...

மௌனம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மௌனம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
மௌனம் சம்மதமல்ல
மந்திரக்கோல்
மாயாஜால மொழி
மனதின் அரூபச் சித்திரம்
மேற்தோலின் உள்ளூறும் காற்றின் ருசி
மகோன்னத நறுமணம்
மரித்தார் உயிர்த்தெழல்
மாகடலின் அடியாழ வெளி
மையிருட்டிலான ஒளி
மாமாங்க ஏக்கம்
மீள் பயணம்
மருகும் இதயத்தின் முனகல்
மனசாட்சியின் குரல்
மிதமிஞ்சிய துக்கம்
மகா அதிர்ச்சி
முறிக்கும் புயலுக்கு முந்தைய அமைதி
வழிமறந்தொழியும் சூன்யவெளி
மொழியிழந்தழியும் எழுத்துக் கலை
மரணமனைய உறைநிலை……..

நமதான ரகசிய உயிர்களும் உயிரிகளும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நமதான ரகசிய உயிர்களும் உயிரிகளும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

உனக்குள்ளிருக்கும் ரகசிய உயிரியை
உனது வரிகளிலெல்லாம் உயர்த்திப்பேசியவாறே
எனக்குள்ளிருப்பதை எள்ளிநகையாடுகிறாய்.
ஒரு சொல் ரகசிய உயிரியாய் எவரொருவருடைய
ரத்தவோட்டத்திலும்
மிதந்துகொண்டிருக்கலாகும் சூட்சுமம் அறிந்திருந்தும்
அறவேயதை மறுதலித்தாகவேண்டிய அவசியமென்ன?
அதோ _
ஒருவர் அருவ இடக்கையால் ரகசிய உயிரியைத்
தான் போகுமிடங்களுக்கெல்லாம் அழைத்துச்
சென்றவண்ணம்…..
இன்னொருவர் தன் இடுப்புவளைவில்
அதைஏந்தியபடியே…….
வேறொருவருக்கு அதன் அருவத்தலையைத்
தடவித் தீரவில்லை….
நீயுங்கூடத்தான் விண்ணுக்கும் மண்ணுக்குமாய்த்
தாவியபடியே;
ஆனான அந்தரத்திலும் சுவடு பதித்தபடியே….
அப்போதெல்லாம் உன்னை வழிநடத்துவது
உன்னுடைய அந்த ரகசிய உயிரிதானே!
நாமொரு உயிரியாக இருப்பதே
நமக்குள்ளிருக்கும் ரகசிய உயிரியால்தானே!
ரகசியம் என்பதோ உயிரி என்பதோ
கெட்ட வார்த்தைகள் அல்லவே!
நமக்குள்ளிருக்கும் நாமறிந்த அறியாத
ரகசியம்
உயிர்த்திருக்கும் காலம் வரை
அதுவுமோர் உயிரிதான்.
நினைத்துப் பார்த்தால்
நாமேகூட ரகசிய உயிரி நமக்கு.
அறிந்தவர்களுக்குள்ளிருக்கும்
ரகசியம்
உயிரி _
ரகசிய உயிரி.

மனிதநேய மாசுகள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 மனிதநேய மாசுகள்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
நான்கு சொந்த வீடுகளும்
நவீன படகுக்காரும்
கொண்ட
கட்சிப்பின்புலம் கொண்ட
அதிசாதாரணக் கவியொருவர்
வறுமை குறித்து பக்கம்பக்கமாக
எழுதித்தள்ளுவதை
வாய்பிளந்து ரசித்துக்கொண்டிருப்பவர்கள்
அவரை விட அதிசிறந்த கவிஞரொருவர்
அரைவேளை கஞ்சிக்கும் வழியில்லாமல்
வீட்டுவாடகை கட்ட வழியின்றி
மூச்சுத்திணறிக்கொண்டிருப்பதைக்
கவிதையாக்கி எழுதுவதை
புலம்பலென்று பகுத்து
கடந்துசெல்கிறார்கள்.

அன்பே உருவாதலு'க்கான அதி எளிய வழி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அன்பே உருவாதலு'க்கான

அதி எளிய வழி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
யார் என்ன எழுதினாலும் அநாயாசமாக ‘லைக்’கிட்டுத் தள்ளிக்கொண்டிருந்த கை ஒருநாள் சுளுக்கிக்கொண்டுவிட்டது.
அமிர்தாஞ்ஜன், டைகர் பாம், பிண்ட தைலம்
எதுவும் உதவிக்கு வரவில்லை.
அந்தக் கைக்குரியவருக்கு
அழுகையழுகையாய் வந்தது.
ஆரேனும் தன்னை அன்பிலாக் காட்டான்,
சகமனிதவிரோதி,
மன்னிக்கத் தெரியாத மிருகம்,
அ- புரட்சியாளர்,
அசிங்கம்பிடித்த விருப்புவெறுப்புவாதி,
அநியாய சார்பாளர்,
அனுதினம் பாரபட்சம் பழகுபவர்
இன்னும் என்னென்னவோ எண்ணிவிடுவார்களே
இவருமவரும்
தெரிந்தவர்களும் தெரியாதவர்களும்
இருப்போரும் இல்லாதாரும்
கல்லாரும் கற்றாரும்
உள்ள விருப்புவெறுப்புக்கேற்ப
உற்றார் உறவினர் நட்பினர் விரோதிகள்
எல்லோரும் ….
என்ற கவலையில்
விறுவிறுவெனத் தலைசுற்றியது அவருக்கு.
மாற்றுக்கருத்திருந்தாலும் மறைத்து ’லைக்’ இட மறவாமலிருப்பதே
மகோன்னத மனிதப் பண்பு!
இடதுகையால் எழுதும் பழக்கத்தைக் கற்றுத்தராத
பள்ளிமீதும் கல்லூரி மீதும்
கடகடவென்று வசையை அள்ளியிறைக்கத்
தொடங்கிய மனதை
பிரயத்தனத்தோடு அடக்கிக்கொண்டார்.
அவருடைய ’லைக்’கிற்கு அப்பாலாகக்கூடாது அவையும்.
இத்தனை கரைபுரண்டோடும் அன்புநிறை
பத்தரைமாற்றுத்தங்க வித்தகரின்
இன்றைய லைக்குகளுக்காகக் காத்துக்கொண்டிருக்காமல்
தன்பாட்டில் இயங்கிக்கொண்டிருக்கிறது
ஃபேஸ்புக்
என்பதே அன்னாரின் இன்னாளுக்கான
ஆகப்பெரும் துக்கமாக……..

கண்ணிருட்டும் பசியும் இன்னுமான நெடுந்தொலைவும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கண்ணிருட்டும் பசியும்

இன்னுமான நெடுந்தொலைவும்
‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

குழந்தைகளின் கைகளில்
பானகம் நிரம்பிய கோப்பை தரப்படுகிறது
ஆளுக்கு ஒன்றாய்.
வெய்யிலில் வந்திருக்கிறார்கள்
குழந்தைகள்.
அவர்களுடைய விழிகள்
சோர்வில் அரைமூடியிருக்கின்றன.
நாவறள தோள் துவள கால் தளர
வரிசையில் காத்திருக்கும்
அந்தக் குட்டி மனிதர்களைச்
சூழ்ந்துகொள்கிறார்கள் பெரியவர்கள்.
’யாரைக் கேட்டுக் கொடுத்தீர்கள் பானகம்?
குறிப்பாக, எங்களை ஏன் கேட்கவில்லை’
யென்று
அத்தனை ஆவேசமாகக் கேட்கும்
‘அங்கிளி’ன் முழி பிதுங்கித்
தெறித்துவிழுந்துவிடுமோ
என்று பயந்துபோகிறார்கள் குழந்தைகள்.
பானம் என்றால் பானகம் தானா –
வேறு எதுவும் இல்லையா
காம்ப்ளான், இளநீர், கொய்யாப்பழ ஜூஸ்
ஏன், வெறும் தண்ணீரே கூடக் கொடுக்கலாமே
என்று ஒருவர்
நீதிமன்றத்தில் குறுக்குவிசாரணை செய்யும்
தோரணையில் கேட்கிறார்.
உண்மையில் எப்பொழுதுமே முன்முடிவோடு
தீர்ப்பெழுதி தண்டனை வழங்கும்
நீதியரசர் அவர்.
பேருந்துப் பயணத்திற்கு வழியில்லாமல்
பிஞ்சுக்கால்களால் அத்தனை தூரம்
அந்தக் குழந்தைகள் நடந்துவருவதைப்
பார்க்காதவர்
யாரேனுமிருக்கமுடியுமா என்ன?
ஆனால், அவர்களை நோக்கி ஆதுரத்தோடு
தண்ணீர்க்குவளையை நீட்டிய கை
அரிதினும் அரிது.
”அதற்காக?
யார் வேண்டுமானாலும்
அவர்களுடைய தாகம் தீர்க்கட்டும்
என்று விட்டுவிடமுடியுமா என்ன?”
”குழந்தைகளின் தாகத்தைத் தீர்ப்பதற்கு
பானகம் நல்லதுதானே,
யார் தந்தால் என்ன?” என்று கேட்டவரின்
வாயிலேயே ‘சப்’ என்று அறைந்தபடி
வேறுவகை விபரீத பானங்களை விற்கும்
அப்பட்ட வியாபாரி யொருவர்
ஆத்திரத்தோடு கூவுகிறார்:
”என்னைக் கேட்டால் நான்
தந்திருக்க மாட்டேனா?”
“நல்ல காரியத்தை யார் வேண்டுமானாலும்
தாமாகவே செய்யலாமே?”
“தாராளமாக. ஆனால்,
அவர்கள் யார் என்பதைத்
தீர்மானிப்பது நானாக இல்லாதவரை
உங்களுக்குத் தொல்லைதான்.”
சொன்னவர் குரலிலிருந்த உறுதி
அசாதாரணமானது என்று
அங்கிருந்த அவருக்கு வேண்டப்பட்டவர்கள்
கரகோஷம் எழுப்புகிறார்கள்.
திடீரென்று ஏதோவொரு வகையில்
வாக்குவங்கிக்கும் வெறுப்பு அரசியலுக்கும்
தொடர்புடையவர்களாகிவிட்ட
உண்மையை அறியாதவர்களாய்
வெள்ளந்தியாய் கோப்பையை ஏந்தி நிற்கும்
அந்த வாடிய முகங்களின்
பின்னணியில்
ஷெனாயின் துணையோடு
சன்னமாய்க் கேட்டுக்கொண்டிருக்கிறது _
’THERE IS MANY A SLIP BETWEEN THE CUP AND THE LIP’

கவிதையின் விதிப்பயன் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கவிதையின் விதிப்பயன்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

நீங்கள் மர்மம் என்றால் அது மர்மம்;
அதுவே இன்னொருவர் சொன்னால்
அதர்மம்.
மர்மமெனக்கோருணர்வென்றால்,
மனநிலையென்றால்
உங்களுக்கு அது கத்தி கபடா கொலை
துப்புத்துலக்கலாக
இருக்கக்கூடாதா என்ன?
உயிரின் ஊற்றுக்கண் ஆகப்பெரிய
மர்மமென்றால்
பர்மா நீரல்ல நிலமென்கிறீர்கள்!
கவிதையின் சர்வமும் நானே என்று
எத்தனை தன்னடக்கத்தோடு
கர்வங்கொள்கிறீர்கள்!
அதைக் கண்டு மலைத்துயர்ந்த
என் இருபுருவங்களும்
இன்னமும் இறங்கி இயல்புநிலைக்குத்
திரும்பியபாடில்லை.
கர்மம் கர்மம் _
இல்லையில்லை உங்களைச்
சொல்லவில்லை.
வர்மக்கலை பயின்ற நல்லறிவாளி நீங்கள்
நயத்தக்க வார்த்தைகளால்
வையத்தொடங்கினாலோ
நான்கைந்து வட்டுகள்
நிச்சயமாய் நகர்ந்துவிடும் முதுகெலும்பில்
நன்றாகவே அறிவேன்…
மற்றெல்லோரையும் முட்டாள் எனச்
செல்லமாகவும் சினந்தும் குட்டியும்
இட்டுக்கட்டியும்
தன்னைத்தானே அரிதரிதாமெனக் கட்டங்கட்டிக்
காட்டுவோர்
பலரையும்கூட பரிச்சயமுண்டெனக்கு
என்பதுதான் பிரச்சினையே.
கர்மவினையென்று கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே
நான் குறிப்பிடும் கர்மமும் அதுவேயென்று
எங்குவேண்டுமானாலும்
துண்டுபோட்டுத் தாண்டிவிடுகிறேன்.
பயன்படுத்திய பழையது போதுமா?
புதிதாக வாங்கவேண்டுமா?
நிர்மலமும் மலமும் வேறுவேறென்று
உறுதியாகத் தெரியுமென்றாலும்
கர்மமும் கருமமும் ஒன்றா அல்லவா என்று
சொல்லமுடியாதிருக்கிறது.
துர்மரணமோ கல்யாணச்சாவோ _
இருத்தலும் இருபதுவரிக் கவிதை
இயற்றலும்..
திருத்தமான இருபதுக்கும்
குறியீடாகும் இருபதுக்குமிடையேயான
பிரிகோடுள்ள வரை _
எவர் மறுத்தால் என்ன?
அவரவர் மர்மம் அவரவருக்கு.