LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, February 27, 2025

மலைக்கவிதையும், மலைக்கவைக்கும் கவிதையும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

மலைக்கவிதையும், மலைக்கவைக்கும் கவிதையும்

- ‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
மலைக்கச் செய்வது மலை
மெய்யோ மெய்.
அதற்காய்
மலை மலை மலை மலை
யென்று அடுக்கிக்கொண்டேபோனால்
அது கலையாகிவிடுமா?
கவிதையாகிவிடுமா?
இல்லை
மலை கலை வலை தலை
என்று அடுக்கினால் மட்டும்?
(விலை உலையை விட்டுவிட்டீர்களே யென்று
எடுத்துக்கொடுப்பவரை என்ன செய்ய?)
மலை உயரமானது
மலையுச்சி மிக மிக உயரமானது
மலையில் கற்களும் பாறைகளும் உண்டு
அலையலையாய் வீசும் காற்றுண்டு
நீரூற்றுண்டு நெடுமரங்கள் உண்டு
என்று சொல்லிக்கொண்டே போனால் மட்டும்
சொக்கத்தங்கக் கவிதையாகிவிடுமா என்ன?
எத்தனை கவிதைகள் மலைகளைப் பற்றி!
இத்தனையும் உண்டு; இன்னமும் உண்டு அவற்றில்!
மிகு அன்பில் மலையை மன இடுப்பில் சுமந்தேன்
சிறுகுழந்தையாய் என்றுகூட எழுதப்பட்டுவிட்டது.
படிக்கத்தெரிந்தால் மலையுருகிப்போயிருக்கும்
பரவசத்தில்.
மலைமேல் வெய்யிலடிக்கும், மழைபொழியும்
மாடு ஆடுகள் மேயும் என்று
அரைத்த மாவையே அரைப்பதல்ல கவிதை!
ஒரே நேரத்தில் மலையின் குழந்தைமையையும்
விசுவரூப தரிசனத்தையும்
எனக்குணர்த்துவதாய்
அதன் ஒரு நுண் துகளின் மகத்துவத்தை எனக்கு
கட்டுரையாகாக் கவித்துவத்தோடு எடுத்துச்சொல்லி
நீயே அந்தத் துகளாய் மாறி
என்னையும் அந்தக் துகளுக்குள் அழைத்துச்சென்று
கணநேரமேனும் அங்கே உயிர்த்திருக்கச் செய்வதே
கவிதையென்றறிவாய்.
உன் கவிதையே அவ்வாறில்லையே என்கிறாய்.
உண்மை.
எனில், இல்லையென்பதை நான் அறிவேன்.
நீ அறியாய்.
இருப்பதாகப் பிரகடனம் செய்யமாட்டேன்.
நீ செய்கிறாய்.

மந்திரமாவது சொல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மந்திரமாவது சொல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

’மந்திரமாவது சொல்’ என்று சொல்லிச் சென்றார்கள் நம் முன்னோர்கள்.
இங்கே சொல்லை வைத்து ஏவல் பில்லி சூனியம் செய்துகொண்டிருக்கிறார்கள் நிறைய பேர்.
[மந்திரத்தைப் பெரிதென்று முன்வைத்து பில்லி சூனியத்தை மதிப்பழிக்கும் மேட்டிமைத்தனம் உங்களுடையது என்று யாரேனும் மேற்படி வரிகளைப் பொருள்திரிக்கலாம். வெறுப்பு மண்டிய அவர்களிடம் உரையாடல் சாத்தியமில்லை என்ற உண்மையின் விபரீதம் அச்சுறுத்துகிறது]
சில வார்த்தைகளையே திரும்பத்திரும்பச் சொல்லி கேட்பவர்கள் மனங்களில் அவற்றை இரண்டறக் கலக்கச்செய்த பின் _
(குழந்தைகள் வளரிளம்பருவத்தினரெனில் இந்த வேலை வெகு சுலபமாகிவிடும்)
அன்போடு அருந்தச்சொல்வதாய் வெறுப்பையும் வன்மத்தையும் அவர்களுடைய குரல்வளைகளுக்குள் திணித்துவிட _
அட, நம்மைத் தேர்ந்தெடுத்துத் தருகிறார்களே என்ற நெகிழ்ச்சியோடு சிலரும்
அதன் மூலம் தனக்கொரு ஒளிவட்டம் கிடைத்த மிதப்பில் சிலரும்
அப்படி என்னதான் தனி ருசி யிதில் என்ற ஆர்வக்குறுகுறுப்போடு சிலரும்
அதை ஆற அமர மென்று தின்று அடுத்தவேளைக்கும் அது கிடைக்குமா என்று அலைபாய்கிறார்கள்;
அதற்காக தங்கள் அடிப்படை அன்பை தடியெடுத்து அடித்துத்துவைக்கவும் தயாராகிறார்கள்.
மற்றும் சிலர்
மூச்சுத்திணறலிலிருந்து தப்பிக்கவேண்டி வேகவேகமாக அவற்றை விழுங்கியும்
அவசரமாய் அருகிலிருக்கும் குடுவையிலிருந்து தண்ணீர் எடுத்துப் பருகி உள்ளிறக்கியும்
வாகாய் அவற்றால் நிரம்பிவிடுகிறார்கள்.
வன்மமும் வெறுப்பும் அவர்கள் அடியாழ மனங்களை இறுகப் பற்றிக்கொள்ள _
பின், அவர்களும் விரைவிலேயே சொற்களைக்கொண்டு செய்வினை செய்யும் பில்லிசூனியக்காரர்களாகிவிடுகிறார்கள்.
’இந்தப் பொதுவிதிக்கு படைப்பாளிகள் மட்டும் விதிவிலக்கா என்ன’ என்று அழுதுகொண்டே கேட்கும் அசரீரியின் குரலை என்ன செய்ய.....

இவர்கள் இப்படித்தான் -‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 இவர்கள் இப்படித்தான்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

ஒரு கலவரத்திற்காகக் காத்திருக்கிறார்கள்
தங்கள் இரும்புக் கதவங்களுக்கு அப்பால் இவர்கள்.
கன்னுக்குட்டியளவு நாய் வைத்திருக்கக்கூடும்.
பெரும்பாலும் அது சிறுநீர் கழிக்க
அவர்கள் வீட்டுக்காவலாளிதான்
தன்னைத்தான் சபித்துக்கொண்டே
தெருவோர வீட்டுக் ’காம்பவுண்ட்’ சுவர்வரை
அழைத்துச்செல்வது வழக்கம் என்றாலும்
ஒரு கலவரநாளில் நாயின் விசுவாசம்
எஜமானருக்காக மட்டுமேயாகும்படியாக
‘ப்ரொக்ராம்’ செய்தாயிற்று.
கையில் காபி அல்லது வேறு பானக்
கோப்பையோடு
வசதியாக இருக்கையில் சாய்ந்தவண்ணம்
அவர்கள் சில அபாயகரமான சிந்தனைகளைப் பதிவேற்றிய பின்
அருகிலேயே அழைப்புவிடுத்துக்கொண்டிருக்கும்
படுக்கையில் சாய்ந்து
இரண்டு மணிநேரம் உறங்கிவிடலாம்.
‘வைரலாகிவிட்ட’ தங்கள் நெருப்புச் சிந்தனைகளால்
எங்கேனும் நிஜ நெருப்பு மூட்டப்பட்டிருக்குமானால்
பின், எழுந்ததுமே நெஞ்சு நிமிர்த்தி
வீட்டு வெளிவாயிலுக்குள்ளாகவே
வீர நடை பழகி
அதை ஒரு ஸெல்ஃபி எடுத்துப் போட்டுவிட்டால்
அப்பாடா! அதில் கிடைக்கும் நிம்மதியும் பெருமிதமும்
அருமையோ அருமை!
அரசியல்வாதிகளாவது ஐந்துவருடங்களுக் கொருமுறை accountable.
அறிவுசாலிகளுக்கோ அவர்கள் வாழும் நாளெல்லாம்
FREEDOM OF EXPRESSION available.
அப்படித்தான் இன்றிங்கே யொரு கலவரத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களில்
ஒருவர் சொன்ன காரணம்
கொஞ்சம் நியாயமானதாகவே இருந்தது:
”கலவரம் ஏற்பட்டால் ஒருவேளை நான்
காத்திரமான கவிதை யெழுதக்கூடும்”

பழுதடையும் எழுதுகோல்கள் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 பழுதடையும் எழுதுகோல்கள்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
[ “படித்தவன் சூதும் வாதும் செய்தால்... போவான் போவான் அய்யோன்னு போவான்”
-பாரதியார்]

மக்களாட்சியும் மதச்சார்பின்மையும் மாட்சிமை பொருந்தியவை என்று
24X7 முழங்கிக்கொண்டிருப்போர் சிலரின் மனங் களில்
மலிந்திருக்கும் மூர்க்கமான அதிகாரவெறி
ஆயிரம் வாள்களைக் காட்டிலும் அதிகூர்மையாய்
அங்கங்கே தலைகளைக் கொய்தபடியே……
அவரவருக்குத் தேவைப்படும்போது மட்டும்
அகிம்சை underline செய்யப்படும்.
‘பிரபலங்கள் சுதந்திரமாக நடமாட வழிவகுக்கும் கருவி புர்கா’ என்று
தர்க்கரீதியாய் (பேசுவதான நினைப்பில்)
பதவுரை வழங்கியும்,
’ஜெய் ஸ்ரீராம்’ இந்த நூற்றாண்டின் குரூர வாசகம்’
என்று
நிதமொருவிதமாய் வெறுப்பை வளர்த்து
மதிப்புரை யெழுதியும்
எழுத்தில் மனிதநேயத்தை முன்னிறுத்திக்கொண்டிருக்கிறார்கள்
பெண்ணியவாதப் படைப்பாளிகள் சிலர்……
அன்பையே வளர்ப்பதாகச் சொன்னவண்ணமிருக்கும்
என்புதோல் போர்த்திய உடலங்களாய்
முழுப்பிரக்ஞையிலான Selective amnesia வில்
மும்முரமாய் சில காட்சிகளை மட்டுமே
மீண்டும் மீண்டும் அதிகவனமாகப் பதிவேற்றுவதில்
முந்துவது யார்?
மூத்த படைப்பாளியா?
முளைவிட்டுக்கொண்டிருக்கும் படைப்பாளியா?

Wednesday, February 26, 2025

உள்ளது உள்ளபடி - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 உள்ளது உள்ளபடி

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
ஒரு கை பிடித்திருக்கும் கூர்கல்லையே அவருடைய புகைப்படக்கருவி
திரும்பத்திரும்ப ZOOM செய்துகொண்டேயிருக்கிறது.
பின்னணியில் பேரோலம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
அவருடைய புகைப்படக்கருவியின் அண்மையிலேயே இருவருடைய கைகால்கள் முறிக்கப்பட்டு மண்டையோடு பிளந்து கிடக்கின்ற சடலங்களை அவர் ஏன் படம் பிடிக்கவில்லை என்று புரியாமல் குழம்பிய புகைப்படக்கருவிக்கு அந்தக்காட்சிகளையும் பதிவுசெய்ய விருப்பம்.
ஆனால் _
’ஒரு வட்டத்தின் இரண்டு அரைவட்டங்களைச் சேர்த்து முழுவட்டத்தையும் காட்டிவிட்டால், முடிந்தது எல்லாம்.
அரைவட்டத்தைக் காட்டி இன்னொரு அரைவட்டம் களவுபோய்விட்டது என்று கிளிப்பிள்ளைக்கு சொல்லிக்கொண்டிருப்பதைப்போல் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டேயிருக்கவேண்டும்.
முடிந்தால் இன்னொரு அரைவட்டத்தை இரண்டு கால்வட்டங்களாக்கிக் கிழித்தெறிந்துவிட்டால் நலம்.
வட்டத்தின் ஒரு துணுக்கைக் காட்டி பல விபரீதங்களை விளைவிக்கமுடியும்.
மறந்தும் முழுவட்டத்தை ஒரு ஃப்ரேமுக்குள் கொண்டுவந்துவிடலாகாது.
முழு நிலவைப் படம்பிடித்துக்காட்டலாம்; முழு நிகழ்வைக் காட்டலாகாது.
முயலுக்கு மூன்றே கால்கள் என்று எத்தனைக்கெத்தனை உரக்கச்சொல்கிறார்களோ அத்தனைக்கத்தனை அவர்களே அறிவுசாலிகள் அறிவோம்.'
மனிதநேயத்தோடு அத்தனை அழகாகப் பாடமெடுத்தும் புரிந்துகொள்ளாமல் தன்னுடைய அறம் சார்ந்த நம்பிக்கையுடன் தன் கண்ணில் பட்ட அந்த நொறுங்கிய வாழ்வுகளையும் பதிவுசெய்ய முற்பட்டது புகைப்படக்கருவி.
உயிரற்ற அடிமைக்கு சுயம் ஒரு கேடா என வெகுண்டெழுந்த உடைமையாளர்
அதன் மீதும் ஒரு பெருங்கல்லை எடுத்துப் போட்டு அப்பால் செல்கிறார்.

இல்லாதிருக்குமொரு முயல் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 இல்லாதிருக்குமொரு முயல்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

நள்ளிரவைத் தொடும் இந்நேரம்
நேர்கீழே ஒரு முயலைக் கண்டால்
நகைப்பேனா நடுங்குவேனா நெக்குருகுவேனா…
சிறு முயலின் பாதங்களில் என்னைப்
பொருத்திக்கொள்ள இயலுமோ என்னால்…
குறுகுறுவென்று பார்க்குமதன்
கண்ணின் கருமணிக்குள்
விரியுமோ ‘ALICE IN WONDERLAND’
அல்லது, போர்ஹேயின் ‘THE BOOK OF SAND’
இரண்டையும் நான் படித்திருக்கிறேனா
பார்த்திருக்கிறேனா
படித்ததும் படிக்காததும்
பார்த்ததும் பார்க்காததும்
கேட்டதும் கேட்காததும்
கேள்விப்பட்டதும் படாததுமாய்
கலந்துகட்டிக் குழம்பும் வாழ்வில்
முயல்குட்டி மாய யதார்த்தமாய்…..
பெருவிருப்பிருப்பினும்
ஒரு முயலை மிகச்சரியாக என்னால்
தூக்க முடியுமா
எனக்கு 'மிகச்சரியாக' முயலுக்கு
என்னவாக இருக்கும்?
முயலொரு குறியீடு
முள்ளங்கிபத்தை யொரு குறியீடு
இரண்டும் ஒருசேர இன்னுமொரு குறியீடு
குறியீடுகளுக்கப்பால் வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறது
தன்னைத்தானே
மானே தானே என்று சேர்த்துக்கொள்வதே நம்மாலானதாக……
காணாதவரை கண்டதாகிவிடாது
கண்டதாலேயே கொண்டதாகிவிடாது
என்றுணர்ந்தபின்னும் வேறு வேறு
கண்டுகொண்டிருக்கும் மனது
கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்
என்று கவிதையெழுதியவாறு.

நோஞ்சான் உண்மையிடம் இல்லாத ஒளிவட்டம் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நோஞ்சான் உண்மையிடம் இல்லாத ஒளிவட்டம்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)


நலிவடைந்து நோஞ்சானாய் நிற்கும் நிஜத்தைப் பார்க்கவோ பேசவோ
யாருக்கும் நேரமிருப்பதில்லை.
உலகம் உருண்டையானது என்று கூறியவருக்கு என்ன நேர்ந்தது நினைவிருக்கிறதா?
நினைத்த நேரத்தில் நினைத்த வடிவத்தில் உண்மையை வனைய முடியாது என்பதால்
யாருக்கு வேண்டும் இந்த உண்மை?
பொய்யின் பலவண்ணங்களோடு ஒப்பிட
உண்மையின் நிறமின்மையைை எப்படி
சிலாகிக்கமுடியும்?
தவிர, அதை அரசியல்வாதிகளுடைய வேட்டி சட்டையோடு
ஒப்பிட்டுக் கறைப்படுத்திவிடுவதும் எளிதுதானே.
பேருக்கு உண்மைவிளம்பிகளாக இருந்துகொண்டே
நூறுவிதமாகப் பொய்யை உயர்த்திப்பிடிப்பதில்தான் உயர்விருக்கிறது என்பதை அறிந்தபின்
கூறத்தகுமோ உண்மையை உண்மையாக?
’பாதி உண்மை’ என்று சொல்ல
பொய்க்கும் ஒரு ’பவுசு’ கிடைத்துவிடும்.
அயராமல் பொய்யுரைத்துக்கொண்டே அந்தப் பொய்களையெல்லாம்
உண்மையின் பன்முகங்களாகப் புரியவைப்பதில்
ஆளுக்கொன்றோ சிலவோ
ஒளிவட்டங்களும் கிடைக்க வழியுண்டு.
பின், வேறென்ன வேண்டும்?