LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, April 15, 2025

அடிவானப்பறவை - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அடிவானப்பறவை

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
தினமொரு சிறகிழையை மட்டுமாவது
எனக்காக உயரத்திலிருந்து மிதக்கவிடு என்று
பறவையைக் கேட்பது
பைத்தியக்காரத்தனம்…..

உயரத்தே ஒரு புள்ளியாகச் செல்லும் பறவை
யெலாம் தனதாய்க் கருதி
ஒரு சிறு சிறகுதிர்த்துச் செல்லாதாவென
சதா அண்ணாந்து பார்த்திருந்து
கழுத்துவலிக்கு அமிர்தாஞ்சனைத்
தடவிக்கொண்ட இடத்தில்
சுளீரென எரிவதில்
இரட்டிப்பாகும் இழப்புணர்வு.

இறங்கிவாராப் பறவையின் காலில்
அதற்கேயானதொரு மடலைக்
கட்டியனுப்பவும் இயலாது.

பறவைக்குப் படிக்கத் தெரிந்த மொழி
யெது?

மொழியே மனிதத்துயரின் மூலம் என்றால்
வழிமொழியுமோ பறவை?

பறவையின் அழகில் மனதைப் பறிகொடுத்ததோடு
அது எனக்கேயெனக்காய் பேசுமோ என்ற
எதிர்பார்ப்பும் சேர _

சிறகடித்துக்கொண்டிருக்கும் பறவையின்
ஆகாயமோ
விரிந்துகொண்டே போகிறது.

ஒருபோது சற்றே யப் பறவை தாழப்பறந்துவர
பேரதிர்வில் மனம் பிளக்க
’பச்’சென்று எச்சமிட்டுச் சென்றது பறவை
உச்சிமண்டையில்.

பச் எச் உச் மட்டுமே நிச்சயமான
மிச்சமாக….

அலகில் குச்சிபொறுக்கிச்செல்லக்கூடக்
கீழிறங்கிவராப் பறவையின் இறக்கைகளை
உடைமைகொள்ளும் வழி தெரியாமல்
அழப்பழகும் மனதிற்கு

சிறகிலாப் பறவையை ஒருநாளும்
பார்க்கப் பிடிப்பதில்லை.

இன்றும் தொடரும் உண்மைக்கதை!

 இன்றும் தொடரும் உண்மைக்கதை!

(*விக்கிபீடியாவிலிருந்து)

தமிழில் - லதா ராமகிருஷ்ணன்



ஆபிரகாம் லிங்க்கன் – செருப்புத் தைப்பவரின் மகனாகப் பிறந்து அமெரிக்காவின் ஜனாதிபதியானவர்– அமெரிக்காவின் 16ஆவது அதிபராக 1861 முதல் 1865 வரை இருந்தவர். சக மனிதர்களை அடிமைகளாக வைத்திருப்பதை எதிர்த்தவர். சட்டம் இயற்றி அந்த வழக்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்தவர்.

அமெரிக்க ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்க்கனின் தந்தை செருப்புத் தைப்பவர். செருப்புத் தைப்பவரின் மகன் நாட்டின் அதிபராகிவிட்டானே என்று வழிவழியாக வளவாழ்வு வாழும் பரம்பரையில் வந்தவர்கள் பலர் முகஞ்சுளித்தார்கள். உயர்குடிப் பிறப்பினரான தங்களுக்கே நாட்டை ஆளும் உயர்பதவிகளில் வகிக்க உரிமையும் தகுதியும் உண்டு என்று எண்ணுபவர்கள் அவர்கள். செருப்புத் தைக்கும் ஒருவரின் மகன் தங்களை ஆள்வதா என்று ஆத்திரப்பட்டார்கள்.

அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்ற பின் ஆபிரகாம் லிங்க்கன் முதன் முறையாக உரையாற்ற நாடாளுமன்றப் பேரவைக்குள் நுழைந்தபோது அங்கிருந்தவர்களில் ஒருவர் எழுந்தார். மேற்குடிவர்க்கத்தைச் சேர்ந்த செல்வந்தர் அவர். ஆபிரகாம் லிங்க்கனைப் பார்த்து அவர், “மிஸ்டர் லிங்க்கன், உங்கள் தந்தையார் என் குடும்பத்திற்கு செருப்பு தைத்துக் கொடுத்துக்கொண்டிருந்தார் என்பதை நீங்கள் மறக்கலாகாது”, என்றார்.

அவையிலிருந்தவர்கள் எல்லோரும் சத்தமாகச் சிரித்தார்கள். ஆபிரகாம் லிங்க்கனை அத்தனை பேர் முன்னிலையிலும் முட்டாளாக்கி அவமானப் படுத்திவிட்டோம் என்று அவர்கள் எண்ணினார்கள்.

ஆனால் லிங்க்கன் கூனிக் குறுகவில்லை. அவருடைய தரமும் திறமும் அடியோடு வேறு. தன்னை அவமானப்படுத்துவதாய் பேசிய மனிதனை நேருக்குநேராகப் பார்த்தவர், “சார், உங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்தாருக்கு என் தந்தை வழக்கமாக செருப்பு செய்துகொடுப்பது எனக்குத் தெரியும். இங்கேயுள்ள வேறு பலரும் கூட அதை அறிந்திருப்பார்கள். அவர்களுக்குக் கூட என் தந்தை செருப்பு செய்துகொடுத்திருப்பார். ஏனென்றால், என் தந்தை செய்வதுபோல் வேறு யாராலுமே அத்தனை அருமையான பூட்சுகளைத் தயாரிக்க முடியாது. அவர் ஒரு சிருஷ்டிகர்த்தா. அவர் தயாரிக்கும் பூட்சுகள் வெறும் பூட்சுகள் மட்டுமல்ல. அவர் அத்தனை ஆத்மார்த்தமாய் அவற்றை உருவாக்கினார். உங்களிடம் கேட்க விரும்புகிறேன். அவர் தயாரித்துத் தந்த பூட்சுகளைப் பற்றி உங்களுக்கு அதிருப்தி ஏதேனும் உண்டா? அவை குறித்த புகார் எதேனும் உண்டா? ஏனெனில், எனக்கும் பூட்சுகள் தயாரிக்கத் தெரியும். என் தந்தை செய்துதந்த பூட்சுகள் சரியில்லை என்று நீங்கள் எண்ணினால் வேறு பூட்சுகளை உங்களுக்கு என்னால் தயாரித்துத்தர முடியும்! ஆனால், எனக்குத் தெரிந்தவரை, என் தந்தையார் உருவாக்கிய பூட்சுகளைப் பற்றி எவரும் ஒருபோதும் குறைசொல்லியதில்லை. அவர் ஒரு மேதை, ஒரு படைப்பாளி; என் தந்தையை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்!” என்றார்.

அவர் பேசியதைக் கேட்டு அவையே மௌனமாகிவிட் டது. யாருக்கும் பேச்செழவில்லை. அவர்களால் ஆபிரகாம் லிங்க்கன் என்னமாதிரியான இரும்புமனிதர் என்பதைப் புரிந்துகொள்ள இயலவில்லை. அவர் பூட்சு-தயாரித்தலை ஒரு கலைவடிவமாக்கி னார், ஒரு படைப்புத் திறனாகப் பேசினார்! அவருடைய தந்தையின் தொழிலில் கூனிக் குறுக எதுவுமே யில்லை என்றும், அப்பழுக் கற்ற, கலைநயம் மிக்க பூட்சுகளை தன் தந்தை உருவாக்கிய விதத்தை, அவை குறித்து யாரும் ஏதும் குறைசொல்லவியலாத அளவு செய்நேர்த்தியோடு தன் தந்தை தயாரித்ததை எண்ணி தான் பெருமைப்படுவதாகவும் அவையோர் முன் தலைநிமிர்ந்து தெரிவித்தார். அமெரிக்காவின் அதிபராக இருந்தாலும், தனக்கும் பூட்சுகள் செய்யத் தெரியும் என்றும், தன் தந்தை செய்துதந்த பூட்சுகளில் குறையிருந்தால் வேறொரு ஜதை காலணிகளை செய்துதர தான் தயாராயிருப்ப தாகவும் தெரிவித்தார்!

ஆபிரகாமை அவையோர் முன் முட்டாளாக்கிக்காட்ட, மதிப்பழிக்க முற்பட்டவர்(கள்) இறுதியில் தலைகவிழ்ந்து நின்றார்(கள்).

(*நன்றி: விக்கிபீடியா)

கதையும் விடுகதையும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கதையும் விடுகதையும்  -  

‘ரிஷி’ 

(லதா ராமகிருஷ்ணன்)


என்னை எழுதேன் என்று வேண்டிக் கேட்கிறது.

என்னை எழுத மாட்டாயா என்று கெஞ்சலாய்க் கேட்கிறது.
என்னை எழுதித் தீர்த்துவிடேன் என்று நாத்தழுதழுக்க அது கூறும்போது
என் கண்களில் நீர் குத்தாமல் என்ன செய்யும்?

’இன்னும் அருவமாகவே நிற்கும் உன்னை
என்னவென்று எழுதுவது?’ என்று கேட்கத்தோன்றியும்
கேட்காததற்குக் காரணம்
அதன் கண்களில் கொப்பளிக்கும் கையறுநிலை.

அந்த அவலநிலையைக் கண்கொண்டு காணும்
கொடுமனம் வாய்க்காததால்
அரைவட்டமொன்றை வரையத் தொடங்கினேன்.

எத்தனை அரைவட்டங்கள்!

ஒவ்வொரு அரைவட்டமும் இன்னொன்றோடு
இரண்டறப் பொருந்தி முழுவட்டமாகாமலே
இன்னுமின்னுமாய் அரைவட்டங்களையே
வரைந்தவண்ணமிருக்கும்
கையின் முழுமை
காட்டுப்பாதையில் வழிதொலைத்த
குட்டிப்பெண்ணின் அழுகையாக….

அவளைப் பின் தொடரும் வரிக்குதிரை
ஒட்டகத்தின் உயரத்திலும்
முன் இடரும் முட்புதர்
மலரின் மென் நயத்திலும்
இருக்க _

கருக்கல் கட்டியங்கூறும் பகலின் இருட்டு
பழகப்பழக _

அழமறந்து அண்ணாந்து
மரங்களையும் மந்திகளையும் விழியகலப்
பார்த்து ரசித்தவாறே
காற்றில் தன் முகவரியை எழுதியனுப்பிக்
கொண்டிருக்கிறாள்
சிறுமி.All reactions:

ஒரேயொரு கப் காஃபி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஒரேயொரு கப் காஃபி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஒரேயொரு கப் காஃபி கேட்டேன்.
நினைவூட்டல், நினைவுகூரல், நெகிழ்வுறல்
நெருக்கமுணரல், தகிப்பு, கொதிப்பு, கொந்தளிப்பு
கதகதப்பு, உயிர்ச்சூடு, உன்மத்த ஜன்னி…..
கால நீள அகலங்களிடை கட்டுமொரு
திரவப்பாலம்....
கை வாய் இடை மரணக்கிணறின்
மோட்டார்பைக்....
இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க
காதம் பல கடந்து வந்திருந்தேன்....
ஒரேயொரு கப் காஃபி கேட்டேன்.
அரைகப்பாயிருந்தாலும் தரும் கனிவில் நுரைபொங்கும்….
சிறு முகச்சுளிப்போடு வரவழைக்கப்பட்ட காஃபியில்
கருகிவெந்தன குரல்வளை மனம் ஆன்மா மேலும்….
போலும்தான்போலும் எல்லாமும்……
(* ’தனிமொழியின் உரையாடல்’ தொகுப்பிலிருந்து)

வாழ்வை ‘அளப்பவர்’ - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 வாழ்வை ‘அளப்பவர்’

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

யானையின் பாதைகள் அதைவிட தனக்குத்தான்
அதிகம் தெரியும் என்றவரை
தும்பிக்கையால் தூக்கிப்போடலாமா என்று
ஒரு கணம் யோசித்த யானை
தன் தும்பிக்கையின் வலிமையிலும்
வீசியெறியப்படும் வேகத்திலுமாய் நொறுங்கிப்போய்விடக்கூடும் பாவம்
என்று ஏதும் செய்யாமல்
அப்பால் நகர்ந்துசென்றது.
'இக்குணூண்டு சிட்டுக்குருவிக்கு
இந்த உலகத்தைப் பற்றி என்ன தெரியும்'
என்றவரிடம்
தன் குட்டி இறக்கைகளை விரித்துக்காட்டி
யது பறந்துசென்றுவிட்டது.
குண்டு சட்டிக்குள் குதிரையோட்டுவதாய்
போவோர் வருவோரையெல்லாம் தூற்றிக்கொண்டேயிருந்தவரை
'நீ புதைசேறுக்குள் இறங்கிக்கொண்டிருப்பது புரியவில்லையா'
என்று தாழப்பறந்துவந்து
தலையில் குட்டுவதாய்த்
தட்டிச்செல்லக்கூடும் ஏதேனுமொரு
அண்டங் காக்காயோ, வல்லூறோ........All reactions:

இறுதித்தீர்ப்பு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 இறுதித்தீர்ப்பு

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

அந்த சமுத்திரங்களின் அலைகள் இல்லாது போயினும்
இந்த பூமி சுற்றுவதை நிறுத்திவிட்டாலும்
வந்த கொரோனா இத்தரையிலிருந்து
மொத்தமாய் விடைபெற்றுப் போய்விட்டாலும்
அப்படியேதானிருக்கும்
அத்தனை பேரையும் அடிமுட்டாள்களாக பாவித்து
உன் முகம் நிரந்தரமாய் தரித்துக்கொண்டுவிட்ட
அந்த அகங்காரச் சிரிப்பு.

அன்னா அக்மதோவாவின் கவிதைகள் 12, 13, 14 - ஆங்கிலத்திலிருந்து தமிழில்: லதா ராமகிருஷ்ணன்

 அன்னா அக்மதோவாவின்

கவிதைகள் 12, 13, 14

ஆங்கிலத்திலிருந்து தமிழில்: லதா ராமகிருஷ்ணன்

12


போகும்வழியில் எண்ணிக்கொண்டேன் _
வளர்ந்தமனிதராகிவிடுதல்
வந்துபோகும் வருடங்களில்
தானாக நடந்துவிடும் என்று
நல்லவிதமாக இருந்தால்போதும்
வாழ்க்கை எளிதாகிவிடும் என்று.
யாருமே சொல்லவில்லை
முழுமனிதராக வளர்ச்சியடைதல்
மிக மிகக் கடினமாயிருக்கும் என்று.
A POEM BY ANNA AKHMATOVA
SOMEWHERE ALONG THE WAY
I GOT THE NOTION
THAT ADULTHOOD COMES AUTOMATICALLY
WITH THE PASSING OF THE YEARS
AND THAT I F I WOULD JUST BE GOOD ENOUGH
LIFE WOULD BE EASY.
NOBODY TOLD ME
GROWING UP
WOULD BE SO HARD.

(13)

கனவில்

அன்னா அக்மதோவா
(ஆங்கிலத்திலிருந்து தமிழில்: லதா ராமகிருஷ்ணன்)
இருண்டடர்ந்த மிக நீண்ட பிரிவை
உன்னோடு சரிசமமாய்ப் பகிர்ந்துகொள்கிறேன்
ஏன் தேம்புகிறாய்? உன் கையைக் கொடு.
திரும்பிவருவாய் என்று உறுதிகூறு.
நீயும் நானும் நெடிதுயர்ந்த மலைகளைப் போன்றவர்கள்;
இன்னும் அருகிலேக நம்மால் இயலாது.
எப்போதாவது நள்ளிரவில் என்னிடம் பேசு
நட்சத்திரங்கள் வழியாக.



அன்னா அக்மதோவாவின் கவிதை - 14

ஆங்கிலத்திலிருந்து தமிழில்:
லதா ராமகிருஷ்ணன்

என் வழி்
ஒன்று நேர்வழிகளில் செல்கிறது,
ஒன்று வட்டமாய் அலைகிறது:
அவனுடைய கடந்தகாலப் பெண்ணொருத்திக்காய்க் காத்திருக்கிறது,
அல்லது வீடு திரும்புவதற்காக.
ஆனாலும், நான் போகிறேன் _ அங்கே காத்திருக்கிறது அவலம் _
நேராகவோ, அகன்றுவிரிந்தோ அல்லாத வழியொன்றில்
என்றுமான இன்மைக்குள்
ரயில்பாதைகளிலிருந்து நீங்கிய ரயில்கள் போல்.





l reactions: