LIFE GOES ON.....

LIFE GOES ON.....

Saturday, September 12, 2020

ஓருடல் ஈருயிர் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 ஓருடல் ஈருயிர்

‘ரிஷி’


(லதா ராமகிருஷ்ணன்)

அத்தனை அன்பாகக் 

கரைந்துருகுகிறார்கள்

அத்தனை வலிக்க 

வலிக்க 

அழுதரற்றுகிறார்கள்

அத்தனை 

இன்முகத்தோடு

தத்துவம் 

பேசுகிறார்கள், தர்க்கம் 

செய்கிறார்கள்

மனிதநேயம் 

பேசுகிறார்கள்

வாழ்வின் மகத்துவம் 

பேசுகிறார்கள்

இனிய உளவாக என்ற வள்ளுவரை

முடிந்தபோதெல்லாம் மேற்கோள் காட்டுகிறார்கள்....


அத்தனைக்கத்தனை வெறுப்புமிழ்கிறார்கள்

அவதூறு செய்கிறார்கள்

அச்சமில்லாமல் உச்சஸ்தாயியில்

கத்தித்தீர்க்கிறார்கள்

கலப்பற்ற அப்பட்டப் பொய்களை

பொறுப்புத்துறந்தபடி கண்ணில்படுபவரை

யெல்லாம் கொள்ளைக்காரர்களாக்கிக்

கழுமேடைக்கு இழுத்துச்செல்கிறார்கள்.

வேண்டியவரின் பெருந்தவறைக் கண்டுங் 

காணாமலும்

அல்லது மென்சிரிப்போடு செல்லமாய்க்

கண்டித்தும்

பிடிக்காதவரென்றால் அவரைக்

கொச்சையாய் மதிப்பழித்தும்

அடுக்கடுக்காய் அவர் மீது பழிபோடும்

வழி தேடியும்

சாமான்ய மக்களிடமிருக்கும் சொல் நேர்மை

செயல் நேர்மை

சிறிதுமின்றி சாய்கிறார்கள் சிலர் பக்கம்

சுய ஆதாயத்திற்காய்

சாய்க்கிறார்கள் நியாயத்தராசை.

சத்தியமாய்ச் சொல்கிறேன் - அத்தனை 

அருமையான

வாழ்க்கைத் தத்துவங்களை உதிர்க்கிறார்கள்

வாழ்வின் தரிசனங்களைப் பதிவுசெய்கிறார்கள் _


அதே கையால் அத்தனை தடித்தனமாய்

பயன்படுத்துகிறார்கள் எழுதுகோலை

அடியாளாய்.

Dr Jekyll and Mr Hyde என்றுமாய்

புத்தக விளிம்புகளைக் கடந்தவாறு

பாலினங் கடந்தவாறு………..


Dr Jekyll and Mr Hyde : 1886இல் பிரசுரமான, ராபர்ட் லூயி ஸ்டீவென்ஸன் எழுதிய குறுநாவல். கதைநாயகன் Dr. ஜெக்கிள் இயல்பாக இருக்கும் போது நல்லவராகவும், பரிசோதனைக்காக ஒரு மருந்தை உட்கொள்ளும் போது குரூரமானவராகவும் நடந்துகொள்வார்.

தொடர் ஓட்டமும் சுழல் கோப்பையும் - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 தொடர் ஓட்டமும் 

சுழல் கோப்பையும்

‘ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)



(1)


மூக்குக்கண்ணாடி அணிந்தவர்களை 'நாலு கண்ணா' என்றும் 'புட்டிக்கண்ணாடி' என்றும்
உரக்க அழைப்பவர்கள் எப்படி
உற்ற நண்பர்களாக முடியும்?

உடல் ஊனமுற்றவர்களை ஊனத்தை அடைமொழியாக்கிச் சுட்டுபவர்களை
மனிதர்களாகக் கொள்ளத் தகுமா?

அடுத்தவர்களுக்கு அடைமொழியிட்டு அழைப்பத னாலேயே
தன்னை அப்பழுக்கற்ற வராக்கிக்கொள்ள முடியு மென்ற அரிச்சுவடியை
அவர்கள் எங்கிருந்து கற்றார்கள் தெரியவில்லை.

அப்பட்டப் பொய்யை அடுத்தடுத்துச் சொல்வ தாலேயே
அதை மெய்யாக்கிவிட முடியுமென்றும் படித்திருக் கிறார்கள். எந்தப் புத்தகத்தில் தெரியவில்லை.

நம்மிடமுள்ள நூல்கள்தான் எவ்வளவு! எவ்வளவு!
எவ்வளவுக்கெவ்வளவு படிக்கிறோமோ
அறிவு விரிவடையும் அவ்வளவுக்கவ்வளவு.

பல்கிப் பெருகி பெருத்து வீங்கிப்புடைத்துவிட்டால் பின் வெடித்து உடைந்து சிதற வாய்ப்பிருக்கிறது எதற்கும்.

ஏட்டுச் சுரைக்காய் கவைக்குதவாது….

ஒருவேளை வாழ்க்கைப்பாடமாகக் கற்றிருக்கலாம்.

கற்றது கையளவு; கல்லாதது கடலளவு…..

’உனக்கு மூடிக்கொண்ட பூனைக்கண்கள்’ என்பாரிடம்
உண்மையிலேயே மூடியிருக்கும் பூனையின் கண்களுக்குள் கூடுவிட்டுக்கூடுபாயக் கிடைத்தலொரு கொடுப்பினையென்றால்
'நட்டுக்கழண்ட பெண்(மணி)' என்ற இன்னொரு அடைமொழியை அவர்கள் தரவேண்டியிருக்கும் –

அதாவது, கொஞ்சம் கண்ணியமானவராயிருப்பின்.
(இல்லாவிட்டால் இருக்கவேயிருக்கிறது
அருவருக்கத்தக்க அடைமொழிகள் ஆயிரம்.
சொல்லியா தரவேண்டும்!)

போகிற போக்கில் அள்ளி வீசிக்கொண்டேயிருந்தால் பின் கையிருப்பிலுள்ள அடைமொழிகளை யெல் லாம் இழந்து
அவர்களுடைய அடையாளம் என்று எதுவுமில்லா மலாகிவிடுமே என்பதை நினைத்துப் பாவமாயிருக் கிறது

போரும் சமாதானமும் அவர்கள் வரையில்
வீரமும் கோழைத்தனமும்…..


(2)


என்னை பசுமை ஃபாஸிஸ்ட் (அப்படியென்றால் என்ன?!) என்று அழைத்தவரை
பேசாமல் ’ப்ளாக்’ செய்து கடந்துசெல்கிறேன்.

அவரை 'வறண்ட ஃபாஸிஸ்ட்' என்று யாரேனும் அழைக்கக்கூடும்…

வானவில் ஃபாஸிஸ்ட் என்ற அடைமொழி
யாருக்கேனும் வழங்கப்பட்டிருக்கிறதா, தெரிய வில்லை.

வழங்க எண்ணிக்கொண்டிருப்பவர்கள் புதைசேறு ஃபாஸிஸ்ட் என்ற பதக்கப்பெயர் பெற்றிருக்கக் கூடும்.

ஆய்த எழுத்து தமிழுக்கே உரித்தானதுதானே
அதை ஏன் நாம் அரிதாகவே பயன்படுத்துகிறோம்?
அவசியம் எண்ணிப்பார்க்கவேண்டும்.

பார்க்கிறவர்களையெல்லாம் ஃபாஸிஸ்டுகளாக பாவிக்கும் இயல்புடையார்தான் இருக்கும் ஃபாஸிஸ்டுகளிலேயே உச்சபட்ச ஃபாஸிஸ்ட் என்று எதிர்வினையாற்றாதலால் நான் அச்சங் கொண்டுவிட்டேன் என்று அர்த்தமா என்ன?

ஒருவேளை அந்த வார்த்தையின் வீரியத்தை அழித்துவிட்டதாகவும் அதை என் மீது பிரயோகித்தது சரியில்லை என்றும்
அவர்களுக்குத் தோன்றக்கூடும் நாளில்
அவர்களும் நானும் உயிரோடிருப்பின் _
அவர்கள் அதை என்னிடம் தெரிவிக்கவேண்டி யதில்லை;
தெரிவிப்பார்கள் என்ற எந்த எதிர்பார்ப்பும்
என்னிடமில்லை எள்ளளவும்..

அதனியல்பில் எச்சமிட்ட காகமிருந்த மரத்தின் நேர்கீழே
அக்கணம் என் தலையிருந்தது. அவ்வளவே.

அனுபவம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 அனுபவம்


‘ரிஷி
(லதா ராமகிருஷ்ணன்)


முப்பது வருட மொழிபெயர்ப்பு அனுபவம்
 
எனக்கிருப் பதாகவும்

அது என் மொழிபெயர்ப்பில் மிளிர்கிறது என்றும்

குறுந்திறனாய்வொன்றில் குறிப்பிடப்பட்டிருக்

 கிறது….


முப்பது தானா? நாற்பதுகூட இருக்கலாம்.

ஆனால், அதுவொரு அளவுகோலா,

தெரியவில்லை.


சித்திரம் கைப்பழக்கமாக இருக்கலாம்;

இல்லாதுபோகலாம்.


படைப்பாளியாகா படைப்பாளியைப் போலவே

மொழிபெயர்ப்பாளராக மாட்டா மொழிபெயர்ப்

 பாளர்களும் உண்டு.


இகழ்வதைைப் போலவே புகழ்வதிலும்

அரசியல் இருப்பதை அறிந்திருக்கிறேன்.


இகழ்ச்சியும் புகழ்ச்சியும் சிலர் இயல்பாகக் கைக்

 கொள்ளும் உத்தியாவதுண்டு
 _
தம்மை விமர்சனாதிபதிகளாக சத்தமில்லாமல்

 பீடமேற்றிக்கொண்டுவிட.


முப்பது வருட மொழிபெயர்ப்பு 

அனுபவமுடையவர்

என்று மூன்று முறை அடித்துச்சொல்லியே

நேற்றிலிருந்து மொழிபெயர்க்கத்

 தொடங்கியவரை

முதுபெரும் மொழிபெயர்ப்பாளராக்கிவிடுவதும்

இங்கே நடக்கவில்லையா என்ன?


இத்தனை வருட இலக்கியவெளிப் பயணத்தில்

இன்னும் நிறையப் பார்த்தாயிற்று.


புகழுரைகளையும் இகழுரைகளையும்

பொருட்படுத்தாத அகம் ஆத்ம சுகம்.


குறும்பாக என்னைப் பார்த்துச் சிரித்தவாறு

கேட்கிறது நான்:


‘மொழிக்கடலின் ஒரு துளியாக இருக்கும்

 என்னால்

மொழியை எப்படி பெயர்க்க இயலும்?’.


கேள்வியை வழிமொழிகிறேன்.


இரண்டும் இரண்டு பாறைகளென்றாலாவது

பெயர்க்க முடியலாம் -காற்றாக காலமாக

 கண்ணாமூச்சிவிளையாடும்போது…?


சிறுமியின் நோட்டுப்புத்தகத்திற்குள்

 பத்திரப்படுத்தி வைத்திருக்கும் மயிலிறகாய்

இரு மொழிகளும் மாயம் செய்தபடி

நீவிவிட்டுக்கொண்டிருக்கின்றன என்னை.


அவை படிக்கத் தரும் வரிகள் 

அருள்பாலிக்கின்றன.

இருப்பைத் தாண்டி வாழ்கிறேன்.

இவ்வளவே.

கீழ்க்கண்ணால் பார்ப்பது புகைப்படங்களா? புகைப்படத்தில் உள்ளவர்களா? -’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

 கீழ்க்கண்ணால் பார்ப்பது புகைப்படங்களா? புகைப்படத்தில் உள்ளவர்களா?

’ரிஷி’
(லதா ராமகிருஷ்ணன்)

எனக்கு ஒன்று மட்டும் புரியவில்லை
எதனால் சிலர் எல்லாப் புகைப்படங்களிலும்
கீழ்க்கண்ணால் பார்க்கிறார்கள்
கிறக்கத்திலாழ்ந்திருப்பதாய்
பிறரைக் கிறக்கத்திலாழ்த்த விரும்புவதாய்
புகைப்படக்கருவிக்குள் அதற்கென்று ஏதேனும்
தனிச்சிறப்பான தொழில்நுட்பம் இடம்பெற்றிருக்கிறதா?
அறிவுசாலிகள் கைக்கொள்ளவேண்டிய பாவம் அதுதானோ?
சத்தியமாய் இயல்பானதா? அல்லது, ஒத்திகை பார்க்கப்பட்டதா?
பாவமும் பாவனையும் ஏன் சமயங்களில் ஒரே பொருளிலும்
சமயங்களில் வெவ்வேறு பொருளிலும் வருகின்றன?.
(B)பாவம் (P)பாவமாக பாவனை என்னவாகும்?
ஏனோ எதனாலுக்கு பதிலியாகுமா ஆகாதா?
போகாத ஊருக்கு வழிதேடக்கூடாதா?
ஒருமுறை தாண்டிக்கடந்தபின் மீண்டும்
முதல் சதுரத்திற்குக் கால்கள் வந்துசேர்வது
எப்படி?
இப்படி _
யடுக்கடுக்காய் எத்தனையோ புரியாமலிருக்கும்போது
கணக்காய் ஒன்று மட்டும் புரியவில்லையென்று
எதனால் சொன்னேன்
என்பதும் புரியவில்லை!


Wednesday, May 27, 2020

க்ருஷ்ணார்ப்பணம் ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)

க்ருஷ்ணார்ப்பணம்
ரிஷி

(லதா ராமகிருஷ்ணன்)


1.விண்டவர் கண்டிலர்

தேடித்தேடி இளைக்கச்செய்து
அவளை ஹரி மோசம் செய்துவிட்டதாக
கரும்புள்ளி செம்புள்ளி குத்த
காலந்தோறும் பரபரத்துக்கொண்டிருப்போருக்கு
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி யொரு பேதை;
காதலனால் வஞ்சிக்கப்பட்டவள்;
கண்ணீர்பெருக அவனை நினைத்துப்
பாடல்கள் எழுதியெழுதி இளைத்தவள்;
இன்(ல்)வாழ்க்கையைத் தொலைத்தவள்…..
நாச்சியார் திருமொழி பாய்ச்சும் அன்பெல்லாம்
விழலுக்கு இறைத்த நீராகிவிட்டதாய்
இறுதித்தீர்ப்பு எழுதி
கழுமேடைக்கு ஹரியெனும் காற்றை
கரகரவென்று இழுத்துச்செல்லப் பார்ப்பவர்களின்
விசாரணை வளையத்திற்கு அப்பாலானது
காற்றைக் காதலனாக அடைந்தே தீருவது என்ற
அவளின்
அசாதாரண ஊற்றனைய போதமும்
பிறவிப்பெரும் பேறாய்
காற்றோடு அவள் ஆனந்தமாய் அலைந்துதிரிந்த
அரிதரிதாம் காதமும்
உருவறு விசுவரூபக் காற்று
அவளைச் சரண் புகுந்ததும்
அதுகாலை கேட்ட சுநாதமும்
மீதமும்.

***
2.கண்டவர் விண்டிலர்

அவரிவருடைய கண்ணீரின் அர்த்தங்களை யெல்லாம்
தன் கண்ணீருக்கானதாக முன்வைத்துக் கொண்டிருப்போரிடம்
மென்சிரிப்போடு ஒன்றை மட்டுமே
திரும்பத்திரும்பக் கூறிக்கொண்டிருக்கிறாள் ஆண்டாள்:
என் ஒரேயொரு கண்ணீர்த்துளியைத் தருகிறேன்
திரியாமல் முறியாமல் திறந்து
உள்ளேயிருக்கும் உணர்வின் உணர்வை
உள்ளது உள்ளபடி
கையிலேந்திக் கொண்டுவரமுடியுமா பாருங்கள்.”
அவளறிவாள் _
அதன் வட்டம் நம் உள்ளங்கைகளில் அடங்காது.
அதன் குளிர்ச்சி சுட்டெரிக்கும்.
அதனுள்ளே தெரியும் வானவிற்கள் நம் பார்வைக்குக்
காணாதொழியும் வாய்ப்புகளே அதிகம்.
அந்த ஒற்றைக் கண்ணீர்த்துளிக்குள்
புல்லாங்குழல் உண்டு;
பிரிய குசேலர் உண்டு;
உரலில் கட்டிவைக்கப்பட்டிருக்கும்
குறும்புக் குழந்தையின் குட்டி வாய்க்குள்ளான
அகில உருண்டை உண்டு.....
ஒரு கணம் யுகமாகவும்
ஒரு யுகம் கண்ணிமைப்போதாகவும்
அந்தக் கண்ணீர்த்துளிக்குள் இயங்கும்
காலம் வேறு;
காலக்கணக்கு வேறு;
காலப்பிரக்ஞை வேறு.
வேண்டாத வேலை யிது -துண்டுபோட்டுத் தாண்டாத குறையாய் அவள் காதலைத் தோற்றதாக்குவது.
மாண்டாலும் மாறாதது ஆண்டாளின் அன்பு.
தீக்குள் விரலை வைத்தால்
நந்தலாலாவைத் தீண்டும் இன்பம் தோன்றுவது
எத்தகைய திருக்கனவு!
ஒருவகையில் உலகையே புரட்டிப்போடுவது!
விரலும் தீயும் இன்பமும் தோன்றலும் நந்தலாலாவும்
ஒருங்கிணைந்திருக்குமிந்த
ஒற்றைக் கண்ணீர்த்துளி
நேற்று பாடினாலும் நாளை பாடினாலும்
வரிகளை மீறிப்பரவும்
காற்றின் வருடல்;
குரலற்ற விளி;
பொருள் மீறிய பிரபஞ்சவெளி....