LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Wednesday, September 13, 2017

உட்குறிப்புகள் ’ரிஷி’ ((லதா ராமகிருஷ்ணன்)


உட்குறிப்புகள்
ரிஷி’ ((லதா ராமகிருஷ்ணன்)
அஞ்சலிக்கூட்ட இதழை ஆரவாரமாக நடத்துவது
அந்த மாமாற்றிதழின் மனிதநேயக் கோட்பாடு
இதழின் நான்கு மூலைகளிலும் மங்கல மஞ்சளாய்க் காணும் _
படைப்பாளி உயிரோடிருந்தபோது (அப் பத்திரிகை) அவரை அவமதித்த
காயத்தின் ரணக்கசிவுச் சிவப்பு.
Ø
இருக்கும்போதெல்லாம் ஏசிக்கொண்டிருந்தவரை இறந்தவுடன் பூசனைக்குரியவராக்கிப் பேசியது ஏனென்று புரியாமல்
நாளெல்லாம் குழம்பிநின்றேன் ரொம்பத்தான்
வாழ்ந்தகாலத்தில் வாழ்த்திப்போற்றிப் பிரசுரித்தோரை
வாகாய் ஓரங்கட்டி
இறந்துவிட்ட படைப்பாளியின் எழுத்துகளைப் பிரசுரிக்கும் உரிமையைப் பறித்துக்கொண்டதைப் பார்த்ததில்
பிடிபட்டுவிட்டது போதிமரம்.
Ø
உண்மைக்கவியைக் கொண்டாட ஒருநாளும் தவறமாட்டார் அவர்....
மரத்தில் கட்டிவைத்து, மளுக்கென்று எலும்பு முறித்து
ஒரு கண்ணைப் பிடுங்கியெறிந்து, முதுகில் முட்கம்பி நுழைத்து
விதவிதமாய்ச் சித்திரவதை செய்து, சிறுகச் சிறுகச் சாகடித்து
கொண்டாடிக்கொண்டிருக்கிறார் அவர்
உண்மைக்கவிகளையெல்லாம்.
Ø
அதிநவீன தமிழ்க்கவிதைக்கு நாலாயிர சொச்சம் பக்கங்களில்
ஒற்றையர்த்தத்தை நிறுவிகொண்டேபோய்
நல்லதொரு மாமுனைவர் பட்டம் பெற்றுவிட்டபின்
தன் மாணாக்கர்களுக்கு அன்பளிப்பாய்த் தந்தார்
தானெழுதிய கண்றாவிக் கவிதைகளடங்கிய தொகுப்பை.
Ø
ஐந்து வார்த்தைகள் தமிழில், இரண்டொன்று ஆங்கிலத்தில்;
தேவைப்பட்டால் இந்தி, ஹீப்ரூ, இஸ்பானிய மொழிகள்
இடையிடையே சிலகணங்கள் மௌனம்,
கூரையை வெறிக்கும் பார்வை கையறுநிலையைக் குறிக்க,
பையப்பையச் சுருங்கிவிரியும் புருவம் பேரறிவுசாலியாக்க,
மேலுயரும் மூடிய உள்ளங்கை
மானுடவாழ்வின் ரகசியங்களைக் குறிப்புணர்த்த,
ஊறிக்கொண்டேயிருக்கும் உதட்டோர இகழ்ச்சிச்சிரிப்பு
உன்னதங்களெல்லாம் தானே என பறையறிவித்தபடியிருக்க

இதுபோதும் _
எல்லா உளறல்களும் உத்தமப்பேச்சாகிவிடும்.


Thursday, January 26, 2017

ஆளுமை

ஆளுமை
ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)


 ஆம், நான் ராணிதான்.
தங்கமும் வைரமும் இழைத்த கிரீடத்தைவிட
இந்தச் சிறகுகள் செருகப்பட்ட மணிமகுடம்தான்
விலைமதிப்பற்றது எனக்கு.
எனக்கு நட்சத்திரங்களோடு விளையாடப்போகவேண்டும்.
எனக்காக ஐஸ்க்ரீமும் பொம்மைக்காரும் வாங்கிவரப்போகின்றன
சிங்கமும் புலியும்.
நடுக்கடலில் எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது திமிங்கலம்
தின்பண்டம் ஏதாவது தரும்....

தத்துப்பித்தென்று பேசுவது குழந்தையின் இயல்பு;
வளர்ந்தவர்களுக்கு அழகு குத்திக்கிழிப்பது

இரங்கற்பா

இரங்கற்பா
ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
   

பின்பக்கத்தாளின் கீழ்க்கோடியில்
பொடி எழுத்துகள் அடுக்கப்பட்ட வரிகளில்
கருப்பு-வெள்ளையிலோ
கண்கவர் வண்ணத்திலோ,

அல்லது _
இரண்டாம் பக்கத்தில்
சற்றே பெரிய அச்சிலான
இரு பத்திகளில்

இல்லை, டோலக்கு ஆட ஆட
அதற்கேற்ப தலையும் கையும் அபிநயிக்க
மைக்கை நேராக உங்கள் குரல்வளைக்குள் இறக்கி
கருத்துரைக்கச்சொல்லும்
இருபது தேசிய பிரதேசிய, பரதேசிய
முக்கியத் தொலைக்காட்சிச் சானல்களில்

சில சாவுகள் அடக்கம்செய்யப்பட்டுவிடுகின்றன
வெறும் செய்தியாக மட்டுமே.



எளிய வேண்டுகோள்

எளிய வேண்டுகோள்
'ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
 

 என் அன்பில் உயிர்க்கும் குட்டியானை.
நீங்கள் பழமும் தரவேண்டாம்;
பள்ளத்தில் விழச்செய்து 
கால்களில் சங்கிலியும் இடவேண்டாம்.
இன்னும் அரைமணிநேரம் 
எங்களை விளையாட விடுங்கள் போதும்.
பின் என் குட்டியானை மீண்டும் உங்கள் 
கைப்பாவையாகிவிடும்;

நானும்.

பறவைப்பார்வையைப் பொருள்பெயர்த்தல் - 1

பறவைப்பார்வையைப் பொருள்பெயர்த்தல் - 1
ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

புள்ளினம் பேசாது;
புதுக்கண்டுபிடிப்புகள் அதற்கில்லை;
ஆறாம் அறிவில்லை;
அந்த நாள் ஞாபகம் வந்ததில்லை
யார் சொன்னது சகவுயிரே….
எம் ஒரு சிறகடிப்பு உங்கள் ஓராயிரம் வார்த்தைகளைப் பொருளற்றதாக்கும்;
எங்கள் ஞாபக விரிவு வாமனனின் மூவடித்திறம்.
இருந்தும் நாம் ஒருங்கிணைந்த வெளியொன்றில்
என் சிறகை உனக்கு உயில் எழுதவும்
உன் குரலில் உருகிக் கரையவும்
ஏங்கும் என் மனதின் கனாவில்
நாமொரு உடலின் முதலும் முடிவுமாய்.

* * * * *

உணவுக்கான இரையாக கணப்பொழுதில்
சுட்டுவீழ்த்திவிட்டால்கூடப் பரவாயில்லை.
காலில் நூல் கட்டி வானத்தில் பறக்கவிட்டு
ஒரேநேரத்தில் அத்தனை பேரும்
கைத்துப்பாக்கிகளை உயரே குறிபார்த்து நீட்டும்போது
என்னமாய் நடுங்கித் துவள்கிறது என் சின்ன மனம்….
வலுவிழந்துபோகும் இறக்கைகளுடன்
வானக்கூரையின் கீழ் என்னைக் காப்பாற்றிக்கொள்ள வழிதெரியாமல் எப்படியெல்லாம் பரிதவித்துப்போகிகிறேன்…..
அவர்கள் கையிலிருப்பது பொம்மைத்துப்பாக்கிகளாம்
ஆனால் என் உயிர்வலி எத்தனை உண்மையானது.

* * * * *

சில நேரம் Sea-gull;
சில நேரம்சிட்டுக்குருவி;
சில நேரம் காகம்;
சில நேரம் சக்கரவாகம்;
சில நேரம் கொக்கு;
சில நேரம்…….
எக்குத்தப்பாய் போட்டுவிட்ட எதுகைக்கு
மோனை கிடைக்காத துக்கத்தில்
உனக்குள்ளிருக்கும் நீ பார்த்தறியாபுல்புல்பறவை
இசைக்க மறக்க,
இன்றோ என்றோ இன்றான என்றோ
என்றான இன்றோ
இந்தக் கவிதை தொடர்வதும்,
காலாவதியாவதும்
கவிதை யாவதும்
ஆகாததுமான யாவுமே
ஆன வாழ்வின்
ஆகச்சிறந்த கொடுப்பினை
(
நீயே)தானாக.


பறவைப்பார்வையைப் பொருள்பெயர்த்தல்

பறவைப்பார்வையைப் பொருள்பெயர்த்தல் -2
                                          ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)
 

1. 
பறவைப்பார்வையில் குக்குறும் புள்ளிகளாகத் 
தெரிந்தன தலைகள்.
உண்டிவில்லுக்கு அப்பால் பறப்பதே 
வாழ்வாயிருந்தது ஒரு காலம்
பின் துப்பாக்கிகள் வந்தன.
அநாதரவாய் ஆகாயத்தில் 
உயிர்தப்பிப் பறக்கும்போதெல்லாம்
எண்ணாமலிருந்ததில்லை:
அந்தரத்தில் கூடு கட்ட முடிந்தால் 
எத்தனை நன்றாயிருக்கும்

2. 
யாருக்கும் புரியாது அதன் மொழி;
எனவே அதற்குப் பேசத்தெரியாது என்கிறார்கள்.
ஆனாலும் மிகுந்த எச்சரிக்கையோடு அந்தப் பறவை
கற்றுக்கொண்டுவருகிறது
மந்திரமாகும் சங்கேதச் சொல் ஒன்றை
அதைக் கீச்சிட்டால்
தனக்கு இளைப்பாற இடம் தந்த
அருமை நண்பனை விரட்டி வெருட்டும் வியூகங்கள்
வெண்பனியாய் விலகி மறைய
தன்வழியேகிடுவான் தோழன்
திரும்பவேண்டிய தேவையின்றி.








INTO THAT HEAVEN OF FREEDOM LET MY COUNTRY AWAKE.....

INTO THAT HEAVEN OF FREEDOM 
LET MY COUNTRY AWAKE.....




DEMOCRACY MEANS... DR.AMBEDKAR



INDIA IS MY COUNTRY






குடியரசு தின கொடிவணக்கம்


























எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி 
இருந்ததும் இந்நாடே-அதன் 
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து 
முடிந்ததும் இந்நாடே-அவர் 
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து 
சிறந்ததும் இந்நாடே-இதை 
வந்தனை கூறி மனதில் இருத்தி, என் 
வாயுற வாழ்த்தேனோ-இதை 
'வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?

பாரதியார்