LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Thursday, June 20, 2024

மேம்போக்குப் பிரசங்கிகளும் PAPER MACHE மலைகளும் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 மேம்போக்குப் பிரசங்கிகளும் PAPER MACHE மலைகளும்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
பசியின் கொடுமையை வருடக்கணக்காக அனுபவித்தவன்
முன்
பத்து தட்டுகளில் பதார்த்தங்கள் வைக்கப்பட்டபோது
அவனையுமறியாமல் அவன் நாவில் சுரந்த உமிழ்நீரை
மட்டந்தட்டிப் பேசிப்பேசியே அந்த மாளிகையில்
அன்றாடங்கள் காலாவதியாகிக்கொண்டிருந்தன
மற்றவர்களைத் திட்டித்திட்டி
மதிப்பழித்து வெறுப்புமிழ்ந்து விஷங்கக்கி
மக்கள்நலப்பணி செய்துகொண்டிருந்தவர்
தானே பணங்கொடுத்துத் தயாரித்த
மாபெரும் விளம்பரபதாகையில்
முகம் மலரச் சிரித்துக்கொண்டிருந்தார்.
மேடுபள்ளமாய் காலிடறிக் கீழே விழச் செய்யக்
காத்திருக்கும் வீதியில்
அடிப்பிரதட்சணமாய் நடந்துகொண்டிருந்த
எளிய மனிதர் அதைப் பார்த்து
மெல்ல முறுவலித்துச் சொல்லிக்கொள்கிறார்
முணுமுணுப்பாய் -
மலையேறுபவர்களெல்லாம் மானுடம் உய்விக்க வந்த
மகோன்னதப் பிரசங்கிகளாகிவிட முடியாது.
மனம் வேண்டும் அதற்கென்றொரு
மன எளிமை வேண்டும்
மனிதநேயம் வேண்டும்
மழையனைய சமநோக்கு சார்பற்ற கொடையளிப்பு
முத்துமுத்தான நீர்த்துளிகளாய் பிறக்கும்
சுத்தமான சுயநலமற்ற கருத்துச்சிதறல்கள்
சத்தியவேட்கை
கழுத்திலிறங்கும் கத்தியை முத்தமிடும் நெஞ்சுரம்
கணங்கள் யுகமாவதை உணரமுடிந்த சித்தம்
இத்தனையும் வேண்டும்
இன்னமும் வேண்டும்
எந்தரோ மகானுபாவர்களை காணக்
கண்கோடி வேண்டும்.
கண்டுணர வேண்டும் சதா உள்விழித்திருக்கும்
கண்கள்கோடி
குண்டுசட்டியில் குதிரையோட்டிக்கொண்டிருக்கும்
ஆன்லைன் அரண்மனைவாசிகளுக்குத்
தொடுவானமாகும் சிறுகுன்றேற்றமும்.

இயல் – இசை - நாடகம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 இயல் – இசை - நாடகம்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)
ஆளுக்கொரு ஆயத்தக் குழு வைத்திருக்கிறார்கள்
ஆட்களும் ஆட்களின் எண்ணிக்கையும் அடிக்கொருதரம்
மாறிக்கொண்டேயிருக்கும்.
எதிர்த்துத் தாக்கி வீசவேண்டிய எறிகணைகளுக்கேற்ப
முன்பின்னாகக் குழுவினர் இடம்மாற்றி நிற்பது இயல்பு
போலத் தெரிந்தாலும் அது தெளிவான திட்டமிடல்; ஆயத்தம்.
இயல்புபோல் இயல்பல்லாததைச் செய்வதே
இன்றைய இயல்பாகும் தகிடுதித்தம் கைவசப்படாதார்
கற்கால மனிதர்களுக்கும் முற்காலத்தவராக.
மாறி மாறித் தாக்கியும் தழுவிக்கொண்டும்
குழுக்கள் தனிநபராகி தனியொருவர்கள் குழுக்களாகி
பொழுதெல்லாம் அரத்தை சீவிக் கூர்தீட்டி
அறம் வளர்த்தபடி.....

வெறும் வானமும் வளர்கவிதையும் - ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 வெறும் வானமும் வளர்கவிதையும்

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
வெறும் வானிருந்தொரு திடீர் மின்னல்
பளீரிடுவதுபோல்
இருந்தாற்போலிருந்து உருவாகிக்கொண்டிருக்கிறது கவிதை.
சிறிதும் பெரிதுமாய் வரிகளோடியவண்ணம்.
இரு நிறுத்தற்குறிகள் தம்மைத்தாமே
இடம்பொருத்திக்கொண்டுவிடுகின்றன.
ஓர் ஆச்சரியக்குறி அங்குமிங்குமலைந்துகொண்டிருக்க
அந்தரத்தில் தலைகீழாய்த் தொங்கிக்கொண்டிருக்கின்றன சில கேள்விக்குறிகள்.
திருத்தேர் வீதியுலா வரும்நேரம் இறையுருவை மறைத்து
ஏராளம்பேர் இருந்தும்
இருவிழிகளும் தாமாய் மூடிக்கொள்ள
உறுகைகள் அனிச்சையாய் கன்னங்களில் தட்டிக்கொள்ள
உள்ளே தெரிந்தும் தெரியாமலுமாய்
உறையலாகுங் கடவுள்
சிறுகணம் என்னில் இரண்டறக் கலத்தலாய்
சிதம்பர ரகசியமாய்
சித்திரத்துச் செந்தாமரைக்கு
சிறகு முளைத்ததாய்
முழம்போடும் வெறுங்கையெலாம்
வாசமல்லி பூப்பதாய்
வாய்கொள்ளா தாகத்தோடு
வெற்றிடத்திலிருந்து வாரியெடுக்கிறது
கவிதை.
பாயுமொளியில்லையென்றாலும்
பறவைகள் இல்லையென்றாலும்
ஓயாப்பெருங்கடலலைகளின் மேலாய் காணும்
வெறும் வான் வெறும் வான் அல்லவே!

INSIGHT (a bilingual blogspot for contemporary tamil poetry) - MAY 2024 ISSUE

 



கவிதையின் உலகம் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 கவிதையின் உலகம்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


கவிஞராயிருப்பதாலேயே பிரபலமாயிருப்பவர் உண்டு.
பிரபலமாயிருப்பதாலேயே கவிஞராயிருப்பவர் உண்டு.
கவிஞராயிருப்பதாலே பிரபலமாகாதவர்கள் உண்டு.
பிரபலமாயில்லாததாலேயே கவிஞராகாதவர்கள் உண்டு.
கவிஞரென்ற அடைமொழியுடன் உலகெங்கும் சுற்றிவருபவர்கள் உண்டு
சுற்றச்சுற்ற விரிவடையுமவர் தலைமேலான
ஒளிவட்டங்கள்
அடுத்த தெருவுக்கும் போயிராதவரின்
அவருக்கும் அவரை அறிந்தவர்களுக்கும் மட்டுமே
தெரிந்த கவிதையின்
அறியப்படாத ஆழ நீள அகலங்கள்
புலப்படுமோர் நாளில்
உலகம்சுற்றிக்கவிஞர்களைப் பற்றிய பிரமிப்பு
விலகி
உயிருள்ள கவிதை இன்று பிறந்த குழந்தையாய்
கைகால்களை உதைத்துக்கொள்ள ஆரம்பிக்கும்.

எழுத்தாளரின் தான்.....

 

தானொரு தரமான


படைப்பாளி என்ற எண்ணம் 

தன்மதிப்பு; தன்மானம்;

தான் மட்டுமே தரமான படைப்பாளி என்ற எண்ணம் 
தலைக்கனம்; திமிர்த்தனம்.

நான் யார் தெரியுமா!?!? - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 நான் யார் தெரியுமா!?!?

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)
_ என்று கேட்பதாய்
சில அமைச்சர்களுடன் தான் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.
_ என்று புரியச்செய்வதாய்
மறவாமல் சில முன்னணி நடிக நடிகையர்
இயக்குனர் இசையமைப்பாளர்களுடன்
புதுப்பட பூஜை நிகழ்வில்
பங்கேற்ற செய்திகள் படங்களோடு
வெளியாகச் செய்திருக்கிறார்.
_ என்று அடிக்கோடிட்டுக்காட்டுவதாய்
சர்வதேச (நாலாந்தர) எழுத்தாளருடன்
தோளோடு தோள் சேர்த்து நின்ற, நடந்த
காணொளிக் காட்சிகளை
வெளியிட்டிருக் கிறார்.
_ என்று வீரமுழக்கம் செய்வதாய் தலைமறைவுப்போராளிகள் சிலருடன்
காட்டில் குத்துக்காலிட்டு அமர்ந்து
உணவுண்ட காட்சிகளின்
(அதற்கென்றே பிரத்யேகமாக அழைத்துச்
செல்லப்பட்ட சித்திரக் கலைஞரான
தோழரால் கிறுக்கப்பட்ட)
கோட்டோவியங்களை
சுற்றிலும் இறைத்து
நடுவே சிந்தனையார்ந்த முகபாவத்துடன்
தன்னை இருத்திக்கொண்டு எடுத்த
செல்ஃபிகளை
சரசரசரவென்று தொடர்ச்சியாக சில நாட்கள் வெளியிட்டிருக்கிறார்.
_ என்று அழுத்தமாக எடுத்துரைப்பதாய்
மெய்நிகர் மலையொன்றின் உச்சியில்
அமர்ந்தவாறு
சுற்றிலும் பல வயதுகளிலான ஆண்களும்
பெண்களும்
அவர் வாயிலிருந்து விழும் முத்துக்களை
ஆவேசமாகப் பாய்ந்து பாய்ந்து பொறுக்கி யெடுத்துக்கொள்வதை
ஒரு மந்த காசப் புன்னகையுடன் பார்த்தவா
றிருக்கும் புகைப்படங்களை
அவருடைய நான்கைந்து பக்தகோடிகள்
Bit Noticeகளாய் வினியோகித்துக்கொண்
டிருக்கிறார்கள்.
என்றென்றென்றெனக் கேட்பதான
அத்தனை படங்கள், கோட்டோவியங்கள்,
காணொளிகள், குறுஞ் சுவரொட்டிகளைப்
பார்த்தபின்பும் அசராமல் நின்று கொண்டிருக்கும் வாசகரைப் பார்த்து
‘நான் யார் தெரிகிறதா?’
என்று கேட்டவரிடம் _
_ உங்கள் எழுத்தின் மூலமே தெரிகிறது –
இத்தனை ‘Stage Props’ எதற்கு
என்று எதிர்க்கேள்வி கேட்ட வாசகர்
தன் கையிலிருந்த முகமறியாக் கவியின்
தொகுப்புக்குள்
கூடுவிட்டுக்கூடு பாய்ந்தார்!

கிளைபிரியும் குறுக்குவழிகள் - ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)

 கிளைபிரியும் குறுக்குவழிகள்

ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)

அறுபது பேரோ அறுநூறு பேரோ
ஆறாயிரம் பேரோ
எந்தக் கூட்டமானாலும் விவிஐபிக்களோடு
‘குழுவாக நின்று படமெடுப்பது இயல்புதான்.
வட்டமேஜை அமர்வுகளையும் படமெடுப்பார்கள்;
உணவு இடைவேளையில் கையில் தட்டுடன்
சிறு சிறு வட்டங்களாக நின்றவண்ணமே செவிக்குணவும் வயிற்றுக்குணவுமாக பசியாறுவதையும் படமெடுப்பார்கள்;
கவனமாகப் பார்த்துப்பார்த்து
பிரபலங்கள் பக்கத்தில் இடம்பிடித்துவிட்டால்
பின் புகைப்படங்களில் இருக்கும் மற்றவர்களை
‘க்ராப்’ செய்து நீக்கிவிடலாம்.
பிறகென்ன
தானும் பிரபலமும்
நகையும் சதையும்போலவென்றால்
நம்பித்தானே ஆகவேண்டும்
நாங்கள் நீங்கள் அவர்களெல்லாம்….

மொழிபெயர்ப்புச் சுதந்திரமும் அத்துமீறலும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 மொழிபெயர்ப்புச் சுதந்திரமும் அத்துமீறலும்


‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

மொழிபெயர்ப்பாளர் மூல ஆசிரியரின் அடிமையில்லைதான்
அதற்காக, மூல ஆசிரியராகிவிட
முடியுமா என்ன?
அன்றி மூல ஆசிரியரின் இணையாசிரியராகி
விடலாகுமா?
கேள்வி முடியும் முன்பே
முடியும் ஆகும் முடியும் ஆகுமென்று
முடிந்த முடிவாக மொழிபெயர்ப்பாளர்
முன்மொழிய
அன்பு காரணமாகவோ பண்பு காரணமாகவோ
மூல ஆசிரியர் அதை வழிமொழிய
மகிழ்ந்துபோன மொழிபெயர்ப்பாளர்
உருவைக் கருவாக்கி
எருவை வெறுவாக்கி
பருவை மருவாக்கி
சிறுவை பெருவாக்கியதோடு நில்லாமல்
ஒருவை ஓரங்கட்டி
திருவைத் திருட்டுப்போகச் செய்து
இரவைப் பகலாக்கி
பறவையை பிராணியாக்கி
பிரண்டையை யாளியாக்கிக்கொண்டே போக
மொழிபெயர்ப்பொரு மீள்கவிதையாக்கம்
என்று முழங்கி
மூல கவிதையின் நுட்பங்களெல்லாம்
மொழிபெயர்ப்பில் வெட்டி
யகற்றப்பட்டுவிட்டதில்
மூல கவிதையின் ஆணிவேர்
ஆட்டங்காண
முளைவிதை முடங்கிக்கொண்டது
அடியாழத்தில்!

நேர்காணல் ...........’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

நேர்காணல்
............................................................
’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

தரப்பட்ட கேள்விகளை ஒருசில வாசிப்பில் மனப்பாடம் செய்துகொண்டுவிடுவதில்
மகா திறமைசாலி அந்தப் பெண் என்று
பார்த்தாலே தெரிந்தது.
மேலும்,
அவளுடைய காதுக்குள்ளிருக்கும் கருவி
அவளிடம் அடுத்தடுத்த கேள்விகளை
எடுத்துக்கொடுத்துக்கொண்டிருக்கக்கூடும்.
அழகாகவே இருந்தாள்.
அவளுடைய அடுத்த இலக்கு
வெள்ளித்திரையாக இருக்கலாம்.
அதில் எனக்கென்ன வந்தது?
கேட்ட கேள்விகளுக்கான பதில்களை
அவள் பொருட்படுத்தவேயில்லை.
அப்படி எதிர்பார்ப்பது நியாயம்தானா என்று தெரியவில்லை.
அந்தப் பெண்ணின் முகம் எதற்குப் புன்னகைக்கவேண்டும்
எதற்கு ஆர்வமாகத் தலையசைக்கவேண்டும், எதற்கு ‘அடடா ‘பாவ’த்தைத் தாங்கவேண்டும், எதற்கு உச்சுக்கொட்டி கன்னத்தைக் கையிலேந்த வேண்டும் என்று எல்லாமே ‘ப்ரோகிராம்’ செய்யப்பட்டிருந்தன.
அவள் பணி கேள்விகள் கேட்பது.
அறுபதாயிரத்திற்கு கூடக்குறைய இருக்கும்
மாதவருமானம்.
”எப்போது கவிதை எழுதத் தொடங்கினீர்கள்?”
”கி.மு. 300”
”நல்லது. உங்களுடைய அடுத்த கவிதை?”
”பி.கி 32”
”நீங்கள் இதுவரை எவ்வளவு கவிதைகள் எழுதி யிருக்கிறீர்கள்?”
ஒரு லட்சம்.
”மிக்க மகிழ்ச்சி. ஒரு கவிதைக்கு உங்களுக்குக் கிடைக் கும் அதிகபட்ச சன்மானம்?”
”ஆறு கோடி”.
”அவ்வளவா? வாழ்த்துகள்.” ”உங்களுக்குப்
பிடித்த கவிஞர் யார்?”
”நான் தான்”.
”அந்தப் புனைப்பெயரில் எழுதும் கவிஞரை நான் இதுவரை படித்ததில்லை” என்று அழகாகப் புருவத்தைச் சுளுக்கிய பேட்டியாளரிடம்
'உங்களுக்குப் பிடித்த கவிஞர் யார்?' என்றேன்.
'நிச்சயமாக நீங்களில்லை' என்று சொல்லியிருந்தாலும் பரவாயில்லை.
'நிலாமுகக்கதிர்ச்சக்ரவர்த்தி நீலாம்பரன்' என்று
ஒரு நாலாந்தரக் கவிப்பெயரைச் சொன்னபோது
அந்த முகத்தில் தெரிந்த விகசிப்பைக்
காண சகியாமல்
அரங்கிலிருந்து எழுந்தோடிய என்னை _
அன்போடு துரத்திவந்து
என் கையில் நீலாம்பரனின் (அ)கவிதைத் தொகுப்பொன்றை
அன்பளிப்பாகத் திணித்துவிட்டுத்
நன்றி நவின்று திரும்பிச் சென்றாள்
நேர்காணல் நடத்திய அந்தப் பெண்.