புரிந்தும் புரியாமலும்….
இருபது வருடங்களுக்குப் பிறகும்
கண்டுபிடிக்கப்படாத
கொலைசெய்யப்படவன் பிணமாக
கிணற்றுக்குள் மூழ்கடிக்கப்பட்டுவிடும்
காலகட்டத்தில்
ஒரு கவிதைப்புத்தகத்திற்கு
விமர்சனம் கிடைப்பது என்றால்
அது எத்தனை பெரிய வரம்!
அந்த விமர்சகர் என்னவொரு
பெருந்தன்மையாளர்….!
அதுவும்,
விமர்சனம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுவிட்ட
தென்றால் (அதாவது பாராட்டுரையாக)
அது கவிக்குத் தரப்பட்ட
மில்லியன் டாலர் பொற்கிழியல்லவா!
ஆனாலும் அந்தக் கவியின் முகம்
களையிழந்தேயிருந்தது.
விமர்சனம் என்ற பெயரில் எழுதப்படும்
முழுமொத்தப் புகழுரையானாலும்
சொற்கள் எப்போதுமே தப்பாமல்
காசுகளாவதில்லைதான்….
ஆனால், அதுகூடப் பெரிதாகத் தெரியவில்லை
அந்தக் கவிக்கு.
”அந்த விமர்சனம் என் கவிதையைப் பற்றி
என்ன சொல்கிறதென்றே புரியவில்லை”
என்று ஆதங்கத்தோடு கவி சொன்னதைக்
கேட்டு
”அதுவொரு பெரிய விஷயமில்லை.
ஆங்கிலம் தெரிந்தவரை அணுகிக்
கேட்டால் போயிற்று”
என்ற நண்பனிடம்
”இது மொழிப்பிரச்சனையில்லை.
அவர் என்ன சொல்கிறார் என்றே
புரியவில்லை”,
என்று கவி சொல்ல
”புரியாக்கவிதை எழுதும் கவியெனப்படும்
நீயா இப்படிச் சொல்வது?” என்று
பெரிதாகச் சிரித்துக்கொண்டே கேட்ட நண்பன்
”விமர்சனத்தை ஆராயக்கூடாது;
அனுபவிக்கவேண்டும்
என்று ’வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ குரலில்
சொல்ல
”வசூலில்லாத ராஜாவானாலும் நான்
இதுவரை புரியாக்கவிதையைத்தான் படி(டை)த்திருக்கிறேனே தவிர
புரியா விமர்சனத்தை இப்போதுதான்
முதல் தடவையாகப் படிக்கிறேன்
என்பதைப் பதிவுசெய்தேயாகவேண்டும்”
என்ற கவி
அதுகுறித்து புரியும் கவிதையொன்றை
எழுதத் தொடங்கினார்.


No comments:
Post a Comment