LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, May 3, 2025

A POEM BY KOSINRA

 A POEM BY

KOSINRA



Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

HUMANS TRANSFORMING INTO NATURE

In the world which is going to be wrecked in twelve hours
The people watch the houses very intently.
They vacate from each second
Can’t come out of everything that easily.
The residual words
They add to the massive mount of words
In the middle of their place
Those who are unable to part with the sayings
of sacred scriptures
Go in search of their respective gods.
The lambs in the butcher shop are untied and set free
Caste-leaders ask their people to gather in one place
and that there shouldn’t be any inter-caste affair
even in death.
Some heads move backwards.
For facilitating suicide to those
who don’t want to see the end of earth
Religion has made special arrangement.
Humans had tattoos carved on them.
For easy identification
on meeting either in heaven or in hell
the queue for tattoos went on elongating.
As the doom approached closer and closer
Birds began to talk to the children
They taught them how to fly.
Once they learnt it the children forgot names;
Religions god, not required.
He who was watching the approach of Doom
in live telecast gave out the latest news
That Doom would attack humans alone
In the narrow interval of the hour of crisis
Humans strove to become river and mountain
or at least the shit-wiping stone.
How to become tree within ten minutes _
They were asking the tree.
The trees went on spreading their shades.
Knowing how to metamorphose into butterflies
the lovers escaped.
Man who dared to raise the scythe and slice
from the time he had heard this news
went on pleading with the goat
to think of him as leaves and eat.
Doom kept driving people
into Nature.

இயற்கையாகும் மனிதர்கள்
இன்னும் பன்னிரெண்டு மணி நேரத்துக்குள்
அழியப்போகும் உலகத்தில்
மக்கள் வீடுகளை உற்றுப்பார்க்கிறார்கள்
ஒவ்வொரு நொடியிலிருந்தும் காலி செய்கிறார்கள்
எல்லாவற்றிலிருந்தும்
சுலபமாக வெளியேற முடியவில்லை
மீதமான சொற்களை
ஊருக்கு நடுவே இருக்கும்
பெரிய சொற்குவியலோடு சேர்க்கிறார்கள்
புனித நூல்களின் வசனங்களை பிரிய முடியாதவர்கள்
அவரவர் கடவுளைத் தேடிப் போகிறார்கள்
கசாப்பு கடையின் ஆடுகள் கழற்றி விடப்படுகின்றன
சாதி தலைவர்கள் தங்கள் மக்கள்
ஒரே இடத்தில் கூட வேண்டுமென்றும்
சாகும் போதும் சாதிக்கலப்பு கூடாதென சொல்கிறார்கள்
கொஞ்சம் தலைகள் பின்னால் செல்கிறது
பூமி அழிவதை பார்க்க விரும்பாதவர்கள்
தற்கொலை செய்வதற்கு
பிரத்யோக ஏற்பாட்டை செய்திருந்தது மதம்
மனிதர்கள் பச்சை குத்தி கொண்டார்கள்
சொர்க்கத்திலோ நரகத்திலோ சந்தித்தால்
கண்டுக்கொள்ள எளிதாகுமென்று
பச்சை குத்திக்கொள்ள நீண்ட வரிசை
ஊழி நெருங்க நெருங்க பறவைகள்
குழந்தைகளிடம் பேசத்தொடங்கின
பறப்பது எப்படியென கற்றுக்கொடுத்தது
கற்றுக்கொண்டவுடன் குழந்தைகள் பெயரை மறந்தார்கள்
மதங்கள் கடவுள் தேவைப்படவில்லை
ஊழி வருவதை நேரலையில்
பார்த்துக்கொண்டிருந்த வன் சொன்னான்
ஊழி மனிதர்களைத்தான் தாக்குமென்பது
அண்மைச் செய்தியாம்
அவசரகால குறுகிய இடைவெளியில் மனிதர்கள்
நதியாகவும் மலையாகவும் குறைந்த பட்சம்
பீ துடைக்கும் கல்லாகவும் மாற முயன்றனர்
பத்து நிமிடக்காலத்திற்குள் மரங்களாவது எப்படியென
மரங்களிடம் கேட்டு கொண்டிருந்தனர்
மரங்கள் தன் நிழலை விரித்துக்கொண்டே சென்றது
பட்டாம் பூச்சிகளாக மாறிவிடும் வித்தை தெரிந்ததால்
தப்பித்தார்கள் காதலர்கள்
அறுவாளை ஓங்கி வெட்ட துணிந்த மனிதன்
இந்த செய்தியை கேட்டதிலிருந்து
ஆட்டிடம் தன்னை இலைகளாக
நினைத்தும் உண்ணும் படி கேட்டுக்கொண்டான்
ஊழி மனிதர்களை
இயற்கைக்குள் அனுப்பிக்கொண்டிருந்தது
_ கோசின்ரா

ஒரு குரல்வளையின் மனம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஒரு குரல்வளையின் மனம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
மனதைக் கொலைசெய்துகொண்டேயிருக்கப்
பிடித்தவர்
அதற்கான காரணங்களைக்
கண்டுபிடித்துக்கொண்டேயிருக்கிறார்.
கிள்ளலுக்கும் குரல்வளையை நெரித்தலுக்கும்
உள்ள வித்தியாசம்
நம் பார்வையில் தானே தவிர
உண்மையில் இரண்டும் ஒன்றே என்று
அத்தனை ஆணித்தரமாக வாதங்களை
முன்வைக்கிறார்.
அழகைப் போலவே வலியின் அளவும்
அவரவருக்கானது என்று
அவர் சொல்லும்போது
நெரிக்கப்பட்ட குரல்வளையிலிருந்து
எழும் பலவீனமான சிரிப்பு
அழுகையைவிட ஆயிரம் மடங்கு
அவலமாய்.
ஒரு குரல்வளையை அத்தனை சுலபமாக
நெரிக்கவேண்டிய அவசியமென்ன
என்று கேட்டவரிடம்
நான் கேட்டபோதெல்லாம் பாடவில்லை
யென்பதற்காக என்றவர் _
என்னை இப்படி நெரிக்கவைத்து
விட்டாயே என்று
நொடியில் பாதிக்கப்பட்டவராகி
துடித்துக்கொண்டிருந்த குரல்வளையை
அன்போடு கையில் தாங்கி
யழைத்துக்கொண்டு வந்து
குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவதைப்
பார்த்து _
தெறித்தங்கே விழுந்திருந்த
குரல்வளையின் மனம்
ஆற்றமாட்டாத துக்கம் பொங்கப்
புன்னகைக்கும்.

என்றும்போல் இன்றும்…. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 என்றும்போல் இன்றும்….

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
கூட்டம் கூடிவிட்டது
நிறைய காசு சேர்ந்துவிடும் என்ற நம்பிக்கையில்
கைத்தட்டிப் போவோர் வருவோரை அழைத்துக்கொண்டிருந்தான்.
பொருதப்போகிறவர்களின் சுருக்கமான வரலாறுகளை
சொல்லத்தொடங்கினான்;
பெட்டிக்குள் இருக்கும் பாம்பும் கீரிப்பிள்ளையும்
பழக்கப்படுத்தப்பட்டிருக்கின்றன
பகைமை பாராட்டவும்.
*****
”ஆடுரா ராஜா ஆடுடா ராஜா” என்று குட்டிச்சாட்டையால் அடித்தபடி
குரலெடுத்துக் கூவிக்கொண்டேயிருந்தவனைக்
குரங்கு கோபத்தோடு பார்த்து அசையாமல் அமர்ந்திருக்க
”ஆடாதே படிடா குரங்கே”, ”ஆடாதே படிடா குரங்கே’
என்று அன்றாடம் அம்மையப்பன் கூவும் பாங்கில்
புத்தகமும் கையுமாய் மூலையில் ஒடுங்கியிருந்த சிறுவன்
ஆனந்தமாய் குதித்தாடலானான்.
*****
“One a penny two a penny hot cross bun”
என்று ‘ரைம்’ சொல்லிக்கொண்டிருக்கின்றன
சில குழந்தைகள்;
One part woman, two part woman என்று
பெண்ணியம் போற்றிக்கொண்டிருக்கிறார்கள்
சில கனவான்கள்.
*****
இவர் சொன்னால் கருத்துச் சுதந்திரம்;
அவர் சொன்னால் அடிப்படைவாதம்.
இவர் செய்தால் மனிதநேயம்
அவர் செய்தால் வணிகநோக்கம்.
இவர் மௌனம் மெச்சத்தகுந்தது
அவர் மௌனம் அச்சத்தில் விளைந்தது….
அகராதிபிடித்தவர்களின் அதிகாரக்கைகளில்
அடிமைகளாய் உழலும் சொற்கள்.
*****
உயிரோடிருக்கும்போதே தனக்கு அஞ்சலிக்கூட்டம் நடக்கவேண்டும்
என்று தன் இறுதி ஆசையை வெளியிட்டார்
கவிஞரொருவர்.
‘அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை
கிடைக்கவில்லை
கிடைக்கவேயில்லை
என்று அதுநாள் வரை எதுவும் செய்யாதவர்கள்
ஒருவர் விடாமல்
தகர டப்பாவில் ஆளுக்கொரு அங்கீகாரத்தைப் போட்டுக் குலுக்கிய குலுக்கலில்
கலக்கமடைந்து பாதியிலேயே கிளம்பிப்போய்விட்டார்.
*****
சாலையோரம் குறிசொல்லிக்கொண்டிருந்தவள்
இன்னும் நாலைந்து மாதங்களில் உலகாள்வாய் நீ
என்று எல்லோருக்கும் சொல்வதுபோலவே சொல்லக் கேட்டுக்
கன்னங்குழியச் சிரித்துத்
தன் உள்ளங்கையுலகைத் திறக்கிறாள் சிறுமி.
*****
நிலா நகரும் காலத்தே ஒருநாளேனும் எனக்கு
இறக்கைகள் முளைக்கலாகாதா
என்று ஏங்கி யண்ணாந்து பார்க்கும்
என்னிடம்
அன்பொழுகச் சொல்கிறது மனம்:
“நானிருக்கிறேனே உனக்கு…”
*****

மொழிபெயர்ப்பு என்பது முற்றிலும் மர்மமானது;

 மொழிபெயர்ப்பு என்பது முற்றிலும் மர்மமானது;

IN DEFENSE OF THE DEFENSELESS

மொழிபெயர்ப்பு என்பது முற்றிலும் மர்மமானது; எழுத்துக்கலையே மொழிபெயர்ப்புதான் என்று எனக்குத் தோன்றி யிருக்கிறது. அல்லது, வேறெப்படியிருப்பதையும்விட அது மொழிபெயர்த்தலையே படைப்பாக்கம் அதிகம் ஒத்திருக்கிறது. அந்த இன்னொரு பிரதி, மூலப்படைப்பு என்பது என்ன? என்னிடம் பதிலில்லை. அதுதான் மூலாதாரம்/தோற்றுவாய் - சிந்தனைகள் மிதக்கும் ஆழ்கடல் என்று நினைக்கிறேன். சொல்வலைகளில் ஒருவர் அவற்றை சேகரித்து அவற்றை படகுக்குள் பளபளத்தொளிர வீசியெறிகிறார்..... இந்தக் குறியீட்டில் அவை இறந்துபோய் தகரப்பெட்டிகளில் அடைக்கப்பட்டு ஸாண்ட்விச்சுகளில் உண்ணப்படுகின்றன.” — Ursula K. Le Guin
“Translation is entirely mysterious. Increasingly I have felt that the art of writing is itself translating, or more like translating than it is like anything else. What is the other text, the original? I have no answer. I suppose it is the source, the deep sea where ideas swim, and one catches them in nets of words and swings them shining into the boat… where in this metaphor they die and get canned and eaten in sandwiches.”
— Ursula K. Le Guin
Translation is the art of failure.
Umberto Eco
(தோற்கும் கலையே மொழியாக்கம்). உம்பர்ட்டோ ஈகோ. (இத்தாலியப் புதினப் படைப்பாளி)
“it is better to have red a great work of another culture in translation than never to have read it at all.”
― Henry Gratton Doyle
(இன்னொரு கலாச்சாரத்தைச் சேர்ந்த சிறந்த படைப்பை மொழிபெயர்ப்பில் படிப்பது அதைப் படிக்காமலேயே இருப்பதை விட மேல் )
“Translation is a disturbing craft because there is precious little certainty about what we are doing, which makes it so difficult in this age of fervent belief and ideology, this age or greed and screed.”
— Gregory Rabassa
(மொழிபெயர்ப்பு என்பது மிகவும் அலைக்கழிக்கும் கைத்திறமாகவே இருக்கிறது. ஏனெனில், நாம் என்ன செய்கிறோம் என்பது பற்றிய உறுதி அரிதாகவே இருக்கும் காரணத்தால். தீவிர நம்பிக்கையும், சித்தாந்தமும் நிலவும் இந்தக் காலகட்டத்தில், பேராசையும் நீளுரைகளும் நிறைந்த இந்தக்காலகட்டத்தில் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபடுவது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கிறது - க்ரெகரி ரபாஸா - ஸ்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புகள் செய்தவர்.
The original is unfaithful to the translation.
Jorge Luis Borges
மூலப் படைப்பு அதன் மொழிபெயர்ப்புக்கு விசுவாசமானதல்ல - ஜார்ஜ் லூயி போர்ஹே.
As far as modern writing is concerned, it is rarely rewarding to translate it, although it might be easy. Translation is very much like copying paintings. Boris Pasternak
நவீன எழுத்தைப் பொறுத்தவரை, அதை மொழிபெயர்ப்பது என்பது, எளிதாக இருக்கக்கூடும் என்றாலும், பயனுள்ள செயலாக அமைவது அரிதாகவே இருக்கிறது.மொழிபெயர்ப்பு என்பது ஓவியங்களை நகலெடுத்தலையே பெருமளவு ஒத்திருக்கிறது்.
போரிஸ் பாஸ்டர்நாக்.
Here's a secret. Many novelists, if they are pressed and if they are being honest, will admit that the finished book is a rather rough translation of the book they'd intended to write.
Michael Cunningham
இதோ ஒரு ரகசியம். பல புதினப் படைப்பாளிகள், சொல்லும்படி அவர்களுக்கு அழுத்தம் தரப்பட்டால், அவர்கள் உண்மையைச் சொல்வார்களானால், அவர்தம் படைப்பின் இறுதிவடிவம் என்பது அவர்கள் எழுதநினைத்த நூலின் ஒருவித கரடுமுரடான வடிவமே என்பதை ஒப்புக்கொள்வார்கள் . மைக்கேல் கன்னிங்ஹாம்.
Without translation, I would be limited to the borders of my own country. The translator is my most important ally. He introduces me to the world. Italo Calvino
மொழிபெயர்ப்பு இல்லையென்றால், நான் என்னுடைய நாட்டின் எல்லைகளுக்குள்ளாகவே முடிந்துபோயிருப்பேன். மொழிபெயர்ப்பாளர் என்னுடைய ஆகச்சிறந்த, அதிமுக்கியமான சகா. அவர் என்னை உலகிற்கு அறிமுகப்படுத்துகிறார்.
இடாலோ கால்வினோ.
“There are three grades of translation evils: 1. errors; 2. slips; 3. willful reshaping”
— Vladimir Nabokov
மொழியாக்கக் கேடுகளில் மூன்று படிநிலைகள் இருக்கின்றன - 1. பிழைகள் 2. சறுக்கல்கள் 3.வேண்டுமென்றே மாற்றியமைத்தல் _ வ்ளாடிமர் நெபக்கோவ்.
“Humor is the first gift to perish in a foreign language.”
— Virginia Woolf
ஓர் அந்நிய மொழியில் முதலி அழிந்தொழியும் அன்பளிப்பு நகைச்சுவையே - வர்ஜீனியா வுல்ப்ஃ
Every language is a world. Without translation, we would inhabit parishes bordering on silence.
George Steiner
ஒவ்வொரு மொழியும் ஒரு தனி உலகம். மொழிபெயர்ப்பு இல்லையெனில் நாம் மௌனவெளியாக அமைந்த குறு வட்டாரங்களிலே குடியிருப்பவர்களாயிருப்போம். ஜார்ஜ் ஸ்டேய்னர்(பிரான்சில் பிறந்த அமெரிக்கத் திறனாய்வாளர், புதினப் படைப்பாளி,கட்டுரையாளர் மற்றும் கல்வியாளர்.
I encourage the translators of my books to take as much license as they feel that they need. This is not quite the heroic gesture it might seem, because I've learned, from working with translators over the years, that the original novel is, in a way, a translation itself.
Michael Cunningham
என் புத்தகங்களின் மொழிபெயர்ப்பாளர்கள் அவர்களுக்குத் தேவைப்படும் அத்தனை சுதந்திரத்தையும் எடுத்துக்கொள்ள ஊக்குவிக்கிறேன். இது பெரிய பெருந்தன்மையாக, பேராண்மையாகத் தோன்றினாலும் அதெல்லாமொன்றும் கிடையாது. ஏனெனில் இத்தனை வருடங்கள் மொழிபெயர்ப்பாளர்களோடு இணைந்து பணியாற்றியிருப்பதில் மூலப் படைப்பும் ஒருவிதத்தில் தன்னளவில் ஒரு மொழிபெயர்ப்பே என்று நான் அறிந்துகொண்டுவிட்டேன். மைக்கேல் கன்னிங்ஹாம்.
“To use the same words is not a sufficient guarantee of understanding; one must use the same words for the same genus of inward experience; ultimately one must have one’s experiences in common.”
— Friedrich Nietzsche
அதே வார்த்தைகளைப் பயன்படுத்துதல் புரிதலுக்கான போதுமான உத்தரவாதமல்ல; உள்வய அனுபவத்தின்
அதே வகைப்பிரிவைச் சேர்ந்த சொற்களையே ஒருவர் மொழிபெயர்ப்பில் பயன்படுத்தவேண்டும்: இறுதியில் பெறப்படும் அனுபவங்கள் ஒரேயளவாய், பொதுவானதாக அமையவேண்டும். நீட்சே.
“All translation is a compromise – the effort to be literal and the effort to be idiomatic.”
— Benjamin Jowett
எல்லா மொழிபெயர்ப்புகளுமே சமரசம்தான். - உள்ளதை உள்ளபடிச் சொல்வதற்கான பிரயத்தனமும் சரி, இலக்குமொழியின் மண்வாசம் சார்ந்து சொல்வதற்கான பிரயத்தனமும் சரி - பெஞ்ஜமின் ஜோவெட்
மொழிபெயர்ப்பு இல்லாமல், நாம் நிசப்த எல்லைகளில் அமைந்த பிராந்தியங்களில்தான் வாழ்ந்துகொண்டிருப்போம். - ஜார்ஜ் ஸ்டேய்னர்.
வெறுமே சொற்களை மட்டுமே மொழிபெயர்க்காதீர்கள். சிந்தனைகளை மொழிபெயர்க்கவும்.(anonymous)
எத்தனையோ பேர் தங்களுடைய அலுவலை தினசரி அனுபவிக்கும் தண்டனையாகக் கருதுகிறார்கள். ஆனால் ஒரு மொழிபெயர்ப்பா ளராக என்னுடைய பணியை நான் மிகவும் நேசிக்கிறேன். மொழிபெயர்ப்பு என்பது கடலின் மேலாக ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு நிகழும் பயணம். என்னை ஒரு கள்ளக்கடத்தல்காரராக எண்ணுகிறேன்: நான் கொள்ளையடித்து என்னிடம் சேகரித்துவைத்துள்ள சொற்கள், சிந்தனைகள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் உதவியோடு மொழியின் எல்லையைக் கடந்துசெல்கிறேன் நான். (Anonymous)
நான் 90 வயதை எட்டுவதற்குள் இந்த நூலை மொழிபெயர்த்துவிடுவேன் என்று நம்புகிறேன். மொழிபெயர்ப்பாளராக இருப்பதன் ரகசியம் அவசர அவசரமாகச் செயல்படாமலிருப்பதே. சமயங்களில் ஒரேயொரு வார்த்தையை மொழிபெயர்க்க பல மணிநேரம் ஆகும். டாக்டர் ஜியோனார்ட் ரோஸ்மான்.
தோற்கும் கலையே மொழியாக்கம். உம்பர்ட்டோ ஈகோ. (இத்தாலியப் புதினப் படைப்பாளி)
மொழியாக்கம் என்பது ஆகச்சிறந்த அளவில் ஒரு எதிரொலி மட்டுமே. ஜார்ஜ் ஹென்றி பாரோ
மொழிபெயர்ப்பாளர் தேர்ந்த பதிப்பாசிரியராகவும், உளவியலாளராகவும், மனிதர்களுடைய ரசனையை அறிந்தவராகவும் இருக்கவேண்டியது இன்றியமையாதது. அவ்வாறில்லையெனில் அவருடைய மொழிபெயர்ப்பு பீதிக்கனவாக அமையும். ஆனால், அத்தகைய அரியப் பண்புநலன்களைக் கொண்டிருக்கும் ஒருவர் எதற்காக மொழிபெயர்ப்பாளராக வேண்டும்? தானே ஒரு படைப்பாளியாக ஏன் இயங்கலாகாது? அல்லது, அயரா முயற்சியும் ஆன்ற அறிவும் உரிய அளவு ஊதியமளிக்கப்படும் ஒரு தொழிலில் ஏன் ஈடுபடலாகாது? ஒரு நல்ல மொழிபெயர்ப்பா ளர் ஒரே சமயத்தில் முனிவராகவும், முட்டாளாகவும் இருக்கவேண்டியது அத்தியாவசியமாகும். இத்தகைய விசித்திரக் கலவைகளை நாம் எங்கே பெற முடியும்? ஐஸக் பாஷெவிக் ஸிங்கர்.
"ஒரு ஆப்பிரிக்க மொழியில் எழுதியபடியே அந்த மொழிக்கு அப்பாலான வாசகர்களை மொழிபெயர்ப்பு மூலம் எட்டலாம் என்பது எனக்கு உண்மையாகவே ஒரு ஞானவிளக்கமாக அமைந்தது. _ கூகி வா தியாங்கோ.
மொழியாக்கம் செய்தல் எந்தவிதமான பாராட்டும் அங்கீகாரமும் அற்ற பணி: இதில் வருமானம் என்பது அறவேயில்லை; தன்னை, தன் ஆளுமையை முற்ற முழுக்க இன்னொரு ஆளுமைக்குள் அழித்துக்கொண்டுவிடவேண்டியது அவசியமாகிறது; பலமணிநேரங்கள் செலவழித்தும் இறுதியில் மொழிபெயர்ப்பாளருக்குக்கிடைக்கும் கவனம் தொலைபேசியைப் பழுதுபார்ப்பவருக்குக் கிடைக்கும் அளவே.
கச்சிதமான, அப்பழுக்கற்ற, உன்னதமான அல்லது ‘சரி’யான மொழியாக்கம் என்ற ஒன்றூ இல்லவேயில்லை. ஒரு மொழிபெயர்ப்பாளர் தன்னுடைய அறிவை விரிவுபடுத்தவும் வெளிப்பாட்டுக்கான தன் வழிவகைகளை மேம்படுத்திக்கொள்ள வும் எப்போதும் முயற்சித்தவண்ணமே; அவர் எப்போதுமே உண்மைகளையும், வார்த்தைகளையும் நாடியவாறே.... பீட்டர் நியூமார்க் (மொழிபெயர்ப்பு குறித்த ஒரு பாடநூல்)








திக்குத்தெரியாத காட்டில்……. ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 திக்குத்தெரியாத காட்டில்…….

ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
/2020, APRIL 27 - மீள்பதிவு//

திசை - 1

ரயில்வண்டிகள் வழக்கம்போல் ஓடத்தொடங்கும்.
விமானங்கள் பறக்கத்தொடங்கும்.
கொரோனாக் காலம் என்பது கடந்தகாலமாகும்.
கதைகளில், கவிதைகளில் திரைப்படங்களில் பட்டிமன்றங்களில் பேசுபொருளாகும்.
கேட்பவர்கள் பார்ப்பவர்களில் சிலர் சிரிப்பார்கள்;
சிலரின் முதுகுத்தண்டுகள் சில்லிடும்.
இனி வரலாகாத அந்த முப்பது நாட்கள் அல்லது மூன்று மாதங்களின் நினைவு தரும் இழப்புணர்வு
சிலருக்குப் பொருட்படுத்தத்தக்கதாய்
சிலருக்குப் பொருளற்றதாய்
அருகருகிருக்கும் இரு மனங்களின் இடைவெளி
அதலபாதாளமாயிருக்க வழியுண்டு என நினைக்கையிலேயே
அதன் மறுபக்கமும் எதிரொலிக்கும் மனதில்.
மீண்டும் மனிதர்கள் கூடிப்பழகுவார்கள்.
கூட்டங்கூட்டமாக திருவிழாக்களைக் கண்டுமகிழ்வார்கள்
குழந்தைகளை அழைத்துக்கொண்டு
கடற்கரைக்குச் செல்வார்கள்.
கொரோனாவை மீறியும் நீளும் காலம்
நெருக்கும் கூட்டமாய் உந்தித்தள்ள
இருபக்கமாய் பிரிந்துவிட்டவர்கள் இன்னமும் தேடித்திரிந்துகொண்டிருக்கலாம்.
திசை - 2
அந்த அநாமதேய பிராந்தியத்தில் தான்
சென்றிருக்கும் வீடு இருக்கிறது;
செல்லவேண்டிய வீடும் இருக்கிறது.
நிகழ்காலமும் எதிர்காலமும் இருமுனைகளாக
இடையே இருப்பவை ஒரு சில வீடுகளாக இருக்கலாம்
சில பல தெருக்களாக இருக்கலாம்
வீதிகளாக இருக்கலாம்
மீதமிருக்கும் கோபதாபங்களாக இருக்கலாம்
அநாமதேய பிராந்தியமென்றானபின்
அடுத்திருந்தாலும்
அந்த இரு வீடுகளுக்கிடையே
ஆயிரமாயிரம் மைல்களாக
அந்திசாயும் நேரத்தில்
எந்தப் பக்கம் திரும்புவது என்று தெரியாமல்
நின்றது நின்றபடி
தேடித்தேடி இளைத்திருக்கும்
ஏழை மனம்.
*
திசை - 3
பாதங்களுக்குப் போதிய பலம்வேண்டும்
திசையறியாத்த தொலைவின் காததூரங்களைக் கடக்க;
பழகவேண்டும் வழிகளில் தட்டுப்படும் இடர்ப்பாடுகள்….
காலணிகளை ஊடுருவி சுருக்கென்று குத்தும் கூர்கற்கள்;
தைக்கும் நச்சுமுட்கள்;
கண்ணீர் வந்தால் சற்றே இளைப்பாறுவதற்கு
நிழல் தரும் மரம் எங்காவது இருக்கும்
என்பதொரு நம்பிக்கை.
என்றாவதுதான் தட்டுப்படுமா நன்னம்பிக்கைமுனைகள்?
இப்போதெல்லாம் இரவில் வனவிலங்குகள் நடமாட்டம்
வாகனவீதிகளில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இத்தனையையும் கடந்து சென்றடையும் வீடு
பூட்டியிருக்க நேரலாம்
அல்லது தாளிடப்படலாம் வாசல்
ஈசலாய் எழுந்து மடியும் எண்ணங்கள் கட்டுச்சோறாய்
மனதிலொரு நெடும்பயணம் பொடிநடையாய்
நடந்தவண்ணம்
திசை – 4
இங்கிருந்து பார்க்க முட்டுச்சந்துபோல்தான் தெரிகிறது.
ஒருவேளை மறுமுனையில் திறப்பிருக்கலாம்.
இருபக்கமும் பாதை பிரியலாம்.
இதுபோல் நடந்ததில்லையா என்ன?
ஆனால்
இரு நான்கு வருடங்களுக்கு முன்பு நடக்கமுடிந்ததைப் போல்
இன்று முடிவதில்லை.
நினைத்தபோது கால்கள் தூண்களாகி
நிலமூன்றி நின்றுவிடுகின்றன
நகர்த்தவே சக்தியில்லாத நிலையில்
நெடுமரமாய் வேர்பிடித்திருக்கும் கால்கள் தன்னிலைக்குத் திரும்பக் காத்திருக்க நேர்கிறது.
இல்லை, சாம்சன் தலைமுடியாய் மீண்டும்
சக்தி திரண்டு
நிலத்தைப் பிளந்து தூண்களை வெளியே இழுத்து கால்களாக்கிக்கொள்ளும்படியாகிறது.
இதற்காகும் நேரம் பொதுவான காலக்கணக்கில் சேருவதில்லை.
அதிபிரம்மாண்டப் பெருங்காலம் அதன்போக்கில்
வருங்காலத்தை நோக்கிப் பாய்ந்தவண்ணமே.
அதன் சுழல்வேகத்தில் கழன்று மேலெழும்பும் கால்கள்
நடக்க முற்படுவதற்குள் இழுத்துச்செல்லப்படுகின்றன.
புயலடித்துத் தரைதட்டும் கப்பலாய்
அயல்வெளியில் கரைசேர்ந்து அரைமயக்கத்தில் துவண்டுகிடக்கின்றன.
கையறுநிலையில்……..
என்றும் சென்று சேருமிடம் சேர கால்களுக்குக்
கருணை காட்டவேண்டும் காலம்.