LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, September 12, 2020

ஊருக்கு இளைத்தவர்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஊருக்கு இளைத்தவர்கள்



‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)


அவ்வப்போது சிலர் விலகிச்

 செல்வர்;

சிலர் விலக்கப்படுவர்;


சிலர் புதிதாகச் சேருவார்கள்;


சிலர் சேர்க்கப்படுவார்கள்.


என்றபோதும்

 _
உண்மையாகவே ஊருக்கு

இளைத்தவர்கள்


என்று

எப்போதுமே சிலர் உண்டு.


இந்தப் பிரிவில்


இளைத்தவர்கள் என்ற பெயரில்


கொழுத்தவர்கள் சிலரும்


இடம்பிடித்துக்கொள்வார்கள்.


பின்


உண்மையான இளைத்தவர்களை


கொழுத்தவர்களாக்கிக்

காட்டுவதற்காக


சளைக்காமல் களைக்காமல்


உத்திகளை வகுப்பார்கள்.


சித்தரிப்பார்கள் சில


இறந்தகாலங்களை.


எனில்,

உண்மையான ஊருக்கு

இளைத்தவர்கள்


எகத்தாளத்திற்கும்

எட்டியுதைத்தலுக்கும்


வாகான


இளைத்தவர்களாகவே _


ஒருகாலத்தில்


’ஜோல்னாப்பை’யர்களாகக்


காண்பிக்கப்பட்ட படைப்பாளிகள்


இன்றும் ஜோல்னாப்பையர்களாகவே


இருப்பதுபோல்.

சமத்துவம் : ஒரு சினிமாவின் தலைப்பு -‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 சமத்துவம் : 

ஒரு சினிமாவின் தலைப்பு



‘ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)


கோவிலுக்குச் சென்றாலும்கூட

கடவுளையா தம்மையா _ யாரை அதிகம் 

பார்க்கிறார்கள்

சாமான்யர்கள் என்று

மூக்கின் அருகில் கூப்பிய கரங்களின்

 மறைவிருந்து

அரைக்கண்ணால் அவ்வப்போது பார்க்கும்

பிரபலங்கள்
 _
பிரபலங்களான பின்பு ஒருநாளும்

தர்மதரிசனத்திற்கான வரிசையில்

அதி ஏழைகளோடும் மித ஏழைகளோடும் சேர்ந்து

சில பல மணிநேரங்கள் காத்திருந்து கடவுளைக்

 காண

மனமொப்பாப் பெருந்தகைகள்
 _
அரண்மனைபோலொரு வீட்டைக்

கட்டிமுடித்த கையோடு

சித்தாள்கள் கொத்தனார்களை முன்னறையைத்

 தாண்டி

வர அனுமதிக்காத பிரமுகர்கள்
 _
தப்பாமல் ஒப்பனையுடனேயே தெரியும்

பெரியமனிதர்கள்
 _
என்றெல்லோரும் முழங்குகிறார்கள்

எங்கெல்லாமோ சமத்துவமில்லையென….

பட்டு சுற்றப்பட்ட தன் முதுகில் அழுக்கு தட்டுப்பட

வாய்ப்பேயில்லை என்று

திட்டவட்டமாய்ப் பறையறிவித்துக்
கொள்வார்க்கு
ம்,

தன் முதுகைக் காணமுடியாது தன்னால்

என்று தத்துவம் பேசுவார்க்கும்

எதிரில் உண்டு எப்போதும்

விதவிதமான நீள அகலங்களில்

நிலைக்கண்ணாடிகள்.

ஏற்ற இறக்கங்கள் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

ஏற்ற இறக்கங்கள்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

முனைப்பாகப் படித்துக்கொண்டிருந்தார் கேள்விகளை

மனக்கண்ணால்.

நான்கைந்து சொற்கள், சொல்வழக்குகள் தரப்பட்டிருந்தன
வினாத்தாளில்.
ஒவ்வொன்றுக்கும் ஐந்து முதல் ஐம்பது வரை மதிப்பெண்கள்.

’மலையேறிவிட்டது காலம்’ என்ற வரியை மொழிபெயர்க்க
எத்தனை முயன்றும் முடியாமல்
மூச்சுத்திணறிக்கொண்டிருந்தார் மொழிபெயர்ப்பாளர்.

’வடக்கிருத்தல்’ என்ற சொல்வழக்கு நல்லவேளையாக தரப்பட்டிருக்கவில்லை.

அதற்காய் ஆறுதலடைய முடியாதபடி
‘அவன் சரியான சாம்பார்’
ஆறாவது கேள்வியாக இடம்பெற்றிருந்தது.

தலைசுற்றவைக்க அதுபோதாதென்று
’விழல்’ கண்ணில் பட்டு
அழத்தூண்டியது.

’கீழே விழலா’ ’விழலுக்கு இறைத்த நீரா’ என்று
contextஇல் வைத்துப் புரிந்துகொள்ளலாமென்றால்
இருபொருளையும் தருமொரு சொல்லாயிருந்த அது
அத்தனை வெள்ளந்தியாய்ச் சிரித்துக்கொண்டிருந்தது.

முதலில்,
மலையேறிவிட்ட காலத்தை இறக்கவேண்டும்.
எப்படி?
முதன்முதலில் காலம் மலையேறியது எப்போது?
எதன்பொருட்டு ஏறியது?

மலையில் வடக்கிருக்கிறதோ காலம்?

ஒருவேளை இது ஆங்கில columnமோ?

சாம்பார் ஜெமினிகணேசன் மட்டும்தானா?
வேறு யாரேனுமா?

நிஜமா நிழலா சாம்பார்?
அப்படியானால் குறியீடு நிழலா?

நிழல் shadow நிழல் shade….

ஒன்றும் இரண்டும் மூன்றென்பது
சரியும் சரியல்லவும் _
மொழிபெயர்ப்பிலும்.

மொழியேறியும் இறங்கியும்
வழிபோகியபடி
இருந்தவிடமிருந்தவாறு
காத்துக்கொண்டிருக்கிறது காலம்
ஏறவும் இறங்கவுமான மலைக்காக.

காத்துக்கொண்டிருக்கிறார்கள்
மொழிபெயர்ப்பாளர்கள் சிலரும்
மிகச் சரியான இணைச்சொற்களுக்காய்.

’போயும் போயும் இதற்காகவா பொழுதை வீணடிப்பார்கள்’
என்று வேறு சிலர்
கையில் கிடைத்த வார்த்தைகளைக்கொண்டு
குத்துமதிப்பா யொரு பொருளைத் தந்து
பத்தரைமாற்று இலக்கணப் பிழைகளோடு
அயர்வென்பதறியாமல்
பெயர்த்துக்கொண்டிருக்கிறார்கள் இருமொழிகளை.

நிலை(ப்)பாடு - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நிலை(ப்)பாடு


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)




அதிகபட்சமாக அறுபதுபேர் கூடியிருக்கும் அரங்கில் அவர்
ஆயிரம்பேர் இருப்பதான மயக்கத்தில் இருகால்களால் உருண்டவாறிருக்கிறார்.
பொருட்படுத்திக் குனிந்து அரிய முத்து என்று கையிலெடுத்து
விறுவிறுவென அரங்கெங்கும் பொடிநடையாய் நடந்து அவரிவரெவரெவரிடமோ தன்னை அறிமுகப்படுத்தி
தன் அருமைபெருமைகளையெல்லாம்
சிறு சிறு ஹைக்கூ கவிதைகளாகவோ
அல்லது இறுதியற்ற நீள்கவிதையாகவோ
விரித்துரைப்பார் என்ற அவரது நம்பிக்கை
பொய்யாக
சுருட்டியெறியப்பட்ட காகிதக்கிழிசல்களாய்
சிறு பெரு பாதங்களால் இரக்கமற்று எத்தப்பட்டும்
திரும்பத்திரும்ப அரங்கரங்காய்ப் போய்க்கொண்டிருந்தவருக்கு
அறுபதென்பது அறுபதாயிரமாய்ப் புரியத்தொடங்கியபோது
அவருக்கு வயது அறுபத்தொன்பதுக்கு மேலாகியிருந்தது.
வருத்தமாயிருக்கிறது அவரைப் பார்க்க
கவிதைக்கான மனப்பிறழ்வின் முழுவிழிப்பை
யொருபோதுமடைய மாட்டாதவர்கள்தான்
புகழுக்கான பிரமைபிடித்தவர்களாகி
விடுகிறார்கள் என்று
அவரிடம் எப்படிச் சொல்லிப் புரியவைப்பது?

உயிர்க்கிளி இருக்கும் மறைவிடம் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 உயிர்க்கிளி இருக்கும் மறைவிடம்



’ரிஷி’

(லதா ராமகிருஷ்ணன்)


அவர்கள் ஆளுக்கொரு பட்டியல்

 வைத்திருக்கிறார்கள்.

பல நேரங்களில் ரகசியமாகவே

 வைத்திருக்கிறார்கள்

தத்தம் பட்டியலை.


ஒரு பட்டியல் பகடைக்காயாக முடியூம்.

பெரிய துருப்புச்சீட்டாக மாற முடியும்.

பிரம்பாக பிச்சுவாக் கத்தியாக

பேரழிவை விளைவிக்கக்கூடிய அணுகுண்டாக -

இன்னும் பலப்பலவாக்க முடியும்….


சில நேரங்களில் சிலரை மட்டும் கறாராகத்

தேர்ந்தெடுத்துக்கொண்டு

தங்கள் பட்டியல்களை ஒருவரோடொருவர்

 ஒப்பிட்டுப்பார்த்துக்கொள்கிறார்கள்.


அந்த சிலர் வெகுசிலரேயானாலும்

அவர்களில் ஒருசிலர்

காலப்போக்கில் 

கடும்பகையாளியாகிவிடும்போது

சில பட்டியல் ரகசியங்கள் அம்பலமேறுகின்றன.


பட்டியலில் அடிக்கப்பட்ட பெயர்கள்

திருத்தப்பட்ட பெயர்கள்

முதலிடத்திலிருந்து முப்பதாவது இடத்திற்கும்

முன்னூறாவது இடத்திலிருந்து தொன்னூறாவது

 இடத்துக்கும்

நகர்ந்துவிட்ட பெயர்கள்

சில இடங்களில் மாய மசியால் எழுதப்பட்டதாய்

மனம் போன போகில் காணாமல்போய்விடும்

 பெயர்கள்

சில தருணங்களில் மந்திரக்கோலால்

 வரவழைக்கப்பட்டதாய்

பட்டியலில் சட்டென்று வந்து ’பச்சக்’ என்று

ஒட்டிக்கொள்ளும் பெயர்கள்

செல்லப்பெயர்கள்

புனைப்பெயர்கள்

இடுகுறிப்பெயர்கள்

ஆகுபெயர்கள்

இடவாகுபெயர்கள்

அடைமொழிகள்

வசைச்சொற்கள்…..


காலம் செல்லச்செல்ல ஒருவர் கையிலுள்ள 

பட்டியலே

அவர்கள் அடையாளமாகிவிடுகிறது.

ஒருவேளை பட்டியல் தொலைந்துவிட்டால்

அதன் ரகசிய இடத்திலிருந்து 

களவாடப்பட்டுவிட்டால்

எடுக்கப்படும் கைக்குரியவர் தன் 

தோற்றத்திற்குரியவராகிவிடுவாரோ

என்ற பெரும்பீதியும்

இறந்தபின்பும் அமரராக இருக்கும் தம்மைக்

கற்பனையில் கண்டு இறும்பூதடையும்

பேராவலுமாய்

பெருகும் குருதியும்

பொறுக்கமுடியாத வலியும்

ஒரு பொருட்டில்லையென்று

உள்வெளியெங்கும்

கூர்கல்லாலும் கத்திமுனையாலும்

செதுக்கிக்கொள்ளத் தொடங்குகிறார்கள்

தத்தமது பட்டியல்களை.

கவிஞர் ஃபிரோஸ்கான் ஜமால்தீனின் கவிதைகள் சில ஆங்கில மொழிபெயர்ப்பில் அமேஸானில்

  கவிஞர் ஃபிரோஸ்கான் ஜமால்தீனின் கவிதைகள் சில

ஆங்கில மொழிபெயர்ப்பில்

அமேஸானில்

கவிஞர் ஃபிரோஸ்கான் ஜமால்தீனின் கவிதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட விரும்பி மேற்கொண்ட முயற்சி பொருளாதாரப் பற்றாக்குறையால் தாமதமாகிக் கொண்டேபோய் இப்போது அமேஸான் கிண்டில் மின் -நூலாகவும் அமேஸான் அச்சுநூலாகவும் உருப்பெற்றிருக்கிறது. சுமார் 30 கவிதைகள் இடம்பெறும் சிறு நூல் இது.


https://www.amazon.com/s?k=firoskhan&i=stripbooks-intl-ship&fbclid=IwAR0KyFwhgph5x4DfaaiocPLiXbpFKXgWQnfeEbYwBpU-p2xUEJGSVdcpKzU&ref=nb_sb_noss