LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Wednesday, April 1, 2020

கொள்ளைநோயும் கொள்ளைக்காதலும்.... ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


கொள்ளைநோயும் கொள்ளைக்காதலும்
வெள்ளையும்சொள்ளையாயுமாய் மெய்யும் பொய்யும்.......


ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

ஒரு புத்தகத்தை ஒருவர் படித்திருப்பதாகச்
சொல்லும்போதே
அவருடைய குரல் நெகிழ்ந்து கரகரக்கிறது.
இன்னொரு மேம்பட்ட உலகிற்குள்
அவர் குடியேறிவிடுவதைப் பார்க்கமுடிகிறது.
அந்தப் புதினத்தின் இரண்டு கதாபாத்திரங்களின்
பெயர்களை
அவர் குறிப்பிடும் விதம்
பிஞ்சுக் குழந்தையை அதிசயமாய்ப் பார்த்து
அத்தனை பத்திரமாய் ஏந்துவதைப்
போலிருக்கிறது.
கதையில் வரும் காடு குறித்து
அவர் பேசும்போது
அதில் வாழும் சிங்கராஜாவும்
ஊறும் நத்தையுமாகிவிடுகிறார்!
அந்த நதிக்கரையில் பொழியும் மழையை
அப்படி நனைந்து நனைந்து
விவரிக்கிறார்!
அந்தக் கதையை எழுதியவரின் பெயரை
மந்திர உச்சாடனம் செய்வதாய்
உச்சரிக்கிறார்!
இன்னொருவர் அதே படைப்பின் பெயரை
சொல்லும் விதமே
அவருடைய அதி மேலோட்டமான வாசிப்பை
அல்லது அறவே வாசிக்காத அப்பட்டமான உண்மையை
அடிக்கோடிட்டுக் காட்டிவிடுகிறது.
அவர் அந்தக் கதை குறித்து முன்வைக்கும்
சொற்களெல்லாம்
ஒப்பனை செய்யப்பட்ட உணர்ச்சிப்
பெருக்கையும் மீறி
முள்ளங்கிபத்தை முசுக்கொட்டை
முப்பத்தியாறு மொள்ளமாரி யென்பதாய்
மேம்போக்காய் ஒரு தொடர்புமற்று
இறைந்து சிதறுகின்றன
குப்பைக்கூளமாய்.
இதற்கு பதில், என்னைப் படிக்கவில்லை
என்று சொல்லியிருந்தால் போதுமே
அது உனக்கும் கௌரவமாக
எனக்கும் கௌரவமாக
இருந்திருக்குமேஎன்று_
இந்தக் கொள்ளைநோயிலிருந்து
நமக்கு நிவாரணம் கிடைக்க
வழியேயில்லையா
என்ற அங்கலாய்ப்போடு
தனக்குள் சொல்லிக்கொள்வதுபோல்
அதோ, அந்த நூல்....


நனவோடை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


நனவோடை
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

ஒரு நூறு பக்கங்களைக் கொண்ட கவிதைத் தொகுப்பு.
சில கவிதைகள் இரண்டு பக்கங்களுக்கு நீள்வதால்
மொத்தம் அறுபது கவிதைகள் இடம்பெற்றிருக்கக்கூடும்.
அத்தனை கவிதைகளும் ஆகத்தரமானவை
யென்று சொல்லவியலாது.
அரங்கம் பெரிதோ சிறிதோ,
பெரும்பாலும் அதில் நண்பர்களும்
உறவினர்களும்
அன்பே உருவான ஒரு சில
இலக்கிய ஆர்வலர்களுமே
வரிசையாய் அல்லது வட்டமாய்
போடப்பட்டிருக்கும் இருக்கைகளில் அமர்ந்துகொண்டிருப்பார்கள்.
வந்திருப்போரெல்லாம் அந்தப் புத்தகத்தை
வாங்குவார்கள் என்று
உறுதியாகச் சொல்லவியலாது.
வாங்கினாலும் வாசிக்காமல்
அடுத்தவருக்குப் பரிசளித்துவிடும்
வாய்ப்புகள் அதிகம்.
பருவம் வந்த அனைவருமே
காதல்கொள்வதில்லை
என்று பாடிக்கொண்டிருக்கிறார் சந்திரபாபு.
சிறப்பு விருந்தினர்கள் நால்வரின்
இலக்கியப் பரிச்சயம்
பாரதியின்நாலிலே ஒன்றிரண்டு
நன்னுமோவாக _
ஆவதெல்லாம் என்னவாயினும்
அந்த நூல் வெளியீட்டுவிழா
நடக்கும் நேரமெல்லாம் நெகிழ்ந்திருக்கும்
கவி மனம்…..
நிகழ்வின் இறுதியில் எஞ்சியிருக்கும்
இருபது பேரின் சன்ன கரவொலியில்
அவர் கண்களில் நீர்துளிர்க்கவும் செய்யலாம்….
அன்னோரன்ன சிலர் இன்று
மட்டந்தட்டிக்கொண்டிருக்கிறார்கள்
மக்கள்பணியாளர்களைப் பாராட்டிக்
கைத்தட்டியோர்
தட்டுக்கெட்டவரென்று.



EINSTEIN ON EGO


பூமிக்கோளமும் BLOATED EGOக்களும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


பூமிக்கோளமும் 
BLOATED EGOக்களும்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


எத்தனை கொரானாக்கள் வந்தாலுமே
எல்லாம் சுயபுராணங்களுக்காகுமே யென
இடைவிடாமல்
தம்மைக் கடைவிரிப்போருக்கு
பேரிடர்களெல்லாம் தம் நாட்டைப் பழிக்கவும்
சக மனிதர்களைக் கூறுகெட்டவர்களாகப் பகுக்கவும்
மூடர்களெனக் கட்டங்கட்டித் திட்டவும்
மட்டந்தட்டவும்
பெருவாரியான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
அரசை
பயங்கரவாத அரசாகப் புரியவைக்கத்
தயங்காமல் பொய்யுரைக்கவுமே யாக _
பாதுகாப்பாய்
இருக்குமிடத்திலிருந்துகொண்டே இண்டர்நெட்
உதவியுடன்
இரண்டொரு கருத்துரைத்து
பெருங்காரியங்கள் செய்துகொண்டிருப்பதான
பாவனையைக் கைக்கொள்ளவும்
ஆழ்ந்து யோசிப்பதாய் அப்படி அண்ணாந்திருக்கும்
தன்னை
கையிலிருக்கும் அலைபேசியில் இன்னுமின்னுமாய்
படம்பிடித்து UPLOAD செய்தவாறிருக்கும்
அறிவுசாலிகள் அன்றாடம் அப்படி அறைந்து தாக்க _
குறையுயிரோடு போராடிக்கொண்டிருக்கிறது
மா பூமி
தன் இன்னுயிர் காக்க.

இயக்கம் -‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


இயக்கம்
ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


பேரிடரைப் பேசுவதாயிருந்தாலும் அவர் தவறாமல்
அதே ஒயிலாய் தலைசாய்த்து நிற்கத்
தவறமாட்டார் ஒருபோதும்.
ஒப்பனை எப்போதும்போல் கச்சிதமாயிருக்கும்.
தத்துவமாய் சில பல வாசகங்களை உதிர்த்து
புத்தகங்கள் ஒன்றிரண்டை மேற்கோள் காட்டி _
சத்தம் குறைந்த இகழ்ச்சிச் சிரிப்பொன்றை
முத்தாக உதிர்த்து
முத்தாய்ப்பாய் இந்தியாவை,
இந்திய மக்களை,
இந்திய அரசை
மிகக் கொச்சையாய்ப் பழித்த பின்
சக மனிதர்களுக்கு இதைவிடப் பெரிய
சேவை செய்ய முடியுமா என்ன
என்ற பாவனையோடு
அடுத்த பதிவை நோக்கி நகரும்
அவரையும் நிலைகுலைந்துவிழச் செய்யாமல்
பத்திரமாய்த் தாங்கியபடி
தன்போக்கில் சுழன்றுகொண்டிருக்கும் பூமி.

 2.

ஆறு மனமே ஆறு….. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

ஆறு மனமே ஆறு…..
ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)

வயதானவர்களைத்தான் கொரோனாக் கிருமி வேகவேகமாயக் வாயைத்திறந்து கவ்வியெடுத்துக் கொள்கிறது _
விலகியே இரு தாத்தாவிடமிருந்து
என்று சொன்ன அப்பா
அவருடைய அப்பாவை ஆதுரத்தோடு நெருங்கி
அருகில் அமர்ந்து அந்தத் தளர்ந்த கரங்களைத் தன் கைகளுக்குள்
பொதிந்துகொள்வதைப் பார்த்து
அவருடைய தலைக்கு மேலாய்
தாத்தாவும் பேரனும் புன்னகையோடு
கண்சிமிட்டிக்கொள்கிறார்கள்.
பின் தாத்தா பேரனிடம்எல்லாம் கொஞ்ச நாட்கள்தான்
சீக்கிரமே பழையபடி என் மடியில் அமர்ந்து கதைகேட்கலாம் நீ" என்கிறார்.
ஏனென்றே புரியாமல் அந்த ஆறு கண்களிலும்
தளும்புகிறது நீர்
.

Saturday, March 21, 2020

’கரோனா’ கிருமி குறித்த விழிப்புணர்வுப் பாடல்

கரோனா குறித்து சென்னை, பூவிருந்தவல்லி பார்வையர்றோர் பள்ளி மாணவர்கள் இயற்றி இசைத்திருக்கும் விழிப்புணர்வுப் பாடல்!
https://www.youtube.com/watch?v=VfXh0Rd9p18&feature=youtu.be&fbclid=IwAR0pSu_2B6nhX0HdGqo6jK39JJWXxewXRLwO8EeAa6F_hY4bA8VXhVKSrXM

https://www.facebook.com/paarvaiyatravan/videos/1407413799465714/UzpfSTEwMDAxMDA2ODM5Njk0NToxMTc4Njk5NDI1ODA4OTkz/?id=100010068396945


சுனாமி வந்து பல்லாயிரக்கணக் கானொர் இறந்த நிகழ்வுக்குப் பின் சுனாமி என்ற வார்த்தையை நகைச்சுவையாகப் பயன்படுத்திய அறிவுசாலிகள் நிறைய பேர். அவர்களுக்கு இப்போது கிடைத்திருப்பது ‘கொரோனா’. ஆனால், இதோ, பார்வைக்குறை பாடுடைய இந்த பள்ளிமாணவர்கள் கொரோனா பற்றிய விழிப்புணர்வுப் பாடலைஇயற்றி பாடி தங்களாலான ஆக்கபுர்வமான சமூக நலப் பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்!

"சிகப்பு சுடி வேணும்ப்பா" குறும்படம் குறித்து.... லதா ராமகிருஷ்ணன்

"சிகப்பு சுடி வேணும்ப்பா" 
குறும்படம் குறித்து....
லதா ராமகிருஷ்ணன்
நான் இயக்கிய "சிகப்பு சுடி வேணும்ப்பா" குறும்படம் கூட்டணியின் உழைப் பால் விளைந்தது. இதில் பங்காற்றிய யாவருக்கும் வாழ்த்தும் அன்பும்.
VF ENTERTAINMENTS பெருமையுடன் உங்கள் முன் இந்தப் படத்தைச் சமர்ப்பிக்கிறது.
யாவரும் படம் பார்த்து விருப்பக்குறியீடும் சப்ஸ்கிரைப்பும் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். இச்சிறுபடத்திற்கு நீங்கள் தரும் உற்சாகம் மேலும் படங்கள் எடுக்க ஊக்கமளிக்கும்.
உங்கள் ஆதரவு தாருங்கள்.
நன்றி/ சிகப்பு சுடி வேணும்ப்பா படக்குழு. / கவிஞர் அய்யப்ப மாதவன்

வணக்கம் அய்யப்ப மாதவன், உங்களுடைய எத் தனை வருட கனவு இது! என் மனமார்ந்த நல் வாழ்த்துகள்! படம் பார்ப்பதை விட முதலில் உங் களை மனதார வாழ்த்துவது தான் முக்கியமாகப் பட்டது அய்யப்பன். அதனால் முதலில் வாழ்த் தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்பொழுதுதான் படம் பார்த்தேன். விஷுவல் மீடியம் என்பதைப் புரிந்துகொண்டு மிக அள வாக, அர்த்த முள்ள வசனங்கள் படத்திற்கு வலு சேர்க்கின்றன. அநாவசியமாக ஒரு சொல்லோ, காட்சியோ இல்லை. பீடமேறி போதனைகளோ, ‘ நான் எப்படி இயக்கியிருக் கிறேன் பாருங்கள்’ என்று பீற்றிக்கொள்ளும் முனைப்போ இல்லை. படம் இயல்பாக நகர்ந்து சொல்லவேண்டியதைச் சொல்லிவிடுகிறது!


மாநிறம் அழகுதானே என்று பேசியபடியே மேக் கப்பை அப்பி பெண் பாத்திரங்களை வெள்ளை நிறத்திலேயே தொடர்ந்து காட்டிவரும் (அல்லது, மாநிறப் பெண் அவளுடைய நிறத்திற்காக துயரம் அனுபவிப்பதாகவே காட்டிவரும்), அதன் மூலம் வெள்ளைநிறமே உயர்வு என்ற கருத்தை இளைய தலைமுறை யினரிடையே பரப்பி ‘ஃபேர் அண்ட் லவ்லி இத்தியாதிகளுக்கு இலவச விளம் பரம் செய்துவரும், சின்னத்திரை, வெள்ளித் திரைப் போலித்தனத்திலிருந்து விடுபட்டு கதா நாயகியை இயல்பான நிறத்திலேயே காட்டி யிருப்பது அருமை. இந்தப் படத்தில் வரும் கதா நாயகி எத்தனை அழகு!



காதலித்து மணந்த கணவனின் குடிப்பழக் கத்தை அவள் வெறுக்கிறாளே தவிர கணவனை வெறுக்கவில்லை என்பதையும், காசில்லாத அண்ணனிடம் தங்கைக்கு உள்ள மாறாத பாசத் தையும் அளவான வார்த்தைகளில் காட்சிகளில் மனதில் பதியவைக்கிறது உங்கள் படைப்பு.

குழந்தைக் கதாபாத்திரத்தின் இயல்பான இயக்க மும் அதன் பேச்சில் தெரியும் வசன நுட்பமும் குறிப்பிடத்தக்கது. வகுப்பில் டீச்சர் நல்ல பழக் கம் எது தீய பழக்கம் எது என்று சொல்லித் தருவதாக (கெட்ட பழக்கம் என்று குழந்தை சொல்லாது!) அந்தச் சிறுமி தன் தகப்பனிடம் சொல்வது இதற்கோர் எடுத்துக்காட்டு!

கதாநாயகன் ஒரு கண பரிதவிப்பில் திருடுகி்றார் என்றாலும் அவருடைய ஏழ்மையைக் காரணம் காட்டி அவருடைய செயல் நியாயப்படுத்தப் படவில்லை! தகப்பன்சாமியாய் குழந்தையின் இயல்பான பேச்சு அவரைத் திருத்திவிடுவதைப் பார்க்க நிறைவாயிருக்கிறது.

நடித்திருப்பவர்கள் எல்லோருமே தங்கள் பாத் திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். உங்களுக்கும் இந்தப் படத்தில் பங்கேற்ற மற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக ளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

                         தோழமையுடன்
                  லதா ராமகிருஷ்ணன்.


போயும் போயும்…. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

போயும் போயும்….

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


’தூய’ கவிதையைத்
துரத்தித்துரத்திப் பகடி செய்பவர்களில்
ஒருவர்
அரசியல்வாதியொருவரின் அருகில் நிற்கும்
படங்களாகவே பதிவேற்றிக்கொண்டிருக்கிறார்;
பழிப்பவர்களில் ஒருவர்
திரைப்படவாதியொருவரின் அருகில் நிற்கும்
படங்களாகவே பதிவேற்றிக்கொண்டிருக்கிறார்.

புத்துயிர்ப்பு ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)


புத்துயிர்ப்பு


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


மனதின் கனவுகளையெல்லாம்
விழுங்கித் தீர்த்தபின்
என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கும் வயிறு
பசியோடு அழுதுகொண்டிருக்கும் மனதை அமைதிப்படுத்த
ஆறுதலாய்
அதற்கு ஊட்டச்சத்தளிக்கிறது _
புதிதாய்க் கனவு காண.