அனுபவம்
அது என் மொழிபெயர்ப்பில் மிளிர்கிறது என்றும்
குறுந்திறனாய்வொன்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது….
முப்பது தானா? நாற்பதுகூட இருக்கலாம்....
ஆனால், அதுவொரு அளவுகோலா,
தெரியவில்லை.
சித்திரம் கைப்பழக்கமாக இருக்கலாம்;
இல்லாதுபோகலாம்.
படைப்பாளியாகா படைப்பாளியைப் போலவே
மொழிபெயர்ப்பாளராக மாட்டா மொழிபெயர்ப் பாளர்களும் உண்டு.
இகழ்வதைைப் போலவே புகழ்வதிலும்
அரசியல் இருப்பதை அறிந்திருக்கிறேன்.
இகழ்ச்சியும் புகழ்ச்சியும் சிலர் இயல்பாகக் கைக் கொள்ளும் உத்தியாவதுண்டு _
தம்மை விமர்சனாதிபதிகளாக சத்தமில்லாமல் பீடமேற்றிக்கொண்டுவிட.
முப்பது வருட மொழிபெயர்ப்பு அனுபவமுடையவர்
என்று மூன்று முறை அடித்துச்சொல்லியே
நேற்றிலிருந்து மொழிபெயர்க்கத் தொடங்கியவரை
முதுபெரும் மொழிபெயர்ப்பாளராக்கிவிடுவதும்
இங்கே நடக்கவில்லையா என்ன?
இத்தனை வருட இலக்கியவெளிப் பயணத்தில்
இன்னும் நிறையப் பார்த்தாயிற்று.
புகழுரைகளையும் இகழுரைகளையும்
பொருட்படுத்தாத அகம் ஆத்ம சுகம்.
குறும்பாக என்னைப் பார்த்துச் சிரித்தவாறு
கேட்கிறது நான்:
‘மொழிக்கடலின் ஒரு துளியாக இருக்கும் என்னால்
மொழியை எப்படி பெயர்க்க இயலும்?’.
கேள்வியை வழிமொழிகிறேன்.
இரண்டும் இரண்டு பாறைகளென்றாலாவது
பெயர்க்க முடியலாம் -
காற்றாக காலமாக
கண்ணாமூச்சிவிளையாடும்போது…?
சிறுமியின் நோட்டுப்புத்தகத்திற்குள் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் மயிலிறகாய்
இரு மொழிகளும் மாயம் செய்தபடி
நீவிவிட்டுக்கொண்டிருக்கின்றன என்னை.
அவை படிக்கத் தரும் வரிகள் அருள்பாலிக்கின்றன.
இருப்பைத் தாண்டி வாழ்கிறேன்.
இவ்வளவே.

No comments:
Post a Comment