LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Tuesday, May 27, 2025

மொழிபெயர்ப்பின் அரசியல் – 1 லதா ராமகிருஷ்ணன்

 மொழிபெயர்ப்பின் அரசியல் – 1

லதா ராமகிருஷ்ணன்

நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன். தனது கவிதை வேறு மொழியில் மொழியாக்கம் செய்யப்படவேண்டும் என்ற எண்ணத்தில் யாரும் கவிதை எழுத முற்படுவதில்லை. (அப்படி எழுதும் காரியார்த் தக் கவிஞர்கள் இருக்கக்கூடும். என் பதிவு அவர்க ளைப் பற்றியதல்ல).
தனது மனவெழுச்சியை, பொற்குமிழ்த்தருணங் களை, ஆறா வலியைப் பதிவுசெய்து ஒருவித வடிகால் தேடும், ஒரு விஷயம் குறித்த தன் பார்வையை முன்வைக்கும் உட்தூண்டுதலே ஒருவர் கவிதை எழுதக் காரணமாகிறது.
அதை படித்த, தாய்மொழியைத் தவிர இன்னொரு மொழியும் தெரிந்தவர் – இங்கு ஆங்கிலம் என்று வைத்துக் கொள்ளலாம் - அந்தக் கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க விரும்பி முன்வருகிறார்.
இங்கே மூல கவிதை இல்லாமல் அதன் மொழி பெயர்ப்பு இருக்க வழியில்லை. எனவே, ஒரு கவிஞரை மொழிபெயர்ப்பதன் மூலம் அவருக்கு ஏதோ பெரிய FAVOUR செய்துவிட்டதாக எண்ணிக் கொள்வது அடாவடித்தனம்.
இன்று அலைபேசி குறுஞ்செய்தியும் சமூக வலைத் தளச் செய்திகளுமாக ஒரு மொழியை அதன் இலக்கணத்தை அசட்டை செய்து விருப்பம்போல் சுருக்கி திரித்து எழுதும் வழக்கம் மேலோங்கியிருக் கிறது. குறுஞ்செய்திகள் நட்பினருக்கிடையேயான தால் அதுகூடப் பரவாயில்லை.
ஆனால், அப்படித்தான் மொழிபெயர்ப்பையும் செய்வேன் என்ற மனப்போக்கு சரியல்ல.
ஒரு மொழி நமக்குத் தெரியும் என்பதற்கு என்ன அளவுகோல்? ஒரு மொழி பேசத் தெரியும், எழுதத் தெரியும் என்பதாலேயே எல்லோரும் அந்த மொழி யில் இலக்கியம் படைத்துவிட முடியுமா?
அதுபோல் தான் மொழிபெயர்ப்பும். மூன்றே நிமிடங் களில் மொழிபெயர்ப்பாளராகிவிட முடியும் என்று எண்ணிச் செயல்படுவது ஆணவம்; அபத்தம்.
யாரை இன்னொரு மொழிக்கு அறிமுகப்படுத்து வதாக எண்ணிக் கொள்கிறாரோ அந்தப் படைப்பாளிக்கு மொழிபெயர்ப்பாளர் செய்யும் நம்பிக்கைத் துரோகம் _ வெகு அலட்சியமாக ஒரு படைப்பை மொழிபெயர்த்து முடிப்பது.
ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் என்பதுபோல் ஒரு வார்த்தை சார்ந்த அப்பட்டமான தவறான மொழி பெயர்ப்பு ஒரு படைப்பையே மதிப்பழித்து விடும்; மொழிபெயர்ப்பாளரையும் படைப்பாளியை யும் மதிப்பழித்துவிடுவதாகும்.
எத்தனை கவனமாக மொழிபெயர்த்தாலும் தவறு நேர்ந்துவிடும் என்பது வேறு. அதற்காக படைப்பா ளிக்குத்தான் ஆங்கிலம் தெரியாதே என்ற மிதப்பில், ’நாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த் தால் அதில் யார் குற்றம் கண்டுபிடிக்கத் துணிவார்கள் என்ற அசட்டு தைரியத் தில் கைபோன போக்கில் மொழிபெயர்க்க லாகாது.
சிலர் 'கூகுள் ட்ரான்ஸ்லேட்'டில் பத்தி பத்தியாக ‘பேஸ்ட்’ செய்து’ தமிழ் ஆங்கில மொழிபெயர்ப்பு களை சுலபமாகச் செய்துவிடலாம் என்று சொல் வதைக் கேட்கும்போது சிரிப்பாக வரும். அதன் உதவியோடு இலக்கியப் படைப்பை மொழி பெயர்க்க முற்பட்டால் அதலபாதாளத்தில் விழவேண்டியது தான்.
ஆனால், அதில்கூட சரியாக பொருள் கிடைக்கும் சொற்கள் உண்டு. மூலமொழியிலான படைப்பின் ஒரு வார்த்தைக்கான பொருள் சரியாகப் புரிய வில்லையென்றால் அகராதிகளின் துணையை நாடலாம். Thesaurus இருக்கிறது. ஒரு வார்த்தை பெயர்ச்சொல்லா, வினைச்சொல்லா, வட்டார வழக்குச் சொல்லா என்பதையெல்லாம் அறிய இணையத்திலேயே நிறைய வழிகள் இருக்கின்றன.
அப்படி எதையும் செய்யாமல் ஒரு சாதாரணச் சொல்லை அதன் நேரெதிரான அர்த்தத்தில் கவிதை மொழிபெயர்ப்பில் முதல் வரியில் தருவது என்பது சம்பந்தப்பட்ட மொழிபெயர்ப்பாளரின் இலக்கு மொழித் தேர்ச்சியை (மூலமொழித் தேர்ச்சியை என்றுகூடச் சொல்லிவிட முடியும்) அம்பலமாக்கு வதோடு அவர் மொழிபெயர்த்துள்ள படைப்பை மதிப்பழிக்கிறது. மேலும், மொழிபெயர்ப்பு என்ற இலக்கியப்பணி குறித்த அவருடைய மனப்போக்கை யும் எடுத்துக்காட்டுகிறது.
இது புரியாமல் தனது படைப்பு ஆங்கிலத்தில் வந்ததற்காகப் பூரித்துப்போய் அதை மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளரை வானளாவப் புகழும், முதல் தர மொழிபெயர்ப்பாளராய் முன்னிறுத்தும் படைப்பா ளியை என்ன சொல்ல? அப்படி நம்பும், நம்ப வைக்கப்படும், பிறரை நம்பவைக்க முயலும் படைப்பாளியைப் பார்க்க உண்மையாகவே வருத்தமாக இருக்கிறது. தாம் நம்பும் யாரிடமேனும் மொழிபெயர்ப்பை சரிபார்த்தால்கூட இந்தப் பிழைகளைத் தவிர்த்துவிட முடியும்.
இன்று யதேச்சையாகக் காணநேர்ந்த தமிழ் – ஆங்கில மொழிபெயர்ப்பு
/அவனுக்குத் தேவை/ என்பது /He is hardly in need/ என்று மொழிபெயர்க்கப்பட்டிருப்பதைப் பார்த்த ஆதங்கத்தில்தான் இதை எழுதும்படியாகியது. Hardly in need என்றால் ’அறவே தேவையில்லை’ என்று பொருள். There is hardly any rain here என்றால் இங்கே மழையே இல்லை, மழை அரிதாகவே பெய்கிறது என்று பொருள்.
ஒரே துறையில் இயங்குபவர்கள் ஒருவரையொருவர் விமர் சிப்பது சரியல்ல என்ற எண்ண முடையவள் நான். ஆனாலும், ஒரு சிலர் செய்யும் அலட்சியமான, பிழையான மொழிபெயர்ப் பால் ஒட்டுமொத்த மொழி பெயர்ப்பாளர் தரப்பே அவதூறுக் காளாகும் நிலைமை ஏற்படுகிறது.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் பயிர் முளையிலே தெரியும்………… ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

பயிர் முளையிலே தெரியும்…………

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்
அநியாய அவதூறுகள்
அவமானகரமான வசைச்சொற்கள்
அமைதியிழக்கச்செய்யும் கெக்கலிப்புகள்
அசிங்கப்படுத்தும் அடைமொழிகள்
அக்கிரம வக்கிரச்சொலவடைகள்
பொச்சரிப்புப் பழமொழிகள்
பொல்லாங்குப் புதுமொழிகள் என
ஒருவருக்கு நாம் தந்துகொண்டிருக்கும் அத்தனையையும்
நமக்கு இன்னொருவர் தரக்கூடும்
இன்றே
இங்கே
இப்போதே
குளிர்காலம் வசந்தம் போல்
முற்பகல் பிற்பகல்
இரண்டின் இடைத்தூரம் சில மாதங்கள்
அன்றி சில நாட்கள்
அன்றி
சில மணித்துளிகள்
அன்றி சில கணங்கள்
அன்றி ஒரு கணத்திற்கும் மறுகணத்திற்கும் இடையிலான
நூலிழை அவகாசம்….
காலம் கணக்குத்தீர்க்கும்போது
அதைப் புரிந்துகொள்ளத் தவறியும்
புரியாததுபோல் பாவனை புரிந்தும்
ஆழ்ந்த யோசனையிலிருப்பதாய் அண்ணாந்துபார்ப்பதாலேயே
நம்மை ஆகாசம் என்று இன்னும் எத்தனை நாள்தான் நம்பிக்கொண்டிருக்கப்போகிறோம்….?

சகவாழ்வு - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 சகவாழ்வு

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

மயிலைப் பார்த்துக் காப்பியடிப்பதாய்
வான்கோழியை வசைபாடுவோம்.
வாத்துமுட்டையைப் பரிகசிப்போம்.
நாயின் சுருள்வாலை நிமிர்த்தப்
படாதபாடு படுவோம்.
கிளியைக் கூண்டிலடைத்து
வீட்டின் இண்டீரியர் டெகரேஷனை
முழுமையாக்குவோம்.
குதிரைப்பந்தயத்தில் பின்னங்கால்
பிடரிபட பரிகளை விரட்டித் துரத்தி
யோட்டி
பணம் பண்ணுவோம்.
காட்டுராஜா சிங்கத்தை நாற்றம்பிடித்த மிருகக்காட்சிசாலையில்
போவோர் வருவோரெல்லாம்
கல்லாலடித்துக் கிண்டலடிக்கும்படி
பாழடைந்து குறுகவிரிந்திருக்கும்
புழுதிவெளியில் உழலச் செய்வோம்.
வாழைப்பழத்தில் மதுபுட்டிக் கண்ணாடித்
துண்டைச் செருகி
யானைக்கு உண்ணத் தருவோம்.
பிடிக்காதவர்களைப் பழிக்க பன்னி என்று
பன்னிப்பன்னிச் சொல்லுவோம்.
அதுபாட்டுக்குப் போய்க்கொண்டிருக்கும்
கன்றுக்குட்டியின் முதுகில்
ஒரு தடித்த கழியால் ஓங்கியடிப்போம்.
எதிரேயுள்ள நடைமேடைச் சுவரின்
விளம்பரத்தாளை வாய்க்குள் இழுக்கப் படாதபாடுபட்டுக்கொண்டிருக்கும்
தாய்ப்பசுவின் கண்களில்
நீர் ததும்பக்கூடும்.
அதைப்பற்றி நமக்கு என்ன கவலை?
மனம் கசிந்து அழுபவரையும்
பழித்து இழிவுபடுத்த
தினந்தினம் உதாரணம் காட்டுவோமே
யல்லாமல்
மற்றபடி முதலையின் ரணம், சினம் கனம்
அது அதிகமாய்க் காணப்படும் சதுப்புநில
வனம்
அதற்கு இருக்கலாகும் மனம் பற்றி
என்ன தெரியும் நமக்கு?

அனுபவம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அனுபவம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
முப்பது வருட மொழிபெயர்ப்பு அனுபவம் எனக்கிருப் பதாகவும்
அது என் மொழிபெயர்ப்பில் மிளிர்கிறது என்றும்
குறுந்திறனாய்வொன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது….
முப்பது தானா? நாற்பதுகூட இருக்கலாம்....
ஆனால், அதுவொரு அளவுகோலா,
தெரியவில்லை.
சித்திரம் கைப்பழக்கமாக இருக்கலாம்;
இல்லாதுபோகலாம்.
படைப்பாளியாகா படைப்பாளியைப் போலவே
மொழிபெயர்ப்பாளராக மாட்டா மொழிபெயர்ப் பாளர்களும் உண்டு.
இகழ்வதைைப் போலவே புகழ்வதிலும்
அரசியல் இருப்பதை அறிந்திருக்கிறேன்.
இகழ்ச்சியும் புகழ்ச்சியும் சிலர் இயல்பாகக் கைக் கொள்ளும் உத்தியாவதுண்டு _
தம்மை விமர்சனாதிபதிகளாக சத்தமில்லாமல் பீடமேற்றிக்கொண்டுவிட.
முப்பது வருட மொழிபெயர்ப்பு அனுபவமுடையவர்
என்று மூன்று முறை அடித்துச்சொல்லியே
நேற்றிலிருந்து மொழிபெயர்க்கத் தொடங்கியவரை
முதுபெரும் மொழிபெயர்ப்பாளராக்கிவிடுவதும்
இங்கே நடக்கவில்லையா என்ன?
இத்தனை வருட இலக்கியவெளிப் பயணத்தில்
இன்னும் நிறையப் பார்த்தாயிற்று.
புகழுரைகளையும் இகழுரைகளையும்
பொருட்படுத்தாத அகம் ஆத்ம சுகம்.
குறும்பாக என்னைப் பார்த்துச் சிரித்தவாறு
கேட்கிறது நான்:
‘மொழிக்கடலின் ஒரு துளியாக இருக்கும் என்னால்
மொழியை எப்படி பெயர்க்க இயலும்?’.
கேள்வியை வழிமொழிகிறேன்.
இரண்டும் இரண்டு பாறைகளென்றாலாவது
பெயர்க்க முடியலாம் -
காற்றாக காலமாக
கண்ணாமூச்சிவிளையாடும்போது…?
சிறுமியின் நோட்டுப்புத்தகத்திற்குள் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் மயிலிறகாய்
இரு மொழிகளும் மாயம் செய்தபடி
நீவிவிட்டுக்கொண்டிருக்கின்றன என்னை.
அவை படிக்கத் தரும் வரிகள் அருள்பாலிக்கின்றன.
இருப்பைத் தாண்டி வாழ்கிறேன்.
இவ்வளவே.

Monday, May 26, 2025

புரிந்தும் புரியாமலும்…. ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 புரிந்தும் புரியாமலும்….

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

எக்கச்சக்கமான நல்ல படைப்புகள்
இருபது வருடங்களுக்குப் பிறகும்
கண்டுபிடிக்கப்படாத
கொலைசெய்யப்படவன் பிணமாக
கிணற்றுக்குள் மூழ்கடிக்கப்பட்டுவிடும்
காலகட்டத்தில்
ஒரு கவிதைப்புத்தகத்திற்கு
விமர்சனம் கிடைப்பது என்றால்
அது எத்தனை பெரிய வரம்!
அந்த விமர்சகர் என்னவொரு
பெருந்தன்மையாளர்….!
அதுவும்,
விமர்சனம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுவிட்ட
தென்றால் (அதாவது பாராட்டுரையாக)
அது கவிக்குத் தரப்பட்ட
மில்லியன் டாலர் பொற்கிழியல்லவா!
ஆனாலும் அந்தக் கவியின் முகம்
களையிழந்தேயிருந்தது.
விமர்சனம் என்ற பெயரில் எழுதப்படும்
முழுமொத்தப் புகழுரையானாலும்
சொற்கள் எப்போதுமே தப்பாமல்
காசுகளாவதில்லைதான்….
ஆனால், அதுகூடப் பெரிதாகத் தெரியவில்லை
அந்தக் கவிக்கு.
”அந்த விமர்சனம் என் கவிதையைப் பற்றி
என்ன சொல்கிறதென்றே புரியவில்லை”
என்று ஆதங்கத்தோடு கவி சொன்னதைக்
கேட்டு
”அதுவொரு பெரிய விஷயமில்லை.
ஆங்கிலம் தெரிந்தவரை அணுகிக்
கேட்டால் போயிற்று”
என்ற நண்பனிடம்
”இது மொழிப்பிரச்சனையில்லை.
அவர் என்ன சொல்கிறார் என்றே
புரியவில்லை”,
என்று கவி சொல்ல
”புரியாக்கவிதை எழுதும் கவியெனப்படும்
நீயா இப்படிச் சொல்வது?” என்று
பெரிதாகச் சிரித்துக்கொண்டே கேட்ட நண்பன்
”விமர்சனத்தை ஆராயக்கூடாது;
அனுபவிக்கவேண்டும்
என்று ’வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ குரலில்
சொல்ல
”வசூலில்லாத ராஜாவானாலும் நான்
இதுவரை புரியாக்கவிதையைத்தான் படி(டை)த்திருக்கிறேனே தவிர
புரியா விமர்சனத்தை இப்போதுதான்
முதல் தடவையாகப் படிக்கிறேன்
என்பதைப் பதிவுசெய்தேயாகவேண்டும்”
என்ற கவி
அதுகுறித்து புரியும் கவிதையொன்றை
எழுதத் தொடங்கினார்.

சொல்லத்தோன்றும் சில….. latha ramakrishnan

 சொல்லத்தோன்றும் சில…..

latha ramakrishnan


Poetry is the spontaneous overflow of powerful feelings:
it takes its origin from emotion recollected in tranquility.
- William Wordsworth
வில்லியம் வர்ட்ஸ்வர்த் என்ற உலகம் புகழும் கவிஞர் இப்படிச் சொல்லி யிருக்கிறார் என்பதாலேயே நாம் இந்தக் கூற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயமில்லை. ஆனால், சற்று யோசித்துப் பார்த்தால் இது உண்மை யென்று புரியும்.
நான் கோபமாக இருக்கிறேன் என்ற நினைப்பு வந்தாலே நான் கோபத்தி லிருந்து அகன்றுவிட்டேன் என்று அர்த்தம் என்று சொல்வதுண்டு. அதுபோலத் தான் எத்தனை கொந்தளிப்பான விஷயத்தையும் அது நடக்கும்போதே எழுதுவதென்பது நடவாத காரியம்.
(ஒரு முறை 102 அல்லது 103 டிகிரி ஜுரம் அடித்துக் கொண்டிருந்த சமயத்தில் நான் ’புயல்கரையொதுங் கியபோது’ என்ற கவிதையெழுதினேன். ஆனாலும், அதை எழுதக் கூடிய அளவு எனக்கு பிரக்ஞையும் தெம்பும் இருந்தது என்பது தான் உண்மை.
( பின்னர் அத்தகைய விஷப்பரிட்சைகளில் இறங்க லாகாது என்று முடிவுசெய்து கொண்டேன்.)
கவிதையெழுதுதலே இப்படியென்றால் மொழிபெயர்ப்பு என்பது இன்னும் பிரக்ஞாபூர்வமாகச் செய்யவேண்டியது.
நாம் மொழிபெயர்க்கும் பிரதி நமக்கு எத்தனை பிடித்தி ருந்தாலும் அதிலேயே மூழ்கிப்போய்விட்டால் ஒழுங் காக மொழிபெயர்க்கவே இயலாது.
ஒருவகை Detached attachment அல்லது பிரதியிலிருந்து முழுவதும் விலகிய நிலையில்தான் ஒவ்வொரு இணை வார்த்தையையும் தேர்ந்தெடுத்து மொழிபெயர்க்க வேண்டும்.
நாம் தேர்ந்தெடுக்கும் சொற்கள் மூல கவிதையில் இடம் பெறும் வார்த்தை களுக்கு இணைச்சொற்களாக இருக்க வேண்டும் – கவிதையின் சாராம்சத்தைக் குறிப்புணர்த்து வதாகவும் இருக்கவேண்டும்.
மூல கவிதையில் ஒரு சொல் திரும்பத்திரும்ப வந்தால் அதேயளவாய் மொழிபெயர்ப்பில் வரச்செய்யலாம். இலையென்றால் முடிந்தவரை ஒரே சொல் திரும்பத் திரும்ப வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
சரியான இணைச்சொற்களுக்காக கூகுள் முதல் கைவச மிருக்கும் எல்லா அகராதிகளிலும் முழுவிழிப்போடு தேடியாகவேண்டும்.
நாம் தேர்ந்தெடுக்கும் சொல் ஒரேயடியாக எப்போதும் பயன்படுத்தும் சொல்லாகவும் இருக்கக்கூடாது; அதற் காக ஒரேயடியாக புதிதாக, புரியாததாகவும் இருக்கக் கூடாது.
இப்படி நிறைய DOS AND DON’TS மொழிபெயர்ப்பில் உண்டு. இவை மொழிபெயர்ப்பாளருக்கு மொழிபெயர்ப் பாளர் மாறுபடவும் வழியுண்டு.
மொழிபெயர்க்கப்படவேண்டிய பிரதியின் பால் மொழி பெயர்ப்பாளருக்கு மரியாதை இருக்கலாம். அபிமானம் இருக்கலாம்.
இல்லாவிடினும் இருமொழித்திறனும் வாசிப்பு அனுபவ மும் இருப்பின் வாழ்க்கைத்தொழிலாக ஒரு பிரதியை நல்ல முறையில் மொழிபெயர்க்கவும் இயலும்.
முழுக்க முழுக்க முழுவிழிப்போடு செய்யவேண்டிய காரியம் மொழிபெயர்ப்பு.
ஆனால் சிலருக்கு எல்லாவற்றையும் romanticize செய்யப் பிடிக்கும். POP MAGAZINE எனப்படும் மசாலா பத்திரிகை களில் சாண்டில்யன் கதைக ளைப்போல் அங்கங்கே தேவையில்லாமல் பாலியல் வர் ணணை, காதல் வர்ணணை இடம்பெறும் என்று குறை சொல்பவர்கள் கூட (தேவை என்பதும் ஒருவகையில் highly relative term தானே) making love போல், orgasm போல் என்று எழுத்தாக் கப் பணிகளைப் பற்றி (ஒருவித புரட்சிகரச் செயல்பாடு போன்ற பாவனையில்)க் கருத்துரைப்பது இங்கே அவ்வப்போது நடந்தேறுகிறது.
அப்படி சமீபத்தில் மொழிபெயர்ப்பு குறித்து முன்வைக்கப் பட்டிருந்த ஒரு கருத்தை வாசிக்கநேர்ந்தது. வேடிக்கை யாக இருந்தது.